மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 4 ஜூன், 2023

சினிமா விமர்சனம் : பாச்சுவும் அத்புத விளக்கும் (மலையாளம் - 2023)

 பாச்சுவும் அத்புத விளக்கும்-

ஒரு சாதாரணக் கதை, அதை நகைச்சுவை கலந்து கொடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.


மும்பையில் ஆயுர்வேத மெடிக்கலில் வேலை - மருத்துவரின் அன்பினால் முதலாளி மாதிரி -செய்யும், அன்றாட செலவுக்கே அல்லாடும், பல பெண்களைப் பார்த்தும் திருமணம் கை கூடி வராத 34 வயது பாச்சு (எ) பிரகாஷ் (பஹத்), கேரளாவுக்கு சென்று விட்டு உடனே திரும்ப வேண்டிய சூழலில் எதிர்பாராத காரணத்தால் விமானத்தை விட்டு விட, அந்தச் சமயத்தில் தனது மெடிக்கல் இருக்கும் கட்டிடத்தின் உரிமையாளரான ரியாஸ் (வினீத்), இரயில் வழிப் பயணமாக மும்பை வரும் தனது வயதான அம்மாவைப் பத்திரமாக அழைத்து வரும் பணியைக் கொடுக்கிறார். அதற்குப் பரிசாக ஐபோன் ஒன்றை அம்மா தருவார் என்று சொன்னதும் அதற்குச் சம்மதிக்கிறான்.

அதன் பின் பயணத்தில் என்ன நிகழ்ந்தது...? பாச்சு என்ன செய்தான்..? என்பதைப் பற்றிப் பேசும் படம் இது.

பெண் கல்வி, பெண் உரிமை, குழந்தைத் தொழிலாளர் என எல்லாவற்றையும் பேசும் படமாய் வந்திருக்கிறது. முதல் பாதி பயணத்தில் கழிகிறது, இரண்டாம் பாதி கோவா, காதல், தேடல் எனப் பயணித்து ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது.

பஹத் பாசிலை நடிப்பு அரக்கன் எனச் சொல்லி, இதிலும் அதிக எடையுள்ள கதாபாத்திரத்தைத் தூக்கிக் கொடுக்காமல் ரொம்பச் சாதாரணமாக, அதே நேரம் படம் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும் விதமாக நடமாட விட்டிருப்பது சிறப்பு. அவருக்கும் ஹம்சத்வாணியாக வரும் அஞ்சசனா ஜெயப்பிரகாஷ்க்குமான முதல் சந்திப்பு, அதன் பின்னான சந்திப்புக்கள் என எல்லாமே ரசிக்க வைத்தது. அஞ்சனா உடம்பை குஷ்பு போல் வைத்திருந்தாலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரின் காதல் முறிவுக்குப் பின் பஹத் மீதான காதலை தன்னுள் மெல்ல மெல்ல இறக்கி, இறுதியில் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பதை சிறப்பாகச் செய்திருக்கிறார்.


படிப்பின் மீது ஆர்வம் கொண்ட, குடும்பச் சூழலால் தனது தாத்தா வீட்டில் வந்து மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கும் குழந்தை நிதியாக, த்வானி  ராஜேஷ் சிறப்பாகச் செய்திருக்கிறார். வீனீத்தின் அம்மா லைலாவாக, த்வானியைப் படிக்க வைக்க ஆசைப்படுபவராக விஜி வெங்கடேஷ் பாந்தமாக நடித்துள்ளார் என்றாலும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ எனத் தோன்றியது. சில இடங்களில் பொம்மை போல் தெரிகிறார்.

பஹத்தின் அப்பாவாக வரும் முகேஷ் ரசிக்க வைக்கிறார் என்றால் அவரது கார் தானாக ஹாரன் அடித்து கலகலப்பை ஏற்படுத்துகிறது.

பஹத்தைப் பொறுத்தவரை தனது கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் சிறப்பாகச் செய்துவிடுவார் அது இதிலும் தொடர்கிறது. 

தாத்தா நானாவாக வரும் மோகன் ஆகாஷே, வாய் பேசாமல் கண்களால் நடித்துள்ளார். 

எல்லாமே சிறப்பாக இருக்கும் படத்தின் இறுதிக் காட்சியில் உடம்பு முடியாத நானாவின் கண் மிரட்டலுக்கு வில்லன் பயப்படுவதாய் காட்டியிருப்பது அத்தனை சிறப்பாக அமையவில்லை.

நாயகனுக்கு லைலா என்னும் அத்புத விளக்கு கிடைத்த போது அதை வைத்துத் தான் பெரியாளாகிவிடலாம் எனக் கனவு காண்பவன் அந்த அல்புத விளக்குக்காகத்தானே நீ இதையெல்லாம் செய்கிறார் என நிதி கேட்க, அது காதலியான ஹம்ஷத்வாணிக்கும் தெரிய வர, அவன் மனசுக்குள் என்ன நினைத்து இருந்தானோ அதெல்லாம் அவன் கைவிட்டுப் போகிறது என்றாலும் எனக்கு லைலா கொடுத்த இந்த வேலையால்தான் நீ கிடைத்தே என இறுதியில் ஹம்சத்வாணியிடமே போகிறான்.


படத்தின் கதை, இயக்கம் மற்றும் எடிட்டிங்கை அகில் சத்யன் செய்திருக்கிறார். மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

சரண் வேலாயுதனின் ஒலிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்துக்கு மேலும் அழகூட்டுகிறது.

புல் மூன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்காக சேது மன்னார்க்காடு படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆஹா ஓஹோ என்றில்லை என்றாலும் ஒரு முறை ரசித்துப் பார்க்கலாம்.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அன்றே பார்த்துவிட்டேன். ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நிறைய நல்ல விமர்சனங்கள் இப்படம் பற்றி.


கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு...