மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஜூன், 2023

மனசின் பக்கம் : எழுத்து தந்த 'பாண்டியன் பொற்கிழி'

துவரை எனது எழுத்து பரிசுகளையும், பரிசுக் கேடயங்களையும் பெற்றுத் தந்து கொண்டிருந்தாலும், எழுத்து தொடர்பான ஒரு சில நிகழ்வுகள் மறக்க முடியாத நினைவுகளாய் அமைந்து விடும். அப்படியான நிகழ்வு ஒன்று சென்ற ஞாயிறு (ஜூன் - 18) அன்று நிகழ்ந்தது.

கல்லூரிக் காலம் முதல் எழுதிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து எழுதுங்க விட்டுறாதீங்க எனப் பழனி ஐயா சொல்லிக் கொண்டே இருந்தாலும், நண்பர்கள் பணம் கொடுத்துப் புத்தகம் போட்டுக் கொண்டிருந்த போதும் இடையிடையே எழுதாமல் விட்டுவிட்டுப் பின் மீண்டும் எழுத ஆரம்பிப்பது என்பது அடிக்கடி நிகழும் நிகழ்வாக இருந்தது. 


2020-ல் கலக்கல் ட்ரீம்ஸ் மூலம் எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'எதிர்சேவை' வெளியாகி, அந்தாண்டுக்கான தேனி முற்போக்கு எழுத்தாளர் மேடை விருதான 'தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது' வாங்கியது. அதன் பின் தொடர்ந்து மூன்று புத்தகங்கள் வெளியாகி, என்னையும் ஒரு எழுத்தாளனாக ஒரு சிலருக்கேனும் காட்டியது.  

இந்நிலையில் இப்போது கிடைத்திருக்கும் விருது எனது எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். ஒரு பதிப்பகம் தனது முதலாமாண்டு விழாவில் ஒரு விருதை அறிவித்து, வரும் வருடங்களில் இப்படியெல்லாம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்புடன், அதை முதன் முதலில் எனக்கு அளித்ததெல்லாம்... எங்கோ நான் ஆசீர்வதிக்கப்ப்ட்டிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். இந்த எழுத்துத்தான் சோறு போடப் போகுது என்று சொன்னவர்கள் மத்தியில் சோறு போடுதோ இல்லையோ மண்ணின் மணத்தோடு எழுதும் எழுத்தாளன் என்ற அங்கீகாரத்தை, அதுவும் இந்த  'பாண்டியன் பொற்கிழி' என்று விருதின் மூலம் எனக்குக் கொடுத்திருக்கிறது.

கேலக்ஸியின் முதலாமாண்டு வெற்றி விழா நிகழ்வில் எனது 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதே மேடையில் கேலக்ஸி இனி வருடாவருடம் வழங்க இருக்கும் பாண்டியன் பொற்கிழி - சான்றிதழ், கேடயம், ரூ.10000 - பற்றி அறிமுகம் செய்தார்கள்.

மண் சார்ந்து, மக்களின் வாழ்வியலை எழுதும் எழுத்தாளருக்கு இந்த விருது வருடா வருடம் - வரும் வருடங்களில் பரிசுத் தொகை கூடுதலாக இருக்கும் - வழங்கப்பட இருப்பதாகவும், இந்த வருடம் அப்படி எழுதும் ஒரு எழுத்தாளருக்கு  வழங்கப்பட இருக்கிறது என்றும் கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் பாலாஜி அண்ணன் அவர்கள் சொல்ல, அதன் பின் எழுத்தாளர் ஜெஸிலா அவர்கள் மேடையில் என் பெயரை அறிவித்த போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. என் எழுத்து ஏதோ ஒரு வகையில் என்னைச் சுற்றி இருப்பவர்களைக் கவர்ந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சிதான். எங்கள் மண்ணை, மக்களை விட்டு வேறு எதையும் இதுவரை எழுதி விடவும் இல்லை, இனிமேலும் எழுதப் போவதும் இல்லை என்பதே உண்மை.

சான்றிதழையும் , காசோலையையும் விழா மேடையில் வைத்துப் பாலாஜி அண்ணன் கொடுத்தார். கேடயத்தைச் சென்னையில் இருந்து ஊருக்கு அனுப்பி விடுகிறோம் என்றார். வெள்ளிக்கிழமை காலை ஊருக்குப் போன் பண்ணும் போதுதான் கூரியரில் இருந்து போன் வர, பாப்பா - மகள் ஸ்ருதி - போய் வாங்கி வந்தார். பெரிய பார்சலா இருக்குப்பா என்று சொல்லிவிட்டுப் பிரித்தார். விருதுக்கான கேடயம் உண்மையிலேயே மிகப் பெரியதாய் இருந்தது. பிரித்துப் பார்த்த மனைவிக்கும் மகளுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி.

மண் சார்ந்த எழுத்தாளர்களுக்கு வருடா வருடம் 'பாண்டியன் பொற்கிழி' விருது வழங்க இருப்பதுடன் இனி வரும் வருடங்களில் அதற்கென ஒரு குழு அமைத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வரும் காலங்களில் கேலக்ஜியின் 'பாண்டியன் பொற்கிழி' மிகப் பெரும் விருதாக மலர இருக்கும் நிலையில், முதல் வருட வெற்றி விழா மேடையில் இவ்விருதை முதல் ஆளாய் பெற்றதில் மகிழ்வும் பெருமிதமும். கேலக்ஸி ஒரு வருடத்தில் பனிரெண்டு புத்தகங்களைப் பதிப்பித்துத் தங்களது தடத்தைப் பதிப்புத்துறையில் அழுத்தமாக, பெருமையாகப் பதித்திருக்கிறார்கள். இந்தப் பயணம் இன்னும் சிறப்பானதாக வரும் வருடங்களில் அமைய வாழ்த்துகள்.

இவ்விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த கேலக்ஸி நிறுவனத்துக்கும், பாலாஜி பாஸ்கரன் அண்ணனுக்கும், எழுத்தாளர் ஜெஸிலா அவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.


'வாத்தியார்' வெளிவரும் போதே விருதுடன் வந்து சென்ற வருடத்து கஷ்டங்களை மறக்கச் செய்து இன்னும் நல்ல கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது.

வாத்தியார் வெளியீட்டு விழாவுக்கு வருகைபுரிந்த, வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பதிப்பாளர் பாலாஜி அண்ணனின் தனது பதிப்புரையில் - உள்ளத்திலிருந்து - கூறியிருந்ததில்...

'அத்தனையும் என் மண்ணின் எழுத்து. என் வீட்டில், என் ஊரில், நான் பேசுவதை, நான் வாழ்வதை, என் வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் எழுத்தும். வாசிக்க வாசிக்க கதையும், அதன் காட்சியமைப்பும் அதில் சொல்லிவரும் விவரங்களும் எனக்குப் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல இருக்கும். புதிய வாசகர்களுக்கு எங்கள் மண்ணின் பழக்கவழக்கங்களும் வட்டார வழக்கும் அறிமுகமாகும்.' 

'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அவர்களின் வாழ்த்துரையில் - உளமொழி கூறல் - எழுதியிருந்ததில்...

'சில கதைகளை முன்னுக்குப்பின் வாசித்தால் அதுவே நாவலாகி விடும் அற்புதமும் நடக்கும். தமிழ் சினிமாவின் இயக்கத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் யூனிவர்ஸ் எனும் கோட்பாடு அண்ணனின் சிறுகதைக்குள்ளும் அடங்கும். இந்த மாயாஜாலம் வாத்தியார் தொகுப்பிலும் இருப்பதை உணர்கிறேன். கிராமிய கதைகள் பெரும்பாலும் வாழ்வியல் சம்பந்தமானவை. அவை கலைவடிவம் பெற்று காலத்தின் சாட்சியாக இருப்பதும், இருக்க வைப்பதும் எழுத்தாளர்களின் ஆளுமைதிறன். தமிழர்களது வாழ்வில் கதைகளுக்கா பஞ்சம். அதுவும் சொல்லிமாளாத கதைகள் ஏராளம். நகுலனின் வாக்குக்கு ஏற்ப தீராத பக்கங்களை இதே பாணியில் தொடர்ந்தால் கி.ரா. வரிசையில் அண்ணனுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை ஐயமில்லாமல் சொல்லிக் கொள்கிறேன்.'

நீங்களும் வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொன்னால் என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள உதவும்.

நன்றி.

வாத்தியார் (சிறுகதைத் தொகுப்பு)
கேலக்ஸி பதிப்பகம்
புத்தகம் வாங்க, வாட்ஸ்அப் : 9994434432
விலை :180

* தமிழ்நாட்டுக்குள் அனுப்ப தபால் / கூரியர் இலவசம். 

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும், பாராட்டுகளும் குமார்.  எழுத்துகளில், அதன் அங்கீகாரங்களில் மென்மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகிழ்ச்சி குமார்...

வாழ்த்துகள்...