மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 22 ஜூன், 2023

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 2

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. நிகழ்வின் தொடர்ச்சியாய்...

'வாத்தியார்' புத்தக வெளியீட்டுக்குப் பின் மருத்துவர் பெனடிக்ட் அவர்கள் பேசியபோது, நானும் மதுரைக்காரன்தான் என ஆரம்பித்து தான் மாநிலம் மாநிலமாக பயணித்த காரணத்தால் அந்தந்த மாநில மொழிகளை எல்லாம் கத்துக் கொண்டாலும் தமிழ் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேசி, எல்லா இடமும் சுற்றிவிட்டு மதுரையில் படிக்க வந்த போது ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் உடனே பளார்ன்னு விட்டிருவானுங்க... அதனால அங்க பேசிப் பேசி... மதுரைத் தமிழோட சுவையை உணர்ந்து கொண்டேன் என்றார்..
மதுரைக்காரங்க பேசுவதை அவரின் மனைவி கேலி செய்வதையும் சொல்லி, இந்தா இங்க நான் வந்த போது பாலாஜி யாரையோ 'வந்துட்டாய்ங்க' என்று சொன்னதைக் கேட்டேன், அந்த மதுரைத் தமிழால் என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது என்று சொன்னார்.
மேலும் இப்பல்லாம் நான் பாலாஜியிடம் இருந்து 'சிறப்பு' எனச் சொல்லக் கத்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர்களிடம் பேசும் போது இதையே பயன்படுத்துகிறேன் என்றும் சொன்னார். பேச ஆரம்பித்தது முதல் ரொம்ப ஜாலியாகப் பேசினார் ஒருவேளை மதுரைக்குள் நுழைந்து வைகையில் கால் வைத்ததைப் போல் உணர்ந்திருப்பார் போல, தான் மருத்துவம் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் எழுதியிருப்பதாகவும் ( நூல் என்சைக்ளோபீடியா மாதிரி பெரிசா இருக்கும்ன்னு வசந்த் சொன்னார்), அதை தமிழில் மொழிபெயர்க்க, அந்த நூலின் தொடர்ச்சியாய் மற்றொரு நூல் எழுத கேலக்ஸிதான் உதவ வேண்டும் என்றும், கேலக்ஸியில் அந்தப் புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் சொன்னார்.
அடுத்துப் பேசிய அபுதாகீர் ஐயா அவர்கள் 'எனக்கும் பாலாஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு... அவர் மதுரையில் இருந்தாலும் அவரின் மூதாதையருக்குச் சொந்த ஊர் இளையாங்குடி- ராஜாராம் கவனிக்க: நம்ம ராநாபுரத்து இளையாங்குடி, தேவர்மகன்ல சிவாஜி சொல்ற மாதிரி 'என்னதான் மதுரையின்னாலும் விதை....' - என்று சொல்லி, எங்க பக்கம் அப்பா என்ற உறவு முறையினரை 'அப்பு' என்று அழைப்போம். அவர் என்னை 'அப்பு' என்பார், நான் அவரை 'அப்பு' என்பேன் என்றார். இந்த வார்த்தைக்குள் அவர்களிடேயேயான நட்பு அடங்கிவிடுகிறது. அதன் பொருட்டே அவர் அபுதாபியில் இருந்து மகளுடன் வந்திருந்தார்.


ஏற்புரை வழங்கிய நான் - ஆமாங்க நாந்தான் - இதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, எங்கள் விழாக்களில் எல்லாம் ஒரு ஓரமாய் அமர்ந்து இருப்பேன். முதல்முறை மேடையேறியதும் என்ன பேசுறதுன்னு தெரியாமலே வாத்தியார் கதைகள் உருவானதைப் பற்றிப் பேசிவிட்டு, கேலக்ஸியோட வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துச் சொல்வதற்கு முன் தசரதன் பற்றிப் பேசியதால் அதே வேகத்தில் கலக்கல் ட்ரீம்ஸ்க்கு
வாழ்த்துகள்
என்று சொல்லவும், 'அடேய் நான்டா பணம் போட்டு பண்ணிக்கிட்டு இருக்கேன்' என பாலாஜி அண்ணனும், 'என்னது கலக்கலா...?' என கூடியிருந்தவர்கள் கத்த, 'கேலக்ஸி கலக்கலாய் வர வாழ்த்துகள்ன்னு சொல்ல வந்தேன்'னு சமயோகிதமாய் சொல்லியிருக்கலாம்தான் ஆனாலும் மேடையில் சரளமாகப் பேச வராதவனுக்கு இந்தச் சமயோகிதம் எங்கே வரும். 'ஆஹா தப்பாயிருச்சோ'ன்னு நினைச்சிக்கிட்டு கேலக்ஸிக்கு
வாழ்த்துகள்
சொன்னேன். வாழ்த்துகளால் மட்டும் கேலக்ஸி வளர்ந்து விடவில்லை, அண்ணனின் உழைப்பும், பலரின் வயிற்றெரிச்சலுமே கேலக்ஸியை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இன்னும் இன்னுமாய் கேலக்ஸி உயரங்களைத் தொடுவதை நாங்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைக் காலம் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது, காலத்திற்கு நன்றி.
கல்யாணமாகி அம்பது வருசமானாலும் எங்க ஆத்தா வீடுன்னுதானே எல்லாத்துக்கும் பெண்கள் ஆரம்பிப்பாங்க... இப்பக்கூட ஒரு வீடியோ பார்த்தேன்... டிவியில இருந்து திரைச்சீலை வரை அம்மா சொன்னபடிதான் வாங்கி இருப்பதாக நீயாநானாவில் கோபிநாத்திடம் ஒரு பெண் சொல்வார். அப்படித்தான் எனக்கும் தாய் வீட்டுப் பாசமாயிருச்சு போல. நான்கு புத்தகங்களை ஒரு பதிப்பாளராக கொண்டு வராமல் தம்பியாய் நெருங்கியதால் -அங்கிட்டு தம்பி இங்கிட்டு அண்ணன் - கேலக்ஸி என்ற சொல் கலக்கல் ஆயிருச்சு என்றாலும் என்னைப் பொறுத்தவரை இருவருமே எந்த எதிர்பார்ப்புமின்றி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதால் தாங்கள் ஆசைப்பட்ட இலக்கை அடைந்து சிறப்பாக இருக்க மனமார வாழ்த்துகிறேன். கேலக்ஸி வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான புத்தகங்களைக் கொண்டு வரும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த வருட விழா மிகப் பிரமாண்டமாய் நடக்கும். அதில் நாங்களும் இருப்போம்.
ஒரு வழியாக 13 கதைகளில் வாழும் வாத்தியாரை வெளியிட்டுப் பேசி முடித்தோம்.
மைக்கைத் தன் கையில் எடுத்த பாலாஜி அண்ணன், கேலக்ஸி பதிப்பகம் வருடா வருடம் மண் சார்ந்த, வாழ்வியலைப் பற்றி எழுதும் எழுத்தாளருக்கு 'பாண்டியன் பொறிகிழி' என்னும் விருதை - சான்றிதழ், கேடயம், ரூ.10000க்கான காசோலை - கொடுக்க இருப்பதாகவும், வரும் வருடங்களில் அந்த விருதுக்கானஎழுத்தாளரை ஒரு குழு தேர்ந்தெடுக்கும் என்றும் பரிசுத்தொகை இன்னும் கூடுதலாகலாம் என்றும் சொல்லி, முதல் வருட விழாவில், கேலக்ஸியின் முதலாவது விருதை இங்கு இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாகவும் அவர் யாரெனத் தனது தோழியும், கேலக்ஸியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பவருமான எழுத்தாளர் ஜெஸிலா அவர்கள் சொல்லுவார்கள் என்று சொன்னார்.
இரண்டாவது முறை மேடையேறிய ஜெஸிலா, கேலக்ஸி பதிப்பகத்தை எப்படித் தொடங்கினோம் என்றும் அதன் முத்திரையில் புத்தகத்துடன் பாலாஜிக்கு ஏழு ராசி என்பதால் ஏழு ஸ்டார் வைக்கச் சொன்னார். அப்படியே செய்தோம். கேலக்ஸியின் ஒவ்வொரு நிகழ்விலும் வளர்ச்சியிலும் நானும் உறுதுணையாக இருக்கிறேன் என்பது மகிழ்வான ஒன்று. வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக, உற்சாகமாகத் தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்லிவிட்டு, மண் சார்ந்து எழுதும் எழுத்துக்கு இந்த விருது என முடிவு செய்திருக்கிறோம், அதன்படி நித்யாக்குமார், பரிவை சே.குமாருக்கு - ஆமாங்க நாந்தான் - இந்த விருதைக் கொடுக்கிறோம் என்று சொன்னார்.
எனக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாய் இருந்தது... மண் சார்ந்து எழுதினாலும் நான் ஒண்ணும் மிகப்பெரிய எழுத்தாளனெல்லாம் இல்லை என்ற போதிலும் கேலக்ஸியின் 'பாண்டியன் பொற்கிழி' முதன் முதலில் பெற்றவன் என்ற பெருமை எனக்கு எப்போதும் இருக்கும்தானே. விருதையும், காசோலையையும் பாலாஜி அண்ணன் கொடுத்தார். கேடயம் ஊரில் இருந்து கொண்டு வர முடியாததால் வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுகிறேன் என்று சொன்னார். பெரிய கேடயம் என்று வேறு சகோதரி ஜெஸிலா சொன்னார்கள், விருதே மிகப்பெரியதுதானே. அதையெல்லாம் நான் பார்க்க வேண்டுமென பழனி அய்யா வேறு பேசும்போது சொன்னார்கள். மகிழ்வான நாள், மகிழ்வான தருணம். அந்த ஒரு தருணத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது.


வாத்தியார் விழா முடிந்ததும் சசி அண்ணன் பேச அழைக்கப்பட்டார். அவரும் பாலாஜி அண்ணனின் கடும் உழைப்பைப் பற்றிப் பேசி, புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள். பிடிஎப்பாக படிக்காதீர்கள். நீங்கள் புத்தகத்துக்கு கொடுக்கும் பணம் பேப்பருக்கும் பிரிண்டுக்குமான செலவுதான் என்று பர்வீன் சுல்தானா சொல்லியிருப்பார் அதுதான் நிஜம். இங்க பனிரெண்டு புத்தகம் போட்டிருக்காங்க.... கிட்டத்தட்ட ஒன்பது புத்தகத்துக்கு அறிமுக உரை நான் செய்திருக்கிறேன் என்பதே பெருமைதான் என்றும் கேலக்ஸியின் துவக்க விழாவில் வேற்றுத்திசை - எழுத்தாளர் ஜெஸிலாவின் புத்தகம் - பற்றியும் பேசினோம், பாலாஜியின் வேற்றுத்திசை - வாசிப்பாளராக இருந்து எழுத்தாளர் என ஆகாமல் நேரடியாக பதிப்பாளராக மாறியது - குறித்தும் பேசினோம் என்றார். பதிப்பாளர்கள் எதையும் எதிர்பார்த்து இந்தப் பணியைச் செய்வதில்லை, மனநிறைவுக்காகத்தான் செய்கிறார்கள் எனவே புத்தகமாக வாங்கி வாசியுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.
அடுத்ததாக ஐயா அபுதாகீர் அவர்களின் மகள் மேடைக்கு அழைக்கப்பட்டார், ஆங்கிலத்தில் பேசினார்... பாலாஜி அண்ணனைப் பற்றி அறிந்து கொண்டதையும் தமிழ் மீது தனக்கு இருக்கும் காதலையும் பற்றிச் சொல்லிச் சென்றார். அவர் ஆங்கில வழியில் இந்த நாட்டில் படிப்பதால் தமிழில் பேச சரளமாக வராது என்று நினைக்கிறேன், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார்.
இனி பேச விரும்புவோருக்கு வாய்ப்பளிப்போம் என விழா நாயகன் பாலாஜி அண்ணன் முடிவு செய்து 'ஒரு நிமிடம் பேசலாம், யார் பேச விரும்புகிறீர்கள்' என அழைப்பு விடுத்தார். அதுவும் முதலில் வந்தவருக்கு ஒரு நிமிசம் கொடுத்தவர் அடுத்த வந்தவர்களை 'இரண்டு நிமிசம் பேசலாம்' என்றபோது முதலில் பேசிவிட்டு வந்த சிவசங்கரி, 'எனக்கு மட்டும் ஒரு நிமிசமா..?' என்று கேட்க, அவரின் கணவர் வசந்தும் 'அதானே... மாம்ஸ் என்ன இதெல்லாம்' என்று சொன்னார்... சும்மா ஜாலியாகத்தான் சொன்னார்கள்.அண்ணன் சொன்ன இரண்டு நிமிடத்தில் யாரும் முடிக்கவில்லை என்பது வேறு விசயம்.
எல்லாரும் கேலக்ஸி பதிப்பகத்தை மட்டுமே பற்றிப் பேசிய போது அதன் விற்பனைப் பிரிவுக்கும் இதுதானே முதலாமாண்டு அதன் சேவை மிகச் சிறப்பானது அதை நான் பேசுவேன் என்று சொல்லி இதுவரை நான் இருபது புத்தகங்களுக்கு மேல் அவரிடம் வாங்கியிருக்கிறேன். கிடைக்காத புத்தகம் என்றாலும் அதை எப்படியும் வாங்கி வீட்டுக்கே கொடுத்து விடுவார். சிறப்பான பணி எனச் சொல்லி கேலக்ஸிக்கு வாழ்த்துச் சொன்னார் அண்ணனின் அழைப்புக்கு முதலில் எழுந்து வந்த எழுத்தாளர் சிவசங்கரி.
அடுத்ததாக கேலக்ஸி இணையதளத்தில் தற்போது 'திருமந்திரம்' குறித்துப் பேசும் சசிகலா தவம் அவர்கள் 'நானும் கொஞ்சம் பேசிக்கலாமா' என வந்தார் நானும் மதுரைக்காரிதான் என்று சொல்லிக் கொண்டே - எல்லாருமே மதுரைக்காரங்கன்னு சொன்னப்போ, சில மாதங்களுக்கு முன்னால வரை மதுரையின்னா அருவாடான்னு சினிமாவுல காட்டுவாங்களே அப்படித்தான் எனக்குத் தோணுச்சு.... இப்ப அருவாளை ராமநாதபுரத்துக்கு கொண்டு போயிட்டாங்க... அடுத்த கேலக்ஸி விழாவுல நாங்களும் இராநாவரத்துக்காரங்கதான்னு ஒரு கூட்டம் நிக்கும்ன்னு தோணுது... ராஜா சொன்னபடி இராமநாதபுரத்தை ரெண்டாவது தடவை சொல்லியிருக்கேன்... ஹேப்பிதானே ராஜா - பேச வந்தார். எனக்குப் பேச வராதுங்க என்று சொன்னவர்தான் நீண்ட நேரம் பேசினார்.
எங்க வாத்தியாரைத்தான் வாத்தியாராய் திருத்தினார் என்றால் அவங்க வீடியோவையும் மனுசன் ஏழு டேக்கெல்லாம் எடுக்க வைத்திருக்கிறார். 'என்னை இந்தப் பாடு படுத்துற அந்த மனுசன் யாருன்னு பார்க்கத்தான் இங்க வந்தேன்' எனச் சொல்லி ஆரம்பித்தவர், என்னிடம் பேசும்போது 'நல்லாயிருக்கீகளா..?'ன்னு மதுரைத் தமிழில் அவர் கேட்டதும் 'நல்லாயிருக்கேன்... நீங்க நல்லாயிருக்கீகளான்னு நான் திருப்பிக் கேட்கும் போது எனக்கு அத்தனை மகிழ்வாய் இருக்கும் என்று சொன்னதுடன் அவரின் அம்மத்தா காது வளர்த்திருப்பதையும் இங்கு வந்தபோது பலர் அதைஆச்சர்யமாகப் பார்த்ததையும் ஆசி வாங்கியதையும் சொல்லி, காது வளர்ப்பதைப் பற்றி அவரிடம் தெரிந்து கொண்டு, கள ஆய்வு செய்து 'காது வளர்த்த கடைசிக் கள்ளச்சி' என எழுதி வருவதாகவும் அதை கேலக்ஸியில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் எனச் சொன்னார். காது வளர்க்கிறதெல்லாம் சரிதான், 'கடைசி' என்ற வார்த்தை சரியாகத் தெரியவில்லை, எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இன்னும் பல கிழவிகள் காது வளர்த்து தண்டட்டிகளை ஆட்டிக் கொண்டுதான் திரிகிறார்கள். காது வளர்ப்பதைப் பற்றி காவல் கோட்டத்தில் விரிவாக எழுதியிருப்பார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
அதன்பின் அன்பின் அடையாளமாக சசிகலா தவமும் அவரது கணவரும் பாலாஜி அண்ணனுக்கு ஒரு அன்புப் பரிசை வழங்கினார்கள். அதில் என்ன இருந்தது என்பதை யாருக்கும் காட்டாமல் - பிரிக்காமல் - கொண்டு போய்விட்டதால் என்ன பரிசு என்பது தெரியவில்லை என்றாலும் சற்றே பெரியதாகவே இருந்தது.
அடுத்துப் பேச பால்கரசு எழுந்தார்.
(தொடரும்)
படங்கள் : சுபான் அண்ணாச்சி.
-பரிவை சே.குமார்.

0 எண்ணங்கள்: