மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 ஜூன், 2023

சினிமா விமர்சனம் : காக்கிப்படா (மலையாளம்)

காக்கிப்படா

சின்னக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்வதும், கொலை செய்வதும் சில வருடங்களாக அதிகமாகியிருக்கிறது. இப்படியான கொடுமை செய்யும் பாவிகளுக்குச் சரியான தண்டனை கிடைக்கிறதா என்றால் அப்படியொன்றும் பெரிதாக நிகழ்ந்து விடுவதில்லை. அதுவும் பணம் படைத்தவன் என்றால் காவல்துறையும் நீதித்துறையும் அவனுக்குகச் சாமரம் வீசும் கேவலம்தான் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியான பாவிக்காகச் சட்டம் வளைந்து கொடுக்க நினைக்கும் போது காக்கிச்சட்டைக்குள் கறை படியாமல் இருக்கும் சில இளவயது போலீசார் மனச்சாட்சிப்படிக் கொடுக்கும் தண்டனையைக் காட்டும் படமே 'காக்கிப்படா'.


தமிழகத்தில் இருந்து பொழைப்புக்காக கேரளா போனவன், அங்கு குடும்பம் குழந்தைகள் என இருபத்தைந்து வருடத்துக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் முழு மலையாளியாக மாறியிருந்தாலும் சுற்றியிருப்பவர்களுக்கு அவன் 'தமிழன்', 'பாண்டி' என்பதாய்த்தான் இருக்கிறது. மலையாளிகளைப் பொறுத்தவரை தமிழர்களைக் கேவலமாய்ப் பார்ப்பது என்பது எப்போதும் தொடர்வதுதான். நடிகர் ஜெயராமனை நாம் இங்கு கொண்டாடித் தீர்த்தாலும் அவரது படங்களில் தமிழன் என்னும் கதாபாத்திரம் மிகக் கேவலமாகச் சித்தரிக்கப்படுவதை நாம் பார்க்கலாம். அப்படித்தான் அவர்கள் ஆரம்பத்தில் கேவலமாகப் பேசும் போது இவர்கள் இப்படித்தான் என்று வெறுப்பு உச்சத்திற்கு வரும்போதே, 'ஆமா நான் தமிழந்தான்... யாரையும் ஏமாற்றிப் பிழைப்பவன் இல்லை' எனக் காசுக்கு வாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் அவன் பொங்கும் போது இயக்குநருக்கு ஒரு சபாஷ் போட வைத்தது. அதேபோல் வில்லன் வீட்டில் வேலை பார்க்கும் தமிழ்ப்பெண் காவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் காபி கொடுக்கும் போது அதில் எச்சிலைத் துப்பிக் கொடுக்கும் போது தமிழனைக் கேவலமாய்க் காட்டும் கேரளத் திரைத்துறையினரின் முகத்தில் துப்புவதாய்த்தான் தோன்றியது.

ஒரு விபத்துக்குப் பின் மூன்றாண்டுகளுக்கு மேலாக எழுந்து நடக்க முடியாமல் வீட்டில் கிடக்கும் தந்தையை, அம்மா வேலைக்குப் போன பின், அண்ணன் வேலை தேடிப் போன பின் அந்தப் பிஞ்சுதான் தாயாய் இருந்து பார்த்துக் கொள்கிறது. மகளைப் பற்றி காவலர்களிடம் பேசும் போது 'என்னோட குரலை வைத்தே நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை உணர்ந்து அதைச் செய்வாள் சார்' என அந்தத் தந்தை உடையும் போது நம்மையும் உடைய வைத்து விடுகிறார்கள்.

மனச்சாட்சிப்படி குழந்தையின் சாவுக்கு சாட்சி சொல்ல நினைக்கும் பெண்ணை உயரதிகாரி மாற்ற நினைக்கும் இடத்தில் அவள் பெயருக்காக மாறுவது போல் நடித்தாலும் அப்படியான மாற்றத்தை அவள் செய்ய நினைக்கவில்லை என்பதை முகத்தில் காட்டி விடுகிறார்கள்.

பிஞ்சுக் குழந்தையைக் கெடுத்து கொன்றவன் பணபலம் படைத்த எதிர் வீட்டுக்காரன் என்பதை எல்லாருமே அறிந்து வைத்திருந்தாலும் ஏழைத் தமிழனுக்கு ஆதரவாய் யாருமில்லை... சாட்சியாய் நிற்கும் ஒரு பெண்ணைத் தவிர.  ஜெயிலில் இருக்கும் காமுகனை சம்பவ இடத்துக்குக் கொண்டு வந்து என்ன நடந்தது என்பதை விசாரிக்க இருக்கும் நிலையில், ஏழெட்டுப் பேரைக் கொண்ட ஒரு போலீஸ் - ரிசர்வ் போலீஸ் - குழு ஒன்று அந்த இடத்துக்குப் பாதுகாப்புக்கு வருகிறார்கள். 

அவர்கள் பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கியிருக்க, காவல்துறையின் உயர் அதிகாரிகளோ பாதுகாப்பை இங்கு கொடுக்க வேண்யதில்லை, காமுகனின் வீட்டுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது எங்களுக்கு அப்படி ஒன்றும் சொல்லிவிடவில்லை, நாங்கள் இங்கயே தங்கி இருக்கிறோம் என அந்தக் குழுவின் அதிகாரி சொல்லும் போதே இவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் என்பதை இயக்குநர் உணர்த்தி விடுகிறார்.

பிரபலமான வழக்கறிஞர், உள்ளூர் அரசியல்வாதிகள், காவல்துறை என எல்லாமே வில்லனுக்கு உடன் நிற்க, இறந்த குழந்தையின் மாமன் ஒருபுறம் அவனைக் கொல்வேனென நிற்க, அண்ணன்காரனும் வீட்டிற்கு விசாரணைக்காக வருபவனைக் கொல்ல ஆட்கள் மூலம் வெடிபொருளை வாங்கி ஒளித்து வைத்திருக்கிறான்.


காசுக்காக வேலை செய்யும் காவல்துறை அதிகாரி மாறி வந்தபின் இறந்த பெண்ணின் அண்ணனை போதைப் பொருளுக்கு அடிமையானவன் எனச் சொல்லி வழக்கை திசை திருப்ப முயற்சித்து, அதில் உடல் நலமில்லாத தகப்பன் இறந்த பின், எங்கிருந்தோ பிழைக்க வந்த வடநாட்டானைக் கோர்த்து வழக்கை முடிக்க நினைக்க, அவனின் செய்கை மேலதிகாரிகளுக்கு வீடியோவாகப் போக பணி மாறுதலும் இடை நீக்கமும் பெற, புதிய அதிகாரி வருகிறார்.

காவலர் படையில் இருக்கும் ஒரு கான்ஸ்டபிள் இதேபோ தங்கையை இழந்தவன் என்பதால் அவனும் அவனின் நண்பனும் எப்படியும் தண்டனை வாங்கிக் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உயர் அதிகாரிகளுக்கு எதிராக நிற்கிறார்கள். அதேபோல் மருத்துவமனையில் இருக்கும் தன் அன்னையிடம் அந்தக் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்காது என்று சொல்லும் போது அப்புறம் எதுக்குடா நீ போலீஸ் பணிக்குப் போனே எனத் திட்டுவதைத் தொடர்ந்து அவனின் மாற்றம் என இம்மூவருமே இறுதிக்காட்சியை எழுதியிருக்கிறார்கள்.

'தமிழன் பக்கம் நிற்காதே... நம்ம ஊர்க்காரன் பக்கம் நில்லு' எனச் சொல்லும் வில்லன் குடும்பத்து வேலையாளிடம் உனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு, மறக்காதே எனச் சொல்லும் போதே அந்தப் பெண்களுக்கு ஏதோ ஒன்று ஆகும் என்பதை முன்முடிவாய் நாம் நினைத்துக் கொள்ள முடிகிறது. அப்படி ஆகும் தருணத்தில் பச்சைக் குழந்தையின் சாவுக்கு நீதி கிடைக்கக் கூடாது என்று நின்றவன் தன் மகள் என்று வந்ததும் அவனை விடக்கூடாது, கொல்லணும் எனப் போலீசிடம் சொல்வது சுயநலமின்றி வேறென்ன.

பிரபலமான வழக்கறிஞர், சாட்சி  முடக்கம்,  அப்பாவி மேல் கற்பழிப்பு, கொலை வழக்கு என எல்லாம் இருந்தும் நீதிமன்றம் வரை போகாமல் விசாரணைக்காக அழைத்து வந்த இடத்திலேயே தண்டனையை நிறைவேற்றும் போது குழந்தையை இழந்தவள் கையெடுத்துக் கும்பிடுவதைப் போல் நமக்குள்ளும் அவர்கள் உண்மையான காவலர்களாக, மனசாட்சியைக் கொன்றவர்கள் மத்தியில் மனசாட்சி நிறைந்த மனிதர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்தக் கொடும்பாவிகளுக்கு இப்படியான தண்டனை கிடைத்தால்தான் இனிமேலேனும் குழந்தைகள் வன்புணர்வுக் கொலைகளில் சிக்கமாட்டார்கள் என்பதை வலுவாகச் சொல்லியிருக்கிறது 'காக்கிப்படா'.

எல்லாரும் நல்ல படம் எனச் சான்றிதழ் தரும் படங்களை விட நான் எதார்த்தமாய் பார்க்கலாமே என எடுத்துப் பார்க்கும் படங்கள் எப்போதும் மிகச் சிறப்பாய் இருப்பதுண்டு. அப்படித்தான் இந்தப் படமும்.

விருப்பம் இருந்தால் பார்க்கலாம். படம் முடியும் போது ஒரு மனநிறைவைக் கொடுக்கும்.

-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இதுவரை கண்ணில் சிக்கவில்லை. பார்க்கிறேன்.