மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 ஜூன், 2023

மனசின் பக்கம் : வருகிறார் 'வாத்தியார்'

சில சமயங்களில் நாம் வேண்டாமென நினைத்து ஒதுங்கிச் செல்லும் பாதைதான் நமக்கானதாக அமையும். அப்படித்தான் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிடந்த போது இனிமேல் இந்த வேலையே பார்க்கக் கூடாது என விலகி விலகிப் போனாலும் என்னை விடாமல் தொடர்ந்தது அந்த வேலை மட்டுமே. இப்போது எல்லாவற்றிற்கும் கணிப்பொறி என்றான போதும் நானெல்லாம் அலுவலகத்தில் கணிப்பொறியோட மல்லுக்கட்டுற வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

இதே மாதிரித்தான் எழுத்தும்... எழுத ஆரம்பித்தது கல்லூரி படிக்கும் போதுதான், அதற்கு முன்பு எழுத வருமா என்று யோசிப்பது கூட இல்லை. எழுத ஆரம்பித்த போது தினமும் ஏதாவது கிறுக்க வேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்து இருந்தது. அதன் பின் இனி எழுத வேண்டாமென கொஞ்சநாள் நிறுத்தி வைத்து, அதன் பின் மீண்டும் எழுத ஆரம்பித்து என அடிக்கடி நிகழ்ந்தாலும் எழுத்து ஏனோ என்னை விட்டு விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடத்தில் வேலை இல்லா பாதிப்பில் இருந்தபோது எழுதவே வேண்டாமென விட்டு வைத்திருந்த போதும் ஏதாவது போட்டிகள் என்றால் இருக்கும் கதையில் ஒன்றை அனுப்ப, அவற்றிற்கு ஏதாவதொரு பரிசு கிடைத்துக் கொண்டுதான் இருந்தது.


இன்று வரை முன்பு போல் தினமும் எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் ஏதாவதொரு படத்தைப் பார்ப்பதையே வழக்கமாக்கி வைத்திருப்பதால் என்றாவது எழுதணும் என்று தோன்றினால் படத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுவதுண்டு. சில சமயங்களில் 'மாமன்னனும் நம் மன்னர்களும்' என்ற கட்டுரையைப் போல் ஏதாவதொன்றை எழுதுவதுண்டு என்றாலும் தொடர்ந்து எழுதும் மனநிலை இதுவரை வரவில்லை.

இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, பின்னால் சொல்ல இருப்பதற்கு ஒரு முன்னுரையாக இருக்குமே என்பதால்தான்.

சென்ற ஆண்டு 'கேலக்ஸி பதிப்பகம்' ஆரம்பிக்கும் முன்னர் பாலாஜி அண்ணன், 'தம்பி பதிப்பகம் ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறேன். நீ ஒரு நல்ல நாவலைத் தயாரா வச்சிக்க... நாம போடுறோம்' என்றார். அதன்பின்னான நிகழ்வுகளைப் பலமுறை சொல்லிவிட்டேன். மேலே கூட சொல்லியிருக்கிறேன். அவர் சொன்னதால் ஆரம்பித்த 'காளையன்' என்னும் நாவல் இரண்டு அத்தியாயங்களுடன் கிடப்பில் கிடக்கிறது.

இங்கு வந்து ஜனவரி மாதம் பழைய கம்பெனியில் புதிய புராஜெக்ட் கிடைத்து வேலைக்குப் போனபின், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து, 'தம்பி ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வாரோம் அதுக்கு எழுது' என்று சொன்னார். அதன்பின்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை, அண்ணன் விரட்டிக் கேட்டால் நமக்கிட்டதான் கதை இருக்கே... ஒரு பத்துப் பனிரெண்டு கதையைத் தொகுத்துக் கொடுத்துடலாம் என நினைத்து கொண்டேன்.

அதன்பின் சில வாரங்களுக்குப் பின் 'தம்பி சிறுகதைத் தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரணும், தயாரா இருக்கீங்களா..?' என்று கேட்டபோது, இருக்க கதைகளில் எடுத்துக்கலாம் என்று சொல்ல, 'நான் சொல்ற மாதிரி எழுதிக் கொடுங்க' எனச் சொல்லி, அவர் சொன்ன முறை எனக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. எல்லாக் கதைகளையும் இணைத்து எழுதுவதென்பது சாதாரண விசயமில்லை. இதென்னடா இது சிறுகதைகள் குழப்புதே என்ற எண்ணம் வந்துரும் எனத்தான் தோன்றியது. அவரோ இப்படித்தான் வேண்டும் உன்னால் முடியும் எனச் சொல்லி சீக்கிரம் எழுதி முடி என்று சொல்லிவிட்டார்.

(கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் பாலாஜி அண்ணன் கையில் 'வாத்தியார்)

முதலில் ஒரு கதை எழுதி முடிச்சிட்டு, அதன் பின் கிடப்பில் போட்டு விட, அவ்வப்போது இராஜாராம் போன் பண்ணும் போது என்னண்ணே எழுதுனீங்களா எனக் கேட்டு என்னை முடுக்கிக் கொண்டே இருக்க,  நாற்பது நாளைக்குள் பனிரெண்டு கதைகளை எழுதி முடித்து அண்ணனுக்கு அனுப்பினேன்.  அதில் ஒரு கதை அவருக்கு அவ்வளவு சரியாகத் தெரியவில்லை எனத் தோன்ற அதற்குப் பதிலாக மற்றொரு கதையை எழுதிக் கொடுத்தேன்.

கதைகள் அவருக்குப் பிடித்துப் போக, அவரே 'வாத்தியார்' எனத் தலைப்பிட்டு முசாபாவிற்கு ஒரு விழாவுக்கு வந்த போது கதைகளில் சில மாற்றங்கள் செய்யச் சொல்லி ஒவ்வொரு பக்கமாக எனக்கு விளக்கிச் சொல்ல, அதன்படி செய்து அனுப்பினேன். புத்தகமாக்கும் பணியை தம்பி 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் செய்ய, பக்கங்களைக் கணக்குப் பண்ணியதும் இன்னொரு கதை வேண்டுமெனச் சொல்ல, அதற்கென ஒரு கதை - ஆக மொத்தம் 13 கதைகள் - எழுதிக் கொடுத்தேன். அந்தக் கதை அண்ணனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

கேலக்ஸியின் முதல் வருட நிறைவும் இரண்டாம் வருடத் தொடக்கமும் வரும் 18-ஆம் தேதி என்பதால் அன்றே புத்தக வெளியீட்டையும் சேர்த்தே வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து அதற்கான வேலைகளில் அவர் இறங்க, ஒரு வழியாக புத்தகம் தயாராகி அவர் கைக்கு இன்று வந்து சேர்ந்திருக்கிறது.

எழுத்தை விட்டு விலக நினைத்தாலும், பணம் கொடுத்தெல்லாம் புத்தகம் போடும் எண்ணமில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்காமல் இங்கும் சில இணைய இதழ்களிலும் எழுத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போதுதான் நண்பர்கள் பிரபு மற்றும் நெருடாவால் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் எனது முதல் புத்தகத்தைக் கொண்டு வருவதற்காக கதைகளை வாங்கிப் படித்துவிட்டு நான் போடுகிறேன் என்று சொல்லி, அவரே 'எதிர்சேவை' என்ற பெயருடன் முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். எங்கள் குலதெய்வம் அழகரின் திருவிழாவில் முக்கிய நிகழ்வான எதிர்சேவையைத் தலைப்பாக வைத்து வைகையில் இறங்க வரும் அழகரின் படத்துடன் பதினெட்டாம் படிக்கருப்பர் இருக்கும் கோபுரத்தையும் பின்புலமாய் வைத்து அதில் பருத்திவீரன் படக் காட்சி ஒன்றை வைத்துப் புத்தகமாக்க, அந்தப் புத்தகம் 'தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர்' விருதைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாய் நான் கதைகளுடன் பயணிக்க, தசரதன் என்னுடன் பயணித்தார். வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள் என வருடம் ஒன்றாய் கொண்டு வந்து சே.குமார் / நித்யாகுமார் / 'பரிவை' சே.குமாராக இருந்த என்னைப் பரிவை சே.குமாராக எல்லாரும் அறியும்படி செய்தார்... செய்து கொண்டிருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கதை ரெடி பண்ணிடுண்ணே என இப்போதே சொல்லி வைத்து விட்டார். அவர்தான் என் எழுத்துக்களை எல்லா இடத்துக்கும் எடுத்துச் சென்றவர் என்று சொல்வதுதான் சிறப்பு.

'திருவிழா' நாவல் எத்தனை பக்கம் வந்தாலும் நான் புத்தகமாக்குகிறேன் என நின்ற தசரதனிடம் கொஞ்சம் போராடித்தான் 750 பக்கங்களுக்கு மேலிருந்த நாவலில் நூறு பக்கத்துக்கு மேல் குறைத்துக் கொடுத்தேன். அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் இப்பவே பெரிய புத்தகமாக இருக்கும் அதை இன்னும் பெரிதாக கொடுத்தால் யாரும் படிக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அந்தப் புத்தகத்தை பாலாஜி அண்ணனும் பிர்தோஷ் பாஷாவும் அமீரகத்திற்கு வரும் பிரபலங்களுக்கு எல்லாம் கொண்டு சேர்த்தார்கள். இயக்குநர் மனோபாலா, நடிகர் கமலஹாசன், தமிழக முதல்வர் எனப் பலரிடம் திருவிழா போய்ச் சேர்ந்தது.


இதோ கேலக்ஸியில் எனது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது புத்தகம் - வரும் 18ஆம் தேதி - ஞாயிறு - ஷார்ஜாவில் நடக்க இருக்கும் கேலக்ஸியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வெளிவர இருக்கிறது.

எழுத்தோடு தொடர்ந்து பயணிடா எனக் காலம் என்னைக் கைபிடித்து இழுத்துப் போகும்போது அதனுடன் பயணிப்பது மனவலியை மாற்றும் மருந்தாக இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம்.

- பரிவை சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.  உங்கள் சிறுகதைகள் மனதை வருடும் ரகம்.  மென்மேலும் உயர வாழ்த்துகள் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூன்றாம் நூல் - மனம் நிறைந்த பாராட்டுகள் குமார். தொடர்ந்து எழுதுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி குமார்... வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள்!