பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)...
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலைப் படித்த போது, அதன் வசீகரத்தில் இருந்து மீண்டு வர வெகு நேரமானது. அவ்வளவு நேர்த்தியாய்க் கதை வாடிவாசலைச் சுற்றியே நகர்த்தப்பட்டிருக்கும்.சி.சு.செல்லப்பாவின் எழுத்தில் வாசித்த ஒரே ஒரு கதையும் அதுதான்.
அதை வாசிக்கும் போதுதான் எழுத்து என்ற ஒரு சிற்றிதழை அவர் பல கஷ்டங்களுக்கு இடையேயும் தொடர்ந்து பத்தாண்டுக்கு மேலாக நடத்தி வந்தார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. அவரின் இலக்கிய தாகம் வியப்பாய் இருந்தது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... இந்நூல் பேசுவதென்ன என்பதைத்தானே இங்கு பார்க்க வேண்டும்.
2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புத்தான் இது. இதில் சி.சு. செல்லப்பா பற்றிய ஏக்கங்கள் முதல் கறாரான விமர்சனங்கள் வரை இருக்கின்றன. இதைத் தொகுத்திருப்பவர் எழுத்தாளர் பெருமாள்முருகன்.
சி.சு. செல்லப்பா என்னும் மனிதரை... அவரின் குணத்தை... அவரின் கோபத்தை... அவரின் கதை, கவிதைகளை... அவரின் வாழ்க்கையை... எழுத்துப் பத்திரிக்கையை என எல்லாவற்றையும் பற்றி தொகுப்பில் இருக்கும் கட்டுரைகள் அன்பாய்... ஆக்ரோஷமாய்ப் பேசித் தீர்க்கின்றன.
'படைப்புக்களின் வலுவும் ஆகிருதியும்' என்ற பெருமாள் முருகனின் முன்னுரை... இதில் சிற்றிதழ் வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் கதைப்பாடல் ஒன்றின் நாயகன் போல சி.சு. செல்லப்பா திகழ்கிறார் என்று ஆரம்பித்து மற்ற கட்டுரைகளைப் பற்றிப் பேசி, சுந்தர ராமசாமியின் 'நினைவோடை' வரிசையில் சி.சு. செல்லப்பாவைப் பற்றிய நூல் வந்திருக்கிறது. இந்த வரிசை நூல்கள் தமிழுக்குப் புதிதானவை. தீவிரமாக இயங்கும் எழுத்தாளர் நம் சமகால எழுத்துலகப் பின்னணியோடு இத்தகைய நினைவுக் குறிப்புகளைப் பதிவு செய்வது அவசியமான செயலாகும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒன்றிரண்டைத் தவிர மற்ற கட்டுரைகள் எல்லாம் அவரின் படைப்புக்களை அடித்துத் துவம்சம் செய்து இதெல்லாம் ஒரு எழுத்தா..? என்ற ரீதியில்தான் பேசியிருக்கின்றன. தேவிபாரதியின் கட்டுரை சி.சு.செல்லப்பாவின் எழுத்தைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறது... அவரின் எழுத்தை அலுப்பூட்டும் எழுத்து என்று சொல்கிறார். இவரின் பேச்சுக்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதாக பெருமாள் முருகன் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் 'சி.சு.செ. என்றொரு ஆளுமை'யில் 1967-ல் வெங்கட் அவர்கள் செல்லப்பா, க.நா.சு. தி,ஜா., லா.ச.ரா போன்றோர் தாம் வாழும் காலத்தில் கால் வைத்துள்ளதாக அவர்கள் எழுத்துக்கள் எனக்குச் சொல்லவில்லை என்று எழுதினாராம்... அதற்காக அவர்கள் யாருமே வெங்கட்டை விரோதிக்கவில்லையாம்... ஆனால் செல்லப்பா மட்டும் பதில் சொல்ல நிறைய இருப்பதாகவும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டதாகவும் சொன்னாராம்.
செல்லப்பா எழுதிய கடிதமே இவரை எழுத்துலகிற்கு அழைத்து வந்ததாகச் சொல்லியிருக்கும் வெங்கட், செல்லப்பாவை 1962-ல் முதன் முதலில் சந்தித்ததையும் அவர் வீட்டில் வைத்து தருமு சிவராமு என்ற இலங்கை எழுத்தாளரைத் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், தருமுவை வளர்த்துவிட்டவர் சி.சு.செ. தான் என்றாலும் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போதும் செல்லப்பா தன் அன்பிலிருந்து எப்போதும் மாறவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்.
கி.அ.சச்சிதானந்தம் எழுதியிருக்கும் 'சி.சு.செல்லப்பா : இலக்கியமே உயிர் மூச்சு' என்னும் கட்டுரையில் செல்லப்பா இருபத்தி நாலு மணி நேரமும் இலக்கியம்தான் பேசுவார்... அவருக்கு யதார்த்த வாழ்க்கை என்னவென்றே தெரியாது என்றும் 1970-ல் 'எழுத்து' நின்று போக, 'சுவை' என்ற மாத இதழைத் தொடங்கி முதல் இதழோடு நின்று போக, தனது சொந்த ஊரான வத்தலக்குண்டுக்கே போன போது அவர் வாழ்ந்த ஊர் இப்போது தலைகீழாக மாறி நிற்க, நீண்ட நாள் அங்கு அவரால் இருக்க முடியவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்.
மேலும் தினமணியில் வேலை பார்த்த போது ஞாயிறு இதழைத் தொடங்கி அதற்குத் 'தினமணிக் கதிர்' எனப் பெயரிட்டவர் செல்லப்பா என்ற செய்தியுடன் அவரின் சிற்றிதழான எழுத்துவின் முதல் இதழின் முதல் சொற்றொடரை 'முழுக்க முழுக்க கருத்தாழமும் கனமும் உள்ள இலக்கியப் பத்திரிக்கையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிக்கைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சி' என்றுதான் ஆரம்பித்திருந்தார் என்று சொல்லியிருக்கும் சச்சிதானந்தம், முதல் இதழில் எழுதிய பிரபலங்கள் தொடர்ந்து நிறைய எழுதுவார்கள் என்ற சி.சுவின் எதிர்பார்ப்பைத் தகர்த்து அவர்கள் ஒதுங்கியபோதும் எழுத்து இதழைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார். அவருக்கு கடைசி வரை துணையாகவும் ஆலோசகராகவும் இருந்தவர் த.பிச்சைமூர்த்திதான் என்பதையும் சொல்லி, இராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தில் வரும் மஞ்சள் ஆறு ஒரு வாய்க்காலாக ஒடியதையும் அது குறித்து சி.சு.செல்லப்பா வருத்தமுடன் பேசியதையும் சொல்லி, இயற்கை வர்ணனையே இல்லாமல் எழுதும் சி.சு. வின் மறுபக்கத்தை அப்போதுதான் உணர முடிந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
தேவிபாரதியின் 'அஞ்சறைப் பெட்டிக்குள் ஒரு செப்பு நாணயம்' என்னும் கட்டுரை மணிக்கொடி காலத்திற்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகள் எவ்வளவோ வளர்ச்சிபெற்று விட்டன என்று ஆரம்பித்து நாட்டார் இலக்கியம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. செல்லப்பாவின் கதைகள் பற்றிப் பேசும்போது வாடிவாசலின் மொழி தன்னைத் திணறச் செய்தது என்றும் அது குறித்து நண்பர்களிடம் பல நாட்கள் சிலாகித்ததாகவும் சொல்லும் கட்டுரையாளர் அவரின் மற்ற கதைகளில் தென்பட்ட மிகைக் கற்பனையும் வறட்டுத் தனமும் தனக்குச் சலிப்பையே தந்தாகச் சொல்கிறார். அதேபோல் செல்லப்பாவின் கதைகளை ஒரு விமர்சன நிகழ்வுக்காக மறுவாசிப்பு செய்த போது முன்பு மனநிறைவு தந்த கதைகள் எல்லாம் சோர்வையே தந்தன என்றும் அவரின் பால் எரிச்சல் உண்டானதாகவும் அவரின் வாழ்க்கைப் பார்வை அலுப்பூட்டக் கூடியதாகவும் இருந்ததாகச் சொல்வதுடன் அவரின் கதைகளை வாசிக்கும் போது பிராமணர்களுக்கு அடுத்தபடியாக மாடுகளின் பால் அதிக அக்கறை கொண்டவாராக செல்லப்பா தனக்குத் தெரிந்ததாகவும் பகடியுடன் சொல்லியிருக்கிறார்.
'வாடிவாசல் தாண்டி' என்னும் கட்டுரையில் க.வை.பழனிசாமி படைப்பாளியும் வாசகனும் மிகுந்த அக்கறையோடும் நுணுக்கமாகவும் அணுக வேண்டிய இருமன வினை இலக்கியம் இது எப்போதும் வெகுஜன வாசகர்களை விட்டு விலகியே இருப்பது இயல்பிலேயே இருக்கிறது என்று சொல்லி, வாடிவாசலை, நல்ல ஜல்லிக்கட்டு ஒன்றைச் சிறந்த, தேர்ந்த வர்ணனையாளர் மூலமாகத் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சி அதிர்வே பிரதானம் கொள்கிறது என்றும் உரைநடை இலக்கியங்களோடு வாடிவாசலை அணுகிப் பார்க்கிற பொழுது கதை செய்வதைத் தாண்டி வசீகரம் கொள்ள வைக்கிற ரசபேதங்களை அறிய முடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
'புதிய கலனும் பழைய மதுவும்' என்ற கட்டுரையை க.மோகனரங்கம் இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது தமிழ் நவீன இலக்கியத்தில் சி.சு.செல்லப்பாவின் இடம் பிரதானமாக, எழுத்துப் பத்திரிக்கை ஆசிரியர் என்பதை ஒட்டியே இருக்கிறது என ஆரம்பித்து, சி.சு.செல்லப்பாவின் இரண்டாவது நாவலான ஜீவனாம்சத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். முழுக்க முழுக்க நனவோடைப் போக்கில் ஒரு பாத்திரத்தின் நினைவுத் தடத்தைப் பின் தொடர்ந்து செல்வதிலேயே முழு உருவடைகிறது என்பது தமிழுக்குப் புதுசு. இலக்கிய ரீதியாக இதன் மதிப்பு இன்று பின்தங்கிப் போனாலும் தமிழ் உரைநடைப் படைப்புக்களின் பரிணாம வளர்ச்சியைச் சுட்டும் காலரீதியான ஒரு புள்ளி என்ற அளவில் இன்றும் இதற்கு ஒரு வரலாற்று மதிப்பு உண்டு என்று சொல்லியிருக்கிறார்.
'சார்புகளும் சரிவுகளும்' என்ற கட்டுரையில் பாவண்ணன் வரலாற்று நாவலுக்கும் சாதாரண நாவலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பற்றி எழுதி. செல்லப்பாவின் சுதந்திர தாகம் என்னும் நாவலைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதில் காந்தி காண நினைத்த சுதந்திரங்களைப் பற்றிப் பேசவேயில்லை என்று சொல்லியிருக்கிறார். மேலும் மிகப்பெரிய விளைச்சலைத் தரவேண்டிய ஒரு விவசாயியின் உழைப்பு... கடும் வெயில், சூறாவளி, வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பூச்சி அரிப்பு என ஏராளமான காரணங்களால் நாலில் ஒரு பங்கைக் கூட அறுத்து எடுக்க முடியாத அளவுக்கு வழியின்றிப் போவதைக் காண நேரும் போது உருவாகும் சங்கட உணர்வே செல்லப்பாவின் நாவலைப் படித்து முடித்தபோது ஏர்பட்டது என்று சொல்லியிருக்கிறார்.
த.பார்த்திபனின் 'பிரமாண்டமும் ஒச்சமும்' என்னும் கட்டுரை சி.சு.செல்லப்பாவின் புதுக்கவிதைகளைப் பற்றிப் பேசி, தமிழில் புதுக்கவிதை ஒரு இயக்கமாக வளரவும் நிலைபெறவும் காரணகர்த்தா சி.சு.செல்லப்பாதான் என்கிறது. 444 வரிகளில் எழுதிய 'மெரினா' மற்றும் 2000 வரிகளில் மகாத்மா காந்தியைப் பற்றி எழுதிய' நீ இன்று இருந்தால்' ஆகியவற்றை இவரின் சோதனை முயற்சிகளாக அடையாளம் காணலாம் என்கிறார் கட்டுரை ஆசிரியர்.
இந்த இரண்டு கவிதைகள் குறித்தும் 1962-ல் வல்லிக்கண்ணன் அவர்கள், 'இவ்வளவு நீளமாக எழுத வேண்டும் என்று ஆசைப்படாமல் கவிதைக்கு வேகமும் உணர்ச்சியும் அதிகம் கொடுத்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்' என்றும், 'இதில் வறண்ட முறையில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை அதிக வலுவோடும் விறுவிறுப்பாகவும் வசனமாகக் கட்டுரை வடிவில் எழுத முடியும், எழுதியிருக்கலாம்' என்றும், 'வலிந்து செய்யப்பட்ட சொல்லடுக்கு வேலையாக இக்கவிதை அமைந்துள்ளது. இயல்பான ஓட்டம் இல்லை. ரசித்து மகிழக்கூடிய சிலசில வரிகள் ஆங்கங்கே தென்படுகின்றன.' என்றும் சொல்லியிருக்கிறார்.
செல்லப்பாவின் கவிதைப் பங்களிப்புச் சாதனை கணிசமாய்க் குறைந்து அடையாளமிடப்படுவது இவரது ஒளிரும் பிரமாண்டத்தினூடே ஓர் ஒச்சமாய் ஓடுகிறது. ஒச்சம் கவிதைப் பங்களிப்பில் மட்டுமே என்று கவனமாய் அறிந்து நினைவு கொள்ள வேண்டியது. இவரின் பிறதுறைப் பங்களிப்புக்கள் யாருக்கும் எப்போதும் பிரமாண்டத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்று கட்டுரையை முடித்துள்ளார்.
இது கட்டுரைத் தொகுப்பு என்பதால் அவர்கள் சொன்னதையே இங்கு பதிவாக்கியிருக்கிறேன். ஒரு எழுத்தாளனை விமர்சித்தல் என்பது எப்போதும் நிகழ்வதுதான். சமகாலத்தில் பிரபல எழுத்தாளர்கள் ஒருத்தரை ஒருத்தர் விமர்சிப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சி.சு.செல்லப்பா என்னும் மனிதரைப் பற்றி, அவரின் எழுத்துக்களைப் பற்றி விரிவான பார்வை என்பது சிறப்புத்தான்.... ஆனால் அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது... அப்படி எழுதியிருக்க வேண்டுமென்றெல்லாம் சொல்வது ஏற்புடையதல்ல... எழுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்த்தான் வரும்... அவருக்கு எப்படி வந்ததோ அப்படித்தான் அவர் பயணித்திருக்கக் கூடும்.
இந்தத் தொகுப்பை எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் என்னிடம் கொடுத்து கண்டிப்பாக வாசியுங்கள்... ஒருவரின் எழுத்தைக் குறித்து எப்படியான விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை அறிவீர்கள்... சி.சு.செல்லப்பா மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதை கட்டுரையாளர்களில் சிலர் சுத்தமாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லியே கொடுத்தார். நல்லதொரு தொகுப்பை வாசித்த மனநிறைவைக் கொடுத்த கட்டுரைகள் இவை.
முடிந்தால் வாசியுங்கள்... வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
பிரமாண்டமும் ஒச்சமும் (சி.சு.செல்லப்பா படைப்புலகம்)
தொகுப்பாசிரியர் : பெருமாள்முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.40
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
சுவாரஸ்யமான தகவல்கள். இவரின் "சுதந்திரதாகம்" புத்தகத்தை வாங்கிப் படித்துவிடவேண்டும் என்று என் அப்பா மிக விரும்பினார். நடக்கவில்லை.
நல்லதொரு அறிமுகம். வாசிக்க முடிந்தால் வாசிக்கிறேன்.
அருமையான விமர்சனம் குமார்... நன்றி...
அருமையான பதிவு
வாவ்
கருத்துரையிடுக