மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 16 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : பார்த்த சினிமாக்களும் எழுத்தும்

கொரோனா என்னும் கொடும் நோயின் பிடிக்குள் உலகமே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நம் நாட்டிலும் பொழைக்க வந்த நாட்டிலும் தினந்தோறும் எகிறிப் போய்க் கொண்டிருக்கும் பாதிப்பு / இறப்பு எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருத்தமும் பயமுமே ஆட்கொள்கிறது.  யாருக்கு வரும்..? எப்போது வரும்..? எப்படி வரும்..? என்பதெல்லாம் தெரியாது... ஆனாலும் வரும். நேற்று காரைக்குடியில் ஒரு நாலு வயதுக் குழந்தைக்கு வந்திருக்கிறது... இந்தச் செய்தியைக் கேட்டபோது அந்தக் குழந்தை மீண்டு(ம்) வர வேண்டும் என்றுதான் பிரார்த்தித்தேன்.

வீட்டில் இருந்து வேலை என்னும் போது எங்கே ஓய்வெடுத்து விடுவானோ என அள்ளிக் கொடுக்கிறார்கள். இதற்கு அலுவலகத்திற்கே போயிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஒரே ஒரு ஆறுதல்... அலுவலகத்தில் வேலை செய்யும் போது இளையராஜாவைக் காதில் ஒலிக்க விட்டுக் கொண்டுதான் வேலை செய்வேன். அலுவலகத்தில் லாப்டாப் இல்லை வேணுமென்றால் உன் டெஸ்க்டாப் கம்பயூட்டரையே தூக்கிட்டுப் போ என்ற போது ஐந்து பேர் இருக்கும் அறையில் டெஸ்க்டாப்பைக் கொண்டு வந்து கட்டிலில் வைத்துக் கொண்டு இருத்தல் சரிவராதென என்னால் எடுத்துச் செல்ல இயலாது... அறையில் வைக்க முடியாது என்ற போது எகிப்தைச் சேர்ந்த சர்வே இஞ்சினியரும் நண்பருமான அஷ்ரப் அவரின் லாப்டாப்பை எனக்குக் கொடுத்தார். அதில் வேலை பார்த்துக் கொண்டு எனது லாப்டேப் (திரை வேலை செய்யாது என்பதால் 21'' மானிட்டர் ஒன்றைத் தனியாக இணைத்திருக்கிறேன்) வழி படங்களைப் பார்த்துக் கொண்டோ பாடல்கள் கேட்டுக் கொண்டோ பவா செல்லத்துரை சொல்லும் கதைகளையோ கேட்டுக் கொண்டு வேலை செய்ய முடிகிறது. ஒரு ஒரு பிரச்சினைதான் உயரமில்லாமல் கட்டிலில் வைத்து வேலை செய்வதால் முழங்கை வலியும் முதுகு வலியும் அதிகமாகிவிட்டது... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கையோ தெரியவில்லை.

பார்க்க நினைத்துப் பார்க்காமல் இருக்கும் பழைய சினிமாக்கள்தான் இப்போது என் வேலைக்கு இடையே ஒரு பக்கம் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. இரவில் சில மலையாளப் படங்கள்... தினமும் கொஞ்சமாய் வாசிப்பு... அப்பப்ப கொஞ்சம் எழுத்து என நகரும் நாட்கள் நல்லாத்தான் இருக்கு... ஊரில் எப்படியிருக்கிறார்கள்... பாதுகாப்பாய் இருங்கள் என போனில் கூப்பிட்டுப் பேசினாலும் மனசெல்லாம் அங்குதான் இருக்கு... ஊருக்குச் செல்லும் வாய்ப்பு வந்தால் வந்து சேர வேண்டும்... எப்போதும் வேலை அதிகமிருந்தால்  மற்ற சப்தங்கள் எதுவும் கேட்காமல்தான் வேலை செய்வேன்... அது அப்போதும் இப்போதும் அப்படித்தான்... ஐந்து பேர் இருக்கும் அறை... எல்லாரும் அறையில்தான் எனும் போது வேலை தொடர்பான அழைப்புக்கள்... பேச்சுக்கள்... ஊருக்குப் பேசுதல் என எப்போதும் அறைக்குள் பேச்சின் சப்தம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அலுவலகத்தைப் போல் அறையிலும் பாடலோ படமோ ஏதோ ஒன்று எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ஆர்.சுந்தரராஜனின் நான் பாடும் பாடல் படத்தைப் பார்த்ததேயில்லை என்பதால் சரி பார்க்கலாமே எனப் பார்க்க ஆரம்பித்தேன்... மோகன்தான் கதாநாயகன் என்று நினைத்திருந்த எனக்கு சிவக்குமாரே படம் முழுவதும் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அதுபோக பாண்டியன், சரத்பாபு என முக்கியமான நடிகர்கள் பலர் இருந்தார்கள்... கதையும் அருமை... பாடல்கள் அடிக்கடி கேட்டு ரசிப்பவை என்பதால் படம் ரொம்பவே கவர்ந்தது.

சிவக்குமார் நடித்த பத்ரகாளி நல்லாயிருக்கும்ன்னு பலர் சொல்லக் கேட்டிருப்பதால் ஒரு நாள் அந்தப் படம் என் முன்னே...  பாடல்கள் அருமை... சாதாரணப் படம்தான்... அதைக் கொண்டு சென்ற விதமும் இசையுமே படத்தைச் சிறப்பாக்கியிருந்தது.  அடுத்து கார்த்திக்கின் எதிர்காற்று... பார்க்காத படம் என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். படமும் பரவாயில்லை ரகம்தான்... அப்பல்லாம் இப்படியான கதைப் படங்களே அதிகம் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரே ஆறுதல் அப்போது எந்த இயக்குநரும் சாதிப்பேரைச் சொல்லி ஆண்ட சாதி, அடிமைச்சாதியின்னு படம் எடுக்கலை.

திடீரென பாண்டியராஜன் படத்தின் மீது ஒரு ஆர்வம்... எப்பவுமே பாண்டியராஜனைப் பிடிக்கும் என்பதால் ஆண்பாவம் பார்க்கலாம் என ஆரம்பித்து அடிக்கடி பார்த்தபடம்தான் அது என்பதால் வேறு எனத்தேடி பார்த்திருந்தாலும் மறந்து போன நெத்தியடியில் இரண்டு மணி நேரம் சிரித்தபடி வேலை பார்க்க முடிந்தது.

அப்புறம் பாக்கியராஜ்... படிக்கும் காலத்தில் பாக்யராஜ், ராமராஜன் படமென்றால் தியேட்டருக்குப் போயே ஆகவேண்டும். தூறல் நின்னு போச்சு பார்த்த மறுநாள் பள்ளியில் மரக்குரங்கு விளையாடுகிறேன் என ஒரு நண்பர் மரத்திலிருந்து குதித்ததில் கை ஓடிந்த கதை இருக்கு... பாக்யராஜின் இது நம்ம ஆளு எப்பவுமே நம்ம பேவரைட்... அதனால் அதில் பாதிவரை பார்த்தேன்... பின்னர் மேனேஜரின் போன் வர அவனுடன் பேசிய பிறகு படத்தை மறந்து வேலையில் லயித்தேன். ஒன்பது மணி நேர வேலை எப்படியும் நடந்துவிடும். அன்றன்றைக்கு முடித்த டேட்டாவும் என்னென்ன செய்தேன் என்பதையும் அனுப்ப வேண்டும்... அதனால் படமும் இசையும் வேலையை எப்போதும் கெடுத்ததில்லை... வாசிக்கும் போது கூட எதாவது ஒரு பாடல் இசைத்துக் கொண்டுதான் இருக்கும்... இது படிக்கும் காலத்தில் தொடங்கியது... இப்போது என் மகள் செய்கிறார்... படிக்க எழுத அவருக்கு தொலைக்காட்சியில் ஏதாவது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

கமல் ரசிகன் நான்... நடிகனாய் கமலை ரொம்பப் பிடிக்கும்... எல்லாம் இன்ப மயம் பார்த்தேன்... கமலின் நடிப்பு சிறப்பு... படத்தின் கதை... எப்பவும் போல் பலிவாங்கல்... இன்னைக்கு எடுத்தால் தியேட்டரை விட்டு ஒரே நாளில் ஓடிவிடும் படம்தான் அது. பட்டாம்பூச்சி என்னும் பேர் கூட கேள்விப்படாத கமலின் படம் பார்த்தேன்... ஒருவனைக் காதலித்து அவன் பின்னே குடும்பத்தை உதறிச் செல்லும் பெண்ணுக்கு ஏற்படும் அவலநிலைதான் கதை... பார்க்கலாம். 

நேற்று விஜயகாந்தின் புலன் விசாரணை... எப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம் இது.  இன்று கமலின் வேட்டையாடு விளையாடு என நாட்கள் நகர்ந்தாலும் காலையில் கொஞ்ச நேரம் இரவில் கொஞ்ச நேரம் என வாசிப்பும் நகர்கிறது. அதனூடே அது குறித்து எழுதவும் முடிகிறது. வம்சி தொகுத்திருக்கும் கந்தர்வனின் மொத்தச் சிறுகதைகள் (61 கதைகள்), கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல், பிடிஎப்பாக இருக்கும் ஆடும் தீபம் என மூன்றையும் மாறி மாறி இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்... தினமும் சில வலைப்பூக்களின் வாசிப்பும் உண்டு. கந்தர்வனின் சிறுகதைகளில் ஆறு கதை வாசித்திருக்கிறேன்... நாலு கதைக்கு ஒரு கட்டுரை என வைத்தாலும் பதினைந்து கட்டுரை எழுதலாம். அலுவலகத்துக்குப் போக ஆரம்பித்தால் வாசித்தல் எழுதுதல் எல்லாமே கடினம்தான்.

சென்ற ஞாயிறன்று ஒரு கதை எழுதினேன்... ரொம்ப நாளைக்குப் பின் மனசுக்கு நெருக்கமாய் ஒரு கதை எழுதிய மகிழ்வு ஏற்பட்டது. எதிர்சேவை குறித்து வரும் விமர்சனங்கள் மனசுக்கு இதமாய் இருக்கிறது... நம் கதைகள் அதற்கான இடத்தைப் பிடித்து இருக்கின்றன என்பது மகிழ்ச்சிதானே. புதிதாய் ஒரு நாவல் எழுதலாம் அதில் எதிர்சேவை என்னும் சிறுகதையை மையமாக வைத்துக் கதையை நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் முதல் இரண்டு அத்தியாயங்கள் எழுதி வைத்திருக்கிறேன்... தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும்.

மலையாளப் படம் பார்க்க விரும்பினால் டிரான்ஸ், அஞ்சாம் பாதிரா போன்ற படங்களைப் பாருங்கள்... டிரான்ஸில் கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளை வச்சிச் செஞ்சிருக்கானுங்க... இது மாதிரிப் படங்கள் தமிழில் வருவது கடினமே... படம் எடுக்கும் போதே வழக்குத் தொடர்ந்து விடுவோம் என் மதத்தைக் கேலி பண்ணியிருக்கிறான் என... அத்துடன் நிற்க மாட்டோம்... உன் தெய்வம் என்ன செய்தது..? அப்படின்னு பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால் மலையாளிகள் தைரியமாக எடுக்கிறார்கள் அது எந்த மதத்தைப் பற்றியது என்றாலும் அப்படியே திரைக்கு வருகிறது. அதேபோல் அஞ்சாம் பாதிரா அருமையான க்ரைம்... படம் இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்.

ஆமா கதை எழுதினேன்னு சொன்னேனுல்ல... அதிலிருந்து கொஞ்சமாய் உங்கள் பார்வைக்கு...

பெரியண்ணனுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன்.

"நீ போய் உக்காருடா..." என்றான் சின்னண்ணன் ராஜேஷ், தேவகோட்டையில் ஒரு தனியார் வங்கியில் காசாளர், ஊரில் இருந்துதான் வேலைக்குப் போகிறான்.

"சும்மா நிக்கிறேன்..."

"அதான் மாமா சித்தப்பான்னு நாலைந்து பேர் நிக்கிறோமே... அப்புறம் நீயும் எதுக்கு... எட்டுப் பத்துமணி நேரம் பஸ்ல வந்திருப்பே... அலுப்பா இருக்காதா... போ... போய் உக்காரு..." என்றான் பெரியண்ணன் தோளைத்தொட்டு. 

"ம்..." என்றபடி அருகில் கிடந்த சேரில் போய் அமர்ந்தேன். 

ஊரிலிருந்து வந்தபோது அண்ணன் அப்பாவை எல்லாம் கட்டியணைத்து விட்டு பெரியப்பாவைப் பார்க்க போய்விட்டதால் இப்போதுதான் அப்பாவை நன்றாகப் பார்த்தேன்... இழப்பின் வலி முகத்தில் தெரிய சோகமாய் நின்றிருந்தார். பெரியப்பா இறந்ததைக் கேட்டு என்ன துடி துடித்திருப்பார்... அண்ணனாய்ப் பார்த்ததைவிட அப்பாவாய்த்தானே பார்த்திருக்கிறார் இவர் என அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதுவரை தப்பைச்  சூடு பண்ணுகிறேன் என வைக்கோலைப் போட்டு எரித்துச் சுற்றி அமர்ந்து பேசியபடி, பீடியைக் கப்... கப்பென இழுத்துக் கொண்டு தப்பை 'டண்...' 'டண்' எனத் தட்டிப் பதம் பார்த்தவர்கள் சரியான பதம் வந்து விட்டது எனத் தெரிந்ததும் எழுந்து வந்து 'டண்டண... டண்டண...' என அடிக்க ஆரம்பித்தார்கள்.

ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள்.

"அப்பா... அம்மா கூப்பிடுறாங்க..." என ஓடி வந்தாள் என் மகள் ஆறு வயது ஆர்த்தி.

"ம்..." என அவளைப் பிடித்துக் கொண்டு சுலோச்சனா நின்ற இடத்துக்குப் போனேன்.  இரவெல்லாம் பஸ்ஸில் வந்த அயற்சி அவள் முகத்தில் தெரிந்தது.

இன்னும் பேசுவோம் வேறு செய்திகளுடன் வேறொரு பதிவில்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வீட்டிலிருந்து வேலை வகையில் என் மகனையும் சாறு பிழிந்து கொண்டிருக்கிறார்கள்.

பட்டாம்பூச்சியில் வரும் எஸ்பிபி வாணி ஜெயராம் பாடல் நன்றாயிருக்கும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டிய சூழல். இதுவும் கடந்து போகும். இந்த நேரத்தினை மனதுக்குப் பிடித்த வகையில் கடப்போம். இங்கே வீட்டிலிருந்து வேலை - சில நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது - நேற்று மதியம் இரண்டு மணிக்கு அழைப்பு - அலுவலகம் சென்று வீடு திரும்பிய போது இரவு 10 மணி! இன்றைக்கும் போக வேண்டும்!

இதுவும் கடந்து போகும். நலமே விளையட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் சொன்ன படங்கள் அனைத்தும் பிடித்தவை...

பாடல்கள் இல்லையென்றால் எனக்கு மிகவும் சிரமம் தான்...

இராய செல்லப்பா சொன்னது…

நீங்கள் எழுத முனைந்திருக்கும் தொடர்கதை இனிதே முடிய வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நீங்க சொன்ன படங்களில் வேட்டையாடு விளையாடு மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மற்ற படங்கள் பார்த்ததில்லை

ட்ரான்ஸ் அஞ்சாம் பாதிரா ரொம்ப நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன் ஃப்ரீயா ஆன்லைனில் வரப்ப அல்லது மைத்துனர் சென்னை வந்த பிறகு நான் சென்னை போகும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு பார்த்துவிடலாம்.

வீட்டிலிருந்து வேலை சில கம்பெனிகள் நிறையவே வேலை வாங்குகிறார்கள் என்று தெரிகிறது.

விரைவி எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

கீதா