மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

எதிர்சேவை விமர்சனம் : எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்

குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் எப்போதும் என் மீது பிரியம் கொண்டவர். சென்னைக்குப் போனபோது யாரையும் சந்திக்க முடியாத சூழலிலும் தொடர் போன் அழைப்பின் மூலம் தனது வீட்டுக்கே வர வைத்தவர் இவர். இவரின் திருமண ஒத்திகைக்கு எனது அணிந்துரை வேண்டுமெனச் சொன்ன போது நானெல்லாம் எழுதி என யோசித்தேன். விடவில்லை... நீதான் எழுதுறேன்னு சொல்லி வாங்கினார்.
என் புத்தகத்தை வாசித்துக் கண்டிப்பாக விமர்சனம் எழுதுவேன் என்று அவர் சொன்னபோதே அவரிடமிருந்து ஒளிவு மறைவு இல்லாத விமர்சனம் வரும் என்று நினைத்தேன். மனசுக்கு நிறைவான விமர்சனம் இது. நன்றி அண்ணா...

இந்த விமர்சனத்தைவிட இதை முகநூலில் எழுதிய பின் அவரும் நானும் முகநூல் அரட்டையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியிருக்கிறோம்... நிறைய விஷயங்கள்... கதைகளின் இறுதியில் ஒரு டுவிஸ்ட் இருக்கணும் குமார்... அது இல்லாதது எனக்கு ஏமாற்றமாய் இருந்தது என்றாலும் உங்க பேர் சொல்ல நல்ல கதைகள்... நல்ல தொகுப்பு... உங்களிடம் வட்டார வழக்கு இருக்கு... இன்னும் சிறப்பான இடத்தை அடைவீர்கள் என்றார். அவரின் வாழ்த்து என்னைத் தொடர்ந்து எழுத வைக்கட்டும்.

டுவிஸ்ட் பற்றி அவர் சொன்னதுக்கு எனக்கு இப்படித்தான் எழுத வரும்ண்ணே... முடிவு பெரும்பாலும் வாசிப்பவர் கையிலேயே இருக்கும் என்றும் சொன்னேன்... இதில் எனது விமர்சனம் மனசைப் பாதிப்பது போல் இருந்தால் மன்னிச்சுக்கங்க என்று வேறு சொன்னார்... மன்னிப்பெல்லாம் யார் யாருக்குக் கொடுப்பது..? மனசுல இருப்பது விமர்சனம் ஆகும் போதுதான் நாம் இன்னும் நல்லா எழுத முடியும்... அதனால் இப்படியான விமர்சனங்கள்தான் எனக்கு வேண்டும்.

அவருடன் பேசியதே ஒரு விமர்சனம் போல்தான்... முடிந்தால் காப்பி பண்ணி அடுத்த பதிவாய் ஆக்கிடுறேன்.

இனி அண்ணனின் விமர்சனம்...


ண்பர் பரிவை சே.குமார் அவர்களின் அறிமுகம் மனசு வளைத்தளத்தின் மூலம் கிடைத்தது. அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்தவன் அவரோடு நண்பராக இணைந்து கொண்டேன். எனக்கு ஊக்கம் தரும் நட்புகளில் அவரும் ஒருவர். பத்து வருட இணைய நட்பு என்றாலும் அவரை நேரில் சந்தித்தது என்னவோ இரு மாதங்களுக்கு முன்பு தான். அப்போது அவரது சிறுகதை தொகுப்பான "எதிர் சேவை" நூலை எனக்கு வழங்கினார்.

இது அவரது முதல் முயற்சி. கலக்கல் டரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளி வந்திருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் 12 சிறுகதைகள் உள்ளன. நகரம் மற்றும் கிராமத்து மனிதர்கள் வாழ்க்கையை, மனித உறவுகளின் நேசத்தை, காதலை அவரது எழுத்துக்கள் மூலம் நமக்கு தொகுத்து தந்திருக்கிறார்.

நினைவின் ஆணிவேர்...

தான் காதலித்தவனோடு வீட்டை விட்டு சென்ற அபியின் குடும்பம் பட்ட வலியை எதிர்ப்பை சொல்கிறது. அவளுக்கு ஒரு பிரச்சனை என்று தன் கணவனுடன் வாசலில் வந்து நிற்க, கோபத்தில் தூக்கி எறிந்த பாசத்தையும் உறவையும் அந்த குடும்பம் எப்படி மீட்டெடுக்கிறது என்பதை நெகிழ்ச்சியோடு சொல்கிறது கதை.

என்னுயிர் நீ தானே...

கொஞ்சம் ரொமாண்டிக்கான நகரத்து கதை. புருசன் முதல் முறையாக மதுவருந்தி வந்ததை, மூர்க்கமாய் நடந்து கொண்டதை, பின் அவன் தன் தவறுக்கு வருத்தம் கொள்வதை நாயகி ஸ்வாதி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறது.

ஜீவ நதி...

தீபாவளி கொண்டாட, வெளியூரிலிருந்து வரப் போகும் புருசனையும் அவன் கொண்டு வரப் போகும் பணத்தையும் எதிர்பார்த்து நிற்கும் காவேரிக்கு புருசன் வருவது தாமதாமாகும் என்பது தெரிய வர, பிள்ளைகளை சமாதானப்படுத்த முடியாமல் திணறுகிறாள். இவர்களது ஏமாற்றத்தை போக்குகிறான் அவளது அண்ணன். எந்த நிலையில் இந்த உதவியை, கடமையை அவன் செய்கிறான் என்பதைக் கதையின் முடிவு நெகிழ்ச்சியுடன் நமக்கு தெரியப்படுத்துகிறது.

தீபாவளிக் கனவு...

பணக்கார வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வரும் இளம் பெண் சுந்தரி தீபாவளியை கொண்டாட தன் வீட்டிற்கு செல்ல ஆவலாய் இருக்கிறாள். முதலாளியம்மாவின் மூலம் அதற்கு தடை வரும் என்று எதிர்பார்த்திருக்க தன் அம்மாவே வர வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். ஏன் என்கிற யதார்த்தத்தை படிப்பவர்கள் ஏற்று கொண்டாலும் அந்த சின்னப் பெண்ணால் ஏற்க முடியவில்லை. ஒரு வேலைக்காரப் பெண்ணின் வலியை, வேலைப்பளுவை, குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை அழுத்தமாகவே இதில் பதிவு செய்திருக்கிறார்.

வீராப்பு...

இந்தச் சிறுகதை பழைய நடைமுறையையும் பழக்க வழக்கத்தையும் மாற்றி கொள்ளாமல் சின்னஞ்சிறுசுகளின் காதலை எதிர்க்கும் சுவாமிநாதனின் வீராப்புக் கலைந்ததா இல்லியா என்பது வட்டார வழக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. காதலர்களின் காதலை காட்டாமலே அந்த காதல் உறவுகளிடையே ஏற்படுத்தும் சிக்கலை வெளிப்படுத்துகிறது.

மனத்தேடல்...

காதலன் தனக்காக காத்திருந்த காதலியை மணம் செய்ய இயலாமல் விட்டு விடுகிறான். தனது கல்யாணத்திறக்கு பின் அவளை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. தன் மகளுடன் சென்று அவளை சந்திக்கிறான். இருவரும் தங்கள் காதலின் பிரிவை பேசி தீர்க்கிறார்கள். இதன் முடிவை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

குலசாமி...

அப்பாவைச் சாமியாய் பார்க்கும் மகள் அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்ததை தாங்க மாட்டாமல் அப்பாவை வெறுக்கிறாள். அவர் சாகும் வரை இருக்கும் பிடிவாதம் அவளுக்கு எப்போது தளர்கிறது என்பதை மகளின் பார்வையில் சொல்கிறது கதை. அவளது பிடிவாதம் தளர்வதின் காரணத்தை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம்.

எதிர்சேவை...

குடும்ப உறவுகளில் வசதி படைத்த குடும்பமும் வசதி இல்லாத குடும்பமும் திருவிழாவுக்காக சந்திக்க நேர்கிறது. என்ன நடக்கும். இதனால் யாருக்கு வலி என்பதும் தெரிந்த ஒன்று தானே. ஆனாலும் அதனூடே சின்னஞ் சிறுசுகளின் பிரியமும் காதலும் அழகரின் எதிர்சேவை நிகழ்வுடனே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதையில் இன்னும் இரு பக்கங்களாவது எதிர்பார்த்தேன்... ஆனால் பட்டென்று முடிந்ததில் ஏமாற்றமே.

இதனுடன் வெள்ளாடும் செம்மறி ஆடும், நேசத்தின் ரகம், விரிவோடிய வாழ்க்கை அப்பாவின் நாற்காலி தலைப்பிலான சிறுகதைகளும் உள்ளன.

தன் எழுத்துக்களால் இன்றளவும் தொடர்ந்து வலைத்தளத்தில் முத்திரை பதித்து வரும் நண்பர் பரிவை சே.குமார் புத்தக வெளியீடுகளிலும் தொடர்ந்து வெற்றிகரமாய் முத்திரை பதிக்க அன்பு வாழ்த்துகள்.

ஆர்.வி.சரவணன்.

பேரன்பும் பெருமகிழ்வும்...
நன்றி அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஒவ்வொரு கதையாய்ச் சொல்லியிருப்பது சிறப்பு. வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய நண்பர்... முக்கியமாக இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் சீடர்... "Twist" பற்றி சொல்லாமல் இருந்தால் தான், வியப்படையலாம்... வாழ்த்துகள் குமார்... இது போல் நிகழ்வுகள் உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தந்து, அவை மேலும் பெருகட்டும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு புத்தக வாசிப்பனுபவம். நண்பர் சரவணன் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

எல் கே சொன்னது…

கிண்டிலில் கிடைக்கிறதா

Yarlpavanan சொன்னது…


சிறப்பாக கதைகளை அலசி உள்ளார்
அதனை பாராட்டலாம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அருமை, கட்டாயம் டுவிஸ்ட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது ஆர்ம்ப கட்ட வாசகர்களை மட்டுமே கவரும் இயல்பான் கதைகளே சிறப்பு.படிக்க முயற்சிக்கிறேன். வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சரவணன் சாரா ஆஹா. விமர்சனம் நல்லா ஒவ்வொரு கதைக்கும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். சில கதைகள் வாசித்த நினைவும் இருக்கு.

வாழ்த்துகள் குமார்.

கீதா