மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 ஏப்ரல், 2020

சினிமா : பாரம்

பாரம்...

கிராமங்களில் திட்டும் போது நீ எல்லாம் எதுக்குப் பூமிக்குப் பாரமா இருக்கே... போய்ச் சேர வேண்டியதுதானே என்பார்கள்...  அப்படியான ஒன்றைத்தான் இந்தப்படம் பேசுகிறது... இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பேசியிருக்கலாம்தான்... ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியிருக்கிறது என்பதில் திருப்தி அடையலாம்.

66 வது தேசிய திரைப்பட விருதுவிழா ...

நாயகனைப் போற்றும்... நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத கற்பனைகளைச் சுமக்கும் படங்களுக்கு நாம் கொடுக்கும் வானளாவிய ஆதரவுக்கு இடையில் இது போன்ற படங்களுக்கு பாதி கூட நாம் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை... இது போன்ற தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்தாலும் அமோக ஆதரவெல்லாம் எப்போதும் கிடைப்பதில்லை... பாரதிராஜாவின் படங்களுக்கு ஒரு காலத்தில் இருந்த வரவேற்பு சமீபத்தில் வந்த மீண்டும் ஒரு மரியாதைக்கு இல்லை என்னும் போது இப்படியான படங்களுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதே தவறுதான். திரைக்கு வருமுன்னே விருதுகள் பெற்ற படமென்றாலே நமக்கு அது எட்டிக்காயாகத்தான் இருக்கும்.

கொரோனாவின் பிடியில் இருக்கும் இந்த நாட்கள் பழையது... புதியது... மலையாளம்... தெலுங்கு என பல படங்களை பார்க்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஊரில் மகளுக்கு ஆன்-லைனில் வகுப்பு என்பதால், பகலெல்லாம் செல்போன் அவர் கைவசம்... அதனால் அங்கு பேச முடியாத நிலை. விடுமுறை தினம் மட்டுமின்றி வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் மற்ற நாட்களும் சினிமாவிலும் வாசிப்பிலும் நகர்கிறது... வாழ்க்கையின் இன்னொரு பக்கம் மிகப்பெரிய பாரத்தைத் தூக்கி நிறுத்தி வைத்திருந்தாலும் பாரத்தை இறக்கி வைத்து நம்மால் நகர முடியும் என்ற நம்பிக்கையுடனே நகர்ந்து கொண்டிருக்கிறது நாட்கள்.

வயதான வாட்ச்மேன் கருப்புசாமி தன் தங்கை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்... தங்கை மகன்கள் மூவரும் அவர் மீது மிகவும் பாசமாய் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்று திரும்பும் போது ஒரு விபத்து... முதுகெலும்பு உடைந்துவிட, ஆபரேஷன் பண்ண வேண்டும் என மருத்துவர்கள் சொன்னபோதும் மருமகன்கள் கஷ்ட ஜீவனம் என்றாலும் மாமாவுக்கு ஆபரேஷன் பண்ணத் தயாராக இருக்க, கிராமத்தில் படோடபமாய் வாழும் மகனுக்கு அதில் விருப்பமில்லை. ஊருக்கே கொண்டு போய் வீட்டின் பின்னே இருக்கும் குடிசையில் போட்டு வைக்கிறான். சில நாட்களிலேயே அவர் இறந்து போகிறார்.

தங்கை மகன்களில் அவருக்கு ரொம்பப் பிடித்த, மற்றவர்களுக்காக கொடி பிடிக்கும் மருமகன் வீரா, மாமாவின் மரணம் கொலை என்று அறிந்து அதைப் பற்றிய தேடுதலில் இறங்குகிறான்... கிடைக்கும் செய்திகளில் அதிர்ந்து போகிறான்... பத்திரிக்கையும் அவனுக்கு உதவ, தீவிரமாய் மாமா மகனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறான். அதில் வெற்றி பெற்றானா இல்லையா என்பதைத்தான் இந்தப்படம் பேசியிருக்கிறது.

அண்ணன் தங்கையின் பாசத்தை அப்படியே மிக அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் வாட்ச் மேன் கருப்புசாமியாக நடித்த ராஜூவும் தங்கையாக நடித்த ஜெயலட்சுமியும்... பீப்பீ ஊதுவதைப் பற்றி அண்ணனும் தங்கையும் பேசிச் சிரிப்பது அட்டகாசம்... அதுவும் ஜெயலட்சுமியின் நாட்டுக்கட்டுச் சேலையும் பேச்சும் எங்க ஊர்ப்பக்கத்து ஆயாக்களை அப்படியே கண் முன் நிறுத்தியது.

தென் தமிழகத்தில் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் உடம்புக்கு முடியாமல் போன நிலையில் அவர்களை வைத்துப் பார்க்க முடியாத காரணத்தாலும் அவர்களின் வேதனையைத் தாங்க முடியாத காரணத்தாலும் தலைக்கூத்தல் என்ற ஒரு முறை பின்பற்றப்படுகிறது என்பதைப் பேசியிருக்கிறார்கள். நாம் பிறந்த குழந்தைகளுக்கு கள்ளிப் பாலைக் கொடுத்துக் கொள்ளும் தேனிப்பக்கத்தைப் பற்றி அறிந்திருக்கிறோம்... பாரதிராஜாவும் அதைக் கருத்தம்மாவாக்கினார். இதுவும் தென் தமிழகத்தில் என்றாலும் எங்கு என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.

தலைக்கூத்தல் என்றால் சலும்பச் சலும்ப எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்துப் படுக்கப் போட்டு விடுவார்கள்... தாங்க முடியாத காய்ச்சல் வந்து செத்துப் போவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் இன்னுமொன்றும் சொல்லப்படுகிறது அதாவது தலைக்கூத்தல் செய்யாமல் சொற்பமாய்க் காசு வாங்கிக் கொண்டு விஷ ஊசி போட்டுக் கொல்வதாகவும் அதற்கென ஒரு குழுவே செயல்படுவதாகவும் சொல்கிறார்கள்... என்ன கொடுமை பாருங்கள்... கண் முன்னே பெற்றவர்களைக் கொலை செய்தல் என்பது யோசிக்கவே முடியவில்லை... கொரோனா பாதித்த வயதானவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாமென இத்தாலி சொல்லிக் கொன்று குவித்தது போல.

இந்தத் தலைக்கூத்தல் முறையை அந்த ஊர் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது... பெரியவர்கள் தெரிந்தே வாழ்கிறார்கள்... வீட்டில் இருந்து மகன் கையால் விஷ ஊசி போட்டுக் கொல்லப்படுவதைவிட நடைபொடையா இருக்கும் வரை வேலை பார்த்து, ஆடு மாடு மேய்த்து மேய்ச்சல் திடல்லயே விழுந்து செத்துடலாம் என்று ஒரு முதியவள் சொல்வது வலி... பூச்சாண்டியைக் காட்டி சோறு ஊட்டுவது போல நர்ஸைக் கூப்பிட்டு ஊசி போடச் சொல்வேன் என மிரட்டுதல் சர்வசாதாரணம் எனவும் சொல்கிறார்கள் ஊரில் வாழும் மக்கள்.

இது ஒரு சாதாரணச் செயல் என்பது போல் எல்லாருமே நடந்து கொள்கிறார்கள்... இது பாவம் என்று யாருக்குமே தெரியவில்லை... வேதனையில் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கிறோம் என்கிறார்கள்... ஊசி போடும் நர்ஸ் கூட கருணைக் கொலைதான் செய்தேன்... இது எப்படிக் கொலையில் வரும் என்பதாய்த்தான் பேசுகிறார். அவர் கொன்றவர்களின் பெயரைச் சொல்லி வர, பேப்பரில் குறித்துக் கொண்டே வரும் இன்ஸ்பெக்டரைப் போல் நாமும் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியில் உறைந்து போவோம். 

கந்தசாமியின் மகனாக நடித்திருக்கும் சுப முத்துக்குமார் ஆரம்பம் முதல் இறுதிவரை தன் முகத்தில் இறுக்கத்தை கொஞ்சம் கூட இறக்காமல் வைத்திருக்கிறார்... நல்ல நடிப்பு... வீராவாக வரும் சுகுமார் சண்முகமும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படத்தில் குறை என்றால் ஒரு பத்திரிக்கையாளர் அதுவும் ஒரு பெண் தங்கள் ஊருக்குள் வந்து பக்கத்து ஊர்தான் என்று சொல்லி விபரங்களை... அதுவும் அந்தக் குழு நபர்களிடம் சுலபமாகப் பெறுதல் என்பதுதான்... இப்படியான நிகழ்வுகள்... அதுவும் தென் தமிழகத்தில் நிகழும்போது அந்த குழுவை அவ்வளவு சீக்கிரத்தில் புதிதாய் நான் பக்கத்து ஊர்தான் எனச் சொல்லி வரும் யாரும் நெருங்கிவிட முடியாது. மேலும் உடனே விபரங்களை எல்லாம் அப்பட்டமாகச் சொல்லி விடமாட்டார்கள். நாளைக்கு வா எனச் சொல்லி அவர்கள் அறியாமல் அவர்களை வேவு பார்க்க ஆளமர்த்துவார்கள். அதுவும் வீராவே அந்த ஊருக்குக் கூட்டிச் செல்லும் போது ஒரு கிராமத்தில் சுலபமாக ஆளை அடையாளம் காண முடியும். படத்தில் இதுதான் மிகப்பெரிய நெருடல் மற்றொன்று உடம்பு முடியாதவரை டெம்போவில் போட்டுத் தூக்கிச் செல்லுதல்... நாம் இன்னமும் எழுபதுகளில் இல்லை.

திரை விமர்சனம் - பாரம் | baaram review ...

2018-ல் கோவாவில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருதை 66வது தேசிய திரைப்பட விருது விழாவில் பெற்ற ஒரே தமிழ்ப்படம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. 2020 பிப்ரவரியில் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருக்கிறது... எத்தனை நாள் தாக்குப் பிடித்தது என்பதெல்லாம் தெரியாது.

பிரியா கிருஷ்ணசாமி என்னும் பெண் இயக்குநர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையை இவருடன் ராகவ் மிர்தாத் என்பவரும் இணைந்து எழுதியிருக்கிறார்.  ரெக்லஸ் ரோசஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

படத்தில் சொல்லப்பட்ட 'தலைக்கூத்தல்' என்னும் கருணைக் கொலை முன்பு இருந்திருக்கலாம்... இப்போது தென் தமிழகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். படத்தின் இசையும் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் பாரம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்... அதில் கோட்டை விட்டு விட்டார்கள்.  மேலும் ஆவணப்படம் போன்று இருப்பதாலோ என்னவோ நம்முள் கடத்த வேண்டிய வலியைச் சரியாகக் கடத்த முடியாமல் சினிமாவாய் நின்று, நம்மைப் பாரத்தைச் சுமக்க வைப்பதில் தவறிவிடுகிறது. 

இது போன்றதொரு விஷயத்தை எடுத்துப் படமாக்கியதற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

பாரம் பார்க்க வேண்டிய படம்தான்.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பாரம் சிறிதளவு குறைந்தது குறித்து மகிழ்ச்சி குமார்...

சிகரம் பாரதி சொன்னது…

அருமை. சிறந்த பார்வை. எப்படியேனும் இந்த படத்தை பார்த்துவிட வேண்டும். இணைப்பு இருந்தால் தாருங்கள்.


தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

எங்கள் தளத்தில் தங்களது பதிவு: சினிமா : பாரம்

Anuprem சொன்னது…

மீண்டும் ஒரு சிறந்த படத்திற்கான அறிமுகம் ...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் இந்தப் படம் நான் பாதி பார்த்தேன் அதன் பிறகு பார்க்க முடியலை. மனதைக் கொஞ்சம் வருத்தும் ஒரு படம்.

பிரியா கிருஷ்ணசாமி மும்பை பேஸ்ட். இவங்க வேறு படங்களும் ஹிந்தி இங்கிலிஷ் நும் அப்புறம் டாக்குமென்டரியும் எடுத்துருக்காங்க.

தலைகூத்தல் பத்தி சொல்லுற படம் தான். இதுக்கு முன்ன என் நினைவு சரியா இருந்தா கே டி எங்கிற கருப்புதுரைன்னு படம் அது தலைகூத்தால் பத்தி சொல்லுற படம் தான்.

இது இப்ப வழக்கத்தில் இல்லைன்னு நினைக்கிறேன். தடை செஞ்சுட்டாங்க. அதுவும் நம்ம நாட்டுல இது தடைசெய்யப்பட்ட ஒன்றுதான். இதுலயும் வேற வேற வகைகளும் இருக்கு. இதுவும் ஒரு கருணைக்கொலை போலத்தான். விருதுநகர் பகுதிகளில் இருந்துச்சுன்னு என் உறவினர் சொல்லுவாங்க. அப்ப்டி ஏதோ யாரோ கள்ளத்தனமா செய்யப் போக அது தெரிஞ்சு தடை செஞ்சுட்டாங்கன்னும் சொல்லுவாங்க.

பாரம் நிஜமாவே மனதை பாரப்படுத்தும் படம்..கடைசிவரை பார்க்கலை பார்க்கணும்..கருணைக்கொலை எல்லாம் மனம் ஏற்க மறுக்கும் ஒன்று.

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தலைக்கூத்தல் - எத்தனை கொடுமை. படம் பார்க்கும் எண்ணம் வரவில்லை - நல்ல படமாகவே இருந்தாலும்.