மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சேரன் என்னும் மனிதன்

Image result for bigg boss-3 8th september images
ந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது எல்லாருக்குமே தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தது. சேரனா ஷெரினா என்பதாய் மாறி மாறி நகர்த்திக் கொண்டிருந்த ஓட்டுக்கள் ஓரிடத்தில் போக வேண்டியவர் ஷெரின் என்ற நிலைக்கு வந்த போது வனிதாவால் ஷெரினை மேலே நகர்த்தி சேரனை பின் தள்ளிவிட்டன. 

ஏதோ தப்புச் செய்திருக்கலாம் இது மக்கள் முடிவுதானே என்று சொல்லிய சேரன் குறித்து அதிகம் பேசியிருக்கலாம்... சும்மாவே நீ சேரனுக்கு ஆதரவுன்னு சொல்லி சண்டையெல்லாம் போட்டீங்க...  இருந்தாலும் பதிவுக்குள் போகும் முன்னே சேரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதைச் சொல்லி விடுகிறேன்.

ஆம் வனிதாவின் மிஷன் சாக்சி, ஷெரினுக்குச் சாதகமாகத்தான் இருந்தது. இது தெரிந்தால் கூட... தெரிந்தால் என்ன தெரிந்தால்... நான் போட்ட நாடகத்தாலேயே நீ காப்பாற்றப்பட்டாய் என  இந்த வாரத்தில் ஒருநாள் வனிதாக்கா கண்டிப்பாச் சொல்லும் பாருங்கள்.

கமல் வருவதற்கு முன்னர் படுக்கை அறையில் டேய் தம்பிகளா போதும்டா இந்தக் காதல் காதல்ங்கிற பிரச்சினைகள்... படம் முழுக்க காதலையே வச்சாலும் நல்லாயிருக்காதுடா என சாண்டி, தர்ஷனிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். அங்கு வந்த வனிதா சம்பந்தமே இல்லாமல் குரலை உயர்த்தி, தான் பேசுவதே சரியென்பது போல் பேச, வனிதா அதை விட்டுத் தொலை என்று சொன்னார் சேரன். அவர் விடுவதாய் இல்லை... ஷெரின் பாகிஸ்தான் தீவிரவாதி என்ற அளவுக்குப் பேசினார். அதுவும் தான் கேப்டன் என்ற தற்பெருமையுடன். இவர் கேப்டனாக இருந்தால் மட்டுமே வீட்டுக்குள் நானே கேப்டன் என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதன் பின் கக்கூஸிலிலும் சேரனின் காதைக் கடிக்க, நீ சொல்றதெல்லாம் சரிதான்... அவ உன்னோட பிரண்ட்... அதனால சொல்ற விதமாச் சொல்லுன்னு சேரன் சொல்லிவிட்டு வர, சாப்பிட்டுக் கொண்டிருந்த தர்ஷனும் சாண்டியும் என்னண்ணா காதுல ரத்தம் வருதுன்னு கலாய்க்க, நீ என்னோட கழுத்தைப் பார்க்கலையான்னு சேரன் சொல்லிட்டுப் போனது செம.

கமல் வந்தார்... ஏதோ கல்வி குறித்தும் ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் குறித்தும் பேசினார்... வாயில் நுழையாத பேரெல்லாம் சொன்னார். எனக்குத்தான் போரடித்தது. 

சத்தமில்லாமல் அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார். அங்கே சாண்டி அத்திவரதராய் பள்ளி கொண்டிருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எல்லாரும் அமர்ந்திருந்தனர். சத்தமில்லாமல் எப்படி வந்தேன் என நடித்தும் காண்பித்தார்.. கலைஞானி அல்லவா... சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் எல்லாம் சூப்பர். என்ன ரங்கநாத சாண்டி எனக் கேலி செய்ய, சும்மா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் எனச் சமாளித்தார் சாண்டி.

கவினுக்கு காலர் ஆப் த வீக்கில் கேட்கப்பட்ட கேள்வி பத்து வாரங்களைக் கடந்தும் சிறந்த போட்டியாளர், தலைவருக்கான போட்டியில் நீங்க வரவேயில்லையே என்பதுதான். கவினுக்குப் பதில் தெரியலையாம்... 

விளையாண்டால்தானே பெயர் வரும்... காதலித்தால் மட்டும் எப்படி பெயர் வரும்... அதுபோக நட்புக்குன்னு சொல்லி நரித்தனம் பண்றதை வேற நீங்களே சொல்லிக்கிட்டா அது கேட்ட வார்த்தையாக இருக்காது கெட்ட வார்த்தையாகத்தான் தெரியும்ன்னு  கமல் வேற சொல்லிட்டாரா... நீங்க சொன்னதைச் சிந்திச்சேன் சார்ன்னு ஆரம்பிச்சிட்டான். ஆனா செமையா திட்டம் போடுறதுல சாண்டியை விட கில்லாடி இவன்.

இனி எப்படியிருந்தாலும் எவனுக்கு விட்டுக் கொடுப்பேன்னு சொன்னானோ அவனையே நாமினேஷன் பண்ண வேண்டிய நிலைதான் வீட்டுக்குள். அதுக்காகவே நீங்க சொன்னதை யோசிச்சேன் சார்... விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் சார்ன்னு சொல்லிட்டான்... உன்னோட டக்கால்டி வேலை எல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும்டின்னு கவுண்டமணி மாதிரி சொல்லத் தோணுது.

பேசுனவனைக் கலாய்க்கிறேன்டான்னு என்ன நண்பா தூங்கிக்கிட்டே பேசுறீங்களான்னு கவின் கேட்க, ஒரு கேள்விதான் என்ற கண்டிப்பான உத்தரவை முன்னரே பிறப்பித்திருப்பதால் பிக்பாஸ் போனைக் கட் பண்ணிட்டார். உடனே கமல் என்ன எல்லாரும் சாண்டியா என நகைச்சுவையாய்க் கேட்டார். ஒருவேளை அந்தக் காலர் பதில் சொல்லலாம் என்றிருந்தால் ஆமா சகோ... நீங்கதான் தூங்காம காவியக் காதலை வளர்க்கிறீங்க.... நாங்க ஏன் தூங்காம இருக்கணும்... தூங்கப் போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கேள்வியைத் தூக்கிப் போடலாம்ன்னு பார்த்தேன்னு சொல்லியிருக்கலாம்... பிக்பாஸ் சதி பண்ணிட்டார்.

சனிக்கிழமை போல் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமலின் சாடல் எல்லாமே வனிதாவுக்குத்தான்... பேசும் போது குறுக்கிட்டவரை இடை நிறுத்தி, அப்புறம் எனக்கு என்ன பேச வந்தேன்னு மறந்து போகுங்க என்றவர் பார்வையாளர்களைப் பார்த்து மறந்து போச்சுங்க என்றது செம. 

மேலும் வனிதாவிடம் கேள்வி எனக்கேட்டு விட்டால் கமல் போய் அரைமணி நேரம் தூங்கி எழுந்து வரலாம்... அவ்வளவு நீளத்துக்கு நீட்டி முழங்க ஆரம்பிச்சிடுறாங்க. வனிதாவை வாரிய போதெல்லாம் உள்ளே சிரித்தது கவின் என்றால் வெளியே மகிழ்ந்து ரசித்தது அபிராமி... எல்லாருக்கும் அக்கா மேல செம காண்டு.... ஆனா நேர்ல பார்த்தா அம்மாவைப் பார்த்த எம்.எல்.ஏ மாதிரி ஆயிடுறாங்க.... அதுதான் அக்காவின் வாய்த்திறமை.

அடுத்து சிறந்த போட்டியாளராய் உங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கிட்டீங்களான்னு வனிதாவைக் கேட்டதும் ஒரே கைதட்டல்... உடனே இப்ப எதுக்கு கை தட்டுனீங்க... நீங்க பாட்டுக்கு எல்லாத்துக்கும் கை தட்டுனீங்கன்னா என்னைத் தப்பா நினைப்பாங்கன்னு சொல்லிட்டு வனிதாவிடம் பேச, தான் மிகச்சிறப்பாக விளையாண்டதாய்ச் சொன்னார்... சேரன் நால்வரின் முடிவு என்க, தர்ஷனும் ஷெரினும் இல்லை என்றார்கள். தர்ஷன் சேரன் அண்ணாதான் நல்லா விளையாண்டார் என்றார் கூடவே ஷெரினும் அதையே சொன்னார். ஆனால் சேரனின் பார்வை வெகு சிறப்பாய் இருந்தது... அது ஒரு ஆழ்ந்த யோசிப்பின் வெளிப்பாடு... கமல் கூட வாழ்த்தினார்.

அப்புறம் லாஸ்லியா விருதைத் தூக்கி வீசிய பிரச்சினையில் லாஸ்லியாவுக்கு வலிக்காமல் குட்டிக் கொண்டே மோகனை வச்சிச் செய்தார். வயது வருடா வருடம் கூடும்... வயதுக்கு மரியாதை எதிர்பார்க்காதீங்க... மரியாதை அதுவாக் கிடைக்கணும்... கேட்டுப் பெறக்கூடாது... சிலர் மேடையைத் தொட்டுக் கும்பிடுவாங்க... ஆனா மேல போனதும் மேடையை நாறடிச்சிருவாங்க... நான் மேடையைக் கும்பிட மாட்டேன்... எனக்கு எதிரே இருக்கும் மக்களைக் கும்பிடுவேன்... மேடைக்கு மரியாதை கொடுப்பேன். 

வட நாட்டுப் பக்கம் நடிக்கப் போனப்ப என்னைப் பச்சோந்தி கமல்ன்னு சொன்னாங்க... அதாவது நடிப்பில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதாக மாறுவேன் என்பதால்... அதைத் தவறா எடுத்துத் தூக்கி எறிய வேண்டியதில்லை என்றார். 

லாஸ்லியாவுக்கு தனக்கு மெல்லக் குட்டினாலும் என்ன சொல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். மோகன் யாரைச் சொல்கிறார் என்பது தெரியாமலே ரசித்தாரா... அல்லது தெரியாதது போல் காட்டிக் கொண்டாரா..?

சாக்சி எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி கவினிடம் உன்னுடன் இருந்த காதல் பிரிவுக்குப் பின் நான் ரொம்ப நல்லாயிருக்கேன்... இப்பத்தான் அஞ்சு வேளை அசராமல் சாப்பிடுறேன்... எங்க வீட்டு பப்பிச் செல்லம் கூட படுத்தாம தூங்குது... நீ ஊட்டிவிட்ட நினைவுகளை எல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி வச்சிட்டேன்னு எல்லாம் சொன்னார். 

பனியன் பிரச்சினையில் ஷெரின் வருத்தப்பட்டது குறித்து கமல் பேசிய போது ஆறு செட் வந்தது. ஷெரினுக்கு கொடுக்கலாம் என்று இருந்தபோது அபி வந்ததால அவகிட்ட கொடுத்துட்டோம்ன்னு சாண்டி சொல்ல, பனியன் வந்து ஒரு வாரம் ஆச்சு சார்... கொடுக்க மனமில்லை... அபி வந்தது இந்த வாரம்தான் என சேரன் உண்மையை உடைக்க சாண்டி சிரித்து மழுப்பினார்.

நாமினேசனில் இருந்த முகன் நான் போகமாட்டேன் எனத் திடமாகச் சொன்னார்....எனவே அவர் காப்பாற்றப்பட்டார்... 

அடுத்து ஷெரின் 'ஆ'வெனக் கத்தியது போல் கத்திக் காட்டி அவரும் காப்பாற்றப்பட்டார்... 

கவினும் காப்பாற்றப்பட.. 

அவன் சேரன் லாஸ்லியாவுக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக் கொண்டான். வடிவேலு சீரியஸாக இருந்தாலும் காமெடியாகத்தான் தெரியும்... நாம் சிரிக்கத்தான் செய்வோம்... கவினுக்கு தாடியில்லாத சோக முகம் சரிவரலை... தாடி வளருங்க சகோ.

அப்பாவா மகளான்னு வந்தப்போ நான் போறேன்... போதும் எல்லாம் பார்த்துட்டேன்.... எழுபத்தைந்து நாள் என்னை நிறைய மாத்திருச்சு என சேரன் சொல்லும் போதே அவர் பெயர் போட்ட கார்டைக் காட்டி கமல் அழைத்தார். 

லாஸ்லியா ஒரே அழுகை... அந்த அழுகையில் சில வாரங்களுக்குப் பிறகு ஒரு மகளின் பாசம் தெரிந்தது. தனக்கு வந்த அழுகையை சேரன் கட்டுப் படுத்திக் கொண்டார். 

இதென்ன அநியாயம் நல்லா விளையாண்டா வெளிய போகணுமா என வனிதா ஆடித் தீர்த்தார்.. தனியே போய் பிக்பாஸிடம் வேறு பேசித் தீர்த்தார். பிக்பாஸ்க்கு வனிதா பேசினதைப் பார்த்ததும் 'கதக்'ன்னு இருந்திருக்கும். இருக்காதா பின்னே என்னய்யா டாஸ்க்குன்னு இதுவரை அடிச்சாடிய அக்கா, இப்ப என்னய்யா பித்தலாட்டம் பண்ணி வெளிய அனுப்புறேன் அப்புறம் நாங்கள்லாம் எதுக்கு இங்க இருக்கணும்... அப்படின்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சுல்ல... 

சேரனுக்காக முதல் முறையாக கொஞ்சம் அழுகையும் வனிதாவிடமிருந்து வந்தது... இவர்தான் யார் உள்ளே இருக்கணும் என்ற போது சேரன் அண்ணாவைப் பிடிக்கும் ஆனால் லாஸ்லியா வேலையெல்லாம் சரியாச் செய்வா அது இதுன்னு சொல்லி லாஸ்லியாவை உள் நிறுத்த வேண்டும் என்றார்.

வனிதாவுக்கு லாஸ்லியா மீது அப்படி என்ன பாசம்ன்னு பார்த்தால்... ஐவர் குழுவில் இருக்கும் கவினோட சகோதர பாசம் காட்ட வேண்டும்... அப்பத்தான் அந்த அணியை உடைத்து தர்ஷனை நாமினேசனில் கொண்டு வந்து நிறுத்தலாம்... புல்லைப் பார்த்த மாடு மாதிரி லாஸ்லியாவுக்கு கிரீடம் சூட்டினால் கவின் நம் காலடியில் கிடப்பான் என்பதை அக்கா உணர்ந்தே வைத்திருக்கிறது. கவின், லாஸ்லியா இருவரும் அக்காவை நாமினேட் செய்யாத பட்சத்தில் முகனும் செய்ய வாய்ப்பில்லை... ஷெரின் செய்யக் கூடும். 

அக்காவின் திட்டம் வேற லெவல். சேரனெல்லாம் தனக்கு செட்டாக மாட்டார் என அக்காவுக்குத் தெரியும்... இருந்தும் ஒரு தடாலடி நடிப்பை அரங்கேற்றினார். லாஸ்லியாவை முந்தானைக்குள் முடிந்து கொண்டார். ஷெரினையும் கட்டிப்பிடித்து லவ்யூ பேசி எனச் சொல்லி வைத்திருக்கிறார்.

ஷெரினுக்குத்தான் தன் பிரச்சினைகளுக்கு எல்லாம் முதிர்ச்சியான பார்வையில் தீர்வு கொடுத்து, தன்னை அரவணைத்த சேரன் இல்லாதது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கும்... அவரும் அழுதார்... சாண்டி சில நாட்களாக சேரனுடன் ஒட்ட ஆரம்பித்திருக்கிறார் என்பதை பார்த்துத் தெரிந்திருந்த நிலையில் அவரின் வருத்தமும் சரியெனப்பட்டது.

எல்லாருக்கும் ஆறுதல் சொன்னார்... முகனிடம் நீ நல்லா விளையாடணும்ன்னுதான் நாமினேட் பண்ணினேன் என்றார். கவினிடம் உன்னைத்தான் அதிகமாக காயப்படுத்தியிருப்பேன் மன்னிச்சுக்க என்றார். லாஸ்லியாவை விளையாட்டில் கவனம் செலுத்து மத்ததெல்லாம் வெளியில் வந்து பார்த்துக்கலாம் என்றார். வனிதாவிடம் எதையும் பொறுமையாப் பேசு என்றார். ஷெரினிடம் வனிதாவோட சண்டையில்லாம நட்போட இருன்னு சொல்லி இருவரையும் சேர்த்து வைத்தார். தர்ஷனை நல்லா விளையாடு என்றார். 

சேரனின் பேச்சில் நல்லதொரு அனுபவ முதிர்ச்சி... நிதானமான பேச்சு... பிக்பாஸ் குரலை மறக்கமாட்டேன் என நன்றி சொன்னதில் அவர் இப்படியானவர்தான் என்பதை உணர முடிந்தது. லவ் யூ சேரன்... உங்களைப் போல் மனிதனாய் இருக்க ஆசை... முயற்சிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் சந்திக்க நினைக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர். காலம் நினைத்தால் நிச்சயம் உங்களைச் சந்திப்பேன்.

எல்லாரும் அழ, லாஸ்லியா மட்டும் 'சாரி...சாரி...' என்றும் 'நான் போறேன்' என்றும் அழ, நீ விளையாடணும்ன்னுதான் அப்பா போறேன் என்று சொல்லி சமாதானப்படுத்திட்டுக் கிளம்பினார். அவர் மேடைக்குப் போய் தன் குடும்பத்தினர் வந்திருக்காங்களான்னு தேடினார்... யாரும் வரலை என்றதும் மனசு வலித்திருக்கும். அதைக் காட்டாமல் கோபக்கார சேரன் இப்ப எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனா இங்க நிக்கிறேன் சார் என்றார். 

மீண்டும் எல்லாருடனும் அகம் டிவி வழி பேசினார். லாஸ்லியாவிடம் பேசும் போது உடைந்தார்... நீ உங்க அப்பாவை பத்து வருசமாப் பாக்கலை... இந்த அப்பாவுக்கா இவ்வளவு ஏன் அழறேன்னு கேட்டபோது லாஸ்லியா உடைந்து அழுதார்... கவினோடு கலந்த பின் பிடிக்காமல் போன லாஸ்லியா ஒரு மகளாய் நின்ற போது மகளைப் பெற்ற அப்பனாய் பிடித்துத்தான் போனார்.

உங்களுக்கான குறும்படம் என்ற போது பிக்பாஸ் இடை புகுந்து சேரன் இந்தப் போட்டியில் தொடர இன்னொரு வாய்ப்புன்னு ரகசிய அறைக்குப் போகச் சொல்லிட்டார். குறும்படம் காட்டப்படவில்லை... சேரன் ரகசிய அறைக்குள்...

கவின் லாஸ்லியாவிடம் நீ போயிருந்தா நான் இங்க எதுக்கு..? என காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு தடை விலகியதில் உள்ளூர மகிழ்ச்சி இருக்கலாம்.

பிக்பாஸ் இல்லம் மயான அமைதியில் இருந்தது. ஒரு மனிதன் வாழ்ந்து விட்டுப் போன வாழ்க்கையை சகபோட்டியாளர்களின் அழுகை பிரதிபலித்தது. அதுதான் வேணும்... அதைச் சேரன் சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் சேரன்.

இப்ப சேரன் ரகசிய அறைக்குள்... கமல் சில விஷயங்கள் பேசினார். தனிமைச் சிறை... நிறைய கற்றுக் கொடுக்கும்.

யார் உண்மையான நட்புடன் தன்னுடன் பழகினார்கள் என்பதை அவர் உணரும் நாட்களாய் வரும் நாட்கள் அமையும்... மீண்டும் அவர் வீட்டுக்குள் செல்லும் போது யார் யார் உண்மையான அன்போட முகம் மலர்வார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

என்ன கமல் சார்... சேரனைப் போகச் சொல்லிருவீங்கன்னு பார்த்தா இப்படிப் பண்ணிட்டீங்க... இன்றுதான் பிக்பாஸ் பதிவு கடைசிப் பகிர்வு என முடிவு செய்து வைத்திருந்தேன்... பிக்பாஸ் முடிந்ததுன்னு போடாம இப்பவும் ஆட்டத்தில் சேரன் தொடர்வதால் நானும் தொடர்கிறேன்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பெருந்தன்மை என்றால் என்னவென்பதனை சேரன் மூலம் ஒரு சான்று... ஆனால் அந்த பெருந்தன்மையாவது, தனிமை எனும் போது...

கொடூரமான சிறைக்கும் மேல்...!

இனிமேல் அவருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்... ஆனால் எனக்கு :-

எனது அனுபவம் :-
தனிமை கொடுமை என்றாலும், நாம் இதுவரை காணாத, கேளாத, நுகராத, பார்க்காத, உணராத என பலவற்றை சிந்திக்க வைக்கவும்...!

எனது வலைத்தளம் ஆரம்பித்ததில் இதுவும் ஒரு காரணம் குமார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா...
தனிமைச் சிறை என்பது மிகக் கொடுமை.
பல விஷயங்களை அறிந்து கொள்வார் என்றாலும் லாஸ்லியாவும் கவினும் அடக்கியே வாசிப்பார்கள் என்றே தோன்றுகிறது... காதலில் அல்ல, சேரனைப் பற்றிப் பேசுவதில்... :)

ஊங்க அனுபவம் போல் எனக்கும் தனிமையின் வலியே வலைப்பூ ஆரம்பிக்க வைத்தது... இங்கு தனிமை கொடுத்த அழுத்தத்தினால்தான் வாழ்க்கைக் கதைகளை எழுத ஆரம்பித்தேன்...

ரொம்ப நன்றிண்ணா தொடர்ந்து வாசித்து ஊக்கம் கொடுப்பதற்கு....