மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 செப்டம்பர், 2019

ஷார்ஜா உலக புகைப்பட கண்காட்சி : செந்தில்குமரன்

திர்பாராத சில நிகழ்வுகள் எப்போதும் மறக்க முடியாத நினைவுகளை மனசுக்குள் விதைத்துச் செல்லும். அப்படியான ஒரு நிகழ்வு 'அட வாங்கண்ணே பொயிட்டு வரலாம்' என்ற நெருடாவின் வார்த்தைகளின் மூலம் கிடைத்தது. மகிழ்ச்சி, வேதனை, வலி. பிரமிப்பு, ஆனந்தம், அன்பு, உபசரிப்பு என பல்வேறு உணர்ச்சிக் கலவையின்  அனுபவமாக அது அமைந்தது.

மூளைக்குள் சேமித்து வைத்திருக்கும் நெருக்கடிகளை எல்லாம் விடுமுறை தினத்தில் மூட்டை கட்டிப் போட்டுவிட்டு சுபான் அண்ணனுடன் பயணப்பட்டோம்... யூசுப் அண்ணன் அறைக்கு அருகில் இருக்கும் உணவகத்தில் இரவு உணவுக்கு இடைப்பட்ட சிற்றுணவை முடித்துக் கிளம்பினோம்.

கனவு அண்ணன் தன்னுடைய ஆதிகுடி குறித்தான தேடல் குறித்துப் பேச, ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்கள் காருக்குள் இதமாய் ஒலிக்க, ஒவ்வொரு பாடலுக்கும் சுபான் அண்ணன் சின்னச் சின்ன நினைவுகளைச் சொல்ல, நீண்ட பயணத்தின் முடிவில் ஷார்ஜாவைச் சென்றடைந்தோம்

அசோக் அண்ணன் இல்லத்தில் எனக்கும் நெருடாவுக்கும் இட்லி, தேங்காய் சட்னி மற்றும்பொடி காத்திருக்க, அசோக் அண்ணனின் அன்பில் நனைந்து நிறையப் பேசி, நிறைவாய் உண்டு உறங்கும் போது இரவு 2 மணியிருக்கும்.

மறுநாள் காலை எழுந்து குளித்து, புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டு விட்டு கவிமதி அண்ணனின் காரில் கண்காட்சி நடந்த ஷார்ஜா எக்ஸ்போ மையத்துக்குச் சென்றோம்.

வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு மணிக்குத்தான் கண்காட்சி அரங்கம் திறக்கப்படும் என்றதால் உட்கார இடமின்றி நண்பர் செந்திலுக்குப் போன் பண்ண, அவரும் எடுக்கவில்லை... மற்றொரு அரங்கத்தில் மலையாளப் படத்துக்கான ஆள் தேர்வு நடக்க, மலையாளிகள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். அதற்குள் நுழையலாம் என்று கூடத் தோன்றியது.

கண்காட்சி அரங்கும் திறக்கவில்லை... செந்தில்குமரனும் போன் எடுக்கவில்லை... என்ன செய்யலாம்... மீண்டும் வீட்டுக்குப் போகலாமா... அல்லது இங்கே சுற்றி வரலாமா... என்ற யோசனையுடன் கதை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் செந்தில் குமரன் அவர்கள் உள்ளே நுழைந்தார்.


இவர் மதுரைக்காரர், தமிழகத்தின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். காட்டு விலங்குகள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் எடுத்தவர். மனிதனுக்கும் புலிக்குமான பல்லாண்டு கால பகைமை வாழ்க்கையை கதைக்களமாக்கி தனது புகைப்படத்தின் மூலம் பதிவு செய்தவர். அதற்காக இந்தியா முழுவதும் பயணப்பட்டவர்... இன்னும் விலங்குகளைத் தேடி பயணப் பட்டுக் கொண்டிருப்பவர்... இப்போது உலகம் முழுமைக்குமான பயணத்துக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்.

ஆசியாவிலிருந்து இந்த உலக புகைப்படக் கண்காட்சிக்கு உதவித்தொகை மூலமாக தேர்வான ஒரே புகைப்படக் கலைஞர். ஷார்ஜா அரசே இவருக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இங்கு அவருக்கு உலகளாவிய பிரபல புகைப்படக் கலைஞர்களின் வகுப்புக்கள், சனிக்கிழமை மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் தன் அனுபவம் குறித்தான பேச்சு என இந்தப் பயணம் அவருக்கு வாய்த்திருக்கிறது.

இதனிடையே அமீரகத்தின் சிறப்பு மிக்க இடங்களையும் இவரைப் போன்றவர்களுக்குச் சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை... நம்மில் ஒருவருக்கு இப்படியான வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்வதைத் தவிர வேறென்ன செய்ய வேண்டும்... தமிழனாய்... இந்தியனாய்... மனிதனாய் மகிழ்ந்தோம்.

செந்தில் எந்தவித பாசாங்கும் இல்லாத மனிதராக இருந்ததே அவருடன் நீண்ட உரையாடலுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. காடுகளுக்குள் விலங்குகளைப் போட்டோ எடுக்கச் செல்லுதல், அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்... தோடர், நாகர் என ஆதிவாசிகளுடன் பழகியது... அவர்கள் விலங்குகளைப் பழக்கும் முறை... விலங்குகளின் உணவு முறை... தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வாழ்தல் என விரிவாய்ப் பேசினார்.

இத்தனை விளக்கமாய் அதுவும் அமர இடமின்றி, குடிக்கத் தண்ணீரின்றி எங்களுடன் நின்றபடி பேசுதல் என்பது பெரிய விஷயம். அதுவும் ஒரு நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருக்கும் நிலையில், அவருக்கான நேரம் திட்டமிட்டபடி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நம்முடன் நேரம் செலவிடுதல் என்பது அரிதான விஷயம். அசோக் அண்ணனின் அன்புக்காக எங்களுடனும் அன்பானார்... அவரின் அனுபவங்களை அள்ளிக் கொடுத்தார்.

புலிகள் பெருங்காடுகளில் வாழ விரும்பாது... அதற்கு வறண்ட, சின்னச் சின்ன புதர்கள் இருக்கும் பகுதி போதும்... யானையைப் படமெடுக்கப் போனபோதான அனுபவம், புலிகளைப் போட்டோ எடுத்தது... பீ என்ற ஆவணப்படத்திற்காக கள உழைப்பு... அந்தப் படம் முடிந்த பின் நிகழ்ந்த நிகழ்வுகள், பாதிப்புக்கள் என எல்லா விவரமும் பேசினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஒரு மனிதனின் பல்தரப்பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். இடையிடையே அசோக் அண்ணனின் நட்புக்கள் குறித்த பேச்சு... இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற பேச்சு என போரடிக்காமல் இதமாய் நகர்ந்தது நின்றபடியே.

அவருக்குள் எத்தனை விஷயங்கள்... எவ்வளவு விபரங்கள்... எல்லாவற்றையும் எங்களுடன் மகிழ்வாய்ப் பகிர்ந்து கொண்டார். சிறப்பானதொரு சந்திப்பு... நம்ம வீட்டு மனிதரைப் போல் இங்கு பார்த்த பாலைவனத்துக்குள் இருக்கும் மணல் நிறைந்த வீடு, பாலைவனத்தில் காரில் போய் மாட்டிக் கொண்டது என எல்லா விபரங்களையும் விரிவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் கண்களில் காட்சிகளைப் பார்த்தோம்.

நரிக்குறவர்கள் குலதெய்வ வழிபாட்டில் போது ஏழு பானையை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துப் பொங்கல் வைத்து, எருமை மாட்டைப் பலி கொடுத்து அதன் ரத்தத்தைக் குடிப்பதை எங்கள் ஊருக்கு அருகில் பார்த்திருக்கிறேன். அப்பல்லாம் எம்.ஜி.ஆர் படம் போடுவார்கள். படம் பார்க்கவே அங்கு போவோம்... மதுரை வீரன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் அங்குதான் பார்த்தோம். மறுநாள் பள்ளிக்குச் செல்லும் போது எருமைத் தலைகள் சாமி முன் வைக்கப்பட்டிருக்கும்... எருமையின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருப்பார்கள். 

இப்படியான ஒரு நிகழ்வை களமாக்கி போட்டோ எடுத்திருக்கிறார். சிவகங்கையில் இதே விழா நிகழ்வை தனது கேமராவில் படமாக்கியிருக்கிறார். மாட்டின் மேல் படுத்து உடம்பெல்லாம் ரத்தத்துடன் படமெடுத்ததையும் அதன் பின் ஜெயலலிதா பலிகொடுக்கக் கூடாது எனப் போட்ட சட்டத்தின்படி நரிக்குறவர்களை காவல் நிலையம் அள்ளிச் சென்றதையும் அவர்கள் நீங்க எடுத்த போட்டோவால்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னதையும், இவரும் அவர்களுடனே காவல்நிலையத்தில் இருந்ததையும் சிரிப்புடன் சொன்னார்.

இயக்குநர் ராம் மற்றும் முத்துக்குமரனுடனான தனது உறவைக் குறித்தும் சொன்னார். அவர்களுடன் பதினைந்து நாள் பயணப்பட்ட கதையையும் சொன்னார்.

சுபான்,  ஆசிப், யூசுப், தமிழ்ச்செல்வன் சிவா ஆகிய நான்கு அண்ணன்களும் வந்து சேர, அதே இடத்தில் நின்றபடி மீண்டும்  பேச்சைத் தொடர்ந்தோம்... விரிவாகப் பேசிக் கொண்டிருந்தவரை யூசுப் அண்ணன் ஆதிகுடிக்குள் இழுத்துச் சென்றார். அதன் பின்னான பேச்சுக்கள் பொதுவான பேச்சாய்... அவரின் அனுபவங்களாய் இருந்த நிலையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணித்தது.

புலிகள் குறித்தும் ஒவ்வொரு காட்டிலும் எத்தனை புலிகள் இருக்கு என்றும் ஆதிவாசிகள் வெள்ளையாக இருப்பார்களா இல்லையா..? என்றும் இலங்கை, அங்கிருக்கும் மக்கள், இலங்கையின் பெயர் என நகர்ந்து ஆதாம் ஏவாள் வரை நகர்ந்து, மலையாளிகளே இன்னும் ஆதிவாசிகளாய் இருக்கிறார்கள் அதன் காரணம் என்ன... ஒவ்வொரு காட்டிலும் எத்தனை புலிகள் இருக்கு... ஆதிவாசிகள் குறித்த விவரச் சேகரிப்புக்கு யாருடன் பேச வேண்டும் என வேறொரு களத்தில் பயணப்பட்டது. அவருக்குத் தெரிந்த வரை விபரங்களைச் சொன்னார்.

கொலைகார யானைகளை சில நாட்களிலேயே பழக்கி விடுவார்கள் என்றும் ஒரு புலி காலை மாலையில் ஒரே பாதையில் வாக்கிங் செல்வதைப் போல் செல்வதையும் ஒரு யானையின் தந்தம் 12 அடி நீளம் இருப்பதையும் அந்தப் படத்தை மிகப்பெரியதாய் கண்காட்சியில் வைத்திருப்பதையும் குறித்தும் பேசினார்.

நிறைய விஷயங்களை அசோக் அண்ணன், யூசுப் அண்ணன்  கேட்க, அவர் பதில் சொல்லிக் கொண்டே போனார். நின்றபடி பேசுகிறோமே... நமக்கு வேலை இருக்கே என்றெல்லாம் யோசிக்காமல், நகர நினைக்காமல் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

சுபான் அண்ணா தனது கேமராவுக்குள் எல்லாவற்றையும் பதிந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் மிகச் சிறப்பானதொரு பேச்சு... இப்படியான ஒரு நாள் பேட்டி எடுக்கச் செல்லும் பத்திரிக்கையாளனுக்குக் கூட கிடைக்காது. சிரித்தபடியே பேசிய மனிதருக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க அங்கு கடைகளும் இல்லை... குடிக்கத் தண்ணீரும் இல்லை...

அருமையானதொரு சந்திப்புக்குப் பின் எல்லாரும் போட்டோ எடுத்துக் கொண்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தோம்.

பின்னர் செந்தில் குமரன் மாலை நிகழ்வுக்குள் செய்ய வேண்டிய சில பணிகள் இருப்பதால் இரண்டு மணிக்குப் பார்க்கலாம் என்று சொல்லிச் சென்றார். நாங்களும் கவிமதி அண்ணன் அவர்களுடன் கிளம்பினோம். எங்கு சாப்பிடலாம் என்ற யோசனையுடன் செந்தில்குமரனுடன் பேசிய விஷயங்களைக் குறித்து பேசிக் கொண்டு பயணித்தோம். கவிமதி அவர்களின் கருத்துக்கள் மிக விரிவாய்,  எல்லாவற்றையும் மிகத் தெளிவாகவும் பேசினார்.

அவர்களின் நண்பர்களின் (காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்) அறைக்குச் சென்றோம். அருமையான சாப்பாடு... அன்பான உபசரிப்பு... உண்ட மயக்கம் வேறு.... அவர்கள் எல்லாம் அரசியல் கட்சியின் பின்னே இயங்குபவர்கள் என்பதால் காரசாரமான அரசியல் பேச்சு... நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம்... அரைத் தூக்கத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்...

இந்த ஊரைப் பொறுத்தவரை பிழைப்புக்காக வந்த இடம் என்பதால் உனக்கு நண்பன் எனக்கும் நண்பனே என்றுதான் நட்பு விரியும். பார்த்த சில நிமிடத்திலேயே எந்தத் தயக்கமும் இன்றி உறவாய்ப் பேச ஆரம்பித்து விடுவார்கள். பல இடங்களில் கிளாஸை எடுத்து உக்காருங்க என அழைக்கவும் செய்வார்கள்... அருமையான மனிதர்களின் அன்பில் நனைந்து நாலு மணிக்கு மேல் மீண்டும் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம்.

சொல்ல மறந்துட்டேனே கண்காட்சிக்கான விளம்பரங்களாய் வைத்த படங்களில் செந்தில்குமரன் எடுத்த ஜல்லிக்கட்டு போட்டோ வைக்கப்பட்டிருந்ததையும் அது பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதையும் எல்லாருமே சொன்னார்கள்... அமீரக வீதியில் ஜல்லிக்கட்டுக் காளை...

கண்கலங்க வைத்த, மகிழச் செய்த கண்காட்சியும் செந்தில் குமரனுடனான உரையாடலும் கவிமதி அண்ணனின் நிறைய விளக்கங்களும் அசோக் அண்ணன் சொல்லிய விஷயங்களும் அடுத்த பதிவாய்...

தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல தகவல்களை அறிய, அருமையான சந்திப்பு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா.... நிறைவான சந்திப்பு.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வாவ்!! செந்திலைப் பற்றி என் நட்பு தளத்தில்!! மகிழ்ச்சி சகோ.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

எவ்வளவு விசயங்களைப் பேசியிருக்கிறீர்கள். இப்பதிவே ஒரு தகவல் பெட்டியாய்...! பிரமாதம் சகோ. வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி சகோதரி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி.... இதன் தொடர்ச்சியாய் 2 வது பதிவையும் பாருங்க.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா அருமையான வாய்ப்பு உங்களுக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. மேலே தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....