மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 செப்டம்பர், 2019

மனசு பேசுகிறது : என்னைச் செதுக்கிய சிற்பிகளில் சிலர்

(பேராசிரியர். டாக்டர். மு.பழனி இராகுலதாசன்)
பிக்பாஸ் பதிவுகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன்... கிறான்... கிறார்... என்றெல்லாம் நண்பர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போதைய சூழல்... நகரும் வாழ்க்கை... உடல் நலம் என எல்லாமும் எதிலும் ஒட்டாத மனநிலையிலேயே வைத்திருக்கிறது. 

எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பேன்... சமீபமாக அது கூட இல்லை... இந்த வலைப்பூவை வாடாமல் வைத்திருக்க வேண்டும்  என்பதாலும்... கிட்டத்தட்ட 11 ஆண்டுகால உழைப்பு இதில் இருக்கிறது என்பதாலும் பொழுது போக என்பதைவிட என் எழுத்தை தொலைக்காமல் இருக்க எழுத ஆரம்பித்ததே பிக்பாஸ்... 

தற்போது பிரதிலிபியில் இதற்கு வரவேற்பு இருப்பதாலும் வாசிக்கும் சிலர் இதைத் தொடர்ந்து எழுதச் சொல்வதாலும்... சின்னச் சின்ன விவாதங்கள் செய்வதாலும் தினமும் ஒரு குறள் போல பிக்பாஸ் வருகிறது. இந்த எழுத்தைக் கொடுத்தது என் ஆசிரியர்கள்தான்... இந்நாளில் அவர்களை நினைத்துப் பார்ப்பதே சிறப்பு.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் என்பது மிகப்பெரிய கடல்... அதில் எல்லா முத்துக்களையும் எழுத முடியாது என்றாலும் அந்த முத்துக்களில் சில தனித்த முத்துக்கள் இருக்கும் அல்லவா... அவர்களைப் பற்றி மட்டும் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். 

என்னைத் தன் பிள்ளையாகப் பார்த்த ஆசிரியர்களையே நான் அதிகம் பார்த்திருக்கிறேன். விவசாயக் குடும்பத்திலிருந்து சத்துணவுக்கு தட்டையும் பாடப் புத்தகத்துடன் தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து பள்ளிக்குப் போகும் பையனாகத்தான் பள்ளி வாழ்க்கை இருந்தது. மழை நேரத்தில் மகிழ்ச்சியை கொடுத்த நாட்கள் நடந்து பள்ளிக்குச் சென்ற நாட்கள். 

மறக்க முடியுமா எட்டாவது வரை படித்த முருகானந்தா நடுநிலைப்பள்ளியையும் பணிபுரிந்த ஆசிரியர்களையும் சத்துணவு சமைத்த ராஜாத்தி மற்றும் புவனேஸ்வரி அக்காள்களையும்... கூடப் படித்தவர்களையும்... தோழர் தோழியரையும்.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராய் மறைந்த மரியம்மை டீச்சர் அவர்கள். கனிவான முகம் அவருக்கு கடவுள் கொடுத்தது... அதில் சிறு புன்னகை எப்போதும் இழையோடியபடி இருக்கும்... ஒண்ணாவதிலேயே நான் டீச்சரின் செல்லப்பிள்ளை... என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்... அருகில் அமர்த்திக் கொள்வார். 

அம்மா டீச்சரிடம் அவன் ஆளு ரொம்ப பொசுக்குன்னு இருக்கான்... ரெண்டாப்பு போகவேண்டாம்... ஒண்ணாப்புலயே இந்த வருசமும் இருக்கட்டும் எனச் சொன்னதும் ரெண்டாப்புலயும் நாந்தான் டீச்சர்... நல்லாப் படிக்கிற பிள்ளையை ஏன் மறுபடியும் ஒண்ணாப்புல போட்டு ஒரு வருசத்தை வீணாக்கணும். அதெல்லாம் வேண்டாமென மறுத்துவிட்டு என்னை இரண்டாம் வகுப்பிற்கு கொண்டு போய் தன் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார். அவர் போட்ட விதையே MCA வரை போக வைத்தது என்பதே உண்மை. Miss U Teacher.

நாலாவதுல பாக்கியம் டீச்சர்... மதியம் தவட்டாங்கம்பு (மரக்குரங்கு) விளையாண்டவங்களை வேடிக்கை பார்க்கப் போய் ஆறாவது படித்த மரியதாஸ் குதிச்சி என் மீது விழுந்ததில் சுவரில் போய் விழுந்து கை ஒடிந்து போக, அது ஒடிந்தது தெரியாமல் அடிபட்டிருக்கென மருந்தெல்லாம் தேய்த்து வைத்துப் பார்த்து வலியும் வீக்கமும் கூட உடனே ஊர்ப் பையனை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தவர். 

அதன் பின் குன்றக்குடியில் கட்டுக்கட்டி கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் சட்டையை பாதி அணிந்தும் பாதி அணியாமலும் பள்ளிக்குப் போன போது தனியே அமர வைத்து பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். நாலாவதில் இருந்து ஐந்தாவது போன போது நல்லாப் படிக்கணும்டா எனச் சொல்லி அனுப்பி வைத்தவர்... கல்லூரியில் படித்த போது எதேச்சையாக பார்த்த போது படிப்புத்தான்டா முக்கியம் நல்லாப்படி என்று பெயரை ஞாபகம் வைத்து வாழ்த்தியவர்.

தே பிரித்தோவில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை படித்த போது வகுப்பாசிரியர்கள் பலருக்குப் பிடிக்கும் என்றாலும் அதிக நெருக்கம் ஜோசப் சாருடனும் குண்டுராவ் சாருடனும்தான்... ஜோசப் சாரிடம் டியூசன் படித்ததாலும் குண்டுராவ் சாரிடம் மதிப்பெண் எடுப்பதாலும் மட்டுமேயான நெருக்கமாய்த்தான் அமைந்தது. 

தமிழாசிரியர்களான சவரிமுத்து, தாசரதி மற்றும் அருள்சாமி ஐயாக்களிடம் எல்லா மாணவர்களையும் போல்தான் பழக்கமிருந்தது. பின்னாளில் அதாவது கல்லூரியில் படிக்கும் போது பழனி ஐயாவின் மூலமாக தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரான பின் மூவருக்கும் மகனானேன். இப்பவும் பள்ளிக்குப் பேரனைக் கூட்ட வரும் சவரிமுத்து ஐயா என் மனைவியிடம் மருமகளே மகன் போன் பண்ணுச்சா..? எப்ப என் மகன் வரும்..? (வா, போ என்று இதுவரை சொன்னதில்லை) போய் ரொம்ப நாளாச்சே... என்று கேட்கத் தவறுதில்லை. 

தேவகோட்டை SSA கல்லூரிதான் என்னை பல விதத்தில் வார்த்தெடுத்தது.... அதற்குக் காரணம் நல்ல ஆசிரியர்கள்... 

எங்க கேவிஎஸ் சார்தான் செமஸ்டரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னவர், அடிதடி நடக்கும் போதெல்லாம் எங்களை வெளியில் நிக்காம வகுப்பிற்குள் உட்கார் இல்லேன்னா வகுப்புகளை கான்சல் பண்ணுறேன் வீட்டுக்குப் போயிடு எனச் சொல்லி சண்டைகளுக்குள் போக விடாமல் காத்தவர். பிரின்ஸ்பால் முன் வகுப்பே செல்ல வேண்டிய சூழலில் எங்களுக்காகப் பேசி அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்... 

அதேபோல் நாலு செமஸ்டரில் முதலாவதாய் நிற்க வைத்த வெற்றிக்கு இடையூராய் அதுவரை இல்லாத அரியர் ஐந்தாவது செமஸ்டர் மேஜர் பேப்பரில் வந்தபோது என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக மறு கூட்டலுக்குப் பணம் கட்டியவர்... அது விஷயமாக என்னுடன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் வந்தவர். மேல்படிப்பாய் இதைப்படி என என்னைக் கட்டாயப்படுத்தி அதற்காக விடுமுறை நாளில் வீட்டுக்கு வரவைத்துச் சொல்லிக் கொடுத்தவர். அவரின் ஆசைப்படி அதில் சேர்ந்து சில காரணங்களால் தொடர முடியாமல் போய் வேறு பாதைக்கு மாறிவிட்டேன் என்றபோது வாய்ப்பைக் கெடுத்துட்டியே என வருத்தப்பட்டார்.

என்னை எழுத வைத்து அழகு பார்த்த, என்னைத் தன் மகனாய் உள்ளத்தில் வைத்து... மருமகள், பேரன், பேத்தி என உறவுமுறைக்குள் தான் மட்டுமின்றி தன் குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருப்பவர் எனது பேராசான்.

கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் என் மகன் எனச் சொல்லி, திருமண வாழ்த்தில் கூட எங்கள் மகனென எழுதி, எனக்காக வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி ஹோமியோபதி ஆஸ்பத்திரிக்கு அலைந்து, மருத்துவர் சொன்ன உணவுக் கட்டுப்பாட்டின்படி அவரது வீட்டில் கூடும் பதினைந்து பேரில் எனக்கு மட்டும் காபிக்குப் பதில் பால் கொடுக்கச் சொல்லியவர் என் பேராசன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறார் என் அம்மா.

என் முதல் கவிதையை தாமரைக்கு அனுப்பி, அது வெளியானதும் மிகுந்த மகிழ்வோடு எல்லோரிடமும் சொல்லி, இப்பவும் எப்பவும் என் எழுத்தை ரசித்து, இன்னும் எழுதுங்க என உத்வேகம் கொடுப்பவர் என் பேராசான். 

சென்ற முறை ஊருக்குச் சென்ற போது எனது 'வேரும் விருதுகளும்' நாவலை வாசிக்கக் கொடுக்க, வாசித்துவிட்டு குமாருக்குள்ள இப்படி ஒரு எழுத்து இருந்துச்சா... இதைப் பற்றி பத்துப்பக்கத்துக்கு நான் எழுதித்தாறேன் எனச் சொல்லியிருக்கும் என் அன்பு ஐயா... ஐயா என்பதை விட, பேராசான் என்பதை விட, அவரை அப்பா என்று சொல்லுதலே பொறுத்தமாகும்... 

ஆம் என் அப்பாவைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன்... இன்னும் எழுத நிறைய இருக்கிறது... பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்தான் என்னைச் செதுக்கியவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் கூட. அவர் கற்றுக் கொடுத்த காலம் தவறாமையை இதுவரை கடைபிடிக்கிறேன்.

மேலும் ஆறுமுக ஐயா, அமலசேவியர் சார், சேவியர் சார், வெங்கடாசலம் சார், பெரிய திருவடி சார், தேனப்ப ஐயா, சுந்தரமூர்த்தி ஐயா, பிச்சைக்குட்டி சார், சுந்தரமூர்த்தி சார், முருகன் சார், எம்.எஸ் எனப்படும் எம்.சுப்பிரமணியன் சார், பட்சிராஜன் சார், சந்திரமோகன் சார், விஜயன் சார், நாவுக்கரசு சார், மாணிக்கம் சார், இராஜமாணிக்கம் சார், பிச்சம்மை டீச்சர், விஜி டீச்சர், சுப்புலெட்சுமி டீச்சர், ஜான் சார், ஜோசப்ராஜ் சார், செல்லம் சார், சுப்பு சார் இன்னும் இன்னுமாய் எத்தனையோ பேர் ஏற்றிய விளக்குத்தான் இப்போது எரிந்து கொண்டிருக்கிறது.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்களுக்கும் எனதன்பு நண்பன் பேராசிரியர் முருகன் மற்றும் உறவுகள் நட்புக்கள் என எல்லா ஆசிரியர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதை விட ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்பவர்கள் யார் உண்டு...? அவர்களை வணங்குகிறேன்... நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா...
அவங்கள்லாம் இல்லேன்னா குமார் இல்லை.
அதுவும் ஐயாவே என்னை எழுத வைத்தார்... அந்த எழுத்தால்தான் உங்களைப் போன்ற உறவுகள் வாழ்க்கைக்கு இனிமையாய் அமைந்தன.
என்றும் யாரையும் மறக்க முடியாது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் பதிவால் பல பதிய சிந்தனைகள் பிறக்கிறது... அதில் பழைய ஒன்று :-


http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆசிரியர் தினத்தில் மிகச் சரியான பதிவு. இப்படியான ஆசிரியர்கள் அமைவது வரம். உங்களுக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.