மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 செப்டம்பர், 2019

அமீரக எழுத்தாளர் குழுமத்தின் வாசித்த புத்தகத்தைப் பேசும் நிகழ்வு

மீரக எழுத்தாளர் குழுமத்தின் இரண்டாவது 'வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம்' நிகழ்ச்சி ஜெஸிலா அவர்களின் ப்ரோ ஆக்டிவ் எக்ஸல் சேப்டி கன்சல்டன்சி நிறுவனத்தில் வெள்ளி மாலை நடைபெற்றது.

சுமையா விமர்சனக் கூட்டத்தின் முடிவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு குழுமம் இரண்டாண்டுக்கு மேலாக புரிந்த நட்புணர்வுடன் மிகவும் அழகாக வளர்ந்து நிற்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி. தொடர்ந்து நிகழ்வுகளை நடத்த முயற்சிகளை எடுத்து, குழுமத்தை மிகச் சிறப்பான இடத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் அசீப் அண்ணன், பாலாஜி அண்ணன் மற்றும் நிகழ்ச்சி இடம் கொடுக்கும் ஜெஸிலா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்ச்சியை எப்பவும் போல் ஆசிப் அண்ணன் ஆரம்பித்து ஒவ்வொருவரின் பேச்சுக்குப் பின்னும் அது குறித்துப் பேசியும் என்னோட இந்தப் புத்தகத்தை எடுத்துப் போனவங்க கொண்டாந்து கொடுத்துடுங்கடா என்ற புத்தகத் தேடலுமாய் சிறப்பாக மூன்று மணி நேர நிகழ்வை கலகலப்பாகக் கொண்டு சென்றார்.

வாசித்ததை மற்றவர்களுக்குப் புரியும்படியாகவும் அந்த நாவல் அல்லது சிறுகதை அவர்களை ஈர்க்கும்படியாகவும் சொல்லுதல் என்பது பெரிய கலை...  சசி அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு அது கைவரப் பெற்றதே எனினும் பால்கரசு போன்ற புதியவர்களும் தங்கள் உணர்ச்சிகளை, கதை கொடுத்த தாக்கத்தை பார்வையாளர்களுக்குள் செலுத்தத் தவறவில்லை.

ஆரம்பத்தில் பேசியவர்கள் கொடுத்த பத்து நிமிடத்துக்குள் முடித்துக் கொள்ள பின்னால் வந்தவர்கள் கொஞ்சம் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டார்கள். ஏழாவது நிமிடத்தில் மணி ஒலிக்கும் என்று சொல்லியிருந்தாலும் பேச்சின் சுவராஸ்யமும் அதைக் கேட்போரின் ஆழ்ந்த கவனிப்பும் மணியை மறக்கச் செய்தது. 

நேற்று ஹாஸ்டலில் இருக்கும் மகளுடன் பேச வேண்டிய நாள் என்பதால் இடையில் எழுந்து செல்ல வேண்டிய நிலை... ஒரு நாள் ஏதோ காரணமாகப் பேசாமல் விட்டுவிட, வார்டனிடம் எங்கப்பா பேசுவாங்க... இப்பப் போன் பண்ணுவாங்க... எனச் சொல்லிக் கொண்டே இருக்க, அவரின் கண்ணீரைப் பார்த்து மனைவிக்கு கூப்பிட்டு அவங்க அப்பாவைப் பேசச் சொல்லுங்க... அவ புலம்பிக்கிட்டு இருக்கான்னு சொல்லும்படி ஆனது. அதனால் என்ன வேலை இருந்தாலும் வெள்ளி மாலை ஆறரை மணிக்கு மேல் கூப்பிட்டு ரெண்டு வார்த்தையேனும் பேசிவிடுவேன். மேலும் தலைவலியும் கூடவே இருந்ததால் கவனிப்பதில் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது... என்ன பேசினார்கள் என்பதை விரிவாக எழுதுதல் என்பது சிரமமே. முடிந்தவரை எழுத முயற்சித்திருக்கிறேன்.

பேசிய வரிசைப்படி எழுத முடியுமா தெரியலை... ஆனாலும் பேசியவர்கள் எல்லாரையும் எழுதிடலாம்ன்னு நம்பிக்கை இருக்கு.

முதலில் பேசிய தேவா அண்ணன், ஓநாய் குலச் சிங்கம் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை நிலம் சார்த்து, அதில் வாழும் மக்கள், புல் மேய வரும் மான்கள், மான்களுக்காக காத்திருக்கும் ஓநாய்கள் என விரிவாகப் பேசி இவற்றால் எப்படி நிலமும் உலகமும்  சிதைவுற்றது என்பதைத் தன் பாணியில் மிக அருமையாகச் சொன்னார். பத்து நிமிடத்துக்குள் ஒரு வாழ்க்கைக் கதையைச் சொல்லி முடித்தல் என்பது கடினமே என்றாலும் மணியைப் பார்த்துக் கொண்டு எங்கே ஏழாவது நிமிடத்தில் மணி அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் பத்து நிமிடத்துக்கு முன்னேயே பேசி முடித்துவிட்டார். 

முந்தைய கூட்டங்களில் சசி அண்ணன் ஓப்பனிங்க் பேட்ஸ்மேனாக இருக்கும் போது நிறைய நேரம் கொடுக்கப்பட்டது. தேவா அண்ணன் ஓப்பனிங்க் பேட்ஸ்மேன் ஆனபின் நேரம் குறைக்கப்பட்டிருப்பது ஏன்..? மேலும் பின்நிலை ஆட்டக்காரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்கும் போது முதலில் வரும் ஆட்டக்காரரை ஏன் மணி அடிப்போம் குண்டாஸை வைத்து தூக்கி எறிவோம் என மிரட்டினீர்கள்... அவர் கடிகாரத்தைப் பார்த்துப் பார்த்து பயந்து பயந்து பேச வேண்டிய சூழல் எழ நீங்கள்தானே காரணம்  என சிவகங்கை மாவட்ட தேவா அண்ணனின் பாசறை சார்பாக விழா குழுத் தலைவர் திரு. பாலாஜியிடம் அடுத்த கூட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கும் முன்னர் கண்டிப்பாக கேட்போம்.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் குறித்துப் பேச வந்த சான்யோ, கருப்பு உடையில் வந்தது குறியீடு போலும். பெண்ணுரிமை, பெண் கல்வி, வேலை, திருமணம், கருத்தடை, விபச்சாரம், விவாகரத்து, ஆணடிமைத்தனம் என எல்லாம் குறித்துப் பேசினார். ஒவ்வொன்றையும் விளக்கமாய்ப் பேசியது சிறப்பு.

இலங்கைக் கவிஞர் காப்பியக்கோ திரு. ஜின்னா ஷர்புதீன் அவர்கள் எழுதிய அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் என்ற காவியத்தைப் பற்றிப் பேசிய முகைதீன் பாட்ஷா, நபி அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் செய்த தியாகங்கள் என விரிவாகப் பேசினார். மெக்காவிலிருந்து வணிகத்திற்காக பிற நாடுகளுக்கு ஒட்டகம் சென்றால், எடுத்துக்காட்டாக  ஆயிரம் ஒட்டகங்கள் அனுப்பப்பட்டால் அதில் மூன்றில் ஒரு பங்கு ஒட்டகம் அன்னை கதீஜா அவர்களுடையதாக இருக்கும் என்றும் அவரின் ஈகைக் குணம் குறித்தும் செல்வாக்கு குறித்தும் பேசினார். இது காப்பியக்கோ அவர்களின் 11வது காப்பியம் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு நூருல் அமீன் அவர்கள் ஆதவனின் காகித மலர்கள் குறித்துப் பேசினார். இவர் பேசும் போதுதான் மகளுக்குப் போன் பண்ணச் செல்ல வேண்டிய நிலை என்பதால் பேச்சைக் கேட்கவில்லை. ஒரு நாவலை எப்படி அணுக வேண்டும் என்பதையும் கதை மாந்தர்களைக் குறித்தும் மிகச் சிறப்பாக பேசினார் எனச் சகோதரர் பிலால் தனது பதிவில் எழுதியிருந்தார். விரிவாகக் கதையைச் சொல்லாமல் கதைக்களம், அதில் தன்னைப் பாதித்த விஷயம், கவர்ந்த விஷயம், நாம் ஏன் இந்தக் கதையை வாசிக்க வேண்டும் போன்றவற்றைச் சொல்லுதலே சிறப்பு. அதை இவர் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

அண்ணன் பாலாஜி அவர்கள் கலைஞர் எழுதிய தென்பாண்டிச் சிங்கம் குறித்துப் பேச ஆரம்பிக்கும் போதும் நான் வெளியேதான் இருந்தேன். நான் உள்ளே வந்த போது பாகனேரி, பட்டமங்களம் என எங்கள் சிவகங்கை மாவட்டத்துக் கிராமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு வீர வரலாறைப் பேசும் போது எப்போதும் போல் நகைச்சுவையாய் பேச முடியாது என்பதால் நேற்றைய பேச்சில் நகைச்சுவை இல்லை என்றாலும் நல்லதொரு பேச்சாய் இருந்திருக்கும் என்பதை கடைசி நிமிடங்களில் கேட்டபோது அறிந்து கொண்டேன்.

பாலாஜி அண்ணன் பேசி முடித்ததும் அவர் கையில் இருந்த தென்பாண்டிச் சிங்கம் புத்தகத்தை ரியாத் தமிழ்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனக்குக் கொடுக்க முடிவு செய்திருந்திருப்பார் போல, அதற்காக பாப்பாவுக்குப் பேசும் போது போன் மேல் போன் வந்தது. ஆசிப் அண்ணனிடமிருந்து அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன். பேரன்புக்கு அன்புக்கு நன்றி.

பாரதி கிருஷ்ணகுமாரின் லுங்கி சிறுகதையைப் பற்றிப் பேசினார் சசி அண்ணன், தன் பேச்சால் அனைவரையும் கட்டிப் போடுவதில் கில்லாடி அவர், அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது என ஆரம்பித்து முதல் மாத சம்பளத்தில் பாலியஸ்டர் லுங்கி வாங்கி, அதைப் பதினைந்து நாள் துவைக்காமல் கட்டி, அது காணாமல் போய், அதை எடுத்தவன் கட்டி வரும் போது நான் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன் என முடித்தபோது கதை நாயகனாகவே வாழ்ந்து முடித்திருந்தார். லுங்கி ரசிக்க வைத்தது. இடையிடையே கைதட்டலும் பெற்றார்.

சோளகர் தொட்டி குறித்து பால்கரசு பேசினார்... வீரப்பன் வேட்டையில் அந்த மலைக்கிராமத்து மக்கள் பட்ட பாடுகளைச் சொன்னார். போலீஸ் நிலையத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்தும் எல்லாப் போலீசும் கெட்டவன் என்றாலும் அதிலும் ஒரு நல்லவனைக் காட்டியது சிறப்பு என்பதையும் சொன்னார். அதீத உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே பேசினார். எழுத்தாளன் என்பவன் சமூக வலியைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லிச் சென்றார்.

பேசி முடித்ததும் தானும் இதைப் படித்த போது உணர்ச்சி வசப்பட்ட நிலையை அடைந்ததாகவும் தனது வலைப்பூவில் இது குறித்து எழுதியதாகவும், புத்தகத்தை இனிமேல் வாசிக்கக் கூடாதென பரணில் தூக்கிப் போட்டு வைத்ததாகவும் சுரேஷ் சொன்னார். ஐய்யனார் கூட இந்த படப்படப்பான உணர்ச்சி வாசிக்கும் எல்லாருக்குமே வரும் என்றார். இந்தப் புத்தகத்தையும் எவனோ தூக்கிச் சென்றுவிட்டான் என ஆசிப் அண்ணாச்சியும் அவர் பங்குக்குச் சொன்னபோது கவிதைப் புத்தகங்கள் மட்டுமே அண்ணன் வசம் இப்போது இருக்கின்றன என்றார் ஐய்யனார்.

'கரும்புனல்' சுரேஷ் அவர்கள் அசோகமித்திரனின் 18ம் அட்சக்கோடு பற்றிப் பேசினார். எப்பவும் போல் அவரின் பேச்சு வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது. வாசித்த புத்தகத்தைப் பற்றி என்னும் போதும் இவரின் பார்வை விசாலமான வெளியைக் கண் முன்னே நிறுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டினார். சமூகம், மதம் பற்றி சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன... உருவாக்கப்படுகின்றன... என்பதை விரிவாய் பேசினார். அசோகமித்திரனின் எழுத்தை நாமறிவோம்... அதைத் தன் பேச்சில் அழகாக விவரித்தார் தீவிர வாசிப்பாளரான சுரேஷ்.

தெரிசை சிவா எடுத்துக் கொண்ட புத்தகம் வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை. நான் ரசித்து வாசித்த புத்தகம் என்பதால் சிவா ரசித்துப் பேசிய போது என்னாலும் கொம்பூதி, பெருமச்சேரி, பெருநாழிக்குள் சுத்திவர முடிந்தது. மிக அருமையாகப் பேசினார். ஒரு 450 பக்கத்து நாவலைக் கொடுத்த பத்து நிமிடத்தைவிட கூடுதலாய் சில நிமிடங்கள் எடுத்துச் சொன்ன விதம் அருமை... சஸ்பென்ஸெல்லாம் வைத்து வாசிக்காதவங்க வாசிங்க என்று சொல்லிச் சென்றார்.

வேல ராமமூர்த்தி எழுதிய நடை வேறு மாவட்ட நடை என்றாலும் சிவா அதை நாஞ்சில் நடையில் சொல்லியிருக்கிறார். புத்தகம் நாஞ்சில் நடையில் இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள் என்றார் ஆசிப் அண்ணன். வேல ராமமூர்த்தி செய்த தவறு சினிமாவில் நடிக்க வந்ததுதான் என சுரேஷ் சொல்ல, வாசிக்கும் போது வேல ராமமூர்த்தியைத்தான் வேயன்னாவாக நினைத்து வாசித்தேன் என்றார் பாலாஜி. வாசிக்கும் எல்லாருக்கும் அந்த கரிய உருவம் வேல ராமமூர்த்தியாகத்தான் தெரியும்.

பொய்யாமொழி அவர்கள் புலி நகக் கொன்றை என்னும் நாவல் குறித்துப் பேசினார். ஆரம்பம் மிக அழகாக இருந்தது. விரிவாகப் பேசுவார் என்று நினைத்த போது எழுதி வைத்த பேப்பர்களில் நிகழ்ந்த மாற்றத்தினால் சிறிது குழம்பிப் போனார் என்றாலும் அந்த வம்சத்தில் இளவயது மரணம் குறித்தெல்லாம் பேசினார். அவரின் பேச்சின் மூலம் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல் என்பது தெரிந்தது. பேசப் பயந்தே பார்வையாளனாய் இருக்கும் என்னைப் போன்றோரை விட தைரியமாகக் களமிறங்கி பேசிய பொய்யாமொழி அடுத்தடுத்த  நிகழ்வுகளில் சிறப்பான பேச்சைக் கொடுப்பார் என்று நம்பலாம்.

லஷ்மி சரவணக்குமாரின் கானகனைக் கையில் எடுத்தார் முகம்மது யூசுப் அண்ணன், காட்டை அழிக்கும் அப்பன் தங்கப்பனையும் காட்டைக் காப்பாற்ற நினைக்கும் மகன் வசியையும் பற்றிச் சிறப்பாகப் பேசினார். புலியைக் கொல்லும் தங்கப்பன் புலியாலே கொல்லப்படுவதைச் சொல்லி, யானைகளைக் கொல்ல தங்கப்பன் போடும் திட்டத்தையும் அதை மகன் முறியடிப்பதையும் சொன்னார். மருத நிலம்தான் மற்ற நிலங்களை அழிக்கிறது என்பதையும் சொன்னார். மேலும் ஒரு எழுத்தாளனின் இறப்புக்கு காட்டுயானைகள் எல்லாம் ரெண்டு கிலோமீட்டருக்கு அவனின் வீட்டைச் சுற்றி நின்ற நிகழ்வையும் பகிர்ந்து கொண்டார். யூசுப் அண்ணனின் பேச்சு எப்பவும் போல் சிறப்பு.

வேள்பாரி குறித்துப் பேச வந்தார் சுந்தர்... தன் வாசிப்பை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால் அறை நண்பர்களுக்குச் சமைத்து சாப்பிடச் சொல்லி அருகமர்ந்து சொல்வேன் என்றார். ஆஹா இவர் பக்கத்தில் உட்காரக் கூடாது போலவே எனத் தோன்றியது. வேள்பாரியை லயித்துப் படித்திருக்கிறார் என்பது இவர் கதையைச் சொல்லிய விதத்தில் தெரிந்தது. இருபது நிமிடங்களுக்கு மேல் கபிலர் மலைப் பாதையில் நடந்து செல்வது, அவருடன் செல்லும் வீரனுக்கும் அவருக்குமான உரையாடல், நாவல்பழம் சாப்பிடுதல், பாரியைப் பார்த்தல் என விரிவாகச் சொன்னார். 

நான் வாசித்த நூறு பக்கங்களைக் கூட இன்னும் சொல்லி முடிக்காத இவர் ஆயிரம் பக்கங்களை எப்போது முடிப்பார்...? நாம் அபுதாபி எப்போது போவது என்ற யோசனை மனசுக்குள் எழுந்த போதே, ஆசிப் அண்ணன் இதைச் சிறுகதையாக முடிக்காமல் தொடர்கதையாக வைத்துக் கொள்வோம்... அடுத்தடுத்த கூட்டங்களில் தொடர்ந்து கதை சொல்லுங்கள் என்று சொன்னார். சுந்தர் சிலாகித்துச் சொல்வதைப் பார்த்தால் எப்படியும் பத்துக் கூட்டங்களாவது வேண்டும் வேள்பாரிக்கு... சரளமாகப் பேசினார்.

ரபீக் பேசுவார் என்று சொல்லப்பட்டது... நேரமின்மை காரணமாக பேசவில்லை. எல்லாருக்கும் டீ, சமோசா, வடை கொடுக்கப்பட்டது. இந்த வேலையை ஒரு கையில் கடித்த வடையுடன் பாலாஜி அண்ணன் சிறப்பாக செய்தார். நிகழ்வை இழுத்துப் போட்டு செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும்... அது இவரிடம் அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்... தொடரட்டும்.

நண்பர் பிர்தோஷ் பாஷா, துபையில் தொழில் தொடங்க இருக்கும் அவரின் நண்பர் மன்சூர் அலியைக் கூட்டி வந்தார். குழுவின் சார்பாக அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு ஜெஸிலா அவர்கள் எழுதிய மூஸா நூல் கொடுக்கப்பட்டது. எழுத்தாளர்களை எனக்குப் பிடிக்கும் எனவும் அடுத்த கூட்டத்தில் நானும் ஒரு புத்தகம் குறித்துப் பேசுவேன் எனவும் சொன்னவர், குழுமத்தின் அடுத்தடுத்த முன்னெடுப்புக்களுக்கு தன்னோட உதவி பெருமளவில் இருக்கும் என்பதையும் சொல்லிச் சென்றார். அவருக்கு நன்றியும் வாழ்த்தும்.

நெருப்பு குறித்துப் பேசும் போது பெரும் நெருப்பு அழித்துவிடும் என்றார் சுரேஷ். உடனே ஆசிப் அண்ணன் நீரும் என்று சொன்னதும் ஆமாம் நானும்தான் என சுரேஷ் ஒத்துக் கொள்ள, யோவ் நான் உன்னைச் சொல்லலை நீரைச் சொன்னேன் என்றதும் சிரிப்பொலி அடங்க அதிக நேரமானது.

யூசுப் அண்ணன் கானகனில் புலி பற்றிப் பேசியதும் தும்பா படம் குறித்தும் அதில் புலியைத் தெய்வமாக்கியது குறித்தும் சொன்ன சகோதரி நிவேதிதா, தும்பா ஒரு நாவலின் தழுவல்தான் எனச் சொல்லி அந்த நாவல் குறித்தும் பேசினார். அப்போது எதுக்கெல்லாம் மனிதன் பயந்தானோ அதையெல்லாம் தெய்வமாக்கிட்டான் என்றார் சுரேஷ். அதுதான் உண்மையுங்கூட.

எழுத்தாளர் ஐய்யனார் விஷ்வநாத்தின் அடுத்த நாவலான 'ஹிப்பி'யின் அட்டைப்படம் திரையிடப்பட்டது. அழகான ஆட்டைப் படம்... சாரு எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதி பின்னட்டையில்... அதைத் தேவா அண்ணன் வாசித்தார். அப்போது 'கோர்த்து' என்ற வார்த்தை தவறென்றும் கோவை அல்லது கோத்து என்றுதான் வரவேண்டும் என்றும் சுரேஷ் விளக்கிக் கொண்டிருந்தார்.  

இத்தனை பேர் கூடுதல் என்பதும் மூன்று மணி நேரம் அமர்ந்து புத்தகங்கள் குறித்த பேச்சைக் கேட்பது என்பதும் சாதாரண விஷயமல்ல... எல்லாருக்குள்ளும் எழுத்தும் வாசிப்பும் நிறைந்து கிடப்பதாலேயே இது சாத்தியமாகிறது. எல்லாரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுதல் என்பது சாதாரணமான விஷயமல்ல... அதை மிக அழகாகச் செய்து கொண்டிருக்கிறார் ஆசிப் அண்ணன்... கேலி, கிண்டல் என இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லி நிகழ்வை அழகாக கொண்டு சென்று விடுகிறார்.

எப்பவும் நிகழ்வு சிறப்பாக அமைவதும் அந்த நினைவுகளை அழகாக எங்களிடம் கொண்டு செல்வதும் சுபான் அண்ணனின் கேமராக் கைவண்ணம்தான். நேற்றைய நிகழ்விலும் வீடியோ, போட்டோ என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். எல்லாரையும் தனித்தனியாக படம் எடுத்தார்.... இவரின் போட்டோக்கள் உயிர்ப்புடன் இருக்கும். வாழ்த்துக்கள் அண்ணா...

மொத்தத்தில் இது மிகச் சிறப்பானதொரு நிகழ்வாய் அமைந்தது. மாதாமாதம் நடக்க இருக்கும் இந்நிகழ்வு இன்னும் சிறப்பாக வரும் மாதங்களில் இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தது நேற்றைய நிகழ்வு.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாசிப்பும் வாசிப்பு குறித்த பேச்சும் ஸ்வாரஸ்யம். நிகழ்வை நேரில் பார்த்த உணர்வு. பாராட்டுகள் குமார்.

Yarlpavanan சொன்னது…

வாசிப்பும் வாசிப்புச் சார்ந்த சுவையான பேச்சும் இனிமையே