மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 ஜூலை, 2019

பிக்பாஸ் - வனிதா என்னும் ராட்சஸி

Image result for பிக்பாஸ் சீசன்-3 மது

னி, ஞாயிறு பிக்பாஸ் என்றாலே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்... அதுக்குக் காரணம் கமலின் பேச்சு மற்றும் போட்டியாளரில் இருந்து ஒருவர் வெளியேற்றம் என்பதுதான். சீசன்-3ல் முதலில் வெளியாகப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் சில காரணங்களுக்காக பாத்திமா பாபு பலிகடா ஆக்கப்படுவார் என்பதை முன் கூட்டியே உணர முடிந்தது.

'உண்மை முகத்தைக் காட்டுங்கன்னா... பல முகத்தைக் காட்டு காட்டுன்னு காட்டிட்டாங்க...' என்றபடி சனிக்கிழமை நிகழ்ச்சியை ஆரம்பித்த கமல், வெள்ளிக்கிழமை நடந்ததைப் பாருங்க என்றபடி ஒதுங்கிக் கொள்ள, வெள்ளி நிகழ்வுகள் 'பிறந்தநாள்... இன்று சிறந்தநாள்' என்ற பாடலோடு திரையில் விரிய ஆரம்பித்தது. லாஸ்லியாவின் ஆட்டத்துக்கு கேமரா மேனும் எடிட்டரும் ரசிகராயிட்டாங்க போல... சாண்டியே ஆடினாலும் லாஸ்லியாவுக்குத்தான் முதல் மரியாதை.

நவரசங்களைக் கற்றுக் கொடுத்த அபிராமி, கதை சொல்லி அதன்படி நடிக்கச் சொன்னார். மதுவும் மோகனும் செய்தது ரசிக்க வைக்கவில்லை. சாண்டியும் பாத்திமாபாபுவும் எதிரெதிர் வீட்டில் இருந்து பால்கனி வழி பார்வையை வீசி, காதலித்து, பறக்கும் முத்தமெல்லாம் கொடுப்பதாய் நடிக்க அவர் சொன்ன கதையும் அதன் இறுதிகட்ட திருப்பமும் சாண்டி மற்றும் பாத்திமாவின் நடிப்பும் செம.

மீராவை சும்மா வெளியேற்றுவது போல் நடித்த நிகழ்வில் அவரை தேவதை என பாத்திமாபாபு சொன்னது வனிதாவிற்கு ஆயிரம் பச்சை மிளகாயை அரைத்து உடம்பில் பூசியது போலாகிவிட்டது போல. அதெப்படி தேவதை என்று சொல்லலாம் என பாத்திமாவிடம் ஆட்டத்தை ஆரம்பிக்க, அவங்கவங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் சொல்ல முடியும் உனக்காக நீ சொல்றதைச் சொல்லணும்ன்னு நினைக்கக் கூடாது என நேருக்கு நேராய் போட்டாரே ஒரு போடு வனிதாவுக்குள்ள இருக்க வனிதாக்கள் அடிபட்டாலும் இதை எப்படித் தீர்ப்பது என யோசித்ததன் விளைவே மீராவுக்கான கண்ணே... மணியே...

ஆம்... தன் வலைக்குள் மீராவை இழுத்த வனிதா கிச்சனில் வைத்து உரு ஏற்றிக் கொண்டிருந்தார். மதுவைப்  பற்றி மீரா உடனே தவறாகச் சொல்ல, வனிதாவுக்கு அல்வா சாப்பிட்டது போலாகிவிட்டது. பாத்திமாபாபுவைப் பற்றி சொல்லி சண்டைக்கு வித்திட்டார். அம்மா... அம்மா... என்று உருகிய மீரா, பாத்திமாவிடம் நேரடியாக மோதினார். தர்ஷன் கூட வந்து அம்மா மீது என்ன தவறு என்பதாய் பேசினான். மீரா குரலை உயர்த்தினார். வனித படுக்கையில் படுத்தபடி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார். குரூர மனநிலை கொண்ட இப்பெண் எப்படி குடும்பத்து மனிதர்களை அரவணைத்து வாழ்வார்..?

கமல் மீண்டும் வந்தார்... கவினை மல்டி டாஸ்கர் என்றும் தர்ஷனை தூர தர்ஷன் என்றும் சாண்டியை ஈரசாண்டி என்றும் நக்கலடித்துவிட்டு (இதில் கவனிக்க வேண்டியது கமலிடம் இருக்கும் கிரேசியின் நகைச்சுவை) சேரனிடம் உடல் நலம் விசாரித்து பெண்கள் சண்டையில் ஆண்கள் எல்லாரும் ஒதுங்கிப் போய் விடுகிறீர்களே என்று சொன்னாலும் அன்றைய கமலின் விசாரணை கூட ரொம்ப ஆழமாகப் போகவில்லை.

முகன் - மீரா உரையாடலுக்குப் பின் நிகழ்ந்ததை விசாரிக்கிறேன் என ஆரம்பித்ததும் குறும்படம் வரை போவார் என்று பார்த்தால் நடந்ததை மீண்டும் அவர்களையே சொல்ல வைத்து வெறுப்பேற்றிவிட்டார். பேச வேண்டியவங்களைப் பேசவிடலை என மதுமிதா தன் ஊக்கமூட்டும் பேச்சைப் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார். அப்ப வனிதாவின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே...

பெண்களின் சண்டை குறித்து ஆண்கள் மட்டுமே பேச வேண்டும் எனக் கேட்ட போது ஆளாளுக்கு ஆடிப்போய் இருந்தோம் என்பதைப் பதிலாய்ச் சொல்ல, சரவணன் சொன்ன 'கேனத்தனமா இருக்குது சார்' ரசிக்க வைத்தது.

அதன் பின் வீட்டிலிருந்து யாரை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என ஒரு சின்ன விளையாட்டு அதில் முதலில் நான் வருகிறேன் என வந்த வனிதா, மதுவின் பேருக்கு கீழே வரிசையாக டிக் அடித்தார். ஒன்றுதான் என்றதும் நானே எல்லாருடைய சார்பாகவும் போடுறேன்னு சொன்னது திமிரின் உச்சம். அதன் பின் பலர் மதுவுக்கும் மீராவுக்கும் மட்டுமே போட்டார்கள். சரவணன் வீட்டுக்குப் போக விரும்புவதால் போடுறோம்ன்னு போட்டவர்களிடம் பாசமாய் வெளியேற்றச் சொல்லவில்லை எனச் சொல்லி மாற்றச் சொன்னார். அபிராமி தன் விருப்பப்படி மீராவுக்குப் போட்டதும் பேரை மாத்திப் போட்டுட்டியா என வனிதா கேட்க, சரியாத்தான் போட்டிருக்கிறேன் என்றார் அபி. வனிதா பிரச்சினைக்கான புள்ளியை தன்னையே நத்திக் கொண்டிருக்கும் ரேஷ்மாவிடம் வைத்தார்.

உங்களால் வெளியேற்றப்பட வேண்டும் என்று நினைத்தவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்றதும் மதுவின் அழுகை நடிப்போ என்றுதான் நினைக்க வைத்தது. இருப்பினும் ஒரு வாரகாலம் நாம பார்த்த ஒரு மணி நேர நிகழ்வு போக 23 மணி நேரம் வனிதாக்களுடன் இருந்ததால் ஏற்பட்ட வலி, யாரை வெளியேற்றலாம் என்றதும் நானே எல்லாருக்கும் பிரதிநிதி, அதனால் எல்லாருடைய ஓட்டும் மதுவுக்கே என்ற வனிதாவின் கேவலமான செயல் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை வெடித்து அழ வைத்திருக்கிறது என்பதே உண்மை.

அதன் பின்  கமல் கொஞ்சம் இடைவேளை கொடுக்க, வனிதா அன் குழுமம் அபியுடன் சண்டை  பிடித்தது. என்னோட முடிவை நான் எடுத்ததில் என்ன தப்பு உங்கள் முடிவுக்கு நான் ஏன் வரவேண்டும். ஆளாளுக்கு சில விஷயங்களில் முரண்பாடு இருக்கும். எனக்கு மதுவோட பிரச்சினையில்லை. மீராதான் எனக்குப் பிரச்சினை என்று சொன்னாலும் மூளையே இல்லாத ஷெரின் போன்றோர் விடுவதாய் இல்லை. வனிதாவிற்கு எங்கே தனது கைப்பிடிக்குள் இருக்கும் இவர்கள் எல்லாம் வெளியே போய் விடுவார்களோ என்ற பயம்... அதன் காரணமாக காளியாகிறாள்... இனி வனிதாவின் அன்புப் பிடிக்குள் மீராவும் அதிரடியான சண்டைக்கு அபியும் இருப்பார்கள்.

மீண்டும் கமல் வந்த போது கை தட்டியதும் வாழ்த்தியும் மீண்டும் தட்டினால் வீழ்த்தியும் பேச வேண்டும் என்ற சாண்டியின் விளையாட்டை கொஞ்ச நேரம் விளையாட வைத்தார். அப்போது காசியில் இருக்கும் சாதுக்கள் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்து அடுத்த மனிதரைப் பேச அழைக்க கையை நீட்டுவதைச் சொல்லிக் காட்டினார். ஒவ்வொருவரின் மன ஓட்டமும் அங்கே பிரதிபலித்தது. அது ஜாலியாக இருந்தது என்பதைவிட சிலருக்கு கடுப்பைத்தான் கொடுத்தது.

கமல் மதுமிதாவைக் காப்பாற்றிய கையுடன் யார் வெளியேறுவார் என நாளை பார்ப்போம் எனக் கிளம்பியதும் மதுவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறித்து கவின் புலம்ப, வனிதாவோ எங்கே கவின் டிராக் மாறிடுவானோன்னு அவ சொன்னதால உனக்குத்தான் மக்கள்கிட்ட செல்வாக்கு.. அவ சொன்னப்போ கைதட்டினது யாருக்கு உனக்குத்தான் என மாற்றிப் பேச, அதெல்லாம் இல்லை என சரவணன் சொன்னபோது வனிதா அடித்துப் பேச, அப்ப நீயே சொல்லுன்னு அவர் எழுந்து போய்விட்டார்.

வனிதா என்றொரு ராட்சஸி, எல்லாமே தன் கட்டுக்குள் இருக்கணும் என்று நினைக்கிறார். அதில் இருந்த நாலு ஆடுகளில் அபிராமி மட்டும் விலகி வருகிறார். லாஸ்லியாவை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை... மீரா கைப்பாவை ஆகி இனி நிறைய பிரச்சினைகளுக்கு வழி வகுப்பார்.

ஆமா யார் போனதுன்னுதான் உங்களுக்குத் தெரியுமே...

இந்தப் பதிவின் தலைப்பாய் 'பலிகடா பாத்திமா' என்றுதான் ஆரம்பித்தேன்... பதிவின் நீளம் கருதி இந்தத் தலைப்பில் நாளை எழுதப்படும்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரவணன் அவர்கள் சொன்னது சரி தான்...!

ஸ்ரீராம். சொன்னது…

ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மது லும் சத்தமும், சரவணன் "போதும்மா... எழுந்து போ" என்று சொல்வதும் காதில் விழுந்தது. ஆண்ட அழுகை எரிச்சல் வரவைக்கும் நாடக சத்தமாய்த் தெரிந்தது.

ஸ்ரீராம். சொன்னது…

//ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மது லும் சத்தமும், சரவணன் "போதும்மா... எழுந்து போ" என்று சொல்வதும் காதில் விழுந்தது. ஆண்ட அழுகை எரிச்சல் வரவைக்கும் நாடக சத்தமாய்த் தெரிந்தது. //

திருத்தம் :

ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மது அழும் சத்தமும், சரவணன் "போதும்மா... எழுந்து போ" என்று சொல்வதும் காதில் விழுந்தது. அந்த அழுகை எரிச்சல் வரவைக்கும் நாடக சத்தமாய்த் தெரிந்தது