மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 ஜூலை, 2019

பிக்பாஸ் : 'அசத்தல்' கமல்..!

Related image

னிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய நாட்களின் பிரச்சினைகள், கண்ணீர்க் கதைகள் எல்லாம் தாண்டி அழகான கமலுடன் ஆரம்பமானது. எப்பவும் போல் சில நிமிடங்கள் பேசிவிட்டு முந்தைய நாள் நிகழ்வாவது பிரச்சினைகளைத் தாண்டி இருக்குமா என்று பார்ப்போம் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தலைவர் தேர்வுக்காக ரேஷ்மா, தர்ஷன் மற்றும் சரவணன் மூவருக்குமான போட்டியாக பிளாஸ்டிக் டம்ளரைத் தன்னைப் பாதுக்காக்கும் நபர்களுடன் பந்தை விட்டு எரிந்து கலைக்க முற்படும் மற்ற நண்பர்களின் முயற்சியை முறியடித்து கோபுரமாக அடுக்க வேண்டும். யார் அதிக டம்ளரை அடுக்குகிறார்களோ அவர்களே வெற்றியாளரும் இந்த வாரத் தலைவரும் ஆவார். சரவணனுக்கு அவரின் முப்படைத் தளபதிகளான கவின், சாண்டி மற்றும் மீரா பாதுகாத்தும் அதிகமான டம்ளரை அடுக்க முடியவில்லை.. எதிர்த் தாக்குதல் அவ்வளவு தீவிரமாய் இருந்தது. தர்ஷனுக்கு சேரன், லாஸ்லியா, அபி மற்றும் முகன் முயன்றும் இறுதி நேரத்தில் தகர்க்கப்பட்டார். ரேஷ்மாவுக்கு ஷெரின், சாக்சி, மது மற்றும் மோகன் அணி மிகச் சிறப்பான பாதுகாப்புக் கொடுக்க, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார். மோகனின் கை ஏன் இடுப்புல இருந்துச்சு... அவரு பாதுகாப்புக் கொடுக்கிறாராம்... ரேஷ்மா வெற்றி பெற்றதும் கட்டிக்கொடு ஒண்ணைக் கொடுத்து தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

சாண்டி 'நானொரு டிஸ்கோ டான்ஸர்' பாடலை மோகனையும் நாலு பெண்களையும் வைத்துச் சொல்லிக் கொடுக்க, பெண்கள் நடுவே குறுந்தாடி வைத்த இளைஞனாக ஆடிய மோகனுக்குள் எத்தனை சந்தோஷம் என்பதை அவரின் முக பூரிப்பு காட்டிக் கொண்டிருந்தது. கவினும் முகனும் தனியா ஆடிக் கொண்டிருந்தனர்... முந்தைய நாள் நிகழ்வுகளினால் அதிக அழுத்தத்தில் இருந்த கவின் அதிலிருந்து சிறிதேனும் மீண்டிருப்பது நல்ல விஷயம்.

அப்புறம் கொஞ்சம் சொல்லிக் கொள்ளும்படியாக நிகழ்ந்தது ஒருத்தரைப் பற்றி உண்மையும் பொய்யும் என இரண்டு செய்திகள் சொல்லணும்... உண்மையின்னா சூப்பர்... பொய்யின்னா சூஸி... அபிராமி தொகுப்பாளர்... கொஞ்சம் ஓவராத்தான் ஆரம்பிச்சிச்சு... பட் சுரத்தில்லை... இந்த இந்த ஆட்களைப் பற்றிச் சொல்லணும்ன்னு சரியான தேர்வாய் இருந்தாலும் சாண்டியும் தர்ஷனும் போட்டதெல்லாம் மரணமொக்கை... அதனாலயே முழுமையாக காட்டவில்லை... இது கூட ஆறுதலான விஷயம்தான் பார்வையாளர்களுக்கு. 

இப்ப காலையில் இவர் இதைச் சொல்லிக் கொடுத்தார்... அவர் அதைச் சொல்லிக் கொடுத்தார்... என்பதைக் காட்டுவதை விட்டுவிட்டார்கள்... அதுபோல் மொக்கயான் நிகழ்ச்சிகளையும் காட்டாதிருக்கலாம். 

மறுநாள் காலை சாண்டி டான்ஸ் சொல்லிக் கொடுத்த 'நானொரு டிஸ்கோ டான்ஸர்' பாட்டுடன் விடிந்தது. எல்லாரும் ஆடினார்கள். லாஸ் மட்டும் சொல்லிக் கொள்ளும்படி சில நாட்களாக ஆடுவதில்லை... காதல் இல்லைன்னு ஒப்புக்குச் சொன்னாலும் அந்த வலி பெரிதுதான்... லாஸோட நிலை சாக்சியை விட மோசமாக இருப்பது போல்தான் தெரிகிறது. தன் முன் ஆடிய சாண்டியின் ஆட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே வியப்புடன் அமர்ந்திருந்தது.

அப்புறம் சாக்சிக்கு பிறந்தநாள்.... வாழ்த்துப் பாடல்... கேக்... அப்பா அம்மாவின் வாழ்த்துக்கள் என கொஞ்சம் மகிழ்வாய்.... கவின் எட்ட நின்று சிரித்தான்... சேரனுக்குள் இருக்கும் அப்பா மெல்லக் கலங்கினார். பிரச்சினைகள் சூழ் பிக்பாஸ் இல்லம் மகிழ்வாய்க் களித்த மணித்துளிகள் இவை. கமலும் வந்தார்... வாழ்த்தினார்... சாண்டியையே நான் கூப்பிடுவதாக குற்றம் சாட்டினீர்களே மோகன் என அதற்கான காரணத்தைச் சொல்லி, யார் சிறப்பான செயலைச் செய்தாலும் நான் பாராட்டத் தயங்குவதில்லை என்பதையும் சொல்லி வைத்தார்.

லாஸ்லியா சப்பாத்தியில் கத்தியால் குத்திய விவகாரத்தில் 'வெந்த சப்பாத்தியில் ஏன் வேலைப் பாய்ச்சினீர்கள்..?' என்றார். அதுவும் விவரமாய் சொல்ல, கமல் சப்பாத்தி மாதிரியே கடினமாயிருமோன்னு நினைத்து இடைமறிக்க, நான் கதை சொல்றேன் கேளுங்க என லாஸ் சொன்னதும் கைதட்டல், கமலும் சிரித்தார். விபரமாய் சொல்லி முடிக்க, இதுதானே உண்மை... வேறொன்றும் இல்லையே என்று முடித்துக் கொண்டார்.

மோகன் வைத்யாவின் ஓப்ராவைப் பற்றி வியந்து அதை மீண்டும் பண்ணச் சொன்னார். இது கூட சாண்டிக்கு முன்னுரிமை என்ற மோகனின் குற்றச்சாட்டுக்காக வலிந்து செய்தது போல்தான் இருந்தது.

பாத்ரூம் கழுவுனா ஒத்துக்க மாட்டேங்குதுன்னு அணி மாறியதை, இப்பல்லாம் வீட்டுக்குள்ள அடிக்கடி அணி மாறுறாங்க இல்லே என மோகனிடம் கேட்டு நீங்க ஒத்துக்கலைன்னு மாறுனீங்களா இல்லை கழுவ அசிங்கப்பட்டுக்கிட்டு மாறுனீங்களான்னு கேட்டு, மோகன் விளக்கம் கொடுத்து... கொடுத்த விளக்கம் அவ்வளவு ஒண்ணும் சரியானதில்லை என்ற போதிலும் 'கழிவை வெளியேற்றத் தெரிந்த நமக்கு அதைக் கழுவவும் தெரிந்திருக்கணும்' என்றார். செம.

அப்புறம் மீரா, சாக்சி பொதுக்குழுவைக் கூட்டுன பிரச்சினையைப் பேச ஆரம்பித்தார். மீரா வாயைத் தொறந்துச்சு... எப்ப நிப்பாட்டும்ன்னு இருந்துச்சு... சாண்டியும் சேரனும் மீரா எதற்கெடுத்தாலும் வீடியோ போட்டுப்பாருங்க என்று சொல்வதால் குறும்படம் வேண்டும் என்று கேட்க, ஒரு இடைவேளைக்குப் பிறகு இந்த சீசனின் முதல் குறும்படத்தைப் போட்டார் கமல். அதில் ஒரு மீட்டிங் போடலாமா என்று கேட்ட சாக்சிதான், முதலில் சாண்டியுடன் பேசலாம் என்றும் சொல்கிறார். ஆனாலும் மீட்டிங் என்ற வார்த்தை சாக்சியிடம் இருந்து வருவதால் அவரெ குற்றவாளி என்பதாய் தீர்ப்பானது. எல்லாரும் அதையே முன்மொழிந்தாலும் சேரன் சொன்ன மொழிப்பிரச்சினை முற்றிலும் உண்மை. சரவணனும் சேரனை வழிமொழிந்தது ஆச்சர்யம். உனக்கு மொழிப்பிரச்சினை இருக்கு எனத் தமிழ் வகுப்பெடுத்த மீரா, இப்போது பேசவில்லை... ஏன்னா வெற்றி நமக்குத்தானே.. ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம் முகத்தில்... இனி சேரன், சாக்சி என வரும் நாட்களில் பஞ்சாயத்தைக் கூட்டுவாரே... என்னைக்கோ செத்த ஆயாவுக்கு இப்ப அழுகுறவராச்சேங்கிற 'கதக்' மனசுக்குள்ள.

அப்புறம் சாக்லெட் பிரச்சினை பேச, சாக்லெட்டோட வந்தார்... வாழைப்பழ காமெடியை சாக்லெட் பிரச்சினையுடன் நினைவு கூர்ந்தார். உங்ககிட்ட ரெண்டு வாழைப்பழம் இருந்தும் குழம்பிட்டிங்களேன்னு ஜோக்கடித்தார். ஒரு சாக்லெட்டை நீங்க முக்கோணமாக்கிட்டீங்க... இனி சதுரமாகாமல் பாத்துக்கங்க என்றார். கவினும் தன் விளக்கத்தைக் கொடுத்தார். அவருக்கும் சாக்சிக்கும் இடையில் சாக்லெட் தவிர வேறு சிலவும் ஊட்டப்பட்டிருக்கிறதுதானே என்ற கேள்விக்கு கவினும் ஆமா என்க, உண்மையை ஒத்துக் கொண்டதற்கு கைதட்டினார். உணர்வுகளோட விளையாடாதீங்க என்ற கண்டிப்பையும் வைக்கத் தவறவில்லை.

சாக்சி தன் நிலை விளக்கியபோது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தார்... ஷெரின் ஆறுதலாய் அணைத்திருந்தார். தன்னோட உணர்வுகளை ரொம்பப் பாதிச்சிருச்சு... ஒரு காதலிக்கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பிரண்ட்கிட்ட பேசுவாங்களா என்றபோது கவினின் திருவிளையாடலில் ஒரு பெண்ணின் மனதை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருதல் என்பது மிகவும் கடினம்... அதுவும் தன்னை ஏமாற்றியவனுடன் ஒரே வீட்டுக்குள் இருக்கும் போது உணர்வுகளைக் கொல்லுதல் என்பது அவ்வளவு எளிதல்ல. சாக்சியின் உணர்வைப் புரிந்து கொண்ட கமல், 'இது ஒரு அடைபட்ட இடத்துக்குள் நடந்ததால் அந்தப் பாதிப்பு உங்களுக்கு அதிகமா இருக்கு... இதுவே ஒரு பஸ்ஸ்டாப்புலயோ பீச்சிலோ என்றால் கடந்து போயிருப்போம் இல்லையா..?' என்றபோது சாக்சியும் ஒத்துக் கொண்டார். வாழ்க்கையில அனுபவிக்க வேண்டிய விஷயம் உங்களுக்கு நூறு நாட்களுக்குள் கிடைக்கிறது. அதே போல் உங்க மூலமா இவங்களுக்கும் கிடைக்கிறது எனப் பார்வையாளர்களைப் பார்த்துச் சொன்னார்.

லாஸ்லியாவிடம் பட்டும் படாமல் மட்டுமே பேசினார்... சாக்சி வெளியில் வந்துவிட்டது தெரிந்தாலும் லாஸ்லியா வெளியில் வந்தது போல் தெரியவில்லை. கமல் சொன்ன மனநல மருத்துவர் கவினுக்குத் தேவையோ இல்லையோ லாஸ்லியாவுக்கு கண்டிப்பாத் தேவைப்படலாம். விழுந்தவுடன் ஏய் எனக்கு ஒண்றுமில்லை எனச் சொல்லி நகர்ந்து அதன் பின்தான் காயத்தின் தீவிரத்தை உணர்வோம்.... அப்படியான நிலையில்தான் லாஸ்லியா இருக்கிறார். கவினைப் பொறுத்தவரை பண்ணியது தவறு என உணர்ந்த நிலையில் எட்டியிருத்தல் நல்லது. செய்வாரா என்பது கேள்விக்குறியே..

இரண்டு சாக்லெட்டுக்களைக் கொடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் என்றபோது சாக்சி மற்றும் லாஸ்லியாதான் என்னால அதிகம் பாதிக்கப்பட்டவங்க அவங்களுக்கே கொடுக்கிறேன் என்றது மிகச் சரியானதே என்றாலும் இந்தப் பிரச்சினை இன்னும் சுற்றத்தான் செய்யும் என்பதையே காட்டியது. கவின் லாஸ் மீது சாயக்கூடும்... சாக்சி கூட இறங்கி வரக்கூடும்... அப்போது மீண்டும் மும்முனைத் தாக்குதல் நடந்தாலும் நடக்கலாம்.

இடையில் கவின் அழுதுவிட்டு வந்தார்... சாக்சிக்கு ஆறுதல் சொல்லப்பட்டது... லாஸ்லியா தனியே ஆடிக்கொண்டிருந்தார்... கவினுக்குச் சேரன் சரியான முறையில் விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்றால் சேரனைத் தேடும் கவின், மற்ற நேரங்களில் சரவணன், சாண்டியின் அறிவுரைகளுக்கு மண்டை ஆட்டுவது...  சரி... சரி... அதுதானே விளையாட்டு... போன வாரம் சரவணனை நாமினேட் பண்ணியதில் கவினும் ஒருவர்தானே.

மீண்டும் அகம் டிவி வழியே அகத்துக்குள் போகும் முன் 'இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறேன். இதற்கு மேல் இதில் உள்நுழைவது நல்லதல்ல... அது மிகப்பெரிய தவறு... ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பேச வேண்டியதைப் பேசியிருக்கிறேன்... இதற்குமேல் தனி மனித உரிமையில் தலையிடுவது சரியானதல்ல...' என்ற கமல், 'இதை அம்மாக்கள் புரிந்து கொள்வார்கள்... அப்பாக்கள்...?' எனச் சொல்லிச் சிரித்தார். தான் ஒரு தகப்பனாய் பேசியதாகச் சொன்னது சரியே... சில விஷயங்களில் அளவுக்கு மீறித் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது தவறு.

அடுத்து உங்களில் யார் இந்த வாரம் என மீரா, மோகன், சேரன், சரவணன், அபிராமியிடம் வெளியேற்றப்பட்ட பெயர் தாங்கிய கார்டை வைத்துக் கொண்டு பேசி... சரி நீங்க யார் காப்பாற்றப்படுவார்ன்னு நினைக்கிறீங்க என ஐவரிடமும் கேட்க, மீரா சரவணனையும் சரவணன் மீராவையும் சொல்ல, மோகன் சேரனைச் சொல்ல, சேரன் நான் மோகனுக்குத்தான் மொய் வைக்கணும் என்றாலும் எனக்கு நானே என தன்னையே சொல்லிக் கொண்டார். அபி கூட நானே என்று நினைத்தாலும் சேரன் அண்ணாதான் என்றார்.

எல்லாரும் இப்பவே சொல்லுங்க சார் என்றதும் நீங்க கேட்டதும் நாங்க சொல்லிடுவோமா.. நாளைக்கு எனச் சொல்லி கிளம்பினார்.

உடைகள் எப்படிப் போட்டு அலைந்தாலும் கமல் வரும் போதேனும் நல்ல உடைகளைப் போடலாம்... மீரா போன்றோர் அமரும் முன் இது ஒண்ணும் மாடலிங், சினிமா மேடை அல்ல... அகம் டீவியை அகத்திலிருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை பார்ப்பார்கள் என்பதை உணர வேன்டும். கமலும் பொதுவாக இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் இதைக் கண்டித்தால் நல்லது, ஷோவை ஷோவாப் பாருங்கப்பா எனச் சொன்னாலும் சில விஷயங்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையே.. 

செந்திலின் வாழைப்பழ காமெடி, மீரா விஷயம், கவின் காதல் விவகாரம், மோகன் பாத்ரூம் விஷயம் என எல்லாவற்றிலும் பிக்பாஸ் விமர்சன எழுத்துகளில் வருபவையே மேற்கோளாய் கமலிடமிருந்து... அப்படியெனில் வரும் பதிவுகளை எல்லாம் இல்லை என்றாலும் சிலவற்றையேனும் கமல் வாசித்துவிட்டுத்தான் மேடை ஏறுகிறார் என்பது விமர்சனங்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்பதைவிட நான் அப்டேட்டாக இருக்கிறேன்... சும்மா ஏனோ தானோன்னு எல்லாம் நிகழ்ச்சி நடத்தலை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் கமல் என்பதாகத்தான் தெரிகிறது. சனியும் ஞாயிறும் கமலாலேயே 'தெறி'யாய் இருப்பது உண்மையே.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...