மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 ஜூலை, 2019

பிக்பாஸ் : வனிதா இடத்தில் மீரா..?

Image result for bigg boss season 3 episode 15 images
(அபிராமி - முகன்)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டதை அறிவீர்கள்... வனிதா போனதால் பிக்பாஸ் டிஆர்பிக்கு அடி விழும் என்பதை அறிந்தும் மோகனோ மீராவோ போக வேண்டிய இடத்தில் வனிதா ஏன் வெளியேற்றப்பட்டார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்திருக்கும். 

பனிரெண்டு கோடிக்கும் மேல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்ற கமலின் கணக்கில் வனிதாவுக்கு வாக்குக் கிடைக்கவில்லை என்பதற்கு காரணம் அவரின் செயல்பாடுகள்தான் என்றாலும் மக்கள் வாக்கின் அடிப்படையில் ஆட்களை வெளியேற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டே பிக்பாஸ் எப்போதும் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் ஏன் வனிதாவுக்காக எடுக்கப்படவில்லை..? ஏன் மோகன் காப்பாற்றப்பட வேண்டும்...? ஏன் மீரா காப்பாற்றப்பட வேண்டும்..? 

தன் பெயர்தான் வந்தது என்றாலும் சீக்ரெட் ரூமுக்கா இருக்கும்... நல்லாத்தானே விளையாண்டேன்.... நம்ப முடியவில்லை... மனதில்பட்டதைப் பேசுவது தப்பா.. என்ற குரல்கள் சொல்வதன் பொருள் என்ன..? வனிதா தொடர்வார் என்ற நினைப்பு எல்லாருக்குள்ளும் இருந்திருக்கு என்பதுதானே அது.

வனிதாவின் குடும்பப் பிரச்சினைகளுக்காக அவர் நீதிமன்றம், காவல் நிலையம் எனச் செல்வதற்கு வெளியில் இருக்க வேண்டியதன் அவசியம் உணர்ந்தே அவர் வெளியேற்றப்பட்டார் என்ற செய்திகள் உலா வருகின்றன. அதுதான் உண்மை என்றும் தோன்றுகிறது.  

நான் மனதில்பட்டதைச் சொல்லத் தயங்குவதில்லை அதுவே என்னோட சிறந்த குணம் என மார்தட்டிக் கொள்ளும் வனிதா, மற்றவர் பிரச்சினையில் நுழைந்து அதைப் பெரிதாக்கி அவர்கள் சண்டையில் மகிழ்ந்து கிடக்கும் குணத்தை ஏன் தனது சிறந்த குணத்தில் ஒன்றாய்ச் சொல்லவில்லை என்று தோன்றினாலும் ஒரு பெண்ணாய் போராடிக் கொண்டிருக்கும் பல தாய்மார்களில் அவரும் ஒருவர்... எந்தப் பிரச்சினைக்கும் மரணம் தீர்வாகாது... அதுவும் உங்களை நீங்களே அழித்துக் கொள்ளும தற்கொலை முயற்சியில் மட்டும் இறங்காதீர்கள்... அது உங்கள் மரணத்துக்குப் பின் உங்களை நம்பி இருந்தவர்களை வாழ்நாள் முழுவதும் கொன்று கொண்டே இருக்கும் என்று அவர் சொல்லிச் சென்றது மிகச் சிறப்பானது... உண்மையானது. பல நேரங்களில் பிரச்சினை சூழ் வாழ்வில் இப்படியான எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் நமக்குப் பின் மனைவிக்கு, குழந்தைகளுக்கு யார் இருப்பார்கள்..? என்ற எண்ணம் முன் நின்று எதிர்மறை எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டேதான் இருக்கிறது.

வனிதாவின் வெளியேற்றத்துக்குப் பின் பிக்பாஸ் இல்லம் ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க போல்தான் இருக்கும் என்பதைக் கமல் உள்பட எல்லாருமே அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். அம்மா இடத்தில் சின்னம்மா போல மீராவுக்கு கொம்பு சீவப்படுகிறது. மீரா அந்தளவுக்கு எல்லாம் இல்லை என்பதை கவின், 'வனிதாக்கா கடைசி வரை நின்னு பேசும்... நீ பாதியிலே ஒடிருவே...' என ஒற்றை வரியில் சொல்லிவிட்டான். சின்னம்மா நிலைதான் மீராவுக்கும்... நான் அடிச்சி ஆடுறேன் பாரு... வாயைத் தொறந்த கெட்ட வார்த்தையைக் கொட்டுவேன் தெரியுமா..? என்றெல்லாம் மீரா பில்டப் விட்டு வச்சிருக்கு என்றாலும், எழுபதுகளின் நாயகிகளைப் போல் எல்லாத்துக்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதுடன் பக்கம் பக்கமா வசனம் வேற பேசி எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் மீராவுக்கு மணிரத்னம் பட நாயகிகளுக்கு மாதிரி சின்னச் சின்ன வசனங்கள் கொடுங்க போதும்... நீண்ட பேச்சு எரிச்சலா இருக்கு... மீரா நின்னு பிடிக்குமா தெரியாது ஆனா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் பெண்ணாக எல்லார் மனதிலும் நிற்கும்.

வனிதா வெளியேறும் போது உண்மையா இருந்தா வெளியேற்றுவாங்களா என்று கேட்கும் சாக்சி எப்போதுமே உண்மையாக இருக்கவில்லை என்பதை உணராதது ஏனோ..? எல்லாமே அறிந்தது போல் பேசும் சாக்சி, மீரா விஷயத்தில் மட்டும் கூமுட்டையாக இருப்பது ஏன்..? ஷெரின் கூட கொஞ்சம் மாறி எல்லாரிடமும் கலந்து பேச ஆரம்பித்திருக்கிறார். 

சாக்சியைப் பொறுத்தவரை மீரா வெளியேறுவார் என்றே நம்மைப் போல் நம்பியிருக்கிறார். கமல் சொல்வது போல் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்ற கோட்பாட்டின்படி வனிதாவின் வெளியேற்றம் நிகழ்ந்திருக்கலாம். இப்போதெல்லாம் 'இது உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு' எனக் கமல் சொல்வதில்லை. பிக்பாஸ் குறித்த எழுத்துக்களை வாசிக்காமலா இருப்பாரு... அதான் மாற்றிக்கிட்டார்.

தர்ஷனும் மீராவுக்கு காதலாம்... அவன் வெளியில் எனக்கு ஆளிருக்கு என்ற சொன்னபோதும் அம்மாக்கிட்ட வந்து பொண்ணு கேளுன்னு சொன்னாங்களாம். இதைக் கமல் விசாரித்த போது தர்ஷனின் பேச்சு பொய்களற்று இருந்தது. மீராவோ நடந்ததை விடுத்து நிறையக் கலந்து டுவிட்டரில் கமலஹாசன் இடும் கவிதைகளைப் போல, புரியவும் புரிய முடியாமலுமாய் பக்கம் பக்கமாய்ச் சொன்னார். நமக்குத்தான் தலை சுத்துச்சுன்னா கமலுக்கும் கூட சுத்திருச்சி. அதென்ன இங்கே கண்டதும் காதல் வருகிறது. நேற்று சேரன் சொல்வது போல் யார்..? என்ன..? வெளியில் எப்படி..? குடும்பமென்ன..? என எதுவுமே தெரியாமல் காதல் வருவதெல்லாம் பிக்பாஸ் இல்லத்துக்குள்தான்... ஒருவேளை அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆறுதலான வார்த்தைகள் கூட காதலாகுமோ..? ஆனாலும் மீராவைக் கட்டுனவனை பேசியே கொன்று விடும் என்பது மட்டும் உறுதி.. பாவம் தர்ஷன் உயிரைக் கொடுக்காதிருக்கட்டும்.

இல்லத்துக்குள் நிகழும் காதல் குறித்து கமல் பேசும் போது இங்க நீங்க ஒருநாள் வாங்க சார் நான் நிரூபிச்சிக் காட்டுறேன் என வனிதா காதல் தூது விட, கமல் சிரித்துச் சமாளித்தார். வனிதா வெளியில் வந்தபோது கூட உங்களை எல்லாம் நான் குழந்தை முதல் பார்த்து வருகிறேன் என்று சொல்லி அணைத்ததில் ஒரு அப்பனாய்த்தான் மிளிர்ந்தார்... காதல் இளவரசனாய் அல்ல.

காதல் பற்றி பேசும் போது இந்தத் தலைமுறையின் வேகத்தை வியந்ததுடன் அது சரியெனப் பாராட்டவும் செய்தார். முதியவர்கள் செய்யும் செயல்களில் தப்பிருந்தாலும் அவர்களைக் குழந்தைகளாய்ப் பார்க்கலாம் என்றது மோகன் வைத்யாவின் 'கட்டிக்கொடு' வைத்தியத்துக்காகக் கூட இருக்கலாம். அதென்ன கட்டிக்கொடு... பின்னாடி பார்க்கலாம்.

வெளியில் வந்தவர்களிடம் உள்ளிருப்பவர்கள் பற்றிக் கேட்கும் கமல், வனிதாவுக்காக மட்டும் சிறப்பாக அவரைப் பார்வையாளர்கள் மத்தியில் அமரச் செய்து, அவர் போய்விட்டாரெனச் சொல்லி அவரைக் குறித்துக் கேட்டார். எல்லாரும் நல்லவர் என்றே சொன்னார்கள். கவினும் தர்ஷனும் கூட சில விஷயங்களில் தவறு செய்தார் என்றாலும் அவர் நல்லவர்தான் என்றார்கள். மோகன் சொல்லவே வேண்டாம் நவரசநாயகனுக்கே நடிப்பு சொல்லிக் கொடுப்பாப்புல... இவரைப் பற்றி பின்னாடிப் பார்ப்போம். மத்தவங்க பிரச்சினையை அவங்களே பேசித் தீத்துப்பாங்க என்ற போதிலும் வனிதா புகுந்து அதை பெரிதாக்குவாரென லாஸ்லியா மனதில் உள்ளதைச் சொன்னார். அது மிகவும் உண்மையான நேர்மையான பதிலாய் பார்வையாய் இருந்தது.

குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒரு பெண் தனியே போராடுறதுங்கிறது சாமானியமானதல்ல... எத்தனை பிரச்சினைகள்... எத்தனை போராட்டம்... அதுவே வனிதாவுக்கு அழுத்தமான, அதிகாரக் குரலைக் கொடுத்திருக்கிறது. அவளைப் போன்ற வாழ்வை வாழ்பவள் என்ற முறையில் அவளின் செயல்கள் சரியானவைதான்... எதிலும் அவளின் தீர்க்கமான முடிவு ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்ற ரேஷ்மாவின் பேச்சு ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பதைப் போல் மற்றவர்கள் பேசவும் இடங்கொடுங்கள் என்று சொன்னதுடன் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்... புரியலைன்னா உங்க வீட்ல இருக்க ரெண்டு டீச்சருங்ககிட்ட கேட்டுக்கங்க என வனிதாவின் குழந்தைகளைக் காட்டிச் சொன்னார் கமல். வனிதாவை அமர வைத்து வீட்டிலிருப்பவர்களிடம் கருத்துக் கேட்டது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றாலும் இது வனிதாவுக்காக மட்டுமே... பிக்பாஸ் டிஆர்பியை உயர்த்தியதற்கு கிடைத்த மரியாதை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இது போல் கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

மோகன் வைத்யா... வயசானால் குழந்தை மாதிரி ஆயிடுவாங்க... அன்புக்கு ஏங்குவாங்க என்பதெல்லாம் நாமறிவோம்... ஆனால் மோகனின் செயல்களில் குழந்தைத்தனமும் இல்லை... அன்புக்காக ஏக்கமும் இல்லை... தன் பெண்மை கலந்த நடை உடை பாவனையைக் கேலி செய்வதாய் வருத்தப்படும் போது மட்டும் அவரின் வலி நமக்குள்ளும் கடத்தப்படுகிறது. அப்படியான கேலிகளைத் தவிர்த்தல் நலம். 

மோகன் கட்டிக்கொடு வைத்தியத்துக்காக அலைபவராகத்தான் தெரிகிறார். எதற்கெடுத்தாலும் சினிமாப்பாணிக் கண்ணீரைக் கொட்டுகிறார். ஊருப்பக்கம் ஆம்பளை அழக்கூடாது என்பார்கள். இவர் அழுதே காரியம் சாதிக்கிறார்... என்ன காரியம் கட்டிக்கொடுதான்... அதென்ன கட்டிக்கொடு வைத்தியம்... பெண்களைக் கட்டிப்பிடித்து முதுகு தடவி... உச்சி மோர்ந்து... கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுக்கும் வைத்தியம்... இந்த வைத்தியத்தில் வாங்குபவர் பலர் வேப்பெண்ணை குடித்தது போல் இருக்கிறார்கள் என்றாலும் கொடுப்பவருக்கோ திருப்பதி லட்டை முழுவதும் தின்ன மகிழ்ச்சி.

மீராவுக்கு தன்னைப் பற்றி தப்பான பிம்பத்தை தர்ஷன் ஏற்படுத்துகிறான் என கேமராவையும் வீட்டிலிருப்பவர்களையும் நம்ப வைக்க வேண்டும் என்பதால் விளக்கம் கேட்டு தர்ஷனை கொன்னு எடுக்க ஆரம்பிக்க, இனி எங்கூட பேசாதே... எங்கிட்ட வராதே என அவன் எஸ்ஸாகிடுறான். தர்ஷனுக்கு லாஸ்லியா மீது தங்கைப் பாசம்... கிடைத்த சாக்லெட்டைக் கூட லாஸ்லியாவுக்குத்தான் கொடுக்கிறான்... சேரனும் கொடுக்கிறார்... ஆனால் லாஸ்லியாவின் மனசெல்லாம் வேட்டையந்தான்... 

நாமினேசனில் மீராவுக்கு பதினோரு ஓட்டு... அப்புறம் சரவணன்... அதன் பின் சேரன், மோகன்... அபிராமியை நாமினேட் பண்ணினார் சாக்சி, தான் இந்த வார வெளியேற்றப்பட இருப்பவரில் தெரிவு செய்யப்பட்டதற்கு அபிராமி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் என்னை எதற்கு அவர்கள் சொன்னார்கள் என அழுது யோசிக்கிறார்... ஆறுதலாய் அபி...அபி என அருகிருக்கிறான் முகன். இவர்களின் காதல் மெல்லிய தென்றலாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பிடித்த, பிடிக்காத என இரண்டு கேள்விக்கான பதிலில் பெரும்பாலும் மீரா பிடிக்காததில் வந்தார். எங்கிருந்தாலும் கடைசி வரை லாஸ்லியாவை மகளாக நினைப்பேன் என்ற சேரன், இங்கிருந்து போனதும் மீராவை மறந்துடுவேன் என்றார். லாஸ்லியாவோ கவின் பேசுவது பிடிக்கும் என்றும் சாண்டி பேசுவது அறுவை என்றும் சொன்னார். கவினோ நல்ல மனசுக்காரன் சரவணன் என்றும் முரணானவர் சேரன் என்றும் சொன்னார். சாண்டியோ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவார் மோகன் என்றும் புரிந்து கொள்ள முடியாதவர் சேரன் என்றும் சொன்னார். அபிராமி வெறுக்க வேண்டியவள் மீரா என்றும் நேசிக்கக் கூடிய மனசுக்காரன் முகன் என்றும் சொன்னார்.  மீரா சேரனை எதிரியாகவும் தர்ஷனை நண்பனாகவும் சொன்னதுடன் தன்னை எல்லாரும் சொல்லக் காரணம் தானே எல்லாருக்கும் டப் கொடுக்கும் போட்டியாளர் என்று தனக்குத்தானே புகழாரம் சாற்றிக் கொண்டு, மீண்டும் எழுபதுகளின் நாயகியாய் நீண்ட வசனம் பேசினார். 

கவினை அண்ணன் என லாஸ்லியா சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை... அது குறித்து நாம நல்ல நண்பர்கள் மச்சான்... பின்னே எனக்கு நீ அண்ணன்னு சொன்னாப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் சொல்றே பாத்தியான்னு சோகமழை பொழிந்து கொண்டிருந்தான். லவ் பண்றேன்னா சொல்லித் தொலையேன்டா... அபி, சாக்சியை மெல்லக் கழட்டிட்டான்...  நான் முதல் வாரத்திலேயே சொல்லியிருந்தேன் கவின் லாஸ்லியாவைத்தான் லவ் பண்ணுவான் என... மச்சான் சீனெல்லாம் வெறும் வெத்துக்கதை... அவனின் மனசுக்குள் அவளும்... அவளின் மனசுக்குள் அவனுமாய் இருப்பதை மறைக்கிறார்கள்... வரும் வாரங்களில் பூனை வெளிவரும்.

சமைக்கும் போது நீ போம்மா... என சரவணன் சொன்னதுக்கு பெரிய சீன் போட்டு கண்ணுல ஜலமெல்லாம் வச்சிக்கிச்சு மது... முடியலை... அந்தாளு நான் சமைக்கிறேன்னுதானே சொன்னாரு... என்னமோ ரொம்பத் திட்டிட்ட மாதிரி ஓவர் சீனு வேற.. இந்த வார நாமினேசனில் இல்லை...எப்படி இல்லாமல் போனாள் நாந்தானே ஓட்டுப் போட்டேன் என ரேஷ்மா முழித்தாளும் ஒரு ஓட்டெல்லாம் போட்டிக்குள் தற்போதைய நிலையில் கொண்டு செல்லாது என்பதால் தப்பித்தார்... இந்த வாரம் அதிக ஆட்டத்தை மதுவிடம் எதிர்பார்க்கலாம்.

தன்னை சரவணன் கிண்டல் செய்கிறார் என்ற ஒப்பாரி... சரவணன் நேரில் வந்து விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ளாத மோகன்... இந்தாளுதான் பிக்பாஸ் வீட்டில் வாலி பட வில்லன் அஜீத் போல சைலண்ட் வில்லன்... போட்டுக் கொடுப்பதில் மன்னன்... வயசுக்குத் தகுந்த செயல்கள் இல்லை... 

சரவணன் மகனின் போட்டோவை அனுப்பிய பிக்பாஸ் சாண்டியைப் போல் சரவணன் அழுது... குதித்து... நன்றி பிக்பாஸ் என நாலு கேமரா முன் ஓடுவார் என நப்பாசை கொண்டிருந்திருப்பார்... செவ்வாழை என்ன பையன் போட்டாவா.. ம்... சரி என்றபடி வெங்காயம் உறிக்க ஆரம்பிக்க, ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லியும் சாண்டி உங்கண்ணு சித்தப்புன்னு சொன்னதும் கொஞ்சம் கலங்கினாரு...அம்புட்டுத்தான்... என்ன சித்தப்பு ரியாக்சனே இல்லைன்னு பிக்பாஸ் புலம்பியிருப்பாரு... அதுல முத்தாய்ப்பாய் நிகழ்ந்தது சரவணனை எதிரியாய்ப் பார்க்கும் மோகன் 'அய்...ச்ச்ச்சூச்ச்சூ...' என போட்டோவுக்கு முத்தம் கொடுத்தது. முன்னே சொன்னதுதான் உலக நாயகனுக்கே டப் கொடுக்கும் கலைஞன் இவர்.

மீரா இந்த வாரம் பிக்பாஸால் காப்பாற்றப்படுவார்... பிரச்சினைக்கு இவர் கண்டிப்பாகத் தேவை... மோகனும் காப்பாற்றப்படக் கூடும்... இவர்கள் இருவரும் இல்லையென்றால் பிக்பாஸ் அதிகம் எதிர்பார்த்து முதல் நாள் முதல்காட்சியிலேயே தூக்கி எறியப்பட்ட சினிமா போலாகும் என்பதை பிக்பாஸ் உணராமலா இருப்பார்..? அதேபோல் அபிராமி - முகன் காதல் சூடுபிடிக்கும் தருணத்தில் அபியை வெளியேற்ற பிக்பாஸ் என்ன முட்டாளா...?அதனால் இந்த முறை சரவணனோ சேரனோ பலிகடா ஆக்கப்படலாம். இதில் சேரனுக்கே 70% வாய்ப்பு இருக்கு. பார்க்கலாம் எதிர்பாராததை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

நானும் பிக் பாஸ் பார்க்கிறேன் என்ன பேசுகிறார்கள் என்பதே பிடிபடுவதில்லைநீங்கள் பெரிதாய் விமரிசனமே செய்கிறீர்கள் எப்படித்தான் முடிகிறதோ

V.GOPALAKRISHNAN சொன்னது…

Waste of time for viewers and very embarrassing way of dressing by some females makes us to switch off and stopped watching daily and only on Sunday we see to know the elimination and Kamal Hassan talking when mostly all are decently dressed and sitting

ஸ்ரீராம். சொன்னது…

ஆனாலும் உங்களுக்குத் பொறுமை அதிகம் குமார்!!!!