மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 15 ஜூலை, 2019

சினிமா : ஜூன் (மலையாளம்)


Related image
ஜூன்...

ஜூன் சாரா ஜோய்... என்னும் கதைநாயகியின் பெயரில் முதல் பாதியே படத்தின் தலைப்பாய்.

'பிரைடே பிலிம் ஹவுஸ்' தயாரிப்பில் பிப்ரவரி-15, 2019-ல் காதலர் தினத்துக்காய் வெளியான படம் இது. 

என்னைப் பொறுத்தவரை நல்லபடமென ஆஹா... ஓஹோன்னு புகழும் படங்களைப் பார்ப்பதைவிட, யாருமே புகழாமல் கிடக்கும் படங்களையே விரும்பிப் பார்ப்பதுண்டு. இந்த விதி தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே... ஜூன் மலையாளப் படம் என்பதால் அறியாத படமா இருக்கே என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன் என்றாலும் பார்க்கும் முன் எந்தப் படத்தின் விமர்சனத்தையும் வாசிப்பதில்லை. இது மலையாளப் படத்துக்கு மட்டும்...

மலையாளப் படங்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு என்பதால் சென்ற வார விடுமுறை தினத்தில் ஹாஸ்டலில் இருந்து மகளின் முதல் வருகைக்காக மனைவியும் மகனும் மதுரைக்குச் சென்று விட்டதால், அதுவும் அம்மா வீடு செல்லும் மகள்கள் எப்போது பிஸி என்பதால் போனிலும் பேச இயலாத,  பேசினாலும் தேவகோட்டையில் கிடைப்பது போல் அவ்வளவு சிறப்பாக கிடைக்காத நெட்வொர்க்கில் மகளுடன் பேசுவதே முடியாத நிலையில் வெயில் தகிக்கும் மதியத்தில் என்ன செய்யலாம் என வெள்ளியன்று கும்பளங்கி நைட்ஸ், சனியன்று ஜூன் என மலையாளப் படங்களைப் பார்த்தேன்.

எப்போதும் விரும்பிப் பார்க்கும் படங்களாய் மலையாளப் படங்கள் இருக்கக் காரணம் எதார்த்த நடிப்பும் தொய்வில்லாத் திரைக்கதையுமே... அதுதான் கும்பளங்கியிலும் ஜூனிலும்.

கிறிஸ்தவக் குடும்பத்து 'பனாமா' ஜோய் (ஜோஜூ ஜார்ஜ்) மற்றும் மினி ஜோய் (அஸ்வதி மேனன்) மகளான ஜூன் (ரஷிதா விஜயன்) -ஐ சுற்றியே கதை நகர்கிறது. பள்ளிப் பருவத்தில் இருந்து திருமணம் வரை நகரும் கதை சேரனின் ஆட்டோகிராப்பின் பெண் வெர்சன் என்று கூட சொல்லலாம். அப்படித்தான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என நகர்கிறது.

பதினோரம் வகுப்பின் முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் ஜூன் பள்ளிச் சீருடையில் கூட மாடர்ன்னாக செல்ல நினைக்கிறாள். அம்மாவோ பிக்பாஸ் மது மாதிரி கலாச்சாரக் காவல்காரி என்பதால் திட்டி, சாதாரணமாகப் போகச் சொல்கிறாள். 

மழை... குடையில்லாமல் நனையும் மாணவ, மாணவிகள்... அந்த மழையிலும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் மாணவன் நோயல் (ஷர்ஸானோ காலித்) மீதான முதல் பார்வையே ஜூனுக்கு காதலைக் கொடுக்கிறது. அதன்பின் ஒரே வகுப்பில் பல நாயகர்கள் பல நாயகிகளாய்... பதின்ம வயதுக் காதல்... இதைப் பருகாத சினிமாக்கள் இந்திய மொழிகளில் இல்லாதிருத்தல்தான் ஆச்சர்யம். பதின்மத்தில் எப்படிக் காதலிப்பதென பாடம்தானே எடுக்கின்றன இப்போதைய படங்கள்.

Image result for june malayalam movie postershd

பள்ளிக் காதலில் கலையரங்கத்தில் நிகழ்ச்சி நடக்கும் போதே கொடுக்கப்படும் சிறு முத்தம் காதலினைச் சொல்லிச் செல்கிறது, அதன் பின்னான நாட்கள் நகர்வில் காதலும் நகர்கிறது பள்ளி மட்டுமின்றி வீட்டுக்கும் போனின் வழி... அப்பா, அம்மா பார்க்கிறார்களா..? அப்ப போனை எடுக்காமல் இருக்காதே... பேசும் போது கட் பண்ணாதே... சந்தேகம் வரும்... அப்ப பவ் (PAW - Parents are Watching) என்று சொல் புரிந்து கொள்வேன் என படிக்கும் பிள்ளைகளுக்கு புதிய வார்த்தையைக் கத்துக் கொடுக்கிறார்கள். இந்தப் படம் வந்த போது பல வீடுகளில் 'பவ்' என்ற வார்த்தைகள் அடிக்கடி கேட்டிருக்கும்.

 மகள் மீது அதீத பாசம் கொண்ட அப்பா, பதினைந்து வயதுப் பெண்ணுக்கு பீர் ஊற்றிக் கொடுத்துக் குடிக்கச் சொல்கிறார். கிறிஸ்தவக் குடும்பம் என்பதால் ஏற்புடையது என்றாலும் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. இன்றைய சினிமாக்களில் பெண்கள் தண்ணி அடிப்பது என்பது தவறில்லை என்பதாய்த்தான் போதிக்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் பள்ளிக் குழந்தைகள் தண்ணி அடிக்கும் வீடியோக்கள் வாட்ஸப், பேஸ்புக், டுவிட்டர் என வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் பிள்ளைகளை நாம்தான் சூதனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் கூட நாயகியின் அறிமுகம் 'அண்ணே ஒரு பச்சைப் பீர்' என்பதாய்தான் இருக்கிறது.

சினிமாக்கள் மட்டுமல்ல் சமூக வலைத்தளங்கள் கூட எல்லாம் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் நாகர்கோவில் கல்லூரியில் நடக்கும் காமக்களியாட்ட வீடியோ நாகர்கோவில் நண்பருக்கு வந்தது... வெட்ட வெளியில்... நம் தமிழ்ப்பெண்கள்... கல்லூரிப் பெண்கள்... எங்கே போச்சு தமிழ் பொண்ணு... மண்ணு... கலாச்சாரம் எல்லாம். இதையெல்லாம் இனிக் கடந்துதான் நாம் குழந்தைகளைப் பாதுகாப்பாய் வளர்க்க வேண்டும்... இனி வரும் காலங்கள் பெண் பிள்ளைகள் என்றில்லை ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் கூட எல்லாவிதத்திலும் கவனமாய் பிள்ளைகளை பார்த்து வளர்க்க வேண்டும்.

எனக்குன்னு எந்த ஒரு தனித்திறமையும் இல்லை ஆனா நான் நானாத்தான் இருப்பேன் என்று சொல்லும் ஜூனுக்கு பல்லில் போட்டிருக்கும் கம்பி கூட அழகினைக் கெடுப்பதாய்த்தான் தெரிகிறது என்றாலும் அவளிடம் ஒரு தேவதை தெரிகிறாள். அந்தத் தேவதை எதையும் பற்றிக் கவலை கொள்ளாமல் ஜாலியாகத் துள்ளித் திரிகிறாள்.

குடிக்கக் கொடுக்கும் அப்பாவின் செல்லப்பிள்ளை அவள்... அப்பாக்களுக்கு எப்பவுமே பெண் பிள்ளைகள் செல்லம்தானே... இன்று ஹாஸ்டல் போக வேண்டும் என்ற போது மதியம் போனை எடுத்து 'அப்பா' எனும் போதே அழுத மகள் இரவு ஹாஸ்டல் அறைக்குச் சென்ற பின்னும் போனில் அழத்தான் செய்தார்... எனக்குள்ளும் மனக்கலக்கம் மதியம் முதலே... மக அழுதுன்னதும் போனடிச்சிக்கிட்டே இருக்காக... இதே நானாயிருந்த சரி சரி அழாதேன்னு சொல்லிட்டு போனைக் கட் பண்ணியிருப்பாங்கன்னு விஷால் இப்பப் பஞ்சாயத்து... பெண் குழந்தைகள் எப்போதும் அப்பாக்களுககுத் தங்கமீன்களே... எங்க வீட்டில் ரெண்டுமே தங்க மீன் என்றாலும் விஷால் அப்படித்தான் பேசுவான் எல்லாம் ஜாலிக்காகத்தான்.

ஜூன் தன் அப்பாவை நண்பனாகத்தான் பார்ப்பாள்... எல்லாமும் பேசுவாள்... அப்படித்தான் போதையேறிய இரவில் அப்பாவிடமே காதல் பற்றியும் பொதுவாகப் பேசுகிறாள்... அவரோ அது தப்பில்லை என்று சொல்லி ஆனா நான் உனக்கு நான்தான் ராஜகுமாரனைப் பார்த்துக் கட்டி வைப்பேன் என்கிறார். அந்த அன்பில் உடைகிறாள் என்றாலும் காதல் தொடர்கிறது. 

நண்பர்களுடன் அடுத்துச் செல்லவிருக்கும் கல்லூரியைக் காண தனியாய்ச் செல்வதில் ஆரம்பிக்கிறது பிரச்சினை... அம்மா அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்... அப்பா ஒடிந்து போய் அமர்ந்திருந்தாலும் மகளின் அழுகை... இனிமேல் பண்ண மாட்டேம்பா என மனதிலிருந்து வெடித்து வரும் சொல்... இவற்றில் கரைந்து விழுகிறார்... அணைத்துக் கொள்கிறார். அவளும்  என் அப்பா, அம்மாதான் முக்கியமென காதலைக் கரைத்துக் கொள்கிறாள்... அவனும் அதே போல் சொல்லி வெளிநாட்டுக்குப் படிக்கப் போய் விடுகிறான்.

கல்லூரி முடித்து மும்பையில் அவனிருக்கிறான் என அங்கிருக்கும் தோழி மூலம் அறிந்து அப்பாவிடம் வெளியூரில் வேலை பார்க்க அனுமதி வாங்கி அங்கு பறக்கிறாள். அவனைப் பார்க்கிறாள்... மீண்டும் புதுப்பிக்கிறாள் தன் காதலை... பணக்காரக் குடும்பத்தின் ஆணவப் பேச்சு பிக்பாஸ் வனிதாவின் பேச்சாய் வார்த்தைகளை அள்ளித் தெளிக்க, மீண்டும் பிரிவு... வருத்ததுடன் ஊருக்கு வருகிறாள்.

நியூ இயர் இரவு...

பீர்... ஆட்டம்... அடிதடி... போலீஸ் ஸ்டேசனில் அழுது ஆர்ப்பாட்டம்... போலீஸ் இன்ஸ்பெக்டரின் நல்ல உள்ளம் என நீண்டு நகர்கிறது ஏர்ப்போர்ட்டில் இறங்கிய அந்த இரவு. மறுநாள் அவளை அழைத்துச் சென்று பஸ் ஏத்திவிட இன்ஸ்பெக்டர் காட்டும் கான்ஸ்டபிள் ஆனந்த் (அர்ஜூன் அசோகன்), அவளின் பள்ளிக் கல்லூரி நண்பன்...  தன்னை ஒருதலையாக காதலித்தவன் என்பதால் இவனுடன் போகணுமா என்று யோசித்தவள், பின் அவனுடன் பயணம்... அவன் வீட்டில் தங்குதல்... அவனின் அம்மா காட்டும் காதல் சம்பந்தமான பொருட்கள், அவனுடன் பஸ் பயணம், சாப்பாடு, நடை என மீண்டும் ஒரு காதல் பயணம்...

சொந்தத் தொழில் செய்பவள் திருமணம் செய்யாமல் இருப்பது  சரியல்ல என்பதால் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக சரியென்கிறாள்... மாப்பிள்ளையாக வருகிறான் மூன்றாமவன் சன்னி வெய்ன்... அவனுடன் தனித்துப் பேசும் போது அவனின் அன்பில் வீழ்கிறாள். சம்பிரதாயத்துக்காகத்தான் இந்தப் பெண் பார்க்கும் படலம் என்றவள் திருமண வாழ்க்கைக்குத் தயாராகிறாள்.

திருமணத்துக்காக நண்பர்கள் அனைவரும் வருகிறார்கள்... நோயலும் வருகிறான்... ஆனந்தும் வருகிறான்... காதலித்துத் திருமணம் செய்தவர்கள், காதலித்துப் பிரிந்தவர்கள், நட்பில் பிரிந்தவர்கள் என எல்லாருமெ வருகிறார்கள்... அவர்களின் டீச்சரும் வருகிறார். இறுதிக்காட்சி மிகச் சிறப்பு... கண்ணீரை வரவைக்கும் காட்சி... செம திரைக்கதை.

Related image

படத்தை முழுக்க முழுக்க ரஷிதாதான் தூக்கிச் சுமக்கிறார்.... ஜாலியாய்... கோபமாய்... நேசமாய்... என எல்லாமுமாய்க் கலந்து கட்டி ஆடியிருக்கிறார்... வாழ்த்துக்கள் ரஷிதா.

இசையில் கட்டிப் போடுகிறார் இப்தி, அறிமுக இயக்குநர் அகமத் காபீர் சிறப்பான திரைக்கதையை தொய்வில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ஜித்தின் ஒளிப்பதிவு அருமை...

கதையைத் தொய்வில்லாமல் நகர்த்திய லிஜோ பாலின் எடிட்டிங்கும் செம.

ஜூன் பார்த்து ரசிக்கக் கூடிய படம்தான். பள்ளிக்கூட காதல் கூட மிக நேர்த்தியாய் எந்த ஆபாசமும் இன்றி எடுத்துச் செல்லப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

 1. ஜூன் படம் பற்றிய உங்கள் விமர்சனம் நன்று.

  பள்ளியில் காதல், தண்ணி அடிப்பது போன்ற காட்சிகள் இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. அதெல்லாம் தவறில்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் இல்லையா குமார்.

  பாடல்கள் பார்க்க முயல்கிறேன். இசையை ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. பொதுவாகவே மலையாள பாடல்கள் குறிப்பாக மெலடி வகை பிடித்திருக்கிறது. இப்போது கூட இப்படத்திலிருந்து “ஆத்யம் தம்மில்” பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது.

  தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 2. மலையாளப் படங்களில் திரைக்கதை தான் ஹீரோவாக இருக்கும். அப்புறம் அதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருமே இயல்பாக நடிப்பார்கள். அது என்னவோ அவர்களுக்குக் கைவந்த கலை போல!!

  ம்ம்ம் சிறு வயதிலேயே க்ரஷ் அதைக் காதல் என்று நினைப்பது, தண்ணி அடிப்பது அப்பாமகளுக்கு ஊற்றிக் கொடுப்பது எல்லாம் கொஞ்சம் உறுத்துகிறது.

  மலையாளப் பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கேட்கிறேன்

  உங்கல் விமர்சனம் வழக்கம் போல் அருமை குமார்.

  கீதா

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...