மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 12 ஏப்ரல், 2017

13.'என்னைப் பற்றி நான்' - தமிழ்வாசி பிரகாஷ்

ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் வலைப் பதிவர் மதுரைக்கார நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மதுரையில் வலைப்பதிவர் மாநாடு நடக்கும் போது சீனா ஐயா, தனபாலன் அண்ணா உள்ளிட்ட இன்னும் பலருடன் இணைந்து முனைப்புடன் செயலாற்றியவர். மேலும் சீனா ஐயாவுடன் வலைச்சரத்தை மிகச் சிறப்பாக நடத்தியவர்.

வலைச்சரம் என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது... வாரம் ஒரு ஆசிரியர் என எத்தனை வலை ஆசிரியர்களை எழுத வைத்து அழகு பார்த்தது இந்த வலைச்சரம்...  எனக்கெல்லாம் மூன்று முறை வாய்ப்புக் கொடுத்தார்கள். தற்போது வலைச்சரம் என்ன காரணத்தாலோ நிறுத்தப்பட்டுவிட்டது. இடையில் ஒருமுறை தமிழ்வாசியுடன் இது குறித்துப் பேசினேன். எடுத்து நடத்துவோம் நண்பா என்றார். அதன் பின் இருவருமே அதை மறந்தாச்சு.... விரைவில் வலைச்சரத்தை புத்துணர்வோடு மீண்டும் வலம் வர வைக்க எல்லாரும் முயற்சிக்க வேண்டும். 

சரி நண்பர் தமிழ்வாசி பற்றி இன்னும் கொஞ்சமாய்... மதுரைக்காரர்தான்... அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு (ஊருக்குப் போகும் போது) இருந்தும் இன்னும் சந்திக்காத நண்பர்... முகநூலில்... வாட்ஸ் அப்பில்... போனில்... என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் இன்னும் முகம் பார்க்காத நட்பாய்...

சாண்டில்யனின் கதைகளைப் பற்றி சிலாகித்து எழுதக் காரணமாய் அமைந்தவர் இவர். ஆம்... கல்கியில் பொன்னியின் செல்வனை வாசிக்க வைத்து அதன் பின் சாண்டில்யனுக்குள் இறக்கிவிட்ட நண்பர்... எதை வாசித்தாலும் அது குறித்து முகநூல் அரட்டையில் என்னிடம் சொல்லி வாசிக்க வைப்பவர்.

தனது வலைத்தளமான !தமிழ்வாசி!-யில் தொழில் நுட்பப் பதிவுகள் அதிகம் எழுதியவர்... முகநூல், டுவிட்டரில் தங்கி விட்டதாலும் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டதாலும் தற்போது வலைத்தளத்தில் எழுதுவதில்லை என்றாலும் அவ்வப்போது தொழில் நுட்ப பதிவுகள், சினிமா விமர்சனம் என வலைப்பூவை வாடமல்தான் வைத்திருக்கிறார்.

இனி அவரைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்....


ணக்கம் நண்பர்களே..

நான் பிரகாஷ் குமார்,

பதிவுலகிற்காக தமிழ்வாசி பிரகாஷ்..

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பு மற்றும் இயந்திரவியல் பட்டயப்படிப்பு முடித்து, கோவை மற்றும் சென்னையில் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றி, தற்போது மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

தமிழ்வாசி என்னும் வலைப்பூவை கடந்த 2010-இல் ஆரம்பித்து பல இடுகைகள் எழுதி, தற்போது எழுத்து குறைந்து விட்டது. இந்தச் சுழலில் நண்பர் நித்யா குமார் என்னைப் பற்றிஎழும் தலைப்பில் ஒரு சில வரிகள் கேட்டார். ஆகையால் சிறு அதிர்ச்சியோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பூவில் ஆரம்ப காலத்தில் என்னவோ ஏதோ எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், வலைப்பூவை வடிவமைக்கும் விஷயங்களில் ஆர்வம் வந்து அது தொடர்பாக இருந்த சில கட்டுரைகள் மற்றும் ஆங்கில வலைப்பூக்களையும் பார்த்து, அறிந்து எனது வலைப்பூவில் சோதித்து, பின்னர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், வலைப்பூவை எவ்வாறு  உருவாக்குவது, எவ்வாறு மாற்றங்களை செய்வது என்பதை தொடராக எழுதியுள்ளேன். அதோடு அவ்வப்போது நான் அறியும் சில தொழில்நுட்ப விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, தொழில்நுட்ப பதிவுக்ளையும் எழுதியுள்ளேன். மேலும் சில நண்பர்களின் வலைப்பூ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வும், வலைப்பூ டெம்ப்ளேட் அமைத்தும் தருவது உண்டு. 

தற்சமயம் சில தொழில்நுட்பங்களை  யூடூப் வீடியோவாக பதிவேற்றியும் வருகிறேன்... அதோடு முகநூலிலும் சில மொக்கைகள் எழுதி வருகிறேன். எனது எழுத்து பற்றி சொல்வதென்றால் இவ்ளோதான்...

அதே சமயம் வாசிப்பில் ஆர்வம் வந்துள்ளது. அதுவும் சரித்திர நவீனங்களில் தான் ஆர்வம். அதற்கு காரணம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினமே காரணம். அவர் எழுதிய எல்லா சரித்திர நாவல்களும் வாசித்து முடித்து, என் பார்வையை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய நவீனங்கள் பக்கம் திருப்பி கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வாசித்து முடித்தாயிற்று. இன்னும் நிறைய சரித்திர நாவல்கள் கைவசம் இருக்கு. அதெல்லாம் வாசித்து முடிப்பதற்குள்  எப்படியும் அடுத்த வருடம் பிறந்து விடும். வாசித்த நாவல்கள் பற்றி முகநூலில் பதிவேற்றி நண்பர்களுடன் விவாதிப்பதும் உண்டு.

ஆங், சொல்ல மறந்துட்டேனே... எனக்கு வரலாற்று நாவல்களைக் கொடுத்து உதவியவர்கள், வாத்தியார் பால கணெஷ் மற்றும் மெக்னேஷ் திருமுருகன்.. இன்னும் வாத்தியாரிடம் பெற வேண்டிய நாவல்கள் நிரம்ப உள்ளன.  நண்பர்களின் பரிந்துரையின் பேரில் அவ்வப்போது இணையத்தில் ஆங்கில திரைப்படங்கள் (தமிழ் மொழி மாற்றத்தில்) பார்ப்பதும் உண்டு. 

ம்ம். அப்படியே பொழுது ஓடுது... 

இந்த இணையமும், வலைப்பூவும் எனக்கு நிறைய நண்பர்களைக் கொடுத்துள்ளது. இன்னமும் கொடுத்துக் கொண்டுள்ளது. 

உங்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த குமார் அவர்களுக்கு நன்றி...

இன்னும் பலரது என்னைப் பற்றிபதிவுகளை எதிர்பார்த்து உங்களுடன் நானும்....


நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

ண்பரைப் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள்... இவரைப் பற்றி இன்னும் விரிவாய் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன்... ரொம்பச் சுருக்கமாச் சொல்லிட்டார்... தனது பணிகளுக்கு இடையே கேட்டதும் எழுதிக் கொடுத்த பிரகாஷ்க்கு நன்றி.

தொடர்ந்து எழுதி அனுப்பிக் கொண்டிருக்கும்... எழுத இருக்கும்... வாசிக்கும்... வாசித்து வலை ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

இந்த வாரம் இந்தப் பகுதியை அலங்கரித்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

அடுத்த வாரம் மற்றுமொரு வலை ஆசிரியர் தொடர்வார்....
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இரத்தினச்சுருக்கம் நண்பரே

G.M Balasubramaniam சொன்னது…

மதுரைக்கு சில ஆண்டுகள் முன்பு சென்றபோது நண்பர் சீனா ரமணி மதுரை சரவணன் வெங்கட் முதலியவர்கள் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் டைம்ஸுக்கு வந்து சந்தித்தனர் அப்போது சற்றும் எதிர்பாராமல் தமிழ்வாசியும் வந்திருந்தார் பின்னர் மதுரை வலைப் பதிவர் விழாவிலும் சந்தித்து இருக்கிறேன் மென்மையான மனிதர் இன்னும் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...

Angel சொன்னது…

இந்த வாரம் பிரகாஷா ..வாழ்த்துக்கள் .முகப்புத்தகம் வலைச்சரம் மூலம் நட்பானவர் ...
பகிர்வுக்கு நன்றிகள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மதுரையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்பு வெற்றி பெற
அயரா பாடு பட்டவர்
வலைப் பதிவர் மாநாடே நடத்தியவர்,
எழுத்தைக் குறைத்துக் கொண்டதுதான் வியப்பாக இருக்கிறது
அவ்வப்போது சில பதிவுகளாவத எழுத வேண்டும் என்பதே
நண்பருக்கு எனது அன்பு வேண்டுகோளாகும்

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் பிரகாஷ்.
சீனா சார், தருமி சார், பிரகாஷ், மதுரை சரவணன் மற்றும் சில பதிவர்களை பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களை நான் ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பில் பார்த்து உரையாடிய நினைவுகளை எண்ணிப்பாரக்கிறேன்.

நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் வலைப்பதிவின் வழில பல வலைநுட்பங்களை நான் கண்டு என் வலையில் முயற்சித்ததுண்டு.

சசிக்குமார், தமிழ்நெஞ்சம், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரை நான் தொழில்நுட்ப பதிவர்கள் என்று என் மனதில் பதிவு செய்துள்ளேன். முகநூல், டிவைட்டர், வாட்சாப் ஆகிய சமூகத்தளங்களின் வருகையால் வலைப்பதிவுகள் பின்னடைவைச் சந்தித்து வரும் இக்காலகட்டங்களில் தமிழ்வாசி பிரகாஷ் போன்ற நண்பர்கள் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு பதிவாவது இடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஸ்ரீராம். சொன்னது…

மதுரைக்காரர் என்பதாலேயே ஒரு பாசம் வருகிறது.

Yarlpavanan சொன்னது…

அருமையான அறிமுகம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துகள். பிரகாஷ் பற்றி அறிய முடிந்தது....(கீதா...நான் ஒருமுறை பாலகணேஷ் அவர்களின் வீட்டில் நேரில் சந்தித்துள்ளேன்....) ...நன்றி குமார்