மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல் ராணி

ரபிக் கடலில் கொள்ளையரின் அட்டூழியத்தை ஒழித்த வரலாற்று நிகழ்வை சாண்டில்யன் அவர்கள் 'கடல் ராணி' ஆக்கித் தந்திருக்கிறார். பெரும்பாலும் அவரின் புனைவுகள் எல்லாமே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து நகர்த்தப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். வரலாற்று உண்மையைக் கையில் எடுப்பவர்கள் முழுக்க முழுக்க வரலாற்றைச் சொன்னாலும் அதிக வாசகர்களை இழுப்பது சிரமம்... அதுவும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதும் போது அவர்களின் விற்பனையைப் பெருக்கும் விதமாக, வாசகர்களை ஈர்க்கும் உக்தி தொடர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டும் என்பதைத்தான் பத்திரிக்கை ஆசிரியர் விரும்புவார் என்பதால் இவரின் கதைகளில் வரலாறு ஊறுகாயாக வைக்கப்பட்டு அதிலிருந்து கற்பனை, நாயகிகளின் வர்ணனைகளுடன் பக்கம் பக்கமாய் விரியும். 

புதினங்கள் அதிகம் கற்பனை பேசுவது வரலாற்றின் உண்மையை உடைத்து ஒரு பொய்ப்பிம்பத்தை நம் கண் முன்னே காட்டிவிடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இது வரலாற்றை முடமாக்கும் செயல் என்றாலும் இப்படியான ஒரு வரலாற்று நிகழ்வு நடந்திருக்கிறதே என்று அறிவது வருத்தத்திலும் கொஞ்சம் சந்தோஷமே..   வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் சிவாஜி ஞாபகத்தில் வந்தாலும் வெள்ளையரை எதிர்த்த கட்டப்பொம்மனையும் அறிய முடிந்தது அல்லவா..?.  எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்களை எழுதியதால்தான் கொஞ்சம் வரலாற்றையும் நம்மால் அறிய முடிந்தது...  என்ற உண்மையும் புலப்படுகிறது. இல்லையேல் நம்மில் பலர் பல வரலாறுகளை அறியாமலே இருந்திருப்போம் அல்லவா...?

கடல் ராணிக்கான முன்னுரையிலேயே இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் நூற்றுக்கு நூறு சரித்திரத்தில் நடந்தவை என்றும் கதாபாத்திரங்கள் கூட தான் சிருஷ்டித்த கடல்ராணி, சாரு, ஆனந்த் தவிர்த்து இந்த சரித்திரம் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களே என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் இதைக் குறித்த தீவிர தேடுதலில் எப்பேர்ப்பட்ட பரம்பரையில் பாரதம் வந்திருக்கிறது. எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக்கடலில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிந்து பிரமித்துப் போனேன் என்றும் சிவாஜி மகாராஜாவால் உருவாக்கப்பட்ட அற்புதமான கடல் சூழ் கோட்டை சிந்து துர்க்கம், இதை நிர்மாணிக்கும் போது சத்ரபதி சிவாஜி அவர்கள் மற்ற கூலியாட்களுடன் இணைந்து தானும் மண்ணும் கல்லும் சுமந்ததை அறிந்து வியந்ததையும் நம் வரலாற்றில் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன என்று சிந்திக்கும் போது இத்தனையும் சாதித்த சமுதாயம் இன்றைக்கு இருக்கும் நிலை குறித்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற பாரதியின் தீர்க்க தரிசன வாக்கியம் எத்தனை உண்மையானது என்பது புலனாகிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

Image result for கடல் ராணி

சிந்து துர்க்கம் மற்றும் பாண்டவர் கோட்டின் ராணியாக இருக்கிறாள் கடல் கொள்ளைக்காரியான கடல் ராணி (ரத்னா). அவளைக் கொல்லத் துடிக்கும் பலரில் ஆங்கில கொள்ளைக்கார குழுவும் ஒன்று. கடல் ராணி கடலில் நீந்துவதில் அலாதி பிரியம் கொண்டவள். மலைப்பாறையின் மறைவுக்குப் பின்னே ஒரு சரிவில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் தன் உடைகளை வைத்து விட்டு நீந்தி மகிழ்வாள். அப்படி ஒருநாள் நீந்தி மகிழ்ந்து உடை மாற்றச் செல்லும்  போது ஒரு தூங்கமூஞ்சியைச் சந்திக்கிறாள். அவனுடன் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போது ராணியைக் கடத்த வரும் பிரிட்டிஷ் கேப்டன் ஸ்டாண்டனும் லெப்டினென்ட் சுமித்தும் அந்த தூங்குமூஞ்சி வாலிபனின் புயல்வேக துப்பாக்கிக் குண்டுகளின் தாக்குதலால் தங்கள் துப்பாக்கிகள் பறக்க சரணடைகிறார்கள். அப்போது ஸ்டாண்டனின் கையில் காயம் ஏற்படுகிறது. ராணியைக் காப்பாற்ற துப்பாக்கியால் சுட்ட தூங்க மூஞ்சி மிகச் சிறந்த வீரன் என்பதை ராணி உணர்கிறாள்... அவன் வேறு யாருமல்ல... ஒரு காலத்தில் கடல் கொள்ளையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து, பின்னர் பேஷ்வா பாலாஜிக்கு உதவ அரபிக்கடலில் பல போர்களை நிகழ்த்திய கனோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதி ருத்ராஜி ஆனந்தின் தம்பியும்... அவரின் மகன் துலாஜி ஆங்க்ரேயின் நெருங்கிய நண்பனுமான இந்திரஜித் ஆனந்த். 

ஆங்கிலேயர்களுடன் ஆனந்தும் ராணியுமாக பாண்டவர் கோட் நோக்கி பயணிக்க, அவர்களை கடலில் மறிக்கிறான் மிகச் சிறந்த கடல் வீரன் என்று அறியப்பட்ட எட்வர்ட் இங்க்லேண்ட், அவனையும் தன் சாதூரியத்தால் மயக்கிவிடுகிறான் ஆனந்த், கரைக்குச் சென்றதும் இங்க்லேண்டை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு கூர்மையான அறிவுடையவனும் கடல் கொள்ளையில் பிரசித்தி பெற்றவனுமான, அங்கு மரக்கால் பொறுத்தப்பட்ட ஸில்வர்  இருக்கிறான். ஆனந்த் ஸில்வரை காப்பாற்றியவன் என்பதால் ஸில்வருக்கு அவன் மீது பாசம். ஸில்வரிடம் ஒரு கிளி இருக்கிறது. அது தூதும் செல்லும் சில நேரங்களில் அபாயத்தையும் கொடுக்கும். ஸில்வரோ ஆனந்த் தங்களுக்கு உதவுவான் என்று இங்க்லேண்டிடம் சொல்ல அவன் அதில் ஏதோ சதியிருப்பதாக சந்தேகிக்கிறான்.

இங்க்லேண்ட் 380 பீரங்கிகளைத் தாங்கிய மிகப் பிரபலமான ஆங்கிலேயக் கப்பலான காஸண்ட்ராவில் வந்திருப்பதாக ஸில்வரிடம் சொல்கிறான். சிந்து துவர்கத்துக்குள் எந்தக் கப்பலுக்கும் அனுமதியில்லை என்பதால் சிந்து துவர்க்கத்துக்கு வெளியே நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறான். அதன் பின்னான நிகழ்வுகள், ஆனந்தின் நண்பன் துலாஜி ஆங்க்ரேயின் வருகை, கடற் கொள்ளையர்கள் ஆனந்த் மீது கொள்ளும் நம்பிக்கை ஆரம்பத்தில் தன் மகளைக் காதலிப்பதுடன் விதவிதமாக திட்டம் தீட்டும் ஆனந்தைப் பிடிக்காத ராணியின் தந்தை சங்கர் பந்த் மனம் மாறி உதவி செய்ய, ஆங்கில கடற்கொள்ளையரை அடியோடு ஒழிக்க திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துகிறான் ஆனந்த்.

கடற்கொள்ளையரை ஒழிக்கிறேன் என ஒருமுறை தோல்வியடைந்தாலும் மீண்டும் கங்கணம் கட்டி வரும் ஆங்கிலேயன் மாக்ரே,  நாணயங்கள் மற்றும் நகைகளுடன் வருவதாய் ஆசைகாட்டி கொள்ளையடிப்பதில் மூன்றில் ஒரு பங்கு எங்களுக்கு மற்றது உங்களுக்கு என்று ஸில்வர், இங்க்லேண்ட் மற்றும் டெய்லரிடம் சொல்கிறான் ஆனந்த். இது கொள்ளையரை மொத்தமாக அழிக்க உருவாக்கும் திட்டம் என்பதையும் இதில் தாங்களும் அழிக்கப்படுவோம் என்பதையும் ஸில்வர் உணர்ந்தாலும் மற்றவர்கள் உணரவில்லை. அவன் பேச்சையும் யாரும் கேட்பதாய் இல்லை. 

மாக்ரேயை ஒழிக்க அவர்கள் எடுக்கும் முயற்சியில் வேறு கப்பல்கள் நுழையாத சிந்து துர்க்கத்துக்குள் காஸண்ட்ராவை நிறுத்த ராணி சம்மதிக்கிறாள். அதன் பின்னான சிந்து துர்க்கம், பாண்டவர் கோட்டில் நடக்கும் நிகழ்வுகள், சிவாஜி சிலைக்கு பூஜை, ஆனந்தின் திட்டங்கள், கடல்ராணியுடனான ஆனந்த்தின் காதல், துலாஜி ஆனந்தின் பலே திட்டங்கள் என கதை பரபரவென நகர்கிறது.

சிந்து துர்க்கத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்தி, யாரும் அறியாமல் அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த கனோஜி ஆங்க்ரேயின் பிரசித்தி பெற்ற கடல் கோட்டையான விஜய துர்க்கத்துக்கு வந்த ஆனந்த், மலை அடிவாரம் செல்லாமல் மலையுச்சியில் இருக்கும் குடிசைக்குச் செல்கிறான். அங்கு இருக்கிறாள் வேவுக்காரியும் பேஷ்வாவின் மருமகளுமான சாரு. சாருக்கு ஆனந்த் மீது காதல்... ஆனால் ஆனந்தின் அணைப்பில் ஆனந்தமில்லாததை அறிந்து அவன் வேறு யாரிடமோ மனதை பறிகொடுத்துவிட்டான் என்பதை உணர்ந்து சண்டையிடுகிறாள். அப்போது அங்கு வரும் பேஷ்வா, இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்கிறார். குடிபோதையில் கனோஜியும் வருகிறார்... பேஷ்வா வரும் நாளில் அதிகாலை குடிசை வாசலில் மதுக்குப்பியை வைப்பது நானே என்று சொல்லும் கனோஜி,  மூவரையும் விருந்துக்கு அழைக்கிறார்.

விருந்துக்குச் செல்லுமிடத்தில் மாக்ரேயின் சந்திப்பு, கனோஜியின் திட்டத்தால் சாரு கடல்ராணியாக மாற, கடற்கொள்ளையரை ஒழிக்கும் பேச்சு நடக்கிறது. கடல் ராணியின் திடீர் வருகையால் மாக்ரே தவிர மற்றவர்கள் திகைக்க, கனோஜியின் சமயோகிதத்தாலும்  நிலமையைப் புரிந்து கொண்ட ரத்னாவின் மதியாலும் அவள் சாருவாக மாறுகிறாள். கடல் கொள்ளையரை ஒழிக்க மாக்ரேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். மறுநாள் அதில் ராணி கையொப்பம் இடுகிறாள். 

ஒருவனுக்கு ஒருத்தியே மிகப்பெரிய பிரச்சினை... அப்படியிருக்க இருவர் என்றால்..? சாருவும் ராணியும் அடிக்கடி அடிதடியில் இறங்க, ஆனந்த் சிக்கித் தவிக்கிறான். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சிந்து துர்க்கம் வருகிறான். மீண்டும் ஆலோசனை.... எப்படி மாக்ரேயை எதிர்ப்பதென திட்டங்கள்.. ஆனந்த் தூங்குமூஞ்சியாய் அமர்ந்து திட்டம் தீட்டி மெல்ல மெல்ல காய் நகர்த்துகிறான் நண்பன் துலாஜியின் துணையுடன்... 

மால்வானீஸ் வீரர்கள் மற்றும் கொங்காணி மாலுமிகள் உதவியுடன் ஸித்திக் கப்பலைக் கொள்ளை இட்டதுடன் தான் நடத்தி வந்த கப்பலை கடல் ராணிக்கு பரிசளிப்பதற்காக அதன் பக்கப் பலகையிலும் பாய்மரச் சீலையிலும் 'கடல் ராணி' என எழுதச் செய்து ராணிக்கு கொடுக்க வரும் கடல் போரில் வீரனும் பிரஞ்சுக்காரனுமான ஆலிவர் லா பூஷே எனப்படும் லிவாஸியரும் ஆனந்துடன் இணைகிறான். 

ஐந்து கப்பலுடன் காஸண்ட்ராவை மீட்க வருகிறேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாக்ரே, கவர்னர் பூனைச் சந்தித்து தன் திட்டத்தை விளக்கி பத்துக் கப்பலுடன் செல்வதாகச் சொல்லி, முதல் நாள் ஐந்து கப்பலுடன் தான் கிளம்புவதாகவும் மற்ற ஐந்து கப்பல்கள் அடுத்த நாள் கிளம்பி வரட்டும் என்றும் சொல்கிறான். காஸண்ட்ரா, கடல்ராணி மற்றும் கடல் ராணியின் ஐந்து சிறிய கப்பல்களும் போருக்கு தயாராய் நிற்கின்றன.

தேவ்காட் (சில இடங்களில் தேவகோட்டை என்று எழுதியிருக்கிறார்... அட நம்மூரு) கோட்டையில் ஒரு இரவு தங்கி, அங்கு வேடன் விடுதியில் தங்கியிருக்கும் துலாஜியைச் சந்தித்து தமது அடுத்த திட்டத்தை விளக்குகிறான் ஆனந்த். அங்கு துப்பறிய வந்த ஸ்டாண்டனும் சுமித்தும் இவர்களின் திட்டத்தை அறிய விடாமல் திசை மாற்றப்படுகிறார்கள். மாக்ரேயை சந்திக்கும் இடமாக பூர்ணகட் முடிவாக, அதன் துறைமுகத்துக்குள் காஸண்ட்ராவை நிற்க வைத்து, அதற்கு சற்றே தள்ளி கடல் ராணி  மற்றும் மற்ற ஐந்து கப்பல்களும் நிறுத்தப்பட, காஸண்ட்ரா சிறைப்பறவையாய் மாறியது.  அதை ஸில்வர் எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் கேட்கவில்லை.

அடுத்த நாள் போர்... கடல் போர்.... வரலாற்றையே மாற்றிய கடல் போர்... கடல் ராணியை ரத்னா வழி நடத்த, சாரு சுக்கான் பிடிக்க. மாக்ரேயை மட்டுமின்றி காஸண்ட்ராவையும் தாக்க ஆரம்பித்தான் ஆனந்த். 380 பீரங்கிகளைக் கொண்ட காஸண்ட்ரா, தனது அடிப்பகுதியில் பிடித்திருந்த பாசத்தின் காரணமாக வேகத்தை இழந்திருந்ததே அதற்கு எமனானது. 

காஸண்ட்ராவை ஆனந்த தாக்க ஆரம்பித்ததால் போர் திசை மாறியதா..? ஸில்வர், இங்க்லேண்ட், ஸ்டாண்ட் மற்றும் சுமித் நிலை என்ன..? மாக்ரே திட்டம் வென்றதா..? லா பூஷே ஆனந்துக்கு எந்தளவுக்கு உதவினார்..? கடல் கொள்ளையர்கள் மொத்தமாக அழிந்தார்களா..? ரத்னா, சாரு இருவரின் சண்டைக்கு முடிவு வந்ததா..? ஆனந்த் காதல் ராணிகளை மணந்தானா..? என்பதை எல்லாம் இங்கு சொன்னால் கதையை வாசிக்கும் போது சுவராஸ்யம் இருக்காது... எனவே மேலே இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை 'கடல் ராணி'யை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பின்னுரையில் அரபிக்கடல் போருக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். கடல் ராணி கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. இம்மாதிரிக் கதைகளை படித்து இதுதான் வரலாறோ என்று மருகும் மனிதரும் உண்டு

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு பகிர்வு. நானும் இப்போது ஒரு சாண்டில்யனின் புதினம் படித்துக் கொண்டிருக்கிறேன்! :)

  பதிலளிநீக்கு
 3. வாசித்ததுண்டு....அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமார்..

  பதிலளிநீக்கு
 4. அருமையான புத்தகம்
  படித்திருக்கிறேன் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. நல்ல விமர்சனம்... ரசித்தேன் மீண்டும்...

  பதிலளிநீக்கு
 6. சாண்டியல்யனின் புதினங்கள் ஹாட் கேக்ஸ்போல விற்றுத் தீர்ந்த நாட்களில் அவற்றை என் மாமாவின் நூலகத்தில் படித்த நினைவை தந்த பதிவு
  தொடருங்கள்
  தம +

  பதிலளிநீக்கு
 7. மீண்டும் ஒரு நல்ல கதைச் சுருக்கம் தந்துள்ளீர்கள். கடல்ராணி என்ற இந்த நாவல் என் மனதில் இருந்தே மறைந்துவிட்டிருந்தது. தங்களால் மீண்டும் படிக்க முடிந்தது. இதுதான் உங்களின் அறிய பணி. தொடருங்கள். உங்கள்மூலம் நாள்தோறும் புதிய வாசகர்கள் தமிழுலகிற்குக் கிடைப்பார்கள்.

  -இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
 8. படித்திருக்கிறேன். உங்கள் ப்திவு மூலமாக இன்று மறுபடியும் படிக்கும் வாய்ப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அருமையான அறிமுகம்
  வாசிகத் தூண்டும் பதிவு

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...