மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 22 ஏப்ரல், 2017சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)

Related image

வர் பாண்டி...

தனுஷ் இயக்குநராய் அவதாரம் எடுத்திருக்கும் படம்.

ஒருவனுக்கு ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருந்தா எதைத் தொட்டாலும் ஜெயம்தான் என்பார்கள்... அப்படி ஒன்பதும் உச்சம் பெற்றவன் இவன்... இவன் தொட்டதெல்லாம் ஜெயம்தான்... அது நடிகைகளின் விவகார நிகழ்வில் கூட... தொலைக்காட்சி தொகுப்பாளினி விவகாரத்துக்கு கூட மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு இணையத்தில் மீம்ஸ் பறக்க விட்டதை நாமெல்லாம் வாசித்து சிரித்தோம்தானே...

அந்த மகாபிரபுவோட தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதுக்கு... நாம பவர் பாண்டி எப்படி இருக்காருன்னு பார்ப்போம். பவர் பாண்டியாய் வாழ்ந்திருக்கும் ராஜ்கிரண்... மிகச் சிறந்த நடிகர்... நாம் அவரை தொடை தெரிய வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஆட்டெலும்பைக் கடித்து இழுத்த நம்ம கிராமத்தான் மாயாண்டியாக, ராசய்யாவாகத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.  பத்துப் பேரை பறந்து பறந்து அடிப்போர் மத்தியில் நூறு பேரைக் கூட அசால்டாக எலும்பை ஒடிக்கும் மனிதராக இவரை மட்டுமே பார்க்க முடிந்தது. இளையராஜா என்னும் இசையோடு 'என் ராசாவின் மனசிலே'யில் கதை நாயகனாய் மலர்ந்தவர் தியேட்டருக்கு வருகிறார் என வகுப்புக்கு மட்டம் அடித்துவிட்டு லெட்சுமி தியேட்டரில் போய் பார்த்து வந்தோம். குயில் பாட்டு அப்படி இழுத்தது.

கதாநாயகனாக வலம் வந்த ராஜ்கிரண், நந்தா, சண்டைக்கோழி என தன் பாதையை மாற்றிப் பயணித்த போது சேரனின் தவமாய் தவமிருந்து நம் கண் முன்னே அச்சகம் நடத்தும் அப்பனை அப்பட்டமாகக் காட்டியது. மிக அருமையான நடிப்பு... அப்படி ஒரு நடிப்பை இளவரசு முத்துக்கு முத்தாக படத்தில் கொடுத்திருப்பார். இந்தக் கதாபாத்திரத்தை இவருக்குக் கொடுத்தால்தான் சரியாகும் என்ற தனுஷின் முடிவு பாராட்டத்தக்கது. ராஜ்கிரணின் தேர்வு பவர் பாண்டியை பவர்புல் பாண்டியாக மாற்றியிருக்கிறது என்பதே உண்மை.

தொடை தெரிய வேஷ்டி கட்டிய ராஜ்கிரணே நம் மனசுக்குள் இருக்க, சீன்ஸ் பேண்ட், டீ சர்ட், பேச்சில் கலந்து வரும் ஆங்கிலம், புல்லட் என வித்தியாசமான ஒரு மனிதரை திரையில் பார்க்க நேர்கிறது. தங்கள் பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர்... சிலர் விதிவிலக்கு...  நேற்று நண்பர் ஒருவர் சொன்னார் வீட்டில் தெண்டச்சோறு எனப் பெயரை எடுத்த அவருக்கும் அவர் தம்பிக்குமான காலை நேர தோசையில் அவருக்கும் சாதாரணமாகவும் தம்பிக்கு முட்டை போடப்பட்ட தோசையும் அதுவும் இவருக்குத் தெரியாமல் மறைத்துக் கொடுத்ததையும் சொல்லி ஆதங்கப்பட்டாலும் நான் என்ன அவனுக்கு கொடுக்க வேண்டான்னா சொன்னேன்... அப்படியெல்லாம் செய்தவர்கள்தான்... இருப்பினும் என் பெற்றோர் விட்டுக் கொடுக்க முடியலை என்றார்... பெற்றதில் சிலதை ஒதுக்கியும் சிலதை அணைத்தும் வாழக்கூடிய இது போன்ற சில பெற்றோரையும் பார்க்க முடியும். எது எப்படியோ தன் தோள் மீது தூக்கி அமர வைத்து உலகம் காட்டி குழந்தைகளுக்காகவே வாழும் பெற்றோர் ஒரு காலத்தில் தனக்கான ஒவ்வொன்றுக்கும் தன் பிள்ளையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. இது அவ்வப்போது நிகழ்வதல்ல... வாழையடி வாழைதான்...

தான் சுதந்திரமாக... மகனின் கையை எதிர்பார்க்காமல் வாழ நினைக்கும் அப்பாக்களை அப்படியே வாழ விடுங்கள் என்று சொல்கிறார் இயக்குநர் தனுஷ்... அப்பா மீது பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சொற்களால் அவ்வப்போது சுட்டாலும் மனசுக்குள் நேசிக்கும் மகன்... போனில் பேசும் போது ஏதாவது சொன்னால் 'இவரு வேற' என்று சொல்லும் மூணாப்பு படிக்கும் விஷால், நான் அப்பா பிள்ளை என்று சொல்லும் போது 'இவரு வேற' அன்பில் கரைந்துதானே போய்விடுகிறது. ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற எண்ணத்தின் விளைவாய்... சமூக விரோதிகளுக்கு துணை போகும் போலீஸ் வீட்டுக்கு வர, அது அடிக்கடி நிகழும் நிகழ்வாக மாறும் போது கோபத்தில் கத்திவிட, தண்ணியைப் போட்டுவிட்டு ரகளை செய்து வீட்டை விட்டு ஓடிபோகிறார் தனது புல்லட்டில் புல்லட் பாண்டியாக.

மனசுக்குள் இருக்கும் முதல் காதலியை சிலர் கிளறிவிட, அவளைத் தேடிப் புறப்பட்டு அவளைச் சந்தித்து காதலை மீண்டும் தொடர, கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் அபத்தமாகிவிடும் கதையை, மகள் அம்மாவின் முன்னாள் காதலை, இப்ப நீ சிங்கிள்தானே என ஏற்பது ஏற்ப்புடையதா என்ற யோசனைக்கு இடமில்லாமல் மிக அழகாய் நகர்த்தி முடித்திருக்கிறார்கள். பிரசன்னா நல்ல நடிகன்... பயன்படுத்திக் கொள்வோர் குறைவு... அப்படி பயன்படுத்தப்படும் பட்சத்தில் நிறைவாய் செய்து தனித்து நிற்பார். இதிலும் அப்படியே பாசத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் கண்டிப்பாய் இருப்பதும் அப்பா காணாமல் போனபின் தவிப்பதும் என கலக்கல். மனைவியாய் சாயா சிங்... கச்சிதமான கதாபாத்திரம். பேரன் பேத்திகளாய் இரண்டு அழகான வாண்டூஸ்... பக்கத்து வீட்டு வெட்டியாய் வந்து ராஜ்கிரணின் நண்பனாய் ரின்சன்... அளவான நடிப்பு.

காதலியைத் தேடி அதுவும் முன்னாள் காதலியைத் தேடி செல்வது சினிமாவில் மட்டுமே முடியும்... நிஜத்தில் நடப்பது அரிது... அதுவும் முகநூலில் உடனே பேரை வைத்து ஆளைப் பிடிப்பதும் முதல் முகநூல் அரட்டையில் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் சந்திப்பது எல்லாம் சினிமாத்தனம்... படம் முழுக நிறைந்திருக்கும் ராஜ்கிரணால் மட்டுமே இதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

சின்ன வயசு... ப்ளாஸ் பேக் போகணுமே... அப்படிப் போனால் பவர் பாண்டியாக தனுஷ்... நடிக்க... அதுவும் கெத்தாக நடிக்க... சொல்லியா கொடுக்க வேண்டும்.. கொஞ்ச நேரமே என்றாலும் இயக்குநர் தனுஷை நடிகர் தனுஷ் வெற்றி கொண்டு விடுகிறார். வாயும் கையும் சும்மா இருந்தால் இன்னும் சிறக்கலாம். யார் பிள்ளை என்ற வழக்கு ஒரு பக்கம் இருந்து தொலைத்தாலும் இயக்குநரின் வளர்ப்பாய்... ஆம் வளர்ப்பாய்த்தான் இருக்க வேண்டும்... அந்த ஏழைப் பெற்றோர் நேற்று வழக்கு தள்ளுபடி ஆனபின் கூட எங்கள் மகன்தான் என நிரூபிப்போம் என்று சொல்கிறார்கள். எனக்குள்ளும் ஒரு கேள்வி உண்டு... கிராமத்தான் கூட ஒரு குழந்தைகளை ஸ்டுடியோவில் கொண்டு போய் போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி வைத்திருக்கும் கால கட்டம் அது என்ற போதிலும் ஒரு இயக்குநர் தன் பிள்ளைகளை படமெடுத்திருக்க மாட்டாரா என்ன... ஒரு போட்டோ கூட இல்லையா.. என்னமோ போ ராகவா... கஸ்தூரிக்கே வெளிச்சம்.

ராஜ்கிரணின் காதலியாக சின்ன வயசில் மடோனா... வயசான பின் ரேவதி... டயானா தனுஷோடு கொஞ்சுகிறார்... ரேவதிக்கான தேர்வாய் மடோனா கனகச்சிதம்... இப்பவும் சொல்வேன்... எப்பவும் சொல்வேன் மடோனா அழகி. ரேவதி சொல்லவே வேண்டாம்... தன் முன்னாளை மகள் ஏற்றுக் கொள்ளச் சொன்னவுடன் எழுந்து உள்ளே செல்லும் முன் சின்னதாய் ஒரு ஸ்டெப் போடுவாரே... வாவ்... மண்வாசனை, மௌனராகம் ரேவதி இன்னும் அழகாய்... அருமையான நடிப்பு. படத்துக்கு இசை பெரும் பலம்.

நடிகராய்... பாடலாசிரியராய்... பாடகராய்... தயாரிப்பாளராய் பரிணமித்த தனுஷை இயக்குநராய் தமிழ் திரைக்கு வாரிக் கொடுத்திருக்கும் படம் பவர் பாண்டி. எந்த ஒரு கமர்ஷியல் திணிப்பும் இல்லாது சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக வசனங்கள் எல்லாம் அருமையாய் ஒரு கதை சமைத்திருக்கிறார். பவர் பாண்டி பார்க்க வேண்டிய பாண்டி. ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிற படம் இது.

பவர் பாண்டி... ப.பாண்டி அப்படின்னு ஆயிருக்கு நான் வேகமா பாப்பாண்டின்னு வாசிச்சி அப்படி ஒரு படமான்னு யோசிக்க அப்புறம்தான் பவர் பாண்டியோன்னு நினைச்சேன். பவர் பாண்டியில டிடியும் இருக்கார். பவர் பாண்டி பார்ட்டிதானே சுசியை பரபரப்பை கிளப்ப வச்சிச்சு... ஆமா இப்ப சுசி எங்கே..? சரி விடுங்க... எது எப்படியோ நல்லதொரு படத்தைக் கொடுத்த பவர் பாண்டி குழுவுக்கு வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. விவரிப்பு அருமை எனக்கு செலவு மிச்சம் நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. படம் பார்க்கவேண்டும் என்றும் தோன்றுகிறது. கதை விவரங்களை பார்த்தால் அவார்டு பிலிம் போல பொறுமையை சோதிக்குமோ என்கிற பயமும் வருகிறது!

  பதிலளிநீக்கு
 3. அருமையான கண்ணோட்டம்
  நானும்
  படத்தைப் பார்க்கிறேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல செரிவான கருத்தாழம் மிகுந்த விர்சனம்!

  பதிலளிநீக்கு
 5. நானும் பார்த்தேன் ..எப்பவாது சில செலக்டட் படங்களை மகளுடன் பார்ப்பேன் அந்த வரிசையில் பாண்டி சூப்பர் :)
  என் பொண்ணுக்கு பிரசன்னா ராஜ்கிரணை குற்றம் சொல்லி திட்டும் காட்சிகளில் ரொம்ப கோவம் பிரசன்னா மேலே :)
  நல்ல படம்

  பதிலளிநீக்கு
 6. அருமையான விமரிசனம். நாங்கள் குடும்பத்துடன் நேற்று தான் பவர் பாண்டி படம் தியேட்டருக்கு சென்று பார்த்தோம். அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 7. ரேவதிக்காக பார்க்க நினைத்திருக்கும் படம்! :)

  உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. இப்போது தமிழகத்தில் இருப்பதால் பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...