மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஏப்ரல், 2017

15. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்பவர் நாமெல்லாம் அறிந்த, ஆன்மீக பதிவுகளில் முத்திரை பதிக்கும் அன்பின் ஐயா தஞ்சையம்பதி திருமிகு செல்வராஜூ அவர்கள். ஐயாவைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்... என்னிடம் அவ்வளவு இருக்கு அவரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும்... அபுதாபியில் சந்தித்த போது அவர் காட்டிய நேசம் என்றும் மறக்க முடியாது.

ஆன்மீகப் பதிவுகளை மிக விரிவாக, வரலாற்று விளக்கங்களுடன் அழகான படங்களுடன் வாசிக்கக் கொடுப்பவர். ஆன்மீகப் பதிவு மற்றுமின்றி எல்லா வகையான பதிவுகளிலும் சிக்ஸர் அடிப்பவர்.

ஒரு வலைப்பதிவரின் பதிவு பிடித்திருந்தால் அதற்கென தனிப்பதிவு எழுதுபவர். அப்படி எழுதக் கிடைத்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். ஆம் என்னோட நேசம் சுமந்த வானம்பாடி சிறுகதைக்கு தனிப்பதிவே எழுதினார்.

அபுதாபியில் சந்திக்கும் போது பல விஷயங்கள் ஐயா பேச... இடையிடையே கில்லர் அண்ணாவும் பேச... நான் எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஐயா சில பதிவுகளை இருவரோ மூவரோ பேசுவது போல் உரையாடல் நடையில் எழுதுவார். மிக அருமையாக இருக்கும்.

என்னோட சிறுகதைகள் ஐயாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இனி ஐயா உரையாடல் நடையில் சொல்வதை வாசிப்போமா...


நானும் உங்களுடன்..
***

ண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது
சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா
தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம்
குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத்தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது..

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா
பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி..
நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ... இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி...

இருக்கட்டுமே.. அதுல.. சினிமாவும் பார்க்கிறீங்க தானே!.. அதுல என்ன
குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாரே!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு
நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்...

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க
ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே
செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே
பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு
என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம்
இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!..

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி..
நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே
தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..

அப்பா அரசு ஊழியர் ஆனதால் வேறு சில ஊர்களில் வளர்ச்சியும் படிப்பும்!..

நீங்க என்ன படிச்சிருக்கீங்க?... அதுக்காக சத்தியம் தான் நான் படிச்ச
புத்தகம்!.. அப்படி..ன்னு எல்லாம் சொல்லக் கூடாது!...

நீ கேட்டதும் தான் நினைச்சுப் பார்க்கிறேன்!.. அதைத் தான் இது வரைக்கும்
படிச்சிருக்கேன்..ன்னு!..

அம்மா.. அவங்க தானே முதல்குரு!.. அந்தக் காலத்தில ஆனா.. ஆவன்னா.. அட்டை..
ந்னு இருக்கும்.. அதுல தான் குழந்தைகளுக்கு முதல்ல படிப்பு ஆரம்பமாகும்..

அட்டைக்கு ஒருபக்கம் உயிர் எழுத்துக்களும் மறுபக்கம் ஔவையார்
சொன்னாங்களே.. ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் - இதுங்கள்...ல சில வரிகளும்
இருக்கும்!..

ஆனா.. ஆவன்னா.. அட்டையை வெச்சிக்கிட்டு அம்மா சொல்லிக் கொடுத்த அதெல்லாம்
இன்னும் கூடவே வந்துகிட்டு இருக்கு!..

அறம் செய விரும்பு.. ஆறுவது சினம்!.. இயல்வது கரவேல்.. ஈவது விலக்கேல்!..
- இதெல்லாம் நீங்க கடைபிடிச்சிருக்கீங்களா?..

இந்த சினம் மட்டும் தான்.. ஆற மாட்டேங்குது!.. மகாகவி சொன்ன மாதிரி -
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா!.. - ன்னு
ஆகிடுது... மற்றதெல்லாம் இயன்ற வரைக்கும்...

அப்போ நீங்க தவறே செய்ததில்லையா?..

இல்லை... இளமையில கடல் கடந்து போன நாடு சிங்கப்பூர்.. அங்கே கண்டதே
காட்சி.. கொண்டதே கோலம்..ன்னு நடந்தவங்களுக்கு மத்தியில கற்பூரமா இருந்து
நாடு திரும்பியிருக்கின்றேன்...

அங்கே எப்படியும் இருந்திருக்கலாம்.. கேட்பார் என்று எவரும் இல்லை..
ஆனாலும் ஒரு நாளும் அறம் தவறியதே இல்லை... இன்னமும் அப்படித் தான்!..

அப்போ.. பொய்!..

மனமறிந்து சொன்னதில்லை..
ஆனாலும், சில உண்மைகளைச் சொல்லாமல் இருந்திருக்கிறேன்!...

ஏன்?..

ஒவ்வொரு திரைக்கும் மறுபக்கம் உண்டு தானே!.. தவிரவும் எல்லா உண்மைகளும்
எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியதில்லை!..

பொய் சொல்லத் தெரியாமல் உண்மையைச் சொன்னதால் குடும்பத்திற்குள் பிளவு
உண்டாகிப் போனது.. இன்று வரைக்கும் சரியாகவில்லை.. அது ஒன்றுதான் மிகப்
பெரிய வருத்தம்..

வருத்தப்படாதீங்க அண்ணே!.. எல்லாம் சரியாகி விடும்.. ஆனா இதெல்லாம் எப்படி!..

வாரியார் ஸ்வாமி, குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி... ன்னு..

இவங்கள்.. லாம் யாரு..ண்ணே?...

மக்களை நெறிப்படுத்தி வழிகாட்டிய பெரியவங்க...
அவங்க வாழ்ந்த காலத்தில வாழ்ந்தோம்...ங்கறது பெருமை..
அவங்க சொன்னதைக் கேட்டு நடந்தோம்...ங்கறது மகிழ்ச்சி...

அவங்கள்ளாம் என்ன சொன்னாங்க?..

அத்தனை திருக்குறள்..ல ஒன்றைக் கூட கடைப்பிடிக்க முடியாதா?.. - ன்னு கேட்டாங்க!..

மகாகவியும் சொல்றாரு..
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா!.. - அப்படின்னு!..

அதெல்லாம் மனசுல அப்படியே பசுமையா இருக்கு...

தவறு ஏதும் செய்யாம நாலு அடி எடுத்து வெச்சிட்டா..
அதுவே நல்ல வழி ஆகிடுது.. பிறகு அதில நாம போக வேண்டியதில்லை..
அந்த வழியே வழிகாட்டி ஆகி நம்மை அழைச்சிக்கிட்டு போயிடுது!...

இதச் சொன்னவங்க யாரு அண்ணே?..

தெரியாது... உங்கூட பேசிக்கிட்டு இருக்கறப்ப.. அதுவா நினைவுக்கு வருது...
யாராவது பெரியவங்க சொல்லியிருப்பாங்க!..

இதெல்லாம் சொல்றீங்க.. நீங்க படிச்சதைச் சொல்லவே இல்லையே?..

நான் படிச்சது புகுமுக வகுப்பு வரைக்கும் தான்!..

அப்படின்னா?..

இன்றைக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு...
அன்றைக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு..

அவ்வளவு தானா?.. அதுக்கு மேல ஏன் படிக்கலை?...

குடும்ப சூழ்நிலை.. அதற்கு மேல் இயலவில்லை... அப்பா மருத்துவப் பணியில்
இடைநிலை ஊழியர்... என்னுடன் இரண்டு தங்கைகள்.. இரண்டு தம்பியர்.. அன்புச்
செல்வங்களாக மாடு ஆடு கோழிகள்...

ஏன்..ண்ணே.. நீங்க படிச்ச படிப்புக்கு ஏதாவது ஒரு வேலையில சேர்ந்திருக்க
முடியாதா!..

ஆய்வக உதவியாளார் வேலைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில நேர்முகம்..
போனேனே!.. ஆனா, சுற்றியிருந்த அரசியல்வாதிகள் அது அதுக்கும் ஒரு விலையை
வெச்சிருந்தாங்க.. அன்பளிப்பு..ன்னு பேரு அதுக்கு..

நம்ம வசதிக்கு அன்பளிப்பு சீர்வரிசை அதெல்லாம் கொடுக்க முடியலை..
அடுத்தடுத்த ஆண்டுகள்..லயும் அப்படித்தான்... ஆனா அதிகமா இருந்தது!..

அப்புறம் என்ன..ண்ணே ஆச்சு!..

நான் முதல்..ல வேலைக்குப் போன  இடம் - மது கஷாய கடை!..
என்னை வந்து கூப்பிட்டாங்க.. நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. - ந்னு!..

மூனு மாசத்துல உரிமையாளர்களுக்குள்ள சண்டை.. மதுக்கடை கோவிந்தா!..

அதுக்கப்புறம் குடந்தையில் கிளினிக் ஒன்றில் வேலை.. அதுவும் ஆறு மாசந்தான்...

அதன் பிறகு தான் ஒரு பிடிப்பு ஏற்பட்டது...  தாமரை திரு. வை. முத்தையா
பிள்ளை - கிராம கர்ணம் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன்...

கிராம கணக்கு வழக்குகளைக் கையாளுவதற்கு தேர்வுகள் எழுதினேன்.. நில அளவை
பயிற்சியும் பத்திரங்கள் நகல் எழுத அனுமதியும் பெற்றேன்...

அப்போது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம்.. பணி நியமனம் கூடி வந்த
வேலையில் ஏதோ பிரச்னை.. அரசு முடிவெடுத்து கிராம கர்ணம் மற்றும்
பட்டாமணியர் வேலையையே ஒழித்துக் கட்டிவிட்டது...

தமிழகம் முழுவதற்கும் கிராம நிர்வாக அலுவலர் என்ற புதிய வேலையை உருவாக்கி
அதற்கொரு தேர்வு வைத்தார்கள்... அதிலும் நான் தேர்வு ஆனேன்.. திரும்பவும்
பணி நியமனம் வழங்குவதற்கு அன்பளிப்பு என்று கை நீண்டது...

மனம் வெறுத்துப் போனது.. கொடுக்க விரும்பாமல் வெளியேறினேன்..

அப்படி இப்படி என்று மாதங்கள் ஓடின...

அந்த வேளையில் தான் - சிங்கப்பூருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது..
அங்கே கப்பல் பட்டறையில் (Keppel ShipYard, Tuas, Singapore) நான்கு ஆண்டுகள்..

தங்கைக்கு நல்லபடியாக கல்யாணம்.. தம்பிகளும் மற்றொரு தங்கையும்
மேற்கொண்டு படித்தனர்...

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் மங்கல மேடை எதிர்கொண்டது..

இனிய இல்லறம்.. அன்பின் மகள்... மகன்...

அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்புக்காக பயிற்சி பெற்றபோது -
என்னதான் கோழி வளர்த்தாலும் பெரும் பண்ணைக்காரன் வைப்பது தான் விலை..
அதனால் நீங்களே கறிக் கடை வைத்துவிடுங்கள் - என்றார்கள்..

இது ஏதடா வம்பு!.. - என்று, அந்த எண்ணத்தை அப்போதே கை கழுவியாயிற்று..

அந்த சமயத்தில் தான் குவைத்தின் மீது ஈராக் படையெடுத்தது.. வளைகுடா
வானில் போர் மேகங்கள்..

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா பிற நாடுகளுடன் கூட்டணி போட்டுக் கொண்டு
ஈராக்கை விரட்டியடித்தது...

மீண்டும் குவைத் உருவாக்கப்பட்ட போது பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு வேலை
கிடைச்சது.. அவங்கள்.. ல நானும் ஒருவன்..

Catering Co., ஒன்றின் ஒப்பந்தத்தில் Waiter வேலை.. மருத்துவமனையில்
என்று அழைத்து வந்து ராணுவ பாசறைக்கு அனுப்புனாங்க!..

அடுத்த இரண்டு ஆண்டுகளில் -
இப்ராஹீம் கலீல் (லெபனான்) அப்துல்லா முகம்மது (கேரளம்) ன்னு நல்ல
மனசுக்காரங்களால - சரக்கறை பொறுப்பாளர்..ன்னு (Store Keeper) வேலை உயர்வு
ஆனது...

வாழ்வின் பொன்னான நாட்கள் அவை...

தொடர்ந்த வருஷங்களில் புதுசா வர்றவங்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையும்
சேர்ந்து கொண்டது..

கூடுதலாக சம்பள உயர்வு கேட்டப்போ புறக்கணிப்பு ஆயிடுச்சி..

நீங்க முன்னால சொன்னீங்களே அவங்க எல்லாம் உதவி செய்யலையா?..

அவங்க எல்லாம் வேற வேற இடங்களுக்குப் போய்ட்டாங்க..

புறக்கணிப்பு.. அலட்சியம்.. பிடிக்கலை.. அங்கிருந்து திரும்பி விட்டேன்..

தஞ்சைக்கு வந்ததும் கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் - ன்னு,
(DTP Center) பணியைத் தொடங்கினேன்...

குவைத்தில் Store Keeper ஆக வேலை செய்தபோது கணக்கு விவரங்களை கணினியில்
பதிவு செய்வதற்குத் தெரிந்திருந்தாலும்

முறையாக தட்டச்சு தெரியாது... இருந்தும் ஒருமணி நேரத்தில் செந்தமிழ்
எழுத்துருவைக் கற்றுக் கொண்டேன்...

தற்குறிப்பு தொடங்கி மாணவர் தம் ஆய்வேடுகள் வரை - நிறைவான பணி...

அப்போது தான் கரந்தை ஜெயக்குமார், அன்பின் ஹரிணி ஆகியோருடன் நட்பு மலர்ந்தது...

இருந்தாலும், தொடர்ந்த மின்வெட்டு வாழ்வைக் கெடுத்தது.. கடனும் சேர்ந்து கொண்டது...

என் முன்னோர் செய்த தவத்தால் மீண்டும் குவைத் அழைத்தது...
அதே Catering நிறுவனத்தில் மேற்பார்வையாளராக!...

இங்கு வந்த சில வருஷங்களில் மகளுக்குத் திருமணம்...
தற்போது அபுதாபியில் இனிய வாழ்க்கை..
மகன் MBA., முடித்து விட்டான்...

மகளையும் மருமகனையும் காண்பதற்காக அபுதாபிக்கு வந்தபோது தான்
அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களையும் குமார் அவர்களையும் சந்தித்த மகிழ்வு..

தம்பி.. என்ன தூக்கமா?..

என்ன..ண்ணே!.. இவ்வளவு தூரம் சொல்றீங்க.. தூங்குவேனா?.. மலைப்பா இருக்கு!...

என்னுடைய தந்தை சொல்லி - நான் கேட்காததாக ஒன்று மட்டும்!.

என்ன...ண்ணே.. அது!...

கல்லூரி முடித்ததும் தட்டச்சு பழகச் சொன்னார்.. அதில் விருப்பம் இல்லை..
அதைக் கேட்கவில்லை.. ஆனால், DTP Center வைத்த பிறகு ஆறு ஆண்டுகள் அதில்
தான் வாழ்க்கை...

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!.. என்று சும்மாவா சொன்னார்கள்!..

குவைத்தில் இருந்து தான் - தஞ்சையம்பதி மலர்ந்தது.. எத்தனை எத்தனை அன்பு
முகங்கள்.. ஆதரவுக் கரங்கள்.. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க
வேண்டும்...

உங்க வானத்தில வண்ணக் கிளிகள் ஏதும் பறக்கலையா!?..

அந்தக் காலத்தில் குடும்பத்தில் தலைப்பிள்ளைக்கு..
ஆணோ பெண்ணோ - அவர்களுக்கு..ன்னு சில கடமைகள்.. கட்டுப்பாடுகள்..

அதெல்லாம் மனசில நின்னதால - கிளியோ குருவியோ - ஒன்னும்  கூடு கட்டவில்லை...

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் -
எனக்கென்ற தர்மத்தை விட்டு விலகியதில்லை - என்றே நினைக்கின்றேன்...
அதனால் தான் - காலம் எனக்கொரு பெரிய பணியைத் தந்தது..

என்ன..ண்ணே.. அது!...

பழைமையான சிவாலயம் ஒன்றினை நல்ல உள்ளம் கொண்டோர் புதுப்பித்த வேளையில் -
மிக முக்கியமான பணி என்னை வந்தடைந்தது...

என் வாழ்வில் நான் பெற்ற பெரும்பேறு அது.. நல்லவிதமாக நிறைவேறியது..
கோயிலும் கும்பாபிஷேகம் கண்டு - மக்களின் வழிபாட்டில் உள்ளது...

இருந்தாலும் - ஒரு ஆசை.. இன்னும் நிறைய எழுதணும்..
நல்ல விஷயங்களைச் சொல்லணும்.. மக்களுக்குப் போய்ச் சேரணும்!..

அதுக்கெல்லாம் ஒரு குறைவும் இருக்காது.. பாருங்களேன்!..

சரி.. வா.. காபி குடிக்கலாம்!..

அப்போ... கதை அவ்வளவு தானா!..

கதையா?...

இல்ல..ண்ணே!.. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன்.. நீங்க இதுவரைக்கும்
சொன்னதெல்லாம் நல்லா இருக்கு.. மறக்காம குமாருக்கு அனுப்பிடுங்க!..

அப்படியா.. நீ சொன்னா சரிதான்!..

சரி.. வாங்க காபி குடிக்கலாம்!..

ஆமாம்!.. நானும் வேலைக்குப் போகணும்.. நேரமாச்சு!..
* * *

அன்பு நண்பர்களுக்கு..

இத்தகைய வாய்ப்பினை உருவாக்கித் தந்த திரு. குமார் அவர்களுக்கு நன்றி..

எனக்கு முன்பாக - தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும்
திரு துளசிதரன் அவர்கள் தளமும்
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் -
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை...

அவர்களுடைய பதிவுகளைப் படித்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் செல்லும்போது மனதில் உறுத்தலாக இருக்கும்...

எனினும் -
இப்படியான அறிமுகம்..
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் ..
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

தாய் தந்தை தம்பி தங்கையர்க்காக வாழ்ந்த வாழ்வு ஆனந்தம்..
மனைவி மக்கள் - எல்லாருக்குமாக வாழும் வாழ்வும் ஆனந்தம்!..

இந்நாளில் பேத்தி வர்ஷிதாவின் மழலையும் ஆனந்தம்..
வரும் நாட்களில் இனிய சந்ததியினரின் கொஞ்சு மொழியும் ஆனந்தம் தான்!..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..

என்றென்றும் அன்புடன்,
துரை செல்வராஜூ...

****

யாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது கொஞ்சம் வேலை அதிகம் எழுதி அனுப்புகிறேன் என்றார்... பின்னர் உடல் நலமின்மை காரணமாக எழுத முடியாத சூழல் என்ற நிலையிலும் நலமடைந்த பின்னர் இந்த வாரத்தில் எழுதி அனுப்புகிறேன் என்ற மின்னஞ்சல்... அதன் பின் எழுதிட்டேன் பாருங்கள் என்ற மின்னஞ்சல்...  நான் கேட்டதற்கு எழுதி அனுப்பிய ஐயாவுக்கு நன்றி. இந்தத் தொடரை தொடர வைக்கும் அனைவருக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

37 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

இதுக்கெனத் தானே இந்நேரமா.. நானும் காத்திருந்தேன்!..

வலையுலகில் என்னையும் முன்னிறுத்தும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

விழிகள் நனைகின்றன..வேறொரு வார்த்தைகளும் சொல்லுதற்கு இல்லை..

நலம் வாழ்க!..

KILLERGEE Devakottai சொன்னது…

பிறகு கணினியில் வருகிறேன் ஜி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்னைப் பற்றி நான் வரிசையில் உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பிரதர் திரு. துரை செல்வராஜு அவர்கள் ஓர் நல்ல மனிதர். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர். அவரைப் பற்றி அவர் வெளிப்படையாகச் சொல்லியுள்ளது அனைத்தும் அருமையாக உள்ளன.

நியாயமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளூரில் மதிப்பில்லாமல் போய் விடுகிறது.

பல வெளிநாடுகளுக்குச் சென்று, கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்து, வேதனைகளை சாதனைகளாக ஆக்கி, வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் அன்பு வாழ்த்துகள்.

அவரைப்பற்றி அறியத்தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அன்பின் ஜி
தொடக்கம் முதல் திறந்த புத்தகமாய் தங்களது வாழ்க்கை விடயங்களை தங்களுக்கே உரிய நடையில் உரையாடல் வழியில் பகிர்ந்த விதம் அருமை.

இடையில் தம்பி தூக்கமா ?

உண்மையிலேயே தாலாட்டு போலவே இருக்கும் தங்களது பேச்சு அன்று நண்பர் சே. குமார் அவர்கள் சற்று கண் அயர்ந்த்தை கவனித்தேன்,
தங்களுக்கே இப்படி எழுத வரும் மிகவும் இரசித்தேன் ஜி

அபுதாபி மதினா ஸாயித்தில் சந்தித்த காட்சிகள் இன்றும் நிழலாடியது.

உடன் நிலையில் கவனம் கொள்ளுங்கள் ஜி
வாழ்க நலம் மீண்டும் சந்திப்போம் இறையருளால்....

G.M Balasubramaniam சொன்னது…

ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு பாடம் கற்பிக்கும் திரு துரைராஜு பற்றிய செய்திகள் அறியக் கிடைத்தமைக்கு நன்றி

கோமதி அரசு சொன்னது…

கலந்துரையாடல் மூலமாய் உங்களை பற்றி சொன்ன விதம் அருமை.
குடும்பத்திற்காக வாழ்வது ஆனந்தமே!
பேத்தியின் மழலை ஆனந்தமே!
இனி வரும் காலமும் மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள்புரிவார்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஜி..

அபுதாபி நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.. மறக்கவும் கூடுமோ?..

உடல் நிலை எதுவும் குறைவில்லை.. சாதாரண காய்ச்சல் தான்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வெங்கட்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் அண்ணா..

தங்களது கருத்துரையினால் மனம் நெகிழ்கின்றது..
தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மனமார்ந்த நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஐயா..

தாங்கள் சொல்வது உண்மைதான்..
ஒவ்வொருவருடைய வாழ்வும் ஏதோ ஒருவகையில் பாடமாகத் தான் இருக்கின்றது..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்புடையீர்..

தாங்கள் சொல்வதைப் போல -
இனிவரும் மழலையரின் கொஞ்சு மொழி தான் ஆனந்தம்..
அது தான் பேரானந்தம்..

தங்கள் வருகையும் கருத்துரையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி.

vv9994013539@gmail.com சொன்னது…

vaalthukal aya.

Angel சொன்னது…

ஆஹா மிக அருமையாக தன்னைப்பற்றி மதிப்பிற்குரிய துரை செல்வராஜூ ஐயா அவர்கள் கூறியுள்ளார்கள் ..
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குமாருக்கு ..ஐயா அவர்களை பற்றி விரிவாக உரையாட வைத்ததற்கு ..

ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் ..தங்களைப்போன்றோர் எங்களுக்கு சிறந்த முன்னுதாரணம் ..

Angel சொன்னது…

ஐயா அவர்களுக்கு சினம் கோபம் வருமா :) ஆச்சர்யமாக இருக்கு .உண்மைதான் ஐயா பாதகம் செய்வோரை கண்டால் சினம் கொள்வதில் தவறில்லை ..பைபிளில் கூட கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருப்பாயாகன்னு சொல்லியிருக்கு

Angel சொன்னது…

ஐயா அவர்கள் எனது மற்றும் கிரேஸ் எழுதிய விழிப்புணர்வு பதிவுகளை பற்றி கூட எழுதியிருக்கார் :)
உண்மை பற்றிய தங்களது கூற்று 100 சதவீதம் உண்மை ஐயா .பொய் தான் சொல்லக்கூடாது உண்மையை சொல்லாதிருத்தல் தவிர்த்தல் நலமே

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Angel சொன்னது…

நம்பிக்கை போன்று நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது என்று மிக அருமையாக சொல்லியிருக்கீங்க ..தங்களைப்பற்றி நாங்கள் இன்னும் அறியத்தந்ததற்கு மிக்க நன்றி ஐயா தங்கள் உடல் நலனையும் கவனியுங்கள் ..ஒரு நாளில் 14 மணிநேரம் வேலை செய்வது பலகீனத்தை உண்டாக்கும்

ஸ்ரீராம். சொன்னது…

கோவில் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது சிறப்பு. எதிர்பார்ப்பில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான வாழ்க்கை என்று தெரிகிறது. சிறப்பாக விவரங்களைத் தொகுத்திருக்கிறீர்கள்.

அறியத் தந்தமைக்கு நன்றி குமார்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்புடையீர்..

தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் சகோதரி..

தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்புடையீர்..

இப்படியோர் அன்பின் நெகிழ்ச்சி..

பாதகம் செய்வோரைக் கண்டு தான் கோபம் எல்லாம்..
பைபிள் போன்ற நீதி நூல்கள் எல்லாம் மனிதருக்கு காட்டும் நல்வழி கோபம் தவிர்த்திடுங்கள் என்பது தானே..

வள்ளுவப் பெருந்தகையும் அறிவுறுத்துகின்றாரே..

எனது கோபம் எல்லாம் சில விநாடிகள் தான்..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் சகோதரி..

பொய்யைச் சொல்லி அதனால் வரும் பலன்கள் எத்தனை நாளைக்கு?..

தங்கள் இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நாகேந்திர பாரதி..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் சகோதரி..

மீண்டும் ஒரு கருத்துரையை வழங்கியதில் மகிழ்ச்சி..

பிப்ரவரியில் இருந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மார்ச் கடைசி வாரத்தில் எழுதியது தான் - இந்தப் பதிவு.. அப்போது குவைத்தில் கடுங்குளிர்.. சற்றே காய்ச்சல்..

மற்றபடிக்கு நான் நலமே.. 14 மணி நேர வேலை கூட Covering Duty தான்.. இப்போது இல்லை.. வெள்ளிக்கிழமை மட்டும் Double Shift...

இப்படியெல்லாம் அன்பின் ஆலோசனைகளுக்கு என்ன தவம் செய்தேனோ!..

மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஸ்ரீராம்..

நானும் இப்போது தான் கவனிக்கின்றேன்..

>> எதிர்பார்ப்பில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் <<

எழுத்துக்களைக் கொண்டு எப்படி கணித்தீர்கள்.. ஆச்சர்யம்..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

Avargal Unmaigal சொன்னது…

பின்னுடங்களின் மூலம் அறிந்த எனக்கு இந்த பதிவின் மூலம்தான் பதிவர் பற்றிய விபரங்கள் அறிய முடிந்தது. உழைத்து முன்னேறிய வாழ்க்கையில் செட்டில் ஆகிய பதிவருக்கு வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நம்பிக்கையினையும்,நன்னெறியினையும் தன் இரு கண்களாய் போற்றுப் பாதுகாத்து,வாழ்வில் வெற்றி நடைபோடும், தஞ்சையம்பதி அவர்கள் போற்றுதலுக்கு உரியவர், நம் வாழ்த்துதலுக்கு உரியவர்
போற்றுவோம் வாழ்த்துவோம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...

இங்கு அனைவரின் கருத்துக்களுக்கும் ஐயா செல்வராஜூ அவர்கள் நன்றியுடன் விரிவாய் கருத்துப் பகிர்ந்து வருகிறார். எனவே நான் கருத்துச் சொன்ன, சொல்ல இருக்கிற அனைவருக்கும் மொத்தமாக நன்றியைச் சொல்லி விடுகிறேன்...

கருத்துக்கு ரொம்ப நன்றி.... அனைவருக்கும்... :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

....வணக்கம் செல்வராஜு ஐயா...உங்களின் வாழ்க்கை பிரமிப்பைத் தருகிறது. எத்தனை கஷ்டங்கள்....உழைத்து முன்னேறி.....சிறந்த உதாரணம்....உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்கள் தமிழும், பதிவு எழுதும் நடையும், சொல்லும் விதமும் கண்டும் வியந்து தமிழில் சொக்கியதுண்டு. ...ஆன்மீகப் பதிவுகளுடன், விழிப்புணர்வும், இயற்கையையும் கலந்து கட்டி இணைத்து எழுதும் உங்கள் திறன் வியக்க வைக்கிறது....உங்கள் பதிவுகள் சொல்லிவிடும் உங்கள் இயல்பைப் பற்றி. உங்களுக்கு கோபம்!!??? ஆச்சரியமாக இருக்கிறது!!

எங்கள் பதிவு கூட ஐயா அவர்கள் குறிப்பிட்டு பதிவும் எழுதிய நினைவு.

அமைதியும், அன்பும் எந்தவிரஹ எதிர்பார்ப்புமின்றி. வாழும் வாழ்க்கையும் தெரிகிறது...வாழ்க வளமுடன்.....வாழ்த்துகள்.குமார் உங்களுக்கும் நன்றி....

துரை செல்வராஜூ சொன்னது…

அன்புடையீர்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நண்ப..
தங்களது வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்..
இனியதொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.. நல்வாழ்த்துகள்..

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் துளசிதரன்..
உண்மையில் கண்கள் கலங்குகின்றன.. குற்றம் உண்டு என்றால் சிறு பொழுதில் தோன்றும் கோபம் தான்.. அதெல்லாம் நிறையவே மாறி விட்டது..

தங்களது அன்பும் ஆதரவும் இருக்கையில் ஒரு குறையும் இல்லை..

தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

இராய செல்லப்பா சொன்னது…

துரை செல்வராசு அவர்களின் பதிவுகள் அன்பையும் ஆன்மநேயத்தையும் வளர்க்கும் ஆன்மீகப் பதிவுகளாக இருப்பவை. அப்படி இருப்பதற்குக் காரணம் இருக்கும் என்று நினைத்தேன். இப்போது புரிந்துவிட்டது. வாழ்க்கை அவருக்கு அதற்கான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. இல்லையென்றால் உலகம் சுற்றிய மற்ற பதிவர்கள் சிலரைப் போல சாதிவெறி, இனவெறி, சினிமாப் பற்று, வெற்று அரட்டை இவற்றில் தம் பதிவுநேரத்தை அவர் செலவழித்திருக்கக் கூடும். காலம் எல்லாத் துயரங்களையும் மாற்றவல்லது. முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பது காலத்தின் மறுக்க முடியாத நீதி. அந்த நீதி வழி வாழ்ந்திடும் ஒரு நல்ல உள்ளம் நமது துரை செல்வராஜூ அவர்கள் என்பதை உணரும்போது அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவதன்றி வேறொன்று அறியேன் பராபரமே!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஐயா..

எங்கெங்கிருந்தெல்லாமோ நிறை அன்பின் உள்ளங்கள் ஒன்று கூடி வாழ்த்திப் பேசும்போது செய்வதொன்று அறியேன்.. சொல்வதற்கு வார்த்தை ஒன்றறியேன்..

மீண்டும் மீண்டும் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பண்படுத்திக் கொள்ளவும் ஆயிற்று..

எத்தனை எத்தனையோ இடைஞ்சல்கள்.. இடையூறுகள்..

அத்தனையையும் கடந்து வந்தது இதற்காகத் தானோ!..

பெரியோர்களாகிய தங்களின் வாழ்த்துகளுக்குத் தலைவணங்குவதோடு
நெஞ்சார்ந்த நன்றிகளை பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்..

வாழ்க நலம்!..

ஞா கலையரசி சொன்னது…

துரை சார் வாழ்வில் இத்தனை மேடு பள்ளங்கள் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். வறுமையிலும் செம்மையான வாழ்வு வாழ்ந்த அவரைப் பாராட்டுகிறேன்.
வழக்கம் போல் உரையாடலின் மூலம் வாழ்க்கையை விவரித்த அவருக்குப் பாராட்டும், பகிர்வுக்கு நன்றியும்.