மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)

முந்தைய பகுதிகளை வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5

*********
சுபஸ்ரீ ஓடிவந்த வேகத்தில் அபியின் தோள் பிடித்து கண்ணனைப் பார்த்ததும் “என்னங்க நீங்க... அவன்தான் கிண்டல் பண்றான்னா... அதுக்காக கோவிச்சிக்கிட்டு...”

“அலோ... அவரு எப்பவுந்தான் கிண்டல் பண்ணுவார்... அவர் பண்றச்சே எல்லாம் பொறுத்துண்டுதான் இருக்கோம்... அதுக்காக முன்னப்பின்ன தெரியாதவாவை வச்சிண்டு கிண்டல் செய்யலாமோ...?”

“இல்ல... எங்ககிட்ட நீங்க ஜாலியா பேசிக்கிட்டு இருந்தீங்க...? திடீர்ன்னு கோபம் வந்துச்சா அதான் கேட்டேன்...”

“வீட்டுக்கு வந்த மனுசாக்கிட்ட எங்க பாட்டி மாதிரி பேசச் சொல்றீங்களா? அவருக்கு எனக்குந்தான் மேரேஜ்ன்னு வீட்ல பேசி வச்சிருக்கா...? அதுக்காக எப்பவும் கேலி பண்ணிட்டு இருந்தா... இப்ப இருக்கிற மாதிரித்தானே மேரேஜ்க்கு அப்புறமும் இருக்கச் சொல்லும்... அப்ப எங்களுக்குள்ள வீணாவுல பிரச்சினை வராதா...? ஏன் டைவர்ஸ் வரைக்கும் கூட போகலாம்தானே...”

“எதுக்குங்க டைவர்ஸ் அது இதுன்னு... சாரதி ரொம்ப நல்லவன்... யாரையும் கஷ்டப்படுத்த விரும்பமாட்டான்... அத்தை பொண்ணுன்னு ஜாலியா பேசிட்டான் விடுங்க...”
அவள் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அபி கண்ணனைப் பார்த்து “கண்ணண்ணா... பாட்டி என்ன சொன்னாங்க..?” என்றாள்.

“ஏய் அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ மழுப்பினான் கண்ணன்.

“இல்லை நீங்க மறைக்கிறீங்க... ஏய் அம்மு பாட்டி என்ன சொன்னா..?” சுபஸ்ரீயைப் பார்த்துக் கேட்டாள் அபி.

“என்னத்தை சொல்லப் போறா... ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு அந்தக் காலத்து பல்லவி பாடினா... உடனே உங்கண்ணன் பிரண்ட்... அதான் உங்க கண்ணண்ணனுக்கு கோபம், அப்புறம் அத்தை சமாதானப்படுத்தி இவாளை உள்ளற கூட்டிண்டு வந்தா...”

“அது சரி... எப்பவும் பாட்டிக்கு இதே வேலையாப் போச்சு... சாதி அது இதுன்னு பேசிண்டு... படிக்கிற இடத்துல சாதி பாக்க முடியுமா...?”

“முடியாதுதான்... பெரியவா.... அதுலயே ஊறுனவா... காலையில் எழுந்து குளிச்சிண்டு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டான்னா பின்னே... ஆத்துக்குள்ள வர்ற ஒவ்வொண்ணையும் கவனிக்க ஆரம்பிச்சிருவா... அவா எல்லாம் அப்படியே வளந்தவாதானேடி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு...”

“அதுக்காக..?”

“அபி ஒண்ணும் பிரச்சினை இல்லை... பெரிய மனுஷி... என்ன சாதி... என்ன மதம்ன்னு கேட்கிறது தப்பில்லைதானே... அதுதான் பாட்டியும் பண்ணினாங்க... விடு...”

“இந்தப் பெரியவங்கதாண்ணே பிரச்சினையே...”

“எல்லா இடத்திலும் அப்படித்தான்... சாதி, சாதியின்னு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க... ஏன் இவரு வீட்ல கூட சாதியில ஊறின பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க... நாளைக்கு நாம அங்க போனா.... இவாள்ளம் எதுக்கு இங்க கூட்டிண்டு வாறேன்னு கத்துவாங்க... எல்லாத்தையும் விலக்கிட்டு நமக்குப் பிடிச்ச பாதையில பயணிக்கணும்... அதுதான் என்னோட பாதை... என்னோட பயணம்... இங்க இவங்களுக்காக ஆச்சாரமா இருக்க நான், கல்லூரி பிரண்ட்ஸ் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிட்டிருக்கேன்... அது நமக்கான வாழ்க்கை... நண்பர்கள் சூழ் உலகம்... அதுல நீ எஸ்.சியா, நான் எப்.சி என்றெல்லாம் பார்க்க முடியாது... பார்க்கவும் கூடாது. அப்படிப் பார்த்தா அதுக்கு பேர் நட்பே இல்லை... முதல் தடவை என்னோட பிரண்ட் மீனா வீட்டுக்குப் போனப்போ அவங்க அப்பா, ‘தாயி நீயெல்லாம் இங்க வரக்கூடாது’ என்றார். எதுக்கு வரக்கூடாது... என்னோட பிரண்ட் வீடு... அவளோட அப்பா அம்மா எனக்கும் அப்பா அம்மாதான்.... அப்புறம் எதுக்கு வரக்கூடாதுங்கிறீங்க... சாதியால உயர்ந்தவள்ன்னா... அடப்போங்கப்பா... உங்க ரத்தம், என் ரத்தம் எல்லாம் ஒண்ணுதான்... நாளைக்கே நான் அடிப்பட்டுக் கிடந்து ரத்தம் ஏத்தினாலும் அதுல இது எப்.சி. இது பி.சி, இது எஸ்.டி எஸ்.சியின்னோ... இல்ல இது முதலியார், இது யாதவர், இது செட்டியார் அப்படின்னோ எழுதியிருக்கப் போறதும் இல்லை... இது எந்த உடம்புல ஓடுன ரத்தம்ன்னும் யாரும் ஆராயப் போறதுமில்லை... இந்தக் குரூப் ரத்தம் இருக்கான்னுதான் பார்ப்பாங்க... அந்த நேரத்துல அந்த ரத்தம் தேவை அவ்வளவுதான்... குப்பனோட ரத்தம் குருக்களுக்குப் பொருந்தலாம்... குருக்களோட ரத்தம் ஆல்பர்ட்டுக்குப் பொருந்தலாம்... ஆல்பர்டோட ரத்தம் முகமதுக்கும் பொருந்தலாம்... அப்ப நமக்கு சாதியும் மதமும் பெரிசாத் தெரிவதில்லை... உயிர்தான் பெரிசாத் தெரியும்... சாகக்கிடக்கிறவன் இந்துன்னு சொல்லி முஸ்லீமோ, கிறிஸ்டியன்னு சொல்லி இந்தோ ரத்தம் கொடுக்க மறுப்பதில்லை... நான் கொடுக்கிறேன்னு சாதி மதம் கடந்து நிறையப் பேர் முன்னால வருவாங்க... இது எல்லாத்திலும் இருந்தா நல்லாயிருக்கும்... அப்படின்னு பேசினதும் என்ன அழகாப் பேசுறேம்மா... ஆனா ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா? என்றார் ஆற்றாமையுடன். யார் பேசினா என்னன்னு நான் அவங்க வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகலையே... அதான் சொல்றேன் பெரியவங்க அவங்க பாதையில பயணிச்சு நிறுத்தத்தை நெருங்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க சாதி, மதத்தை சுமந்தது சுமந்ததுதான் போகும்போது நம்மக்கிட்ட இறக்கி வச்சாலும் அதை நாம தூக்கி சுமக்காம இறக்கி வச்ச இடத்திலேயே விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...” சுபஸ்ரீ நீளமாய் பேசி முடித்தாள்.

“அடேயப்பா... இப்படி நீ பேசினா அப்புறம் உனக்கு பரிசு கிடைக்காம வேற யாருக்குடி கிடைக்கும்... பாவம் எங்கண்ணன்... அவன் உன்னைக் கேலி பண்ணினா நீ அவனை பேசியே கொன்னுருவேன்னு நினைக்கிறேன்.... நீ சொன்னது எல்லாம் உண்மைதான்டி அம்மு... உன்னை மாதிரித்தான் நானும் சாதி மத வட்டத்துக்குள்ள உக்காரப் பிடிக்காதவள்...”

‘என்னமாப் பேசுறா...? எப்ப்ப்....பா... பேசினாள்ன்னா மெய் மறந்து கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலவே’ என்று நினைத்தபடி, ‘உண்மைதாங்க... அருமையாப் பேசினீங்க... இந்தா இங்க வந்திருக்கானே அம்பேத்கார்... அவங்க ஊர் திருவிழாவுக்குத்தான் முதல்ல போனோம்... சாரதி வரலை... மத்தவங்கதான் போனோம்.... எல்லாருக்கும் கலர் கொடுத்தாங்க... நான் சாப்பாடு இல்லையான்னு கேட்டதும்... தம்பி நீங்கள்லாம் நம்ம வீட்டுல.... அப்படின்னு இழுத்தாங்க... அட போங்கங்க அங்கிட்டு சாப்பாட்டைப் போடுங்கன்னு பந்தியில போயி உக்காந்தா... சாப்பாடு போடுறவன்ல இருந்து எங்களைச் சுத்தி நின்ன அவனோட சொந்தங்கள் எல்லாம் எங்களை புதுசாப் பாக்குற மாதிரி பார்த்தாங்க... அதுல ஒரு பொம்பளை...” பேச்சை நிறுத்தி சுபஸ்ரீயைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் நடக்க, “சாரிங்க... எப்பவும் போல பொம்பளைன்னு சொல்லிட்டேன்... நீங்களெல்லாம் டீசெண்டா பேசுற ஆளுங்க... எங்க ஸ்லாங்க் அப்ப அப்ப இப்படித்தான்... ஒரு லேடி... பாருவே... அவனுங்கதான் சாப்பிடுறேன்னு சொன்னா இவங்க போடலாமா அப்படின்னு எங்க காதுபடவே சொன்னுச்சு... நாங்க வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினோம். நான் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி எங்கப்பாவுக்கு செய்தி போயாச்சு.... சாமி குத்தம் ஆயிடும்... நீ எப்படி அங்க சாப்பிடுவே.... முதல்ல குளிச்சிட்டு உள்ள வான்னு ஒரே கத்தல்... நானும் உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி எதிர் பாட்டுப் பாடிப் பார்த்தேன்... முடியலை... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை அடிக்காதீங்க... என எங்கம்மா சொல்லும் வரை நீடித்தது. அப்புறம் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பேச்சு வார்த்தை இல்லை... ஆனாலும் நான் பிரண்ட்ஸ் வீடுகளுக்குப் போறதோ... சாப்பிடுறதோ குறையலை.... எதுக்காக நான் மாறணும்... சாதி சாதியின்னு திரியிற இந்த சமூகம் மாறட்டும்... இந்தச் சமூகத்தை மாற்றுவதில் என்னோட பங்கு சிறதளவேணும் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்... பார்க்கலாம்”

“ம்... ரெண்டு புரட்சியாளருக்கு இடையில் நான் மாட்டிக்கிட்டேன்...” என்று அபி சிரிக்க, சுபஸ்ரீ எதுவும் பேசாமல் நடக்க, சாரதி ‘கண்ணா வேகமாக வாங்கடா... அப்புறம் பேசிக்கலாம்’ என்று கத்த, நடையின் வேகம் கூடியது.

பெருமாள் கோவில் கோபுரம் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.


சுதந்திரத்துக்குப் போராடி, தன்னுயிரை பீரங்கிக் குண்டுக்கு இரையாக்கிய வீரனின் படம்... சீறும் சிங்கம்... சாதிக்கட்சிக்கான கொடி... அந்தச் சாதியைச் சேர்ந்த சினிமா நடிகரின் படம் என எல்லாம் வரையப்பட்டு முக்கியஸ்தர்களின் பெயரையும் சுமந்து புதிய மாலை போடப்பட்ட அந்த சாதிச் சங்கப் பலகை ஜொலித்தது. அருகே கொடி மரத்தில் கட்டப்பட்ட கொடி காற்றில் பறந்தது.

“எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நம்ம சாதிப் பசங்க இவ்வளவு ஆர்வமா சாதியை கொண்டாடுறதே பெருமைதானே... இன்னைக்கு அம்புட்டுப் பயலுக வண்டியிலயும் சாதியும் அரிவாளும் தலைவரோட படமுமா இருக்கு...  அன்னைக்கு கல்யாணப் பத்திரிக்கையில பேர் போட்டா போதும்ன்னு சொன்னோம்... இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறை சாதியோட போடுது... சாதி உயிர்ப்பா இருக்கணும்ய்யா... இங்க இந்த போர்டு வைக்க ரொம்ப தீவிரமா முயற்சி செய்தது நம்ம வேலாயுதம்தான்... அவரு நம்ம சாதிச் சங்கத்துக்கு இந்த ஊரு தலைவரா இருக்கது பெருமையான விஷயம்... இனி நம்ம சாதித் தலைவரோட ஒவ்வொரு பிறந்தநாளையும் நீங்க மிகச் சிறப்பாக் கொண்டாடணும்...” என்று பிரசிடெண்ட் பேசிக் கொண்டிருக்க, அப்போது வேகமாக வண்டியில் வந்த மற்றொரு சாதிப் பசங்க மூணு பேர் “ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று சொல்லியபடி இறங்க, அவர்களின் பைக்கில் இன்னுமொரு சுதந்திரப் போராட்ட வீரர் சாதித் தலைவராய் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கீழே ரத்தச் சிவப்பில் ‘.................’வன்டா என எழுதப்பட்டிருந்தது.
-‘பரிவை’ சே..குமார்.

6 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
மிகஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்
த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

ஜாதீயின் ஆதிக்கம் என்று ஒழியுமோ...
தமிழ் மணம் 3

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சாதி
ஒழிக்கப்பட வேண்டியது
தொடர்கிறேன் நண்பரே

நிஷா சொன்னது…

த.ம வாக்கு போட்டேன்!

ஆஹா மிக மிக மிக அருமையான கருத்தோடு கலக்குறிங்க குமார்!இரு வேறு பட்ட சூழலை மிக அழகாக குழப்பமில்லாமல் கையாள்வது சிறப்பு!

அந்தக்காலத்தில் எங்கப்பா இப்படித்தான் இருந்தார், அவர் கூட வேலை செய்பவர்கள் எந்த சாதியாயிருந்தாலும் அவங்க வீட்டில் போய் சாப்பிட்டு வருவார். எங்க அம்மம்மா அப்படி இல்லை, துணி துவைக்கும் ஆட்கள் வந்தால் அவங்களுக்கு டீ குடிக்க என தனி கிளாஸ் வைத்திருந்தா!அதற்கும் முன் தேங்காய் சிரட்டையை நன்கு மொழு மொழுவென சீவி அதில் தான் தண்ணீர் குடிக்க கொடுப்பார்கள். வீட்டுக்குள் எடுக்காமல் வெளி முற்றத்தில் வைத்து பேசி அனுப்புவா! நான் அறிந்து எங்கூரிலும் இந்த சாதிக்கட்டுப்பாடு இருந்ததை அறிந்து உணர்ந்தாலும் நானும் அனைவர் வீட்டுக்கும் போவேன்,போனாலும் அவர்கள் தாங்களாகவே டீயெல்லாம் தராமல் கடையில் வாங்கும் கூல்ரிங்க்ஸ் தான் தருவார்கள் என்பது வேற கதை!இருந்தாலும் தட்டில் சம்பிரதாயமாய் தரும் ஸ்விட்ஸ்களை நசுக்கு பார்த்து நகர்த்தாமல் நல்லா சாப்பிட்டு விட்டு தான் வருவேன், இதற்காகவே என் அம்மா எங்க வீட்டுக்கு துணி துவைக்கும் ஆட்கள் எவரேனும் வீட்டு விஷேசம் அது இது என அழைப்பு தந்தால் என்னை அனுப்பி வைப்பார்!நானும் ஜாலியா கிளம்பிருவேன்ல!

நான் ஊரில் இருந்த வரை என் நட்பின் ஐயர் பெண்ணும் இருந்தாள், சலவை செய்யும் வீட்டுக்கார பெண்ணும் இருந்தாள்

உங்கள் கதையை படிக்கும் போது அப்பேத்கார் பற்றி அறியாமலேயே எங்கப்பா எங்களுக்கு அனைவரும் ஒரே சாதி என்பதை கற்றுதந்தார் என தோன்றுகின்றது.மதமு,சாதியும் நமக்குள் நுழையவே கூடாது குமார். அன்பு மட்டும் தான் அனைத்திலும் இருக்க வேண்டும், கதையில் சொல்லப்படும் கருத்துக்களுக்காக் உங்களுக்கு பத்து தடவை தமிழ் மண வாக்கு போடலாம்,

என் பாராட்டுகளும் வாழ்த்துகளும், கதையை நிறுத்தாமல் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகின்றேன்.
பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் கதை தொடர வேண்டும், சோர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் எழுத்தில் என்றும் பிரகாசிக்க வேண்டும்,

தொடர்ந்து எழுதுங்கள்.

நிஷா சொன்னது…

மூன்று பதிவுகளை இப்போது படித்து கருத்து இட்டு விட்டேன்,ஏதேனும் விடு பட்டிருந்தால் சொல்லுங்க!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சாதிகள் இல்லையடிப் பாப்பா..என்று பாடினாலும் அது ஒழியாது போல...அருமையாகச் செல்கின்றது தொடர்கின்றோம் குமார்...அன்றே வாசித்துவிட்டோம்..பயணம் இருந்ததால் கருத்திட முடியவில்லை. இப்போதுதான் இட முடிந்தது..