மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 15 பிப்ரவரி, 2016

மதிப்பெண்களை நோக்கி...

ட்சங்களில் செலவு பண்ணி படித்தால் நாமக்கல்லில்தான் படிக்கணும் என்று சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். 'எங்க பள்ளியில் 400 மார்க்குக்கு மேல் இருந்தால்தான் 11வது வகுப்பில் சேர்த்துக் கொள்வோம்' என்று சொல்லும் தலைமை ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறோம். '480 வரும்ன்னு பார்த்தேன்... 465 மார்க்தான் வந்திருக்கு' என்று புலம்பும் மாணாக்கர்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாமே மதிப்பெண்களை மட்டுமே குறியாகக் கொண்டு அதன் பின்னே ஓடும் கூட்டம்தான். இவர்களால் என்ன பயன்..? இவர்கள் இப்படி இருப்பது சரிதானா..? 

எங்க குட்டீஸ் நீண்ட தூரம் பயணித்து படித்து வந்தார்கள். பள்ளியில் சரியான ஆசிரியர்கள் இல்லாது பிள்ளைகளின் படிப்போ ஏனோ தானோ என போய்க் கொண்டிருக்க, சென்ற வருடம் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக, தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து மாவட்டத்தில் முதலிடத்தை மற்றொரு பள்ளியுடன் பங்கு போட்டிருந்த நேரம் அது. அங்கு படித்த மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பில் சேர முன்னுரிமை கொடுக்கும் பள்ளிதான் அது என்றாலும், இப்பத்தான் 400களும் 450களும் ரொம்ப சுலபமான இலக்காகி விட்டதே... ஒரு மாணவன் தன் தாயுடன் வந்தான். அவன் எடுத்திருந்தது 350க்கு கீழ்தான்... அவர்கள் கேட்டது ஒரு பிரிவு... தலைமை ஆசிரியர் சொன்னதோ மற்றொரு பிரிவு. அவனின் அம்மா 'இவன் நல்லா படிப்பானுங்க... பரிட்சை அப்போ உடம்பு முடியலை... அதான் மார்க் குறைஞ்சிருச்சு...' என்று கெஞ்ச, 'முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிற பெண் இவன் கிளாஸ்தான்...  அவளும் உடல் நலமில்லாததோடுதான் எழுதினாள்... மார்க் வாங்கலை...' என்று சொல்லி இந்தப் பிரிவுன்னா சேருங்க... இல்லேன்னா டிசியை வாங்கிட்டுப் போங்க என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மற்றொரு பள்ளி... இன்றைய நிலையில் மக்கள் அதிகம் விரும்பும் பள்ளி... நாமக்கல் பள்ளிகளுக்கு நிகரான பள்ளி... காரைக்குடியில் இருக்கிறது. இங்கு 10ம் வகுப்பு ரெண்டு வருசம்... 12ம் வகுப்பு ரெண்டு வருசம்தான். இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இப்படித்தான் நடக்கிறது. இது அரசுக்குத் தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் பெற்ற எங்க சொந்தக்காரப் பெண்ணுக்கு கட்டணச் சலுகையுடன் அந்தப் பள்ளியில் 11ம் வகுப்பில் இடம் கிடைத்தது. முதல் வருடத்தின் முடிவில் மாணவர்களின் படிப்பை வைத்து தரம் பிரிக்கப்பட்டார்கள். 'ஏ' பிரிவில் 90%க்கு மேல் வாங்கும் மாணவர்கள்... 'பி' பிரிவு 80%... இப்படியாக 50% க்குள் வாங்கும் மாணவர்கள் கடைசிப் பிரிவில் வைக்கப்பட்டார்கள். இது வருடா வருடம் நிகழும் நிகழ்வுதானாம். முதல் இரண்டு பிரிவு மாணவர்களை உரு ஏற்றி மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்து கடைசிப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் பாஸ் பண்ணினாலே போது 100% தேர்ச்சி பெற்ற பள்ளி வரிசையில் இடம் பிடித்துவிடலாம் என்ற எண்ணம்தான் அவர்களின் இந்தப் பிரிவினைக்கு காரணம். 

இதில் அந்தப் பெண் வருத்தத்தோடு சொன்ன விஷயம் என்னவென்றால் எல்லாரும் அன்பா பழகிட்டு இப்ப நான் ஏ கிளாஸ்லயும் என்னோட டியரஸ்ட் பிரண்ட் ஈ கிளாஸ்லயும் இருக்கோம். நாங்க அவங்க கூட பேசக்கூடாதாம். ரொம்பக் கொடுமையா இருக்கு... பார்த்துச் சிரிச்சாக்கூட 'உன்னோட வேலை படிக்கிறது... அவளுக்கு பாஸானாப் போதும் எதுக்கு அவகிட்ட பேசுறே...' என்று ஆசிரியர்கள் சத்தம் போடுகிறார்கள். ஏன்டா இந்தப் பள்ளியில் சேர்ந்தோம்ன்னு இருக்கு... அவங்களைப் பார்க்கும் போது பாவமாய் இருக்கு என்று சொன்னது. தாங்கள் சம்பாதிக்க கல்வி கூடத்துக்குள் ஏற்றத் தாழ்வுகளை பழகிக் கொடுக்கும் இந்தப் பாதகர்களால் கல்வி எப்படி சிறப்பானதாக அமையும். சொல்லுங்கள்.

தேவகோட்டைக்கு அருகில் ஆறாவயலில் இருக்கும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி வருடா வருடம் 100% தேர்ச்சியுடன் மிகச் சிறந்த மாணவர்களை வெளியில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த தனியார் பள்ளிகளுடன் இவர்கள் போட்டியிடுவதும் இல்லை... இவர்களைப் போல் இரண்டு வருட வகுப்புக்கள் நடத்துவதும் இல்லை... அரசுப் பள்ளிகளில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொடுக்கிறார்கள். நாம்தான் ஆங்கில மோகத்தில் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் வசம் போகிறோம். நானும் அப்படித்தான்... என் பிள்ளைகளும் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். 

இப்போதெல்லாம் அரசுப் பள்ளியில் படிக்கட்டும் என்று நாம் நினைத்தாலும் குடும்பத்தில் யாரும் விரும்புவதில்லை. இதோ விஷாலைக் கூட ஊட்டியில் சேர்க்க வேண்டும் என்று மாமா சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். நாந்தான் இங்கிருந்து அங்கா... அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இதே பள்ளியில் 12வது வரை படிக்கலாமே... பிறகெதற்கு ஊட்டி எல்லாம் என்று சொல்லி வருகிறேன். எனக்கு கிறிஸ்டியன் பள்ளிகளின் நடைமுறைகள் ரொம்பப் பிடிக்கும். நான் படித்த தே பிரித்தோவில் கூட நாங்கள் படிக்கும் போது மாணவர்களை குழுவாய் பிரித்து படிக்க வைப்பார்கள். மூன்று நல்லாப் படிக்கும் மாணவர்களுடன் மூன்று படிப்பு ஏறாத மாணவர்களை குழுவாக்கி படிக்க வைத்து வெற்றி பெற வைப்பார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

என்னடா இவன் பள்ளிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்கிறீர்கள்தானே... அது ஒண்ணுமில்லைங்க... நம்ம முத்து நிலவன் ஐயாவின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்ற புத்தகத்தை வாசித்தேன். அதன் தாக்கம்தான் இது... மார்க்கை நோக்கி ஏரில் பூட்டப்பட்ட மாணவர்களையும் நமது கல்வி முறையையும் குறித்த, பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் வலையில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். மிக அருமையான கட்டுரைகள்... கல்வி நிலை குறித்து எவ்வளவு விளக்கங்கள்... எத்தனை அழகான கட்டுரைகள்... உண்மையிலேயே ஐயாவின் சிந்தனையில் பூத்திருக்கும் இத்தொகுப்பு மிகச் சிறப்பான தொகுப்புத்தான்... என்னமாய் எழுதியிருக்கிறார்... உண்மையில் அவரின் உழைப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் படிப்பு மட்டுமே வாழ்க்கையாகாது... மனிதர்களைப் படித்தால்தான் உலகில் உன்னால் வாழ முடியும் என மகளுக்கு கடிதத்தில் சொல்லும் கட்டுரையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாக இருக்கிறது. மெக்காலே கல்வி திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்வித் துறையில் இருப்பவர்கள் தவிர்த்து நாமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அது குறித்து... அதன் விளைவுகள் குறித்து அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். மேலும் சமச்சீர் கல்வி குறித்து... அதனாலான நன்மைகள் குறித்து...  தனியார் பள்ளி நிர்வாகிகள் அதை எதிர்க்க காரணம் என்ன என்பது குறித்து... பாடநூல் எழுதும் ஆசியர்களின் செயல் குறித்து... பேப்பர் திருத்தும் நிலை குறித்து... அதில் அரசின் செயல்பாடு குறித்து... இப்படி நிறைய... நிறைய... நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பேசியிருக்கிறது இந்தப் புத்தகம்.

ஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ண முடியாத மாணவனால் ஒரு சினிமாப் பாடலை முழுமையாக மனப்பாடம் பண்ணி பாட முடிகிறதே அது எப்படி.? மாணவர்கள் மத்தியில் எதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்... எப்படி அவர்களை வளர்க்க வேண்டும்.., அவர்களின் வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கோடு பெற்றோரின் பங்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார் நம்ம முத்து நிலவன் ஐயா.


புத்தகத்தில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு...

'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதி பாட்டை ஓப்பிக்காமல் - விளையாடப் போன குழந்தைக்குக் கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மன அழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப்படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியர்களால் அதிகமாகாதா என்ன?

இன்ஜினியரிங் படிப்பைவிட எல்.கே.ஜி.க்கு கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளின் கல்விச் சாதனையெல்லாம் சாதனை - மாணவர்களைக் காட்டி நடத்தும் விளம்பர வேலையின்றி வேறென்ன...?

ஆட்சி மாறினால், தலைவர் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம். பாடம் வைக்கப்படும், போது தலைமுறை கடந்த தலைவர்களையே பாடநூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனும் அக்கறை வேண்டாமா?

தமிழால் என்ன பயன்? என்று கேட்பதும், தாயால் என்ன பயன்? என்று கேட்பதும் ஒன்றே அல்லவா? இது நம் தமிழர்களுக்கு எப்போது புரியப் போகிறது? இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து?

ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான்,  கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி  3 ஆம் வகுப்புத்தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில்தான் ஆங்கிலம் அறிமுகமானது, தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்! அரசனை விஞ்சிய அரசு விசுவாசம்!

கிராமங்களில் அதிலும் குறிப்பாக ஏழை உழைப்பாளி மக்களிடம்தான் இன்னும் நம் பண்பாட்டு வேர்கள் அறுபடாமல் இருக்கின்றன என்பது, என் மாணவப் பிள்ளைகளால் நான் கற்றுணர்ந்த கல்வி!

இப்படி இன்னும் நிறைய அடுக்கலாம்... அரிச்சந்திரன் குறித்து... கண்ணகி குறித்து... இன்னும் புராணங்கள் எல்லாம் பற்றிப் பேசியிருக்கும் நிலவன் ஐயா, பாடங்களில் பெரியார் குறித்து... இலக்கணம் குறித்து எல்லாம் மிகச் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மேலும் தனது மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று வந்ததையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் சுவராஸ்யமான கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்.  

தமிழ் குறித்து வாயார பேசும் நாம், அதன் துறைசார் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை விடுத்து 'செயல் மறந்து' வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திய நாம் செயல் புரிந்து வாழ்த்தியிருக்கலாமே என்கிறார். ஆஹா... நம் தமிழ்த்தாய் வாழ்த்தின் செயல் மறந்த வரிகள் குறித்து ஐயாவின் சிந்தனையைப் பாருங்கள்.

சிலாகித்து எழுதினால் பதிவின் நீளம் பார்க்காது எழுதிக் கொண்டே போவேன்... இவனைக் கட்டுரை எழுதச் சொன்னா... தேர்தல் அறிக்கை மாதிரி நீ....ள...மா...க... எழுதுவானேன்னு நினைப்பீங்க. தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை... இது என்னைக் கவர்ந்த எழுத்தின் வேலை... இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

அப்புறம் நண்பர்களே... யாருக்கேனும் புத்தகம் பரிசு கொடுப்பதென்றால் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்பது உங்களின் முதல் சாய்ஸ்சாக இருக்கட்டும்.

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பண்முகப் படைப்பாளி ஐயாவின் கட்டுரைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு நானெல்லாம் வளரவில்லை... அந்த எழுத்து என்னை ஈர்த்தது அதற்காக எழுதினேன்... அவ்வளவே.


முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - ஆசிரியர். நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு - விலை : 120.

முத்து நிலவன் ஐயா அவர்கள் வலைத்தளத்தில் மிகவும் பிரபலம்... அவரின் வலைத் தளத்தை வாசிக்க...


சொல்ல மறந்துட்டேனே... யான் பெற்ற இந்த இன்பம் குமாரும் பெறட்டும் என தான் படிக்கும் புத்தகங்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து கொடுத்து வாசிக்கச் சொல்லும் அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே விரிவான விமர்சனம் நன்று பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
தமிழ் மணம் 2

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அருமையான விமர்சனம்!
ஹும்..! கில்லர்ஜி மதுரையில் இருந்திருந்தால் எனக்கும் நிறைய புத்தகம் கிடைத்திருக்கும். என்ன செய்ய?
த ம 3

ஸ்ரீராம். சொன்னது…

அங்கேயே சொன்ன மாதிரி இந்தப் புத்தகம் வாங்கும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது பத்து நாட்களுக்கு முன்னாள் கூட செய்தித் தாளில் மதிப்பெண் குறைவாய் எடுத்த மாணவர் ஒருவரை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி, பிரச்னை ஆனதைப் படித்தேன். ஊர் விவரம் மறந்து விட்டது.

நல்ல பகிர்வு.
தம +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
நண்பர் கில்லர்ஜியின் சேவை பாராட்டுதலுக்கு உரியது
தம=1

Anuprem சொன்னது…

சிந்திக்க வேண்டிய கல்வி முறை.....
மார்க்காக மட்டுமே படிக்க சொலும் பள்ளிகள் ..மனதை வருத்துகிறது ....

J.Jeyaseelan சொன்னது…

சூப்பர் சார்.. அவசியமான பதிவு.. ஆரம்பக் கல்வி மட்டும் சரியாக அமைந்துவிட்டால் அடுத்து அக்குழந்தை எங்கு படித்தாலும் சாதிக்கும் என்பது என் எண்ணம்... புத்தகம் இன்னும் படிக்கவில்லை... படிக்க வேண்டும்..

நிஷா சொன்னது…

ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3 ஆம் வகுப்புத்தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
விமர்சனத்தில் ஹை லைட் இது தான் குமார்? இந்த வரிகள் போதும் முழுப்புத்தகமும் எப்படி என புரிந்திடலாம்!

அப்புறம் எப்போது எனக்கு பரிசு அனுப்ப போகின்றீர்களாம்?

நிஷா சொன்னது…

இந்த கில்லர்ஜீயை சுவிஸுக்கு நாடு கடத்தி விட சொல்லி விட்டால் எனக்கும் புத்தகம் படிக்க கிடைக்கும்ல!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா, எனக்கு மறக்கவில்லை. விருதுநகர், தொடர்ந்து நூறுவிழுக்காட்டு வெற்றிக்காக “சாதாரண” மாணவர்களைப் பலியிடும் முயற்சி அது! ஊடகங்களில் குட்டு வெளிப்பட்டதும் த.ஆ.தண்டிக்கப்பட்டு மாணவர்கள் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள்..

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

மிக்க நன்றி நண்பர் குமார் அவர்களே! படித்து, நூலின் சாரத்தை உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள். கட்டுரைகளில் பெரும்பாலானவை நமது வலையில் எழுதியவை, மற்றும் தினமணி, தீக்கதிர், ஜனசக்தி, கணையாழி, செம்மலர் முதலான இதழ்களில் வந்து நம் வலைப்பக்கத்தில் எடுத்துப் போட்டவைதான் சகோதரி நிஷாவைப்போல, படிக்க விரும்புவோர் எனது வலைப்பக்கத்தில் தேடிஎடுத்தும் படிக்கலாம். நல்ல அறிமுகத்திற்கு மீண்டும் நன்றி நண்பரே.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

(இதை நிச்சயமாக வெளியிட வேண்டாம். ஆனால் இதுபோன்ற அறிமுகத்தின் போது அந்த எழுத்தாளரின் தள இணைப்பையும் தருவது அந்த எழுத்தாளருக்கு இன்னும் மேலதிகப் பலனளிக்கும் அல்லவா?)

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பின் ஐயா...

இணைக்க நினைத்து பதிவின் நீளத்தில் இருந்த கவனத்தில் இணைக்க மறந்துவிட்டேன்... கண்டிப்பாக இப்போது இணைக்கிறேன். நன்றி...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகைக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
மதுரையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே... இங்கு ஒரு கில்லர்ஜிதான் இருக்கார்... அவரையும் கொடுத்துட்டு....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஐயாவின் பதிலும் கிடைத்து விட்டது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீலன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
ஊருக்கு வரும்போது புத்தகத்தை ஐயாவிடம் வாங்கி உங்களுக்கு பரிசு அனுப்பிடலாம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
இப்படி எல்லாரும் கில்லரை பங்கு போடுறீங்களே.... நியாயமா????
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான நூல் ஒன்றினைப் பற்றிப் பலரும் எழுதிவிட்டார்கள். நாங்களும் வாங்க வேண்டும் என்று நினைத்துத் தள்ளிக் கொண்டே போகின்றது. அருமையான நூல்விமர்சனம்.

கீதா: நாங்களும் கல்வி குறித்து எங்கெல்லாம் கட்டுரைகள் வருகின்றதோ அங்கெல்லாம் புகுந்து கருத்தைச் சொல்லிவிடுவது உண்டு. நம்மூர் கல்வி கல்வியே இல்லை என்ற எண்ணம் கூட வருவதுண்டு. ம்ம்ம் கல்வியில் மாற்றங்கள் வந்தாலொழிய நாம் விரும்பும் சூழல் வருவதற்குச் சாத்தியம் இல்லை. பள்ளிக் கல்வியே இப்படி என்றால் மேற்படிப்பு பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஊழலின் ராஜாங்கம்!! அருமை குமார்!

Aradhya சொன்னது…

அதிக மார்க் எடுக்கும் ரகசியம்!! | 3 secret study tips in tamil