மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 நவம்பர், 2015

மனசு பேசுகிறது : தையற்கடை

தீபாவளி குறித்து கிராமத்து நினைவுகளில் நிறையப் பார்த்தாச்சு... விடிந்தால் தீபாவளி... ஊரில் அனைவருக்கும் சந்தோஷம்... இனிப்புக்களும் வெடிகளும் இன்னும் புது டிரஸூகளும் என சந்தோஷங்களைத் தாங்கிய தீபாவளி தினம் என்றும் இனிமையானதுதான். தீபாவளி குறித்தோ, வெடிகள் குறித்தோ நாம் இங்கு பேசப்போவதில்லை. புதுத்துணிகளையும் தையற்கடைக்காரர்களையும் பற்றி பேசலாம்.

சின்ன வயதில் பொங்கல், தீபாவளி என்றால் வீட்டில் அம்மா எடுக்கும் டிரஸ் மட்டுமல்லாது எனக்கும் தம்பிக்கும் அண்ணன் தைத்துக் கொண்டு வரும் டிரஸூம் உண்டு. அரவக்குறிச்சியில் இருந்து அண்ணன் எப்போது வருவார் எனக் காத்திருப்போம். வரும்போதே இருவருக்கும் டவுசர், சட்டை தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ரெடிமேட் டவுசர், சட்டை போடப்பிடிப்பதில்லை. இப்போது வரை தைத்துப் போடுவதுதான் பிடிக்கும். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது இரண்டு மூன்று சட்டை, பேண்டுகள் தைத்துக் கொண்டு வந்துவிடுவேன். இருப்பினும் கொஞ்சம் ரெடிமேட் துணிகளும் அணிய ஆரம்பித்தாச்சு. பெரும்பாலும் மனைவியின் விருப்பம் ரெடிமேட் பேண்ட், சர்ட்டில்தான். இப்பல்லாம் அவர் தீபாவளி, பொங்கலுக்கு எடுத்துக் கொடுத்துவிடும் பேண்ட், சட்டை எல்லாம் ரெடிமேட்தான். அப்படியிருந்தும் இந்த முறை பேண்ட், சர்ட் துணி எடுத்து தைக்கவா என்றார். ஆசைதான்... இருப்பினும் அவரின் ஆசை ஒன்று இருக்கல்லவா அதனால் வேண்டாம் உன்னோட சாய்ஸ்ல ரெடிமேட்ல எடுத்துடு என்று சொல்லிவிட்டேன். துணிகள் எடுத்திருக்கு... தீபாவளி முடிந்ததும் நமக்கு வந்து சேரும். இங்கு தீபாவளியாவது பொங்கலாவது விடிந்தால் வேலைக்குச் செல்ல வேண்டுமே...

சரி வாங்க தையற்கடை, தையற்காரர் குறித்துப் பார்ப்போம். இப்ப ரெடிமேட் கடைகள் வந்த பிறகு தையற்கடைக்காரர்களுக்கு வேலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். பலர் கடைகளை மூடிவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விட்டார்கள். சிலரே இன்னும் அதே தொழிலில் இருக்கிறார்கள். தையற்காரர்களைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், நியூ இயர், ரம்ஜான், முகூர்த்த நாட்கள், பள்ளி ஆடைகள் தைக்கும் நாட்கள் இவையே மிகவும் பரபரப்பான, தூங்க நேரமில்லாத நாட்கள். இன்னும் பள்ளி ஆடைகள் மட்டும் ரெடிமேட்டில் வரவில்லை என்பதால் அந்தச் சமயத்தில் வேலை இருக்கு. அதிலும் பல பள்ளிகள் தாங்களே அளவெடுத்து துணியின் விலைக்கு மேல் பணம் வசூலித்து அவர்களுக்கு என்று வைத்திருக்கும் தையற்காரரிடம் தைத்துக் கொள்கிறார்கள்.எனவே அதுவும் இப்போது குறைந்துவிட்டது.  

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முழு ஆண்டு விடுமுறையில் தையற்கடைக்கு வேலைக்குப் போய்விடுவேன். அம்மா வீட்டில் வைத்திருக்க விரும்பமாட்டார்கள், ஏனென்றால் அப்போது நான், அக்கா, தம்பி மூவரும் படித்துக் கொண்டிருந்தோம். விடுமுறை என்றால் எங்களுக்குள் அடிதடிதான்... மாடுகளை மேய்க்க வேண்டியிருந்ததால் எங்களையும் வைத்து மேய்க்க முடியாது என்பதால் ரெண்டு மாதம் எதாவது கடையில் போய் இருக்கச் சொல்வார்கள். சம்பளம் எல்லாம் தேவையில்லை. தம்பி பெரும்பாலும் போகமாட்டான். எனவே நான்தான் கடைக்கு வேலைக்குப் போவேன். ஆரம்பத்தில் அண்ணன் ஒரு தையற்கடையில் கொண்டு போய்விட, வருடாவருடம் தையற்கடைதான்... காஜா கட்டுவது, பட்டன் கட்டுவது, எம்பிங்க் பண்ணுவது, ஜாக்கெட்டுக்கு கொக்கி வைப்பது என எல்லா வேலையும் பார்க்க வேண்டும். நூல்கண்டு, பட்டன், என எல்லாம் வாங்கப் போகவேண்டும். ஏன் டீ கூட வாங்கப் போக வேண்டும். அப்படிப் பழகி பழைய துணி தைப்பது, கைலி மூட்டுவது. சேலை முந்தி அடிப்பது என வேலையையும் கற்றுக் கொண்டேன்.

தேவகோட்டையில் நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் மிகப்பிரபலமான கடையாக இருந்தது, இப்பவும் நல்ல பெயரோடு இருப்பது மாமாவின் தையற்கடை. தீபாவளி, பொங்கல் என்றால் துணிகளைத் தைப்பதற்கு முடியாது என்று திருப்பிவிட்ட காலம் அது. மலைபோல் துணிகள் குவிந்து கிடக்கும்... ஏழெட்டுப் பேர் இரவு பகல் பாராது தைத்துக் கொண்டிருப்பார்கள். மாமா துணிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் வரை இடைவிடாது வேலை இருக்கும். துணி டெலிவரி தீபாவளிக்கு முதல் இரண்டு நாள் மட்டுமே... வேலை பார்ப்பவர்களை அதற்கு நிறுத்த முடியாது என்னை என்னை வரச்சொல்லுவார்... அவரின் மைத்துனரும் வருவார்.. எங்களது வேலை கொண்டு வரும் கார்டில் நம்பர் பார்த்து துணியை எடுத்து சாம்பிளோடு சரி பார்த்துக் கொடுக்க வேண்டும். கூட்டம் கட்டியேறும்... கோபப்படாமல் பொறுமையாக எடுத்துக் கொடுக்க வேண்டும். தீபாவளிக்கு முந்திய இரவு விடிய விடிய துணிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்களுக்கு கணக்குப் பார்த்து சம்பளம் கொடுக்கும் வரை நின்று விட்டு வருவேன்.

இரண்டு நாட்கள் முன்பாக கடைக்குப் போய்விட்டால் தீபாவளி அன்று அதிகாலையில்தான் வீட்டிற்குப் போவேன். பெரும்பாலும் தீபாவளி அன்று அதிகாலையில் லேசான மழையாவது பெய்து கொண்டிருக்கும். நமக்கு மழையில நனையிறதுன்னா அவ்வளவு சந்தோசமுல்ல... நனைஞ்சிக்கிட்டே போயிருவேன். வீட்டுக்குப் போனா பலகாரம் பண்ணிக் கொண்டிருக்கும் எங்கம்மா, 'மாமா... மாமான்னு அங்க போயிக் கிடந்துட்டு நனைஞ்சிக்கிட்டு வருது பாரு எருமை...' அப்படின்னு திட்டுவாங்க. அப்புறம் அம்மாவுக்கு கொஞ்ச நேரம் பலகாரம் சுடுவதற்கு உதவியாய் இருந்து விட்டு படுக்கையைப் போட்டா காலையில எண்ணெய் தேய்த்துக் குளிக்க எழுந்திரிடான்னு யாராவது கத்துனாத்தான் எந்திரிக்கிறது. கல்யாணம் முடிந்த வருடம் தலை தீபாவளி, மாப்ள ஆளில்லை வந்திருங்கன்னு மாமா சொல்லிவிட, சரி உதவி பண்ணலாமேன்னு போனா ரெண்டு நாள் இரவு பகல் கடையிலதான்... தீபாவளி அன்று அதிகாலை அவர் தைத்துக் கொடுத்த சட்டை, ஸ்வீட் பாக்ஸ் என எல்லாம் எடுத்துக் கொண்டு மழையில் நனைந்தபடி வண்டியில் போன வீட்டில் எல்லாரும் திட்டுறாங்க... மனைவியோ எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறாங்க... தீபாவளிக்கு மாமனார் வீடு போயி எல்லாரும் வெடி அது இதுன்னு சந்தோஷமாக இருக்க, நாம அடிச்சிப் போட்டமாதிரி கெடந்து உறங்கியாச்சு. அடுத்த வருசம் அந்தக் கடைப்பக்கமே விடலையே.

அப்படித் துணிகள் குவிந்து கிடந்த கடையில, ரெடிமேட் கடைகள் அதிகம் வர வர. தைக்க வரும் துணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக இரவு பகல் என தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த தையல்மிஷின்கள் எல்லாம் படிப்படியாக நாட்களைக் குறைத்து எனக்குத் தெரிய, அதாவது எட்டு வருடம் முன்பு பத்து நாள் நைட் வேலை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. வீட்டிற்கே போகாமல் மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க துணிகளை வெட்டிக் குவித்த மாமா கூட, கொஞ்சம் ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

ஒரு முறை மாமாவைப் பார்க்கும் போது இப்ப எல்லாரும் ரெடிமேட்ல பேண்ட் எடுத்துடுறானுங்க... சட்டைக்கு மட்டும் இங்க வாரானுங்கன்னு எப்பவும் தைக்கிற ஆளுங்க வருது.. ஆனாலும் முன்ன மாதிரி இல்ல மாப்ள... தைக்கிறதுக்கு ஆள் கிடைக்கலை... பீஸ் ரேட்ல ஓட்டும்போது அதிகமா எதிர் பார்க்கிறாங்க... அவங்களுக்கு அவ்வளவு கொடுத்தா நமக்கு மிச்சமில்லைன்னு ரேட்டைக் கூட்டினாலும் இவ்வளவு கொடுத்து தைக்கிறதுக்கு பேசாம ரெடிமேட் எடுத்திடலாம்ன்னு நமக்கு முன்னாலே பேசிக்க்கிறானுங்கன்னு உண்மையாகவே வருத்தப்பட்டார்.

அவரிடம் வேலை பார்த்து இப்போ தனியாக கடை வைத்திருகும் உறவினப் பையன் ஒருவனும் முன்ன மாதிரி இல்லேண்ணே... நூறு சட்டை தைச்ச இடத்துல பதினைந்து இருபதே பெரிசாத் தெரியுது... இப்ப கேக்குற தையற்கூலிக்கு ரெடிமேட்லயே எடுத்திடலாங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க என்று ஒருமுறை பேசும்போது சொன்னார். உண்மைதான் 200 ரூபாய்க்கு பேண்ட் பிட் எடுத்துக்கிட்டுப் போனா 350 ரூபாய் தையற்கூலி, அதுக்கு இன்னும் ஒரு 200 சேர்த்து ரெடிமேட் பேண்ட் எடுத்திடலாம்ன்னு முடிவுக்கு வந்திடுறாங்க. அதுவும் நம்ம சைஸூக்கு தேவையான அளவுல கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான டிசைன்களிலும் இருப்பதால் பெரும்பாலானவர்கள் அதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னைக்கு நிலைமையில் தையற்கடைகள் எல்லாம் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. ஏதோ சிலர் மட்டுமே இன்னும் தையற்கடைகளில் தைத்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர் பட்டாளம் எல்லாமே ரெடிமேட் ஆடைகளுக்குள் ஐக்கியமாகிவிட்டன. நலிந்த கலைஞர்கள் போல் தையற்காரர்களின் தொழிலும் நலிந்து கொண்டே போகிறது. இன்னும் சில காலங்களில் தையற்கடைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பதே உண்மை.

சரிங்க... தங்களுக்கும் தங்கள்  உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பாதுகாப்பான முறையில் சீனப் பட்டாசுகளைத் தவிர்த்து நம் சிவகாசிப் பட்டாசுகளை வெடித்து
சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துக்கள்.

 -'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.

தையற்கடை குறித்த தங்களின் ஆய்வு உண்மைதான். யாருக்குமே இப்போது துணி எடுத்து தைக்க கொடுப்பதென்பது சோம்பேறித்தனமாக போய்விட்டது எனச் சொல்லலாம். ரெடிமேட் உடைகளின் ஆக்கரமிப்பு அதிகரித்துதான் போய் விட்டது..காலம் ஒருநாள் மாறும் என நினைக்கிறேன். நினைவுகளை பகிர்ந்த விதம் அருமை.

தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கும் வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மைகள்...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

இராஜராஜேஸ்வரி சொன்னது…


நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான பகிர்வு. உண்மைதான். இன்றைய நாளில் பெரும்பாலும் ரெடிமேட் உடைகள்தாம். ஆனால் பெண்களுக்கான தையற்கடைகள் பிஸியாகவே இயங்கி வருகின்றன இங்கே.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனிய நினைவுகள்! தீபாவளிக்கு தையல்கடையில் துணி கொடுத்துவிட்டு தைத்து கொடுக்காத தையல்காரரை சண்டைபோட்ட காலங்கள் நினைவுக்கு வருகிறது! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே தையல் கலைஞர்களைப்பற்றிய நல்ல ஆய்வு தாங்கள் சொல்லிய அனைத்தும் உண்மையே... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 4

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான விவரணம். எங்கல் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக வாசிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்
...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவலைகள் நன்று. பெரும்பாலான தையல் கடைகள் மூடிவிட்டார்கள்...... விடிய விடிய தைத்துக் கொண்டிருந்த காலம் போயிற்று.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.