மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 11 நவம்பர், 2015மனசு பேசுகிறது : தீபாவளி தினம்

தீபாவளிக்கு இங்கு விடுமுறை இல்லை என்பதால் முதல் நாள் கிளம்பும் போதே எனக்கு மேல் இருக்கும் எகிப்துக்காரனிடம் 'நாளை தீபாவளி, லீவு போட்டாலும் போடுவேன்' என்று சொல்லி வைத்தேன். எனக்கும் அவனுக்கும் கடந்த இரண்டு வாரமாகவே மேக மூட்டமாகத்தான் இருக்கு... வேலை சம்பந்தமான கேள்விகள் மட்டுமே கேட்பேன், மற்ற விஷயங்கள் பேசுவதில்லை என்றாலும் மெதுவாக பிட்டைப் போட்டுப் பார்த்தேன். அவனும் அந்தச் சண்டைக்குப் பின் என்னுடன் சகஜமாக நிறைய வேலைகள் பார்த்தான். ஆனால் நாம யாரு... இறங்கிப் போகவே இல்லை... இப்ப முடியாதுன்னு சொன்னா இறங்கவே மாட்டான் என்று நினைத்தானோ என்னவோ 'ஓகே' என்று மட்டும் சொன்னான். 

நேற்றுக்காலை வாட்ஸப்பில் 'இன்னைக்கு எனக்கு லீவு வேணும்.. எதாவது அர்ஜெண்ட் வேலை இருந்தால் மதியம் இரண்டு மணிக்கு மேல கூப்பிடு' என்று அனுப்பினேன். உடனே 'தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடு... ' என்று அனுப்பியிருந்தான். அப்புறம் என்ன... அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து இட்லி, வடை, சட்னி செய்து முதல் நாள் இரவே வாங்கி வைத்த இனிப்புக்களை வைத்து சாமி கும்பிட்டு... புதுச் சட்டை அணிந்து... சாப்பிட்டு எல்லோரும் போய்விட நான் மட்டும் தனி ஒருவனாய் அறையில் இருந்தேன். 

ஊரில் எல்லாருக்கும் போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, மனைவியும் குழந்தைகளும் தீபாவளி கொண்டாட்டதில் அம்மா (மாமியார்) வீட்டில் பிஸியாகிவிட, ஸ்கைப்பில் பேச வழியின்றி... ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து வேலைக்கு கிளம்பிவிடும் எண்ணம் வந்துவிட்டது. அப்புறம் அடிச்சிக் கேட்டாலும் கொடுக்க மாட்டானுங்க ஏதோ அவனுங்களுக்கே மனசு வந்து விடுமுறை எடுத்துக்கடான்னு சொல்லியிருக்கானுங்க... வீணாவுல எதுக்கு ஆபீசுல போய் நிப்பானேன் என்று அந்த எண்ணத்தை கழுவி விட்டு இணையத்தில் மேய்ந்தேன்... அப்ப அப்ப தேர்தல் நியூஸ் போல வேதாளம் என்னாச்சு... என்று செய்திகளை தேடிப்படித்தேன். கமல் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் ஏனோ தல படம் ஜெயிக்கணுமின்னு தோணுச்சு... சரி விடுங்க... படம் எப்படியிருந்தாலும் நாம தியேட்டரில்தான் போய் பார்க்கப் போறோம்... அப்புறம் என்னத்துக்கு அதை பேசிக்கிட்டு.. 

ஆமா... என்ன சொன்னேன்... ம்... இணையத்தில் மேய்ந்தேன்னு சொன்னேனுல்ல... எப்பவும் படம் பார்க்கும் தளத்திற்குள் செல்ல, கத்துக்குட்டி படத்தோட நல்ல பிரிண்ட் வந்திருந்தது. சரியின்னு காலைக்காட்சியாக கத்துக்குட்டி பார்க்க ஆரம்பித்தேன், படமும் ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருந்துச்சு... இடைவேளை வந்தப்போ பக்கத்தில் இருக்கும் லுலு எக்ஸ்பிரஸ் மார்க்கெட் போயி மதியம் சமையலுக்கு சாமான் வாங்கி வந்தேன். மீண்டும் கத்துக்குட்டி... படம் முடிந்ததும் சமையல் வேலையை ஆரம்பித்தேன். 

பெப்பர் சிக்கன், சிக்கன் ரசம், கொஞ்சமாய் சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு மசாலா எல்லாம் செய்து தனி ஒருவனாய் சாப்பிட்டேன். எனக்கு பெரும்பாலும் விடுமுறை தினங்களில் காய்கறிகளில் விதவிதமாய் வைத்துச் சாப்பிடப் பிடிக்கும். இருந்தாலும் தீபாவளி என்பதால் அறையில் என்னடா இன்னைக்குப் போயி இதை செய்திருக்கேன்னு ராத்திரி சாப்பாட்டை ஆவலோடு எதிர் நோக்கி வருபவர்கள் கேப்பாங்களேன்னுதான் இந்த சிக்கன் வரிசை... இப்பல்லாம் சிக்கன் அதிகம்  சாப்பிடுவதில்லை.

(கத்துக்குட்டி)
யூரிக் ஆசிட் பிரச்சினை வந்ததும் முதல் சாப்பாட்டில் நிறையக் கட்டுப்பாடு... மீன் அதிகம் எடுத்துக் கொண்டு சிக்கனை ரொம்பக் குறைத்தாச்சு. அப்படியிருந்தும் இன்னும் உணவுக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என டாக்டர் சொன்னார். இனி என்னத்தைக் குறைக்கிறதுன்னு தெரியலை.... இப்பவே மட்டன், காளான், காலிபிளவர், பயறு வகைகள், முட்டைக்கோஸ், பீன்ஸ் என எல்லாம் விட்டாச்சு... இனி பேசாம பேலியோ டயட் எடுத்துற வேண்டியதுதான். 

சரி... சரி.... இருங்க... இருங்க.... சாப்பிட்டுட்டு என்னய்யா பண்ணினே... ஏதோ கதை சொல்வேன்னு பார்த்தா உன்னோட புராணத்தைப் பாடுறே... அப்படின்னு நினைக்காதீங்க... மதியம் சாப்பிட்டதும் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்ன்னு நப்பாசை மெல்ல எட்டிப் பார்த்துச்சு. அடி ஆத்தி இன்னைக்குத் தூங்குனா நாளைக்கு ஆபீசுல கொட்டாவி கொன்னு எடுத்துருமேன்னு அதுக்கு தடா போட்டுட்டேன்... பாருங்க கொட்டாவியின்னு எழுதினதும் கொட்டாவி வரிசையா வருது. அட நான் விட்டதும் எகிப்துக்காரனும் போட்டிக்கு விடுறான் போங்க. ஆமாங்க வேலை இன்னைக்கு ரொம்ப இல்லை... அதான் இங்கயே டைப் பண்ணியாச்சு... ஹி...ஹி... சத்தம் போடாதீங்க... அப்புறம் எகிப்துக்காரன் என்னடான்னு எட்டிப் பாக்கப் போறான்.

இன்னைக்கு காலையில இருந்து தூக்கம் ஒரு பக்கம் அமுக்கிக்கிட்டுத்தான் இருக்கு. பிடிச்ச மொஸ் தெற்கே இருந்து வடக்கே தானாப் போகுது. அப்ப அப்ப சுதாரிச்சு இழுத்துக்கிறேன்... எகிப்துக்காரனும் 'ஐ நீடு ஸ்லீப்பு'ன்னு சேரில் சாய்ந்து கொள்கிறான். பாகிஸ்தானியோ 'ஐ ஆம் ஓல்சோ வாண்ட் ஸ்சிலீப்'புன்னு (அவனோட இங்கிலீஸ் வேற மாதிரி) சிரிக்கிறான். தூக்கம் எல்லாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்ன்னு நமக்குத் தெரியாதா என்ன. இருந்தாலும் அலுவலகமா இல்லையா... வேலை முக்கியம் காம்ரேட்ஸ் அப்படின்னு சின்சியரா வேலை பார்க்க ஆரம்பித்தோம். மறுபடியும் படிக்க சின்சியரா வேலை பார்க்க ஆரம்பித்தோம்... ஆமா...

சரி நேற்றைய தினத்துக்குப் போவோமா... தூங்கக்கூடாதுன்னு மேட்னி ஷோவுக்கு தயாரானேன்... என்ன படம் பாக்கலாம்ன்னு யோசிச்சப்போ ருத்ரமாதேவியா அனுஷ்கா வந்து நின்னுச்சு... சரியின்னு ருத்ரதேவனான அனுஷ்காவைப் பார்க்க ஆரம்பித்தேன்... படமும் அலுப்புத் தட்டாமல் போக தொடர்ந்து பார்த்து முடித்தபோது மணி ஆறாகியிருந்தது. வெளியில் இருட்டியிருந்தது... விளக்குகளை எரிய விட்டுவிட்டு ஒரு வரக்காப்பியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலையில் விடுபட்ட மிச்சசொச்ச பேருக்கு போன் பண்ணினேன். 

(ருத்ரமாதேவி)
அப்புறம் முதல் நாள் எழுதி வைத்த கதையை மீண்டும் வாசித்து சரி பண்ணினேன். முகநூலுக்குள் முகம் புதைக்கலாம் என்று மெல்ல உள்ளே போனேன். அங்கும் ஒரு தீபாவளி ஸ்டேட்டஸ் போட்டுட்டு மறுபடியும் இரவுக் காட்சியாய் தனி ஒருவனை ஆரம்பித்தேன். அதற்குள் அறை நண்பர்கள் வர ஆரம்பிக்க, படத்தை நிறுத்திவிட்டு  தீபாவளி வெடி போடுவதில் நம்ம குடும்பம் பிஸி என்பதால் ஸ்கைபில் காணவில்லை எனவே முகநூலில் யாராவது அரட்டை அடிக்க மாட்டுவாங்களான்னு பார்த்தேன்... 

நம்ம ரெண்டு அக்காவும் இருந்தாங்க... அப்புறம் என்ன கொஞ்ச நேரம் அரட்டையைத் தொடருவோமென ஆரம்பிக்க, அந்த நேரத்தில் அங்கு தனியாளாய் வந்த ஆர்.வி.சரவணன் அண்ணனையும் அந்த கூட்டத்துல இழுத்து விட்டுட்டு எங்க வீட்டு மந்திரி  ஸ்கைப்பில் வரவும் முகநூலில் இருந்து எஸ்கேப் ஆயிட்டேன். அப்புறம் ஊருக்குப் பேச்சு... உறவுகளோடு அரட்டை... விஷாலோடு வாக்குவாதம்... என நேரம் கடந்து போக, எழுந்து போய் குளித்துவிட்டு, என்னடா பண்ணினே குளிக்கப் போயிருக்கேன்னு நீங்க நினைக்கலாம்... ஆனா ரெண்டு படம் பார்த்த களைப்புப் போகணுமில்லையா... அதனால ஒரு அரைமணி நேரம் குளித்தேன். பின்னர் பக்கத்து அறை முஸ்லீம் நண்பர்களுக்காக வைத்திருந்த வடை மாவை எடுத்து வடை சுட்டு, எங்களுக்கு தோசை சுட்டு... சாப்பிட்டு முடித்தபோது இரவு பத்தரை மணியாகி இருந்தது. 

அதன் பின்னர் சிறுகதையை மனசில் பதிஞ்சி, தனி ஒருவனை கொஞ்சம் நேரம் தொடர, தூக்கம் கண்களில் தூக்கி அடிக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரம் படம் பாக்கலாம்ன்னு நினைச்சா... என்ன இப்ப சிஸ்டத்தை ஆப் பண்ணுறியா இல்லை தூக்கி அடிக்கவான்னு தூக்கம் தலைவர் விஜயகாந்த் பாணியில் மிரட்ட சிஸ்டத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு தூங்கிப் போனேன்... இப்படியாக எனது தீபாவளி விடுமுறை சிறப்பாகக் கடந்தது. 

காலையில எழுந்ததும் மொபைலை எடுத்தால் வாட்ஸப்பில் ஒரு மெஜேஸ்... யாருக்கிட்ட இருந்துங்கிறீங்க... நம்ம எகிப்தானுக்கிட்ட இருந்துதான்... ஒரு வேலையை காலையில் ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான். ஏன்னா ராஜா 8 மணி வேலைக்கு 10 மணிக்குத்தான் வருவார்... அதனால ராத்திரியே நமக்கு வேலை என்னன்னு முடிவு பண்ணி அனுப்பியாச்சு... அதுவும் எந்த நேரத்துல அனுப்பியிருக்கான் தெரியுமா... ராத்திரி 1.30 மணிக்கு... அவனோட அர்பணிப்புல ஆந்தை விழுக... அந்த நேரத்துல ஆந்தை கூட தூங்கிரும்ன்னு நினைக்கிறேன். 

சரி நேத்து நமக்கு தீபாவளி இல்லை இன்னைக்குத்தான் தீபாவளியின்னு கடுப்போடு அலுவலகம் வந்தேன். அது மிகப்பெரிய பணி... போன வாரம்தான் முடித்தோம். எல்லாம் மறுபடியுமா என்று நான் நினைப்போடு கணிப்பொறியை ஆன் பண்ணினால் அதற்கான பைல் எல்லாம் இல்லை. அவனுக்குப் போன் பண்ணினால் எடுக்கலை. 9.30 மணிக்கு வந்தான், கேட்டதும் எல்லாம் வேண்டாம் இது மட்டுமே என்று கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து பால் வார்த்தான். அப்பாடா என ஆரம்பித்து முடித்தேன். இல்லேன்னா ஒரு நாள் விடுமுறைக்கு மூன்று நாள் வேலையை இன்றே முடிக்கச் சொல்லியிருப்பான்.

(வேதாளம் - இங்கு நாளைதான் ரிலீஸ்... வார விடுமுறையில் படம்
பார்த்துவிட்டு விரைவில் படம் குறித்த பகிர்வு)
எப்படியோ தீபாவளி தினம் விடுமுறையில் கழிந்தது கொண்டாட்டங்கள் இல்லாத மனதின் வெறுமையை போக்க சினிமாக்களோடும் கொஞ்சம் சிந்தனையோடும்... அடிமனதில் ஊரில் கொண்டாடிய நினைவுகளையும் கிளறிவிட்டபடியும்...
-'பரிவை' சே.குமார்.

19 கருத்துகள்:

 1. அட! எப்படிப்பா இப்படி? மூன்று பதிவுகள் அடுத்தடுத்து வ்ந்திருப்பதை காணும் போது மனசு தன் சிந்தனைசிதறலை வெகு உற்சாகமாக பறக்க விட்டிருப்பதாக தோன்றுகின்றதே! நல்லது தான் குமார். தனியாக திபாவளி கொண்டாடியதையும் சுவாரஷ்யதொகுப்பாக்கியவிதம் அருமை. வெடி கொழுத்தல்லையோ?

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமான தீபாவளிக் கொண்டாட்டம் ! குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாடு கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
 3. உங்களது தீபாவளியில் நாங்களும் கலந்துகொண்டதுபோல இருந்தது. இவ்வாறான பகிர்வுகள் நம்மை நெருக்கமாக்கிவிடும் என்பதே உண்மை. வெறுமை தோன்ற வாய்ப்பே இல்லை. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. சினிமாவோடும் ,சிந்தனைகேளோடும் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறீர்கள்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம =1

  பதிலளிநீக்கு
 5. ஊரில் இல்லாத தீபாவளி.... இப்படித்தான் பொழுதைப் போக்குகிறோம். இங்கும் தீபாவளி அன்று அலுவலகம் உண்டு. அன்றைய பொழுது அலுவலகத்தில் கழிந்தது. நேற்று விடுமுறை. எங்கள் பகுதியில் மாலையில் ஆரம்பித்தது தீபாவளி கொண்டாட்டம். இரவு இரண்டு மணி வரை வெடிச்சத்தம்.... வீட்டிலிருந்தேன் - காதில் பஞ்சு வைத்துக் கொண்டு! :)

  பதிலளிநீக்கு
 6. எதிலும் // தனி ஒருவனாய் // அந்த வேதனை புரிகிறது...

  பதிலளிநீக்கு
 7. தீபாவளி கொண்டாட்டத்தை விவரித்த விதம் - அழகு.. அருமை..

  பதிலளிநீக்கு
 8. எங்க இருந்தாலும் நீங்க உங்க குடும்பத்தோடுதான்(மனசளவில்) இருக்கீங்கன்னு நினைச்சு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்

  வித்தியாசமான தீபாவளியாக உள்ளது... படித்து இரசித்தேன் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. ஆஹா... உங்களுக்குத்தான் தீபாவளி சிறப்பாக இருந்திருக்கிறது.....இங்கே மழை மழை...

  பதிலளிநீக்கு
 11. வெளி நாட்டில் தீபாவளி
  வேதனையானது தான்...
  அதை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்..சகோ

  பதிலளிநீக்கு
 12. வெளிநாட்டில் தனி ஒருவனாய் தீபாவளி கொண்டாடுவது சிரமம்தான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. அடடே தீபாவளி ஸ்பெஷல் இவ்வளவு சமாச்சாரமா ? பரவாயில்லையே....
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
 14. அன்பு நண்பருக்கு வணக்கம்
  தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
  முகவரி -
  http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  12.11.2015
  U.A.E. Time: 03.46 pm

  பதிலளிநீக்கு
 15. ம்ம்ம் தனிஒருவன் தீபாவளி!! இப்படித்தான் போகும் இல்லையா...குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கும் உங்களைப் போன்றோருக்கு ஆனால், உங்கள் விவரணத்துடன் நாங்களும் பயணித்தோம்...நன்றாகவே இருந்தது. உங்களுடன் இருந்தது போன்ற உணர்வு......விவரணம் அருமை.....வேதாளம்தான் நல்ல வசூல் என்று பேச்சடிபடுகின்றது. தூங்காவனம் நன்றாக இருந்தாலும் வேதாளத்துடன் போட்டி போட முடியவில்லையாம்....

  பதிலளிநீக்கு
 16. தீபாவளி அன்னைக்கு என்னதான் செஞ்சீங்க?
  - சிறு குறிப்பு வரைக.

  இந்தக் கேள்விக்கு பதில்தான் தங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 17. தீபாவளி அன்றைக்கு அண்ணன் கீழை அ. கதிர்வேல் அவர்களிடம் ஃபோனில் பேசினேன். (சுமார் 20 நிமிடங்கள்.)
  குடந்தை சரவணன் சாரிடமும் பேசினேன். சுருக்கமாக வாழ்த்து சொல்லி முடித்துக் கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 18. தீபாவளியை உர்ச்சாகமாய்க் கொண்டாடியிருக்கிறீர்கள் !

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...