மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 9. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.

இனி...
(அன்னப்பட்சி எங்கேன்னு கேக்கக்கூடாது... வைர மோதிரத்தை தேடினால் அன்னப்பட்சியைக் காணோம்...)

கையிலிருந்த மோதிரத்தை பார்த்துச் சிரித்தார் பொன்னம்பலம், அது பெண்கள் அணியும் விலை உயர்ந்த வைர மோதிரம்... தணிகாசலத்தின் கொலை விவரம் அறிந்து முதலில் சென்ற பொன்னம்பலம் இஞ்ச் பை இஞ்சாத் தேடித்தான் இதைக் கண்டுபிடித்தார். மனைவியிடம் கொடுத்து விட ஆசைதான்... இருந்தாலும் ஏனோ மனசு யோசித்தது... அதனாலேயே இரண்டு நாட்களாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு அலைகிறார். 'இனி தடயம் கிடைக்குதா..? அதான் இருந்த ஒண்ணையும் நான் வச்சிருக்கேனே...’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார். ‘இதைக் கொடுத்தா கேசு முடியும்ன்னா கொடுக்கலாம்... ஆனா இது வெளியவே தெரியாமப் போயிருமே...’ என்று நினைத்தவரின்  செல்போன் கூப்பிட்டது. அதை எடுத்துப் பார்த்தவர் சுகுமாரன் அழைக்கவும், வேகமாக பட்டனைப் பிரஸ் பண்ணி "என்ன சார்... சொல்லுங்க..." என்றார்.

"எங்கய்யா இருக்கே... வீட்டுக்குப் பொயிட்டியா என்ன...?"

"இல்ல சார்... ஸ்டேசன்லதான்... சொல்லுங்க..."

"நீ என்ன பண்றே...? அந்த லதாக்கிட்ட இப்பவே போயி விசாரிச்சிட்டு எனக்கு என்னன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போ..."

"அப்படி என்ன சார் அவசரம்...? நாளைக்குப் போகலாமே..."

"இல்ல நாளைக்குத்தான் எனக்கு கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்குன்னு சொன்னேனுல்ல....விசாரிச்சி முடிச்சிட்டா நாளைக்கு வேற வேலை பாக்கலாம்ல்ல... அதான் இன்னைக்கே முடிச்சிடு... இது தேவையில்லாத்துதான்... பட்... உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கணுமில்ல... ஏதாவது அவகிட்ட கிடைக்கிதான்னு பார்க்கலாம்.... என்ன சரியா?"

"சரிதான் சார்... காலையில இருந்து அலையிறேன்... எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? இங்கயும் கொஞ்சம் வேலை இருக்கு... நாளைக்குப் போறேன் சார்..." என்றபடி அவனின் பதிலைக் கேட்காமல் போனைக் கட் பண்ணினார்.

"வாங்க சார்... என்ன சார்...?" பயத்தோடு கேட்டாள் லதா, அவள் கணவனும் இருந்தான்.

"சும்மாதான்... உங்க ஐயா கொலையில சில தடயம் கிடைச்சிருக்கு அதான் உங்கிட்ட விசாரிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்..."

"எ... என்ன... தடயம் சா... சா....ர்.... அதுதான்.... எ...ல்லாம் சொ...ல்...லிட்டேனே..." பயம் கலந்த பதட்டத்தோடு கேட்டாள்.

"எதுக்கு பயப்படுறே..? ஆமா உங்க ஐயாவுக்கு அன்னைக்கு ராத்திரி நீதானே சாப்பாடு கொடுத்தே...?"

"ஆ...ஆமா..."

"என்ன மருந்து கலந்து கொடுத்தே...?"

"மருந்தா... நானா... என்ன சார் சொல்றீங்க... நா எதுக்கு கொடுக்கணும்...?"

"எதுக்கு கொடுத்தேன்னு நீதான் சொல்லணும்..."

"என்ன சார் மிரட்டுறீங்க... பெரிய இடத்து கொலையில எங்களை பலிகடா ஆக்கப் பாக்குறீங்களா?" அவளின் கணவன் வேகமாகக் கேட்டான்.

"என்னடா குரலை உயர்த்துறே... பொத்திக்கிட்டு உக்காரு... ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போனா விசாரிக்கிற விதமே வேற தெரியுமா... உம்பொண்டாட்டி உடம்புல ஒட்டுத்துணி இல்லாம விசாரிப்போம்... கூட்டிக்கிட்டு போகவா..."

"சா....சார்..."

"பேசாம உக்காரடா..." என்று உறுமிவிட்டு "நீ கேக்குறதுக்கு சரியான பதிலைச் சொல்லு... என்ன இல்லேன்னா ஸ்டேசனுக்குத்தான் வர்ற மாதிரி இருக்கும்..." என்றார் லதாவிடம்.

"சொ... சொல்...றேன்... சார்..." என்ற லதா, உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் கூடிவிட "இங்க ஒண்ணும் யாரும் அவுத்துப் போட்டுக்கிட்ட ஆடலை... வாயத் தொறந்துக்கிட்டு வந்து நிக்க... இவ மொதலாளியை யாரோ கொலை பண்ணியிருக்காக அதான் விசாரிக்க வந்திருக்கேன்... எல்லாரும் போயி அவுக அவுக வேலையைப் பாருங்க..." என்று கத்திவிட்டு, "இங்க பாரு லதா... உனக்கு விவரம் தெரிஞ்சா சொல்லு... நீ பண்ணுனேன்னு சொல்ல வரலை... ஆனா யாருக்கோ உதவியிருக்கேன்னு சந்தேகம் இருக்கு..." என்றார் சற்றே கடுமையுடன்.

"சார்... சத்தியமா எனக்கு ஒண்ணுந் தெரியாது..."

"அப்ப எப்படி சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்துச்சு..."

"அதான் எனக்கும் புரியலை... ஆனா..."

"என்ன ஆனா... சொல்லு..."

"ஐயா படுக்கப் போகுமுன்னால ஒரு டானிக் சாப்பிடுவாங்க... அது அவருக்குன்னே ஸ்பெஷலா மதுரையில நாட்டு மருந்துக்கடையில தயார்ப்பண்றதுன்னு ரெத்தினண்ணன் சொல்லியிருக்கு... அதைச் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்ன்னு ஐயா சொல்லுவாங்கன்னு அண்ணன் சொல்லியிருக்கு..."

"ம்..." என்றவர் 'அட என்னடா இது புஸ்ஸூன்னு போச்சு' என்று நினைத்துக் கொண்டே, "அப்ப அதுல யாரோ மருந்து கலந்திருக்காக... நீ இல்லை அப்படித்தானே...?"

"சத்தியமா... ஏம் புள்ள மேல சத்தியமா எனக்குத் தெரியாது..." பதட்டம் குறைந்து தெளிவாய்ப் பேசினாள்.

"ம்... சரி அங்க ஒரு வைர மோதிரம் கிடைச்சிருக்கு... சார்க்கிட்ட இருக்கு... உனக்கு ஏதாவது அதைப் பற்றி தெரியுமா..?" மெதுவாக பிட்டைப் போட்டார்.

"ம்... வைர மோதிரம்....? ஐயா கையில கூட ஒண்ணு இருக்குமே...?"

"அதான் இருந்துச்சே... அது இல்ல... இது லேடீஸ் மோதிரம்... வித்தியாசமாய் வைரக்கல் பதிச்சி... பாக்க.... அதை எப்படி சொல்றது...? ம்..." சொல்ல வராதது போல் நடித்தார்.

"அன்னப்பட்சி மாதிரியா சார்...?" லதா கண்கள் விரியக் கேட்டாள்.

"எஸ்... அதே... அதேதான்... நீ பாத்திருக்கியா..?"

"ஆமா சார்... அது எங்க தர்ஷிகா அம்மா போட்டிருப்பாங்க... இங்க வர்றப்போ நான் பாத்திருக்கேன்... நானும் அவுகளும் போன்ல போட்டோ எடுத்திருக்கோம்... அதுல கூட இருக்கும்... இருங்க காட்டுறேன்..." என்றபடி தனது மொபைலில் போட்டோவைத் தேடி எடுத்துக் காட்டினாள்.

அதில் லதாவின் தோளில் தனது வலது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டு நின்றாள் தர்ஷிகா. அவளது விரல்களைப் பெரிதுபடுத்திப் பார்த்த பொன்னம்பலம் அதிர்ந்தார். அவளின் கையில் அதே மோதிரம்... 

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

அதாருபா தர்ஷிகா! புதிது புதிதாக ஸ்டைலான பெயர்கள் எல்லாம் உதிக்கின்றதே! தர்ஷிகா தான் கொலையாளியா?

மொத்தமா கதையினை முடித்தப்புறம் படித்தால் தெரிந்துக்கும் தானே? நானெல்லாம் கிரைம் கதை பத்து பக்கம் போயிட்டிருக்கும் போதே சட்டென கடைசிப்பக்கம் போய் முடிவை தெரிந்து கொண்டு மீதியை படிக்கும் ஆளாக்கும். நமக்கு சஸ்பென்ஸ் தாங்காதுப்பா.. சீக்கிரம் யார்னு சொல்லிருங்க..

கிரைம் கதை எழுத முடியாது என சொல்லியே அருமையாக கதையை நகர்த்திட்டே போகின்றீர்களே! அதற்கு பாராட்டுகள் குமார்1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
வருணின் தங்கைதானே தர்ஷிகா... தங்கள் கருத்தைப் பார்த்ததும் பேரை மாத்திட்டமோங்கிற சந்தேகத்துல ஆரம்ப பகுதிகளையும் பார்த்தேன்... பேர் தர்ஷிகாதான்...

மொத்தமா எழுதி வச்சிருந்தா மொத்தமா போட்டுறலாம்... அப்ப அப்ப எழுதணுமில்லையா....?

நீங்க வேற எப்படி முடிக்கப் போறோம்ங்கிற கொக்குச் சிக்கல்ல நிக்கிறேன்... காதல் கதையின்னா கல்யாணத்துல முடிச்சிடலாம்... வாழ்க்கை கதையினா வாழ்க்கையை முடிச்சிடலாம்... இங்க எவனை இழுத்து விடுறதுன்னு தெரியலை...

பார்ப்போம்... இருக்க அஞ்சாறு பேருல ஒரு ஆளை இழுத்துவிட்டு சீனை முடிச்சிருவோம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! தர்ஷிகா....பெரியவரின் மகள் சந்தேக வட்டத்திற்குள் வருகின்றாள்! இது கொஞ்சம் தோன்றியதுதான் இதற்கு முன்னான பதிவைப் படித்த போது....இருந்தாலும் கொலையாளி மாறலாம்.....அதற்கான விடை ஆசிரியரிடம் தானே இருக்கின்றது...தொடர்கின்றோம் குமார்...விறுவிறுப்பாகச் செல்கின்றது...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான திருப்பம்! தொடர்கிறேன்!

KILLERGEE Devakottai சொன்னது…

//"என்னடா குரலை உயர்த்துறே ... பொத்திக்கிட்டு உக்காரு ... ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போனா விசாரிக்கிற விதமே வேற தெரியுமா ... உம்பொண்டாட்டி உடம்புல ஒட்டுத்துணி இல்லாம விசாரிப்போம் ... கூட்டிக்கிட்டு போகவா"//

மேலே உள்ளது அருவெறுப்பான வார்த்தைகளாய் தோன்றினாலும் இன்று தமிழ் நாட்டு காவல்துறையின் உண்மை நிலை இதுதான் அதேநேரம் சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் சந்தேகப்படலாம் இப்படியெல்லாம் கேள்வி கேட்க உரிமை இல்லை ஆனால் நமது நாட்டில் மட்டும் உண்டு
அருமை நண்பரே தொடர்கிறேன்...

தமிழ் மணம் 1

KILLERGEE Devakottai சொன்னது…

நிஷா அவர்களை மாட்டி விடாமலிருந்தால் சரிதான்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

நன்றாக உள்ளது கதை தொடருகிறேன் த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எதிர்பாரா திருப்பம்
தொடர்கிறேன் நண்பரே

நிஷா சொன்னது…

எம்மாம் பெரிய நல்ல மன்சுங்க கில்லர்ஜீ சார்..

எனக்கு உங்க மீசையை பார்த்தே பயம் பயமா வருது. நீங்க என்னன்னால் கொலை கேசுல என்னை மாட்டி விட பார்க்கிறிங்க! எங்கூட்டில் மீன் வாங்கி வெட்டி சாப்பிடும் போதே மீனுக்கு வலிக்குமே ஐயோ பாவமே என மீன் மேல பரிதாபப்பட்டுக்கொண்டே மீனை துண்டு போடும் ஜாதிப்பா நான்.

இந்த குமம்ம்ம்மாரு இப்படித்தான் சொல்லிட்டி சட்டென வேர மாதிரி முடித்து விடும் கண்டுக்காமல் இருங்க சார். ஆரம்பம் என்றிருந்தால் எப்படியும் முடிவு என ஒன்றிருக்கும்ல..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா... அண்ணா எடுத்துக் கொடுத்துட்டீங்க.... புதுசா ஒரு காரெக்டரை உருவாக்கிரலாம்...

நிஷா அக்கா என்னைப் பற்றி சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... தர்ஷிகாவா, அம்மாவா, டாக்டரான்னு எல்லாரும் பட்டி மன்றம் போடுறீங்க... இதுல மூணுல யாருன்னு நானும் உங்க கூட உக்காந்து பாத்துக்கிட்டு இருக்கேனாக்கும்... விபரம் விரைவில் தெரிஞ்சிடும்ல்ல...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
ஆமா ஆரம்பத்துலயே இந்த வட்டத்துக்குள் கொண்டாந்து இருக்கோம்...
அவ எப்படி அப்பாவை... என்ன காரணம்.... ஒருவேளை காதலா... இல்லை அப்பா பக்கம் தப்பிருக்கான்னு யோசிப்போம்... யார் கண்டா வேறு யாராவது வரலாமில்லையா..?
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா...
இதுதானே உண்மை...
நானும் என் சித்தப்பாவும் கோவில் திருவிழா தொடர்பாக போலீசில் சொல்ல வேண்டும் என்பதால் சென்றோம். நான் காலேஜ் படித்தேன்... அப்பா புளியால் ஹைஸ்கூல் தலைமை ஆசிரியர்.

வேலை பார்த்துவிட்டு ஒரு சாதாரண வேஷ்டி சட்டையில் சவரம் செய்யாத தாடியுடன் வந்தார். போனதும் அங்கிருந்த ஒரு போலீஸ், (ஏட்டுக்கு அப்பாவை நல்லாத் தெரியும்) என்ன என்றார். விவரம் சொன்னதும்.. மேலும் கீழுமாக பார்த்துவிட்டு 'அப்படி உக்காருய்யா... ஒரு பேப்பர்ல எழுதிக் கொடு ... எழுதத் தெரியுமா... என்றதும் அப்பா தலையாட்டினார்... சேரில் உக்காரப் போக, அப்படி ஓரமா உக்காரு... இங்க உக்கார்றே என்று ஒரு கிராமத்தானை.., படிக்காதவனை... எப்படியெல்லாம் கேவலமாக நடத்துவார்களே அப்படிப் பேசினார். நான் என்னப்பா என்றதும் பேசாம இரு நமக்கு காரியம் ஆகணும் என்று சொல்லிவிட்டார்.

இவ்வளவுக்கும் அவர் ரொம்ப கோபக்காரர்... ஊர்க்காரியம் என்பதால் பேசாமல் இருந்தார். பள்ளியில் பையங்களை என் கண் முன்னே அடித்திருக்கிறார். ஒரு முறை கணிப்பொறி வகுப்பெடுக்க நானும் நண்பனும் குடும்ப சகிதமாக போயிருந்தோம்... விட்டாரு ஒருத்தனுக்க அறை என் மனைவி கதிகலங்கிப் போச்சு... சின்ன மாமாவுக்கு இவ்வளவு கோபம் வருமான்னு...

கதைக்கு வருவோம் எழுதி அவர் பையரை எழுதி கையெழுத்திட்டு என்னையும் கையெழுத்து இடச் சொல்லிக் கொடுக்க, வாங்க எழுத்தையும் கையெழுத்தையும் பார்த்த போலீஸ், சேரில் இருந்து எழுந்து 'சார் நீங்க...?' என்று இழுத்தார். விவரம் சொன்னதும் 'ஏன் சார் முன்னாலயே சொல்லலை... உக்காருங்க சார்... சாரி சார்' என்றார்.

படிச்சவன்னா பம்முவானுங்க... இல்லேன்னா ஏறுவானுங்க... சில இடங்களில் கதையில் வருவது போல் நடக்கத்தானே செய்கிறது,.. அதான் கதையின் வேகத்திற்காக அதையும் பயன்படுத்தினேன்...

கருத்துக்கு நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Menaga Sathia சொன்னது…

ஆஹா இப்படி சஸ்பென்ஸ் வைக்கீறீங்களே..தொடர்கிறேன் சகோ !!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா சந்தேகம் இப்போது தர்ஷிகா மீதா! தொடர்கிறேன்.