மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 நவம்பர், 2015மனசின் பக்கம் : வேறென்ன நான் பேச...

நாம் எங்கிருந்தாலும் சொந்த ஊரில் நமக்கென ஒரு குடிசை வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும். தேவகோட்டையில் இருந்து எங்க ஊர் மூன்று நான்கு கிலோ மீட்டருக்குள்தான் என்றாலும் ஊரில் ஒரு வீடு என்பது எனது ஆசையாக மட்டுமல்ல கனவாகவும் இருந்தது. அதுவும் வீடும் அதைச் சுற்றி மரங்களுமாய் இருக்க வேண்டும் என்பது எங்கள் இருவரின் கனவும் கூட, தேவகோட்டையில் வீடு கட்டியபோது ஒரு சிறு மரம் கூட வைக்க முடியாத அளவுக்கு கட்டி விட்டார்கள். கிடந்த இடமெல்லாம் சிமெண்ட் போட்டு விட்டார்கள். அதனால் ஊரில் கட்டும் வீட்டைச் சுற்றி மரம் வைக்க வேண்டும் என்ற ஆசை... அதற்கான இடமும் இருக்கிறது. ஆமாம் ஊரில் சிறியதாக ஒரு வீட்டை ஆரம்பித்து விட்டோம்... பணம் பிரச்சினைதான் என்றாலும் இந்த வருசம் எங்கள் புது இல்லத்தில் கரகம் வைத்து திருவிழாக் கொண்டாடுவோம் என்ற சந்தோஷத்தோடும்... மே மாதத்துக்குள் வீட்டை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடும்... இறையருளோடு பயணிக்கிறோம். 

***
டந்த சனிக்கிழமை திடீரென கில்லர்ஜி அண்ணாவிடம் இருந்து போன்... பேத்தியை பார்க்க வந்து அப்படியே எங்களையும் தன் அன்பால் ஈர்த்துக் கொண்ட துரை.செல்வராஜூ ஐயா அவர்கள் ஊருக்குப் போகிறார் என்றும் அவரை வழியனுப்ப ஏர்போர்ட் வரைக்கும் போயிட்டு வரலாம்... நான் பதினோரு மணிக்கு வருகிறேன் என்றும் சொன்னார். சரி என்று கிளம்ப, மற்றொரு நண்பர் போன் செய்து 11 மணிக்கு கட்டிடத்தின் அருகில் வருகிறேன் என்றார். அவரிடம் 11 மணிக்கு நான் ஏர்போர்ட் போறேன் மதியம் பார்க்கலாம் என்றேன்... இல்லையில்லை பக்கத்தில்தான் இருக்கேன் 10.30 மணிக்கெல்லாம் வந்துடுறேன்... தியேட்டர்க்கிட்ட வா என்றார். சரி என்று தியேட்டருக்கு அருகில் போக, கில்லர்ஜி அண்ணா நான் உங்க கட்டிடம் அருகில் நிற்கிறேன் என போனில் கூப்பிட்டார். அவரிடம் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி நண்பரைப் பார்த்துவிட்டு சமையலுக்கு காய்கறி வாங்கி வந்து கொடுத்துவிட்டு அண்ணனின் காருக்குப் போகும் போது மணி 11. சொன்ன நேரத்தில் போனாலும் எனக்காக அவரும் அவரின் மைந்தர் தமிழ்வாணன் அவர்களும் காத்திருந்தது ரொம்பக் கஷ்டமாயிருந்தது. எனக்கு சொன்ன நேரத்துக்கு முன்னாலயே செல்ல வேண்டும்... சரி நம்ம அண்ணன்தானே காத்திருந்தார் என்றபடி காரில் ஏற அருமையான இசையுடன் நகர்ந்தது .

(கில்லர்ஜி வலையில் சுட்டது... தமிழ்வாணன், நான், அன்பின் ஐயா,
அவரின் மருமகன் ... கிளிக்கியது கில்லர்ஜி அண்ணா)
கொஞ்சமே கொஞ்சம் வலைப்பதிவர்கள் பற்றி பேசி... இடையில் கூல்டிரிங்க்ஸ் குடித்து ஏர்போர்ட் போனபோது ஐயாவும் அவரது செல்லப்பேத்தி, மாப்பிள்ளை, மகளோடு கார் பார்க்கிங்கில் நின்றார். பின்னர் பேசியபடியே விமான நிலையத்துக்குள் சென்றோம். அங்கு கொஞ்சமே கொஞ்சம் போட்டோ சூட்... என்ன நான்தான் விடுமுறை தினம்தானே என்று சூட் போடாமல் பர்முடாஸில் போனேன்... கில்லர் அண்ணா முழு உருவமும் போட்டோவில் வரணும் என்று கேட்டுக் கேட்டு எடுக்கச் சொல்லும் போது நினைச்சேன்... எதுக்கோவுல கேக்குறாருன்னு... நேற்று கில்லர்ஜிக்குள் போனால் அங்க நம்மளை நமீதா கணக்குல போட்டோ போட்டு இந்த ஊருக்கு காட்டிட்டார். என்னைப் பார்த்ததும் ஐயா அவர்கள் என்ன குமார் உங்க மகன் போடுற டவுசரோட வந்திருக்கீங்கன்னு கேட்டாரே பாக்கலாம்... ஐயோடா... விஷால் இன்னும் டவுசரே போடலையில்லன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்... நான் யூத்தானேங்க... டவுசர் போட்டா என்னங்க தப்பு... ஒருவேளை ஐயாவுக்கு என்னைப் பார்க்கும் போது பெரிய மனிதானாய்த் தெரிந்திருக்கும் போல... 

ஐயாவோடு போட்டோ எடுத்து... பேசி... நேரமின்மையால் அவரை அனுப்பி விட்டு நாங்கள் மீண்டும் அபுதாபி நோக்கிப் பயணப்பட்டோம். கார் பார்க்கிங்கில் இருந்து வெளியே வரும்போது எல்லா மொழிகளிலும் நன்றி என்று எழுதியிருக்கிறார்கள்... இது புதிது... அதில் நம் தமிழும்... சந்தோஷமாய் இருந்தது... எல்லா இடத்திலும் தமிழுக்கு மரியாதை இருந்தாலும் இங்கு சேர நாட்டுக்காரர்களின் மொழிக்குத்தான் மதிப்பு... காரணம் நாம் இந்தியன் என்போம்... அவனோ அது என்னவோ தனிநாடு போல சேர நாடு என்பான். இப்பத்தான் துபாயில் கார் லைசென்ஸ் எடுப்பதற்கு எழுதும் தேர்வில் தமிழில் எழுதலாம் என கொண்டு வந்திருக்கிறார்கள். 
***
நான் கமல் படங்களின் தீவிர ரசிகன்... அவரின் சலசலப்பை உருவாக்கும் பேச்சுக்களோ... சரியாக அமையாத திருமண வாழ்க்கையோ கணக்கில் எடுக்கப்படுவதில்லை... படங்களில் அவரை ரொம்பப் பிடிக்கும்... படிக்கும் காலத்தில் பாக்யராஜின் படங்கள் கதைக்காக பிடிக்கும் என்றால் கமலின் படங்கள் கதை இருக்கோ இல்லையோ அவருக்காக பிடிக்கும். அப்படிப் பார்த்த குருதிப்புனல் அப்போது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை... சென்ற வாரத்தில் மீண்டும் பார்க்கக் கிடைத்தது... ஒரு தீவிரவாதியை படத்தின் ஆரம்பத்தில் கைது செய்து அவனிடம் விசாரிக்கும் போலீஸ் ஆபீஸர் அவனை மாற்ற முடியாமல் அவனின் செய்கையால் எப்படி அடி பணிகிறான்... பின்னர் எதை எதை இழக்கிறான் என்று அருமையான கதைக்களம்... 


தீவிரவாதியை இந்தளவுக்கு பேச வைத்து வந்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன வசனங்கள்.... முதலில் கமலிடம் அடி வாங்கும் தீவிரவாதி நாசர்... பின்னர் நாசரிடம் அடி வாங்கும் போலீஸ் ஆபீசர் கமல் என ஆடு புலி ஆட்டம்... அர்ஜூன் போலீஸ் ஆபீசராய்.... கவுதமி கமலின் மனைவியாய்... அன்னைக்கே மனுசன் கவுதமிக்கு பிராக்கெட் போட்டு வச்சிட்டாருன்னு ரொமான்ஸ் சீனெல்லாம் சொல்லுது... அதான் தேவர்மகன், குருதிப்புனல், அபூர்வ சகோதரர்கள், நம்மவர் என தொடர்ந்து அம்மணியோடு ஆட்டம்... வாழ்க்கையில் துணையாய் வந்த பிறகும் பாபநாசத்தில் ரசிகர்களுக்காக கொஞ்சம் ரொமான்ஸ். சரி அது எதுக்கு இப்போ... குருதிப்புனலில் வசனங்கள்... வாவ்... சூப்பர்... அதுவும் கமல் தன்னோட குரலில் ஏற்ற இறக்கமாய் பேசும் போது எல்லாருக்கும் ரசிக்கப்பிடிக்கும்... ரசிகனாய் எனக்கு ரொம்பப் பிடித்தது.

***
நேற்று முகநூலில் உலாவும் போது குடந்தையூர் சரவணன் அண்ணன் 'கொஞ்சம் காபி... கொஞ்சம் மழை' அப்படிங்கிற குறும்படம் பற்றிச் சொல்லியிருந்தார். உடனே சென்று பார்த்தேன்... ராசா சாருக்காகவே எடுத்தது போல அவரின் பாடல்கள் படத்தில் மழைச்சாரலாய்.... சிறிய கதைதான்... முதலிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது இறுதிக்காட்சியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்று... ஆனாலும் கையை அறுத்துக்கொள்ள கத்தியை வைக்கும் ஒருவனுடன் பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி பேசும் பேச்சுக்களும் சிச்சுவேசனுக்கும் மிகப் பொருத்தமான பாடல் தேர்வுகளுமாய்.... ரொம்ப நல்லா இருந்தது... ஒரு மாலை நேரம்.... லேசான மழை... சன்னலோரம்... ஒரு கப் காபி.... ராசாவின் பாடல்கள்.... இந்த ரசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை வைத்தே மனசில் ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சூழலை பண்பலை தொகுப்பாளினி சொல்ல... அதற்கேற்ற பாடலோடு... அப்படி ஒரு காட்சியும் திரையில்... மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட படம் ரொம்பப் பிடிச்சிருந்தது.... உங்களுக்கும் பிடிக்கும் பாருங்கள்.


***
சென்ற ஞாயிறு அன்று காலையில் எழும்போதே தலைவலியும் தொண்டை வலியுமாக இருந்தாலும் வாரத்தின் முதல்நாள் என்பதால் அலுவலகம் சென்றேன். அங்கு வேலை அதிகம்... முடிந்த வரை பார்த்தேன்... ஒரு கட்டத்தில் முடியாது என்ற நிலை வர, எனக்கு முடியலை... ரெண்டு மணிக்கு மேல கிளம்புறேன் என்று எனக்கு மேலிருக்கும் இஞ்சினியரான (அவனோட வேலை பெரும்பாலானவற்றை நான்தான் பார்க்கணும், பேருதான் எனக்கு மேல உள்ள இஞ்சினியர்) எகிப்துக்காரனிடம் சொல்ல, நோ... நோ... வி கேவ் அர்ஜெண்ட் ஓர்க்... சோ பினிஷ் தட் ஒர்க் டூடேன்னு சொன்னதும் எனக்கு சுல்லுன்னு வந்துச்சு... உனக்கு எப்பவுமே எல்லா வேலையுமே அர்ஜெண்ட்தான்டா அப்படின்னு கத்தி அதோட இன்னும் கொஞ்சம் வார்த்தை சேர்த்து கத்திவிட்டு எனது கணிப்பொறி முன்னால் அமர்ந்தேன்... ஓகே... ஐ வில் செக்... தென் யூ வில் கோ ஆப்டர் 3.30 என்று இறங்கி வந்தார். எனக்கு வேணான்டா... நான் எப்பவும் போல 5.30க்கு போய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனுடன் பேசவில்லை... 

எனக்கு என்ன கோபம்ன்னா சேர நாட்டுக்காரனுக்கு எப்ப கேட்டாலும் அனுமதி கொடுப்பான்... அதே போல பாகிஸ்தானிக்கும்... அவர்கள் எல்லாரும் நடிக்கத் தெரிந்தவர்கள்... எனக்கு நடிக்கத் தெரியாது... நடிக்கவும் விரும்புவதில்லை... என் வேலை என்னவோ அதைச் செய்வேன்... சும்மா அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன்னு எல்லாம் பில்டப் பண்ண மாட்டேன்... அது அவனுக்கே தெரியும்... சரி விஷயத்துக்கு வருவோம். எப்பவும் காலையில் 7.30, 7.45க்கு எல்லாம் அலுவலகம் போய் விடுவேன்... மாலை 5.30 மணிக்கு மேல்தான் கிளம்புவேன்... இடையில் சாப்பாட்டுக்கு 10 நிமிடம் மட்டுமே... ஆனால் மற்றவர்கள் ஒரு மணி நேரம் எடுப்பார்கள்... மறுநாள் எட்டு மணிக்கு அலுவலகம் சென்றேன்... 5.30க்கு கிளம்பினேன்... 

புதனன்று வந்து இது அர்ஜெண்ட் ஒர்க்... நீ என் கூட இருந்து முடிச்சிக் கொடுத்துட்டுப் போ... நாளை 3 மணிக்குப் போகலாம் என்று டீலிங்க் பேசினார். அன்னைக்கு உடம்பு முடியலைன்னு சொன்னப்போ என்ன சொன்னாய்... யோசி நண்பா... அது இப்போ உனக்கு... என்னோட வேலை நேரம் 8 முதல் 5.30 வரை... அதற்குள் என்னால் எது முடியுமோ அதுதான்... 5.30க்கு மேல ஒரு செகண்ட் கூட நான் இருக்கமாட்டேன் ஓகேவா... யார்கிட்ட வேணுமின்னாலும் சொல்லிக்க... நான் பதில் சொல்லிக்கிறேன் என்றதும் ஓகே குமார்.... என்று சொல்லிவிட்டான். நானும் கிளம்பி வந்துவிட்டேன். 

அன்று பாகிஸ்தானி 10 மணி வரை இருந்திருக்கிறான்... அவரு நல்ல பெயர் வாங்கணுமாம்... மறுநாள் எனக்கு ஓவர் டைம் பணம் வாங்கித்தாறேன்னு சொல்லியிருக்கான்னு சொன்னான்.... எனக்குத் தெரியும் எங்க கம்பெனியில் ஓவர்டைம் இதுவரைக்கும் கொடுத்தது கூடை நிறைய என்பது... சிரித்துக் கொண்டேன். எகிப்துக்காரனுக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு தூக்கம் வராமல் செய்யணுமின்னு மனசு சொல்லுது... ஆனா பாவமா இருக்கு... ஆனாலும் அவனுக்கு அவனோட தவறு புரிய வேண்டும்... அதுவரை இது தொடரும்.
***
மிழகத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரித்திகா யாஷினி அவர்களை வாழ்த்துவோம்.

India's first transgender SI pirithika

***
ழகர்சாமியின் குதிரையில் வரும் பூவைக்கேளு ... காத்தைக் கேளு பாடலில் ராஜாவின் இசையையும் கேளுங்க... ரொம்பப் பிடிக்கும்...மனசின் பக்கம் வளரும்...

-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. கதம்பமாய் நினைவுகள், விஷயங்கள்.. உங்கள் சந்திப்பு பற்றி கில்லர்ஜி பதிவிலும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. இது போல தொடர்ந்து எழுதுங்க. பேச முடியாத தருணங்களை உங்களுக்குப் பின்னால் வரும் உங்கள் தலைமுறைகள் உங்களைப் பற்றி புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் வேலை நிலைகளை நினைத்தால்... மிகவும் வருத்தமாக இருக்கிறது சகோதரரே...

  பதிலளிநீக்கு
 4. மனசோடு பேசியது மனசை தொட்டது குமார்.

  பதிலளிநீக்கு
 5. மரங்கள் சூழ புதிதாய் ஒரு வீடு
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  அண்ணா
  ஒவ்வொரு தகவலும் நெஞ்சை பிசைகிறது... த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. இது போன்ற பதிவுகளை படிக்கதான் எனக்கு பிடிக்கிறது இதை படிக்கும் போது உங்களோட நேரடியாக உரையாடியது போல இருக்கிறது கதை கவிதையை படிப்பதை விட இப்படி வெளிப்படையாக பேசுவது எழுதுவதுதான் சுவையாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 8. அன்றைய தினத்தை அழகாக நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்..

  மேலும் பல தகவல்கள்.. பதிவின் தொகுப்பு அருமை..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 9. கதம்பமாய் செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. கதம்பம் அழகாக மணத்தது தங்களது அலுவலக விடயத்தை தவிற என்ன செய்வது நேர்மை முடிவில்தான் வெல்லும் நண்பரே..
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் ஜோர்! மனசின் டைரிக் குறிப்புகள் போன்ற எல்லாமே யதார்த்தமாக வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக...//நான் யூத்தானேங்க... டவுசர் போட்டா என்னங்க தப்பு...// யூத்தேதான்....தப்பே இல்லைங்க...

  அந்தக் குறும்படம் பார்க்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 12. அடேங்கப்பா! குமார் உங்களுக்குன்னு இப்பல்லாம் ஒரு பெரிய தனி வட்டமே உருவாக்கிட்டு வரிங்கப்பா! கலக்குங்க..!

  பதிலளிநீக்கு
 13. சொந்த வீடு - வாழ்த்துகள் குமார்.

  பதிவில் சொல்லி இருக்கும் மற்ற விஷயங்களும் நன்று.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...