மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வேதாளம்... நாட் அவுட்

ஜீத்துக்கு நெகட்டிவ் காரெக்டர் பண்ணுவது என்றால் ரொம்பச் சந்ததோஷம் வந்து விடும் போல... ரொம்ப அசால்ட்டாக... அட்டகாசமாக... ஆக்ரோஷமாய்... அடித்து நொறுக்கியிருக்கிறார். டிரைவர் கணேஷாக இருக்கும் அஜீத் வேதாளமாக விஸ்வரூபம் எடுக்கும் போது திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வரும் படங்களின் வெற்றியே வேகமெடுக்கும் திரைக்கதைதான்... இதிலும் அதே பார்முலாதான்.


தங்கை லஷ்மிமேனனை ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதற்காக கல்கத்தா வரும் அஜீத், மயில்சாமியின் வீட்டில் தங்கி அவரின் உதவியால் கோவை சரளாவும் அவரது மாப்பிள்ளை சூரியும் நடத்தும் வாடகை டாக்ஸி கம்பெனியில் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். தானுன்டு, தன் தங்கை உண்டு... தங்கள் வாழ்வு உண்டு என்று இருக்கிறார். அப்போது கல்கத்தா காவல்துறை ஆணையர் டாக்ஸி டிரைவர்களை எல்லாம் கூப்பிட்டு போலீஸ் தேடும் ரவுடிகளின் போட்டோக்களைக் கொடுத்து இவர்களைப் பார்த்தால் துப்புக் கொடுங்கள் என்று சொல்ல, அவர்களில் ஒருவனைப் பார்க்கும் அஜீத் போலீசுக்கு தகவல் கொடுக்க, வில்லன் குரூப்பில் ஒரு கோஷ்டி  பிடிபட, வில்லன் குரூப் அஜீத்தைக் கண்டு பிடித்து மடக்குகிறது. இதுவரைக்கும் பயணிக்கும் கதை ரொம்பச் சாதரணமாக அண்ணன் தங்கை பாசத்தை மட்டுமே மையப்படுத்தி பயன்படும் கதையில் ஆஜீத்தும் லட்சுமி மேனனும் படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.

அஜீத் யார்..? அவர் கல்கத்தாவுக்கு வரும் முன்னர் எங்கிருந்தார்...? என்னவாய் இருந்தாய்...? அவரின் தங்கை சொந்தத் தங்கையா... இல்லையா...? என்ற முடிச்சுக்கள் எல்லாம் இடைவேளையின் போது அவிழ்க்கப்பட்டாலும் அஜீத் வில்லனைச் சந்திக்க ஆரம்பிக்கும் அந்த இடத்தில் இருந்தே வேதாளம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. சாதுவாய் இருக்கும் அஜீத் வில்லனின் ஆட்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்யும் இடத்தில் காட்டும் முகபாவங்கள்... மனுசன் அனுபவிச்சி நடிச்சிருக்கிறார்.

வேதாளமாய்... பழைய பாடல்களை டேப்பில் ஓடவிட்டும்... பாடிக்கொண்டும் சண்டை போடுவது ரசிக்க வைக்கிறது. முதுகில் கத்திக் குத்துப்பட்டு கிடக்கும் போது லெஷ்மிமேனன் பதற, 'என்னை ரொம்பப் பேரு முதுகில் குத்தியிருக்கிறான்...' என்று சொல்லும் அவரின் மனதில் உள்ளதைச் சொல்வது போல்த்தான் தெரிகிறது.  பணம் கொடுத்தால் எதுவேண்டுமானாலும் செய்யும் ரவுடியாய்... லஷ்மிமேனனின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து வீட்டைப் பூட்டிவிட, அவரும் கண் தெரியாத அப்பா, அம்மாவும் இவர் வீட்டில் வந்து தங்க... அவர்களை விரட்ட இவர் எடுக்கும் முயற்சிகளும் அதெல்லாம் நகைச்சுவையாய் முடியும் போதும் அஜீத் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய அஜீத்தாக பார்க்க முடிந்தது.


வில்லனிடம் லஷ்மிமேனன் உள்பட நிறையப் பெண்கள் மாட்டியிருக்க, தனது வண்டியில் மோதி சைலண்சரை உடைத்ததற்காக பணம் வாங்க வந்து திரும்பும்போது 'இவனுக்கு காசைத் தூக்கிப் போட்டா நாய்க்கு எலும்புத்துண்டு கிடைத்த மாதிரி போய்க்கிட்டே இருப்பான் போல' என்று சொன்னதும் 'என்னோட தன் மானத்துக்கு ஒரு இழுக்குன்னா சும்மா போகமாட்டேன்...' என்று சொல்லி அடித்து நொறுக்கி சண்டையில் கண்டெயினர் கம்பியை இழுத்துவிட பிடிபட்ட பெண்களை எல்லாம் தன்னை அறியாமல் காப்பாற்றி விடுவார். அதற்காக எல்லாத் தாய்மார்களும் நீ நல்லா இருப்பேன்னு சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு போகச் சொல்லு என எங்கே தான் வேதாளத்துள்ள இருந்து கணேஷா வெளிய வந்துருவேனோன்னு பயந்து சொல்வதும்.. லஷ்மிமேனனின் அப்பாவும் அம்மாவும் வீட்டை விட்டு வெளியேற, அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் தவிப்பதும்.. அருமை. 

லஷ்மிமேனனின் குடும்பம் வில்லனால் குத்துப்பட்டு கிடக்கும் போது அங்கு வரும் அஜீத்திடம் 'என் மனைவி உயிரோட இருக்காளான்னு பாருப்பா' என்று கதறி, 'அவ பொயிட்டாளா.... எனக்கு ஒரு நிமிடமாச்சும் முன்னால போகணுமின்னு சொல்வா... பொயிட்டாளா' என்று கதறி, 'எம்மகளைப் பாருப்பா...  அவளை எப்படியாச்சும் காப்பாத்து...' என்று கையைப் பிடித்து அழுது 'நீ காசு கொடுத்தாத்தானே செய்வே... இந்தா என மோதிரத்தையும் ரத்தத்தோடு கொஞ்சம் காசும் கொடுக்க... அந்த இடத்தில் நொறுங்கி அழுது அவளைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்ரிக்கு ஓடுகிறார் அஜீத். அங்கு தன்னை முன்பு இவள்தான் காப்பாற்றியிருக்கிறாள் என்பதை அறிந்து லஷ்மியைக் காப்பாற்ற அண்ணனாய் மாறி விடுகிறார், பழைய நினைவுகளை மறந்து போனவருக்கு பாசமான அண்ணனாக மாறி எல்லாம் விடுத்து அவளுக்காக வாழ்கிறார் என்றாலும் பணத்துக்காக பண்ணியவர் பாசத்துக்காக வேதளாமாக மாறி வில்லன்களை வேட்டை ஆட ஆரம்பிக்கிறார்.

தம்பி ராமையாவுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம்... கண் இல்லை என்றாலும் எல்லா வேலைகளும் தானே செய்வதும்... சாகும் தருவாயில் மகளுக்காகவும் மனைவிக்காகவும் அழுவதும் என மனிதன் கலக்கலாய் நடித்திருக்கிறார்.


லஷ்மிமேனன் தங்கையாக வாழ்ந்திருக்கிறார். எந்தப் படமாக இருந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் ராஜ்ஜியம் செலுத்தும் அவர் இதில் தங்கையாக படம் முழ்வதும் அஜீத்துடன் பயணிக்கிறார். தனது கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கியிருக்கிறார். சில இடங்களில் நடிப்பில் அஜீத்தை மிஞ்சி நிற்கிறார்.

ஸ்ருதி... தமிழில் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவில்லை என்ற ஒரு கருத்தை வேதாளம் மாற்றியிருந்தாலும் ஸ்ருதிக்கு இதில் நடிப்பதற்கான காட்சிகள் அதிகம் இல்லை. வந்து போகிறார் அவ்வளவே. காமெடியன்கள் எல்லாம் அவரின் கவர்ச்சியில் சொக்கித் தவிக்கிறார்கள்.

கோவை சரளா, சூரியின் காமெடி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சிரிப்பே வரவில்லை என்பதே உண்மை. சூரி சொல்லும் 'ஆசம்... ஆசம்...' நல்லாயிருந்தாலும் பல இடங்களில் அவர் கடுப்படிக்கிறார். இவருக்கு அஜீத்-அழகர்சாமி, அஜீத்-மயில்சாமி, அஜீத்-மொட்டை ராஜேந்திரன் இடையிலான நகைச்சுவைகள் ரசிக்க வைத்தன.

அனிருத்தின் இசையில் பாடல்கள் தனியாக கேட்கும் போது என்னடா இப்படி இரைச்சலான இசை என்று நினைக்கத் தோன்றினாலும் படத்தில் பார்க்கும் போது 'ஆலுமா... டோலுமா...', 'வீர விநாயகா...' இரண்டும் ஆட்டம் போட வைக்கும் ரகம். 'உயிர் நதி...' உணர்வுப்பூர்வமான பாடல். பின்னணி இசையில் சட்டி, முட்டி எல்லாம் போட்டு உருட்டியிருந்தாலும் இரைச்சல் அதிகமிருந்தாலும் அஜீத் வேதாளமாய் விஸ்வரூபமெடுக்கும் இடங்களில் எல்லாம் பின்னணியில் கலக்கியிருக்கிறார்.

வில்லன்களைக் கொல்வது... தெறிக்க விடுவோமா என்று கேட்பது... தங்கைக்கு தன்னோட கடந்த காலம் தெரியக் கூடாது என்று நினைப்பது... இப்படி மாறி மாறி கணேஷாகவும் வேதாளமாகவும் வாழும் அஜீத் படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுவதும் ஒன் மேன் ஆர்மிதான்... 


தங்கையை பின்தொடர்ந்து காதலிப்பவரிடம் பெண்கள் குறித்துப் பேசும் இடத்தில்...  தங்கைக்கு அடிப்பட்டிருக்கு என்று சொல்ல, அலறி ஓடிவரும் அஜீத், ஸ்ருதியிடம் இப்படியெல்லாம் செய்யாதீங்க என தங்கை குறித்து பேசும் இடத்தில்... தான் கொலைகாரன் என்று ஸ்ருதி தெரிந்து கொண்ட இடத்தில் கண்ணாடியை அடித்து உடைத்து லஷ்மிமேனன் பற்றிச் சொல்லும் இடத்தில்.... தங்கையைத் தேடி போனில் பேசியபடி  ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சிக்கனலில் நிற்கு வண்டியில் எந்த வண்டி என கண்டுபிடிக்க லைட் வயரைக் கட் பண்ணச் சொல்லி தவிக்கும் இடத்திலும்... ஒரு அண்ணனாய் எல்லார் மனதிலும் இடம் பிடிக்கிறார் அஜீத்.

மூன்று வில்லன்கள் இருந்தாலும் அவர்கள் யாருமே தெரிந்த முகங்கள் இல்லை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள்... அஜீத்தே வில்லனாய் நடிக்கும் போது மற்ற வில்லன்கள் எப்படியிருந்தாலும்... வந்து செத்துப் போனாலும்... தல அடித்து ஆடும் போது வேறு எந்த வில்லனைப் பார்க்கத் தூண்டும்.

லஷ்மிமேனன் பாத்திரத்தில் ஸ்ருதி நடித்திருக்கலாம் என்றெல்லாம் முகநூலில் சிலர் சொல்லியிருந்தார்கள்... ஸ்ருதிக்கு கிடைக்கும் கேப்பில் எல்லாம் கவர்ச்சியாய் நடிக்க வேண்டும்... டவுசர் பனியனில் திரையில் குதிக்க வேண்டும். அப்படிப்பட்டவருக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் தங்கை கதாபாத்திரம் எப்படி ஒத்து வரும். பாவம் நாயகனுடன் ஒரு காதல் டூயட் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் கவர்ச்சி காட்டியிருப்பார். சால்ட் அண்ட் பெப்பர் தலையோடு வீரத்தில் தமனாவுடன் ஆடிப்பாடியதை பலர் மறந்திருக்க மாட்டார்கள் என்பதால் தல ஜகா வாங்கிட்டார் போல, அவர் நடக்க விட்டு பின்னாலேயே சொந்தக்குரலில் பாடி ஆடுகிறார்.

மயில்சாமி, மன்சூர் அலிகான் என பலரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாற்பது வயசுக்கு மேல் அஜீத்துக்கு சுக்ர திசைதான் போலும்... தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். இதுவே அவரின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம்... தன்னுடைய திரையுலக வாழ்வில் அதிகமான தோல்விப் படங்கள் கொடுத்த நாயகனாக இருந்தாலும் இன்னமும் தான்தான் கிங் என்பதை மீண்டும் வேதாளத்தில் நிரூபித்திருக்கிறார்.


'எண்ணம் போல் வாழ்க்கை' என்று அடிக்கடி சொல்வாராம்... மற்றவர்கள் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் அந்த மனதுக்கே... உடம்பில் பல வலிகளைச் சுமந்தாலும்... பட்ட கஷ்டங்களுக்கான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அஜீத்தின்  திரையுலக வாழ்வில் வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம் வரிசையில் வேதாளம் ஒரு மைல் கல்... அவரின் திரை வாழ்வில் இன்னும் சிறப்பான பயணத்தை தொடர அமைத்துக் கொண்ட பாதையில் வேதாளம் பக்க பலமாக இருக்கும்.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு... வில்லன் இருக்கும் இடத்திற்கு ஸ்ருதி ஏதோ மாமியார் வீட்டிற்கு வருவது போல் வருவதெல்லாம் பெரும் அபத்தம்தான்... இப்படி நிறைய... இருந்தாலும் எல்லாமே அஜீத் என்னும் மாஸ் ஹீரோவுக்கு முன்னால் அமுங்கிப் போய் விடுவதென்னவோ உண்மை.

தமிழ் சினிமாவில் கதை எல்லாம் தேவையில்லை... மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் நிறைத்து வைத்தாலே போதும்... அந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்த வகைதான் வேதாளம்... அஜீத்தின் ஆக்ரோஷமான மாஸ்தான் படத்தின் வெற்றிக்கான முக்கியகாரணி. நமக்கெல்லாம் நல்ல கதைகளோடு படம் வேண்டும் என்றால்  மலையாளக் கரையோரம் ஓதுங்கி அன்னையும் ரசூலும், பெங்களூர் டேய்ஸ், த்ரிஷ்யம், பிரேமம், என்னு நிண்ட மொய்தீன், பாஸ்கர் தி ராஸ்கல் என பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டியதுதான்.

வேதாளம்... அஜீத்தின் ரணகள ஆட்டம்...

ரசிகர்களுக்கு தீபாவளி வானவேடிக்கை...

மொத்தத்தில் படம்... ஆசம்... ஆசம்...
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம் நண்பரே
அவசியம் பார்க்கிறேன்நன்றி
தம 1

சாரதா சமையல் சொன்னது…

விமரிசனம் அருமை குமார்.

நிஷா சொன்னது…

எப்படித்தான் இப்படி எழுத முடிகின்றதோ? பாராட்டுகள் குமார்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு...!

கோமதி அரசு சொன்னது…

நல்ல விமர்சனம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான விமர்சனம். வேதாளம் நல்ல வசூல் என்று சொல்லப்பட்டது. "தல" தலதான்......

சென்னை பித்தன் சொன்னது…

விமர்சனம் சூப்பர்!தல,தெறிக்க விட்டுட்டாரோ?

கலையன்பன் சொன்னது…

விட்டா...
தொடரும்-னு போட்டு எழுதுவீங்க போல...

மனோ சாமிநாதன் சொன்னது…

படத்தை பார்க்கணுமா என்று யோசித்துக்கொன்டிருந்தேன். உங்கள் விமர்சனம் படித்த பிறகு பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அஜீத் என்னும் மாஸ் ஹீரோவுக்கான படம்... கதை கொஞ்சமே கொஞ்சம் அடிதடிதான் அதிகம்... தங்களுக்கு பிடிக்குமா தெரியாது...
ஆனால் அஜீத்தை விரும்பினால் பார்க்கலாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
என்னமோ கிறுக்குறோம் அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ரைட்டா... இல்லை ரைட்ட்ட்ட்ட்டுவா...?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
ஆமாம் தீபாவளி ரேசில் முதலில் போய்க் கொண்டிருக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தலை தெறிக்க ஓட விடாமல் தல, சும்மா தெறிக்க விட்டுட்டாப்ல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
இன்னுமா... அது சரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
அண்ணன் தங்கை செண்டிமெண்ட், அடிதடிதான் கதை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். படம் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Menaga Sathia சொன்னது…

நானும் பார்த்துட்டேன்,ஆனா உங்க அளவுக்கெல்லாம் விமர்சனம் எழுத வரலை...முழுப்படத்தையும் அழகா எழுதிருக்கீங்க,வாழ்த்துக்கள்!!