மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள்.
இனி...

ஹோட்டல் பாண்டியன்...

அறை எண் : 144

சுகுமாரன், பொன்னம்பலம், வருண் தவிர வேறு யாரும் இல்லை.

"சொல்லுங்க வருண்... தர்ஷிகாக்கிட்ட இருக்க மாதிரி வேற ஒருத்தர்க்கிட்டயும் வைரமோதிரம் இருக்குன்னு சொன்னீங்க... யார்க்கிட்ட இருக்கு..."

"சொல்றேன் சார்... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசலாமா..?"

"உங்க அப்பா கொலை சம்பந்தமாவா... இல்லை..."

“அது தொடர்பாத்தான்... விவரமாப் பேசினாத்தானே எங்கப்பாவோட மறுபக்கம் உங்களுக்குத் தெரியும்...”

“மறுபக்கமா..?”

"ஆமா... இருங்க ஆரம்பத்துல இருந்து சொல்றேன்...” என்றவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “நாங்க சின்ன வயசுல அம்மாவை விட்டுப் பிரிஞ்சோம்..." என்று வருண் ஆரம்பிக்க, தணிகாசலம் இறந்த அன்று காவல் நிலையம் வந்த போது அவன் ‘அம்மா’ என்ற வார்த்தையை பயன்படுத்தவேயில்லை. ஆனால் இப்போது அம்மா என்று சொல்கிறானே என்று சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

"என்ன இன்ஸ்பெக்டர்.... அன்னைக்கு அம்மான்னு சொல்லாதவன் இப்பச் சொல்றானேன்னு பாக்குறீங்களா... அது என் தர்ஷூக்காக... ஆமா அவளுக்கு அம்மா பிடிக்காது... சின்ன வயசுலயே விட்டுட்டு பொயிட்டாங்கன்னு அவளுக்கு அவங்க மேல ரொம்பக் கோபம்... அப்பாதான் தெய்வம்... காலையில கூட சொன்னாளே அவர் ஜெம்ன்னு.... ம்.... அப்பா... அப்பா... அப்பா... அவளுக்கு எல்லாமே அவருதான். அவருக்கும் அவதான் எல்லாமே... அதே மாதிரி அவள்ன்னா எனக்கு உயிர்... சோ அவளுக்குப் பிடிக்காத அம்மாவை எனக்கும் பிடிக்காத மாதிரி நடிச்சேன். ஆனா எனக்கு அம்மா ரொம்பப் பிடிக்கும். யாருக்கும் தெரியாம அம்மாவைப் போய் பார்ப்பேன். அவங்க மடியில படுத்து அழுவேன். அவங்களுக்கு கல்யாணம் ஆகி பசங்க இருக்காங்க... ஆனா அவங்களுக்கு எல்லாம் நானும் அம்மாவும் சந்திக்கிறது தெரியாது". என்று நிறுத்தியவன் தண்ணீரை எடுத்துக் குடித்தான்.

இருவரும் பேசாமல் அமர்ந்திருக்க, அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான் “அம்மா அப்பாவைப் பிரியக்காரணம் பணம் பணம்ன்னு ஓடுனதால மட்டும் இல்லை. அவரோட இன்னொரு பக்கத்தால..."

"இன்னொரு பக்கமா..? உங்கப்பா ஜென்டில்மேன்னு சொன்னீங்க...?" பொன்னம்பலம் இடை புகுந்தார்.

வருண் சிரித்தபடி "அது தர்ஷ்க்கு தெரிஞ்ச அப்பா... நான் அவளுக்காக சொன்ன பொய் அது... எனக்குத் தெரிஞ்ச அப்பாவுக்கு இன்னொரு பக்கம் இருக்கு. அது தன்னோட வளர்ச்சிக்காக பொண்டாட்டியைக்கூட இன்னொருத்தனுக்கிட்ட படுக்கச் சொல்ற ஈனத்தனமான புத்தி... அதனால பிரச்சினை... அதன் பின்னாலதான் அம்மா விவாகரத்து வரைக்கும் போனாங்க... இதை அம்மா எனக்கிட்ட கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் சொன்னாங்க... என்னால நம்ப முடியலை... ஏன்னா எங்க அப்பா அம்மா பிரிஞ்சி போன பின்னால வேற கல்யாணம் பண்ணிக்காம, எங்களை எந்தக் குறையுமில்லாம ரொம்ப அன்போடு வளர்த்தார்." பேச்சை நிறுத்தினான்.

"ரொம்பக் குழப்பமா இருக்கு.... தொழில் வளர்ச்சிக்காக மனைவியை.. சினிமாவுலதான் பார்த்திருக்கிறேன்... நிஜ வாழ்க்கையிலுமா? ஏன் உங்கப்பா மேல நீங்க வச்சிருக்கிற பாசத்தை கெடுக்கிறதுக்காக உங்கம்மா இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருக்கக் கூடாது..."

"அம்மா சொன்னது சத்தியமான உண்மை... அம்மா சொன்னப்போ எனக்கு அப்பா மேல கோபம் வந்த்து... ஆனா இத்தனை வருசமா எங்களுக்கு தாய்க்கு தாயா... தந்தைக்கு தந்தையா... அர்த்தநாரீஸ்வரரா இருந்தவரு அவரு... எங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சவரு அவரு... எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு உடம்பு சுகமில்லைன்னாலும் சாப்பிடாம எங்ககிட்ட கெடந்தவரு அவரு... யாருக்காகவும் எதுக்காகவும் எங்களை விட்டுக் கொடுக்காதவரு அவரு... அதனால எனக்கு வந்த கோபமெல்லாம் மறைஞ்சிருச்சு..."

"இவ்வளவு பாசமாக இருக்கிற அப்பா, எப்படி தன்னோட தொழில் வளர்ச்சிக்காக... என்னால ஏத்துக்க முடியலை வருண்... உங்களை உங்க அப்பாவுக்கு எதிராத் திருப்ப நடந்த சதியில நீங்க சிக்கி அப்பாவைக் கொல்ற அளவுக்குப் பொயிட்டீங்க...” என்றார் சுகுமாரன்.

“சார்... சார்.... போலீஸ் புத்தியை கொஞ்ச நேரம் கழட்டி வையுங்க... எங்கப்பாவை நான் அர்த்தநாரீஸ்வரர்ன்னுதானே சொல்றேன்... நான் கொன்னேன்னு சொல்றீங்களே...?”

“அப்ப உங்க அம்மா..?”

"அம்மா கொல்லணுமின்னு நினைச்சிருந்தா எவனோ ஒருத்தன் கூட படுக்கச் சொல்லும் போதே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிருக்கமாட்டாங்களா...?"
“ம்... உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு இப்படிச் செஞ்சாருன்னே வச்சுக்குவோம்.... நீங்க பிறந்து... உங்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து தர்ஷிகா பிறந்த பின்னாடித்தான் விவாகரத்துப் பண்ணியிருக்காங்க... உங்க தங்கை பிறந்த பிறகு இது நடந்ததுன்னா... அவ பிறக்கும் வரை உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு நினைக்கலையா...? அது ஏன் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மனைவியை வைத்து முன்னேற நினைக்கனும்...”

“இதையே நானும் அம்மாக்கிட்ட கேட்டப்போ அவங்க சரியான பதிலைச் சொல்லலை... ஆனா வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னொருத்தர் சொன்னதால எனக்கு நம்பிக்கை வந்தது.

"ரொம்பக் குழப்புறீங்க வருண்... நீங்க சொல்ற காரணத்துக்கு அடியும் இல்லை முடியும் இல்லை... உங்களை யாரோ மூளைச் சலவை பண்ணியிருக்காங்க... ஆமா அந்த இன்னொரு நபர் யாரு..?"

“சொல்றேன்.... சொல்றேன்... என்னை யாரும் குழப்ப வேண்டியதில்லை சார்... எனக்கு எல்லாம் புரியிற வயசுலதான் இந்த விஷயம் தெரிய வந்துச்சு...”

“தன்னோட தொழில் வளர்ச்சிக்கு உங்கம்மாவை பயன்படுத்தணுமின்னு நினைச்சிருந்தா நீங்க பிறக்கும் முன்பே உங்கப்பா பயன்படுத்தியிருக்கலாம்... சந்தோஷமாக் குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளைக்கு தகப்பானான பின்னால எவனும் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்யமாட்டான்... எனக்கென்னவோ உங்கம்மா மேலதான் தப்பு இருக்க மாதிரி தெரியுது...”

“ஆமா சார்... நானும் அதைத்தான் சொல்லணுமின்னு நினைச்சேன்... உங்கம்மா செய்த ஏதோ ஒரு செயலாலதான் அவர் திருமணமே வேண்டான்னு உங்களை வளர்த்திருக்கிறார்... “ என்றார் பொன்னம்பலம்.

“என்ன சார்... எங்கப்பாவை கொன்னவங்களை கண்டு பிடிக்கணும் அப்படின்னுதான் அவரோட மறுபக்கதை சொல்றேன்... நீங்க என்னடான்னா எங்கம்மாவை தப்பாப் பேசுறீங்க...”

“வருண்... உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு வளர்த்து உங்களை எம்.ஏஸ் படிக்க வைக்கிறாரு... தர்ஷிகாவும் இப்ப எம்.பி,பி.எஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... உங்களை உதறிட்டுப் போன அம்மா சொன்னதை நம்பிக்கிட்டு பாசமா வளர்த்த அப்பா இறந்த பின்னே தப்பாப் பேசுறீங்களே... உங்ககிட்ட சொன்னவங்கக்கிட்ட எங்கப்பாவை பற்றி எனக்குத் தெரியும்ன்னு சொல்லி அவங்க வாயை அடச்சிருந்தீங்கன்னா உங்க அப்பா பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கும்... அது அவருக்கு நீங்க செய்யிற மரியாதை... அதைவிட்டுட்டு...”

“அப்ப நீங்க நம்பலை...”

“நோ மிஸ்டர் வருண்... இந்தக் கதை கேசுக்கு எந்த விதத்திலும் உதவாது... எனக்கு ரெண்டே ரெண்டு கேள்விக்கான பதில் வேணும்...”

“என்ன இன்ஸ்பெக்டர்...?”

“ஒண்ணு... உங்க அம்மா சொன்ன இந்தக் கதையை சொன்ன மற்றொரு ஆள் யாரு..? அவருக்கும் உங்கம்மாவுக்கும் என்ன சம்பந்தம்..? ரெண்டாவது வைரமோதிரம் வேற ஒரு ஆள்க்கிட்ட இருக்குன்னு சொன்னீங்க அவங்க யாரு...? எங்க இருக்காங்க...? இதுக்கு பதில் சொன்னீங்கன்னா நான் கொலையாளியை நெருங்க வசதியா இருக்கும்...”

“சொல்றேன்... ஆனா அப்பாவோட மறுபக்கம் உண்மை சார்...”

“எதுக்கு அதுக்குத் திரும்பத் திரும்ப வாறீங்க... எனக்கு அவரோட மறுபக்கம் தேவையில்லை... எனக்கு வேண்டியது நான் கேட்ட கேள்விக்குப் பதில்...” என்றபோது சுகுமாரனின் முகத்தில் அதுவரை இருந்த சாந்தம் போய் கடுமை ஏறியிருந்தது.

“சொல்றேன்... சொல்றேன்னு எதுக்கு இழுக்குறீங்க வருண்... சொல்லுங்க... இந்தக் கொலையில உங்க கூட எத்தனை பேர் இருந்தாங்க... எதுக்காக பண்ணுனீங்க... அதை மட்டும் சொல்லுங்க... எங்களுக்கு இந்தக் கதை வேண்டாம்... ஏன்னா...” என்றபடி வருணை ஊடுருவிப் பார்த்தார் பொன்னம்பலம்.

“ ஏய்... இருய்யா... தம்பி சொல்வாப்ல... தானா வந்து மாட்டிக்கிட்டாரு... இனி சொல்லாமலா இங்கயிருந்து போக முடியும்... வருண்... நான் கேட்ட கேள்விக்கு பதில்...” என்றார் சுகுமாரன். அவரின் பேச்சில் போலீஸ் விசாரணைக்கான தோரணை இருந்தது.

“சா... சார்.... என்ன சார் என்னைய கொலைகாரன்னு சொல்லிட்டீங்க... அப்படிப் பண்ணியிருந்தா நான் எதுக்கு உங்ககிட்ட வந்து பேசப்போறேன்... இப்ப என்ன உங்களுக்கு விவரந்தானே வேணும்... சொல்றேன்... அப்பாவைப் பற்றி அம்மா சொன்ன அதே விஷயத்தை எங்கிட்ட சொன்னவர் டாக்டர் சிவராமன்.... அந்த வைர மோதிரம் அவரு பொண்டாட்டி திலகவதிக்கிட்ட இருக்கு...” படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து மடக்... மடக்கென்று குடித்தான் வருண்.

சுகுமாரன் சத்தமாகச் சிரித்தார்... பயத்துடன் அவரைப் பார்த்தான் வருண்.

 (தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
நன்றாக உள்ளது தொடருங்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

ஆஹா கதை வேற மா3 போகுதே.....?
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! புதுசா இன்னுரு காரெக்டர் உள்ள நுழையுதே! ம்ம்ம்ம் தொடர்கின்றோம்...

துரை செல்வராஜூ சொன்னது…

>>> படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து மடக்... மடக்கென்று குடித்தான் <<<

நமக்கும் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கின்றது..

Unknown சொன்னது…

ஹா ஹா நல்ல ட்விஸ்ட் கதையில் ஒரு புதிய திருப்பம் கொண்டு வந்துட்டிங்க....இந்த அத்தியாயம் ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க...

அடுத்த அத்தியாயம் முற்றுமா? தொடருமா?

நிஷா சொன்னது…

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து போனதே?

சொல்லிரட்டுமா குமார்?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
காத்திருக்கிறேன் நண்பரே
தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

இப்படி சொல்லித்தான் வருண் வந்து தானா மாட்டிக்கிட்டான் ஞாபகம் இருக்கட்டும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இது சஸ்பென்ஸ் கிரைம் அல்லவா... இவர்தானோ என்று யோசனை வந்துவிட்டால் கதையின் தன்மை பாதிக்கபடும் என்பதால் இவரா...? அவரா..? என்ற யோசனையை மாற்றிக் கொண்டே போக வேண்டியிருக்கிறது....

இப்பவும் வருண், சிவராமன், அவரின் மனைவி மூவரில் யார் என்ற யோசனையோடுதானே பயணிக்கிறோம்... நானும் உங்களுடன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புது கதாபாத்திரம் கொன்றிருக்குமோ என்று எண்ண வைக்கத்தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹா.. ஹா... எனக்கும் தான் தண்ணீர் தேவைப்படுது... அடுத்த பதிவில் கொலைக்கான காரணத்தைச் சொல்லணுமேன்னு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
இனிமேதான் எழுதுவேன்... பதிவின் நீளத்தைப் பொறுத்து ஒன்று இரண்டாகலாம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
கதையின் போக்கு எப்படி...?
நல்லா இருக்கா..?
என்பதை விவரமாகச் சொல்லுங்கள் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நிஷா அக்கா...
தாங்கள் சரியாகச் சொன்னால் ஒரு கிப்ட் கொடுத்திடலாம்...
எங்கே வருண், சிவராமன், பத்மாவதி - மூவரில் யார் அந்தக் கொலையாளி..?

நான் சொன்னா நீ மாத்தி எழுதிடுவேன்னு எல்லாம் சொல்லி ஜகா வாங்க வேண்டாம்...

அப்புறம் கில்லர்ஜி அண்ணாவும் சேர்ந்து வருவார்...உங்களிடமிருந்து கொலையாளி யார் என்று விசாரிக்க...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...

ஆமா... ஆமா... அக்கா தானா மாட்டிக்கப் பார்க்கிறார்...
அக்கா அல்லவா அதனால் விட்டுவிடலாம்...

Unknown சொன்னது…

தொடரை முதலில் இருந்து படித்து விட்டு வருகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பக்கா க்ரைம் கதை!
இப்படித்தான் இருக்கணும்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இன்னுமொரு கருத்தை நான் சொல்ல நினைக்கிறேன்...
அதை, தொடர் முடிந்தபின் தெரிவிக்கிறேன்... (இறை நாட்டம்)

Menaga Sathia சொன்னது…

ஆஹா கதை இப்படி போகுதா,சுவராஸ்யம்...தொடர்கிறேன் சகோ !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காணவில்லை;
காணவில்லை
- இதன் அடுத்த பகுதியைக்
காணவில்லை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
கண்டிப்பாக் தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்...
என்னங்க கதை நல்லாயில்லையா...?
ஹா.. ஹா... எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பாடமாக அமையும்... கண்டிப்பாக சொல்லுங்கள்... தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்...
கொஞ்சம் மனச் சோர்வு...
சில வருத்தங்கள்...
கதையின் அடுத்த பதிவை எழுத முடியவில்லை...
மீண்டு வந்து இருக்கிறேன்... இன்னும் சில பிரச்சினைகள் சூழந்த நிலமை... இப்போது எங்கள் வாழ்வு சென்னை மழை போல்தான்...
நன்றி.