மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 23 செப்டம்பர், 2015

மனசு பேசுகிறது : மதம் பிடிக்க வேண்டாமே



து மதத்திற்கு எதிரான பதிவும் அல்ல... மனங்களைப் புண்படுத்தும் பதிவும் அல்ல... என்னைப் பொறுத்தவரை நட்புக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். சாதி... மதமெல்லாம் தூக்கிச் சுமக்க மாட்டேன். அதை என்னுடன் பழகிய நட்புக்கள் அறிவார்கள். என்னோட பாதையை நான் இப்படித்தான் வைத்திருக்கிறேன். அந்தப் பாதை மிக அழகாக இருக்கிறது... இங்கு கற்களும் இல்லை முற்களும் இல்லை... அழகான பூக்கள் மட்டுமே இருக்கிறது. இறுதிவரை அப்படியே பயணிக்கத்தான் நினைக்கிறேன்.

முதுகில் குத்துனவன் நண்பனா இருந்தா அவனுக்காக அதைத் தாங்கிக்கணும்ன்னு வசனமெல்லாம் வருமே அப்படி நட்புக்காக மட்டுமல்ல உறவுகளுக்காகவும் மனதில் நிறைய இடம் வைத்திருந்தவன்தான் நான். இனிமேலா மீண்டும் இப்படி பிறக்கப் போகிறோம் எல்லோரும் கடைசிவரை ஒன்றாக இருக்க வேண்டும். அடித்துக் கொண்டு அத்துக் கொண்டு போகக் கூடாது என்று நினைத்தவன்... நினைப்பவன்தான் நான். அப்படியிருந்தும் உறவுக்குள் நிகழ்ந்த சில மோசமான நிகழ்வுகளால் இனி சேரவே கூடாது... அவ்வளவுதான் அந்து போனதை இனி ஒட்ட வைக்கவே கூடாது என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டேன். அதை மறப்போம்... இப்போ முதல் பாராவில் பேசியதற்கு வருவோம்.

முதல்லயே சொல்லிடுறேன்... எனக்கும் ஒரு மதம் உண்டு... எனக்கும் ஒரு சாதி உண்டு... அதற்காக அதை எல்லாம் என்னோடு இழுத்துக் கொண்டு திரியவில்லை, ஆனால் எனக்கு நிறைய கடவுள் பக்தி உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்துக்குள் வர நான் விரும்பவில்லை. எனது சில காரியங்களில் கடவுள் துணை இருக்கு என்று நம்புபவன். நான் நினைக்கும் தெய்வம் என் வழியில் இருக்கும் இடர்பாடுகளை எல்லாம் தகர்தெறியும் என்று நினைப்பவன்... அப்படியும் நடந்ததை... நடப்பதை நான் அறிவேன். இதை விவாதமாக்க விரும்பவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம் நண்பர்களே.... மதமும் சாதியும் நம்மோடு இருந்தாலும் நாம் மனிதனாய் இருப்போம். எங்கு மனிதன் மரித்தாலும் அதை மனிதாபிமானத்தோடு பார்ப்போம். அங்கு மதமும் சாதியும் பார்க்க வேண்டாம். அதை முகநூலில் கேலி செய்ய வேண்டாம். இறந்தது மனிதன் அவ்வளவே... அவன் உடம்பில் இருந்து பிரிந்த ஆன்மாவுக்கு இல்லை சாதியும் மதமும் என்பதை உணருங்கள். என் மதத்திற்கு வா... உனக்கு மோட்சம் உண்டு... பாதுகாப்பு உண்டு என்றெல்லாம் பேசாதீர்கள். இவன் செத்தால் அவன் கேலி செய்யிறான்... அவன் செத்தால் இவன் கேலி செய்யிறான்... இங்கே செத்தது மனிதனா மனிதாபிமானமா என்பதை பலர் யோசிக்க மறுக்கிறார்கள். நாமாவது யோசிப்போம்.

எல்லோரும் எனக்கு ஒன்றே... எல்லா மதமும் எனக்கு ஒரே மாதிரித்தான். கொஞ்ச நாளாக எங்களைத் துரத்தியடித்த குடும்பப் பிரச்சினையின் போது ஊருக்குப் பேசும்போது எல்லாம் 'அவன் பாத்துப்பான்... அவனுக சத்தியம் பண்ணட்டும்' என்று மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் என்னுடன் அன்பாய் நட்பு பாராட்டும் நண்பர் ஒருவர் இதைக் கேட்டு விட்டு 'உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா?' என்று கேட்டார். 'எதில்?' என்று திரும்பிக் கேட்டேன். 'அதான் சத்தியம் பண்ணுவோம்... பண்ணச் சொல்லுன்னு சொன்னீங்கதானே... அதில்..?' என்றார். 'ம்... எனக்கு ரொம்ப உண்டு... ஏன்?' என்றதும் அவர் சொன்னதை கேட்டு எனக்கு கோபம் வரவில்லை மாறாக சிரித்தபடித்தான் பதில் சொன்னேன்.

என் பதிலையும் 'ஏன்?' என்ற கேள்வியையும் கேட்டதும் நண்பர் 'நாங்க படைச்சோனை மட்டுமே வணங்குவோம்... படைக்கப்பட்டதை எல்லாம் வணங்கமாட்டோம்' என்றார். உடனே நான் 'உங்களுக்கு ஒரு படைச்சோன் என்றால் எங்களுக்கும் ஒரு படைச்சோன்... இது அவரவர் நம்பிக்கை... எங்களுக்கு இருக்கும் தெய்வங்கள் அவதாரங்களாய் படைக்கப்பட்டிருக்கின்றன... எனக்கு நம்பிக்கை உண்டு நண்பரே...' என்றேன். 'இல்ல... சத்தியம் கித்தியம்ன்னு அதெல்லாம்....' என்று இழுத்தார். 'எனக்கு எல்லா மதமும் பிடிக்கும்... எங்களில் இது போன்ற நம்பிக்கை உண்டு... அவ்வளவுதான்.... இதற்கு மேல் பேச வேண்டாமே...' என்றதும் அத்துடன் அந்தப் பேச்சு முடிந்தது.

அதேபோல் 'நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்... ரொம்ப நல்லா இருக்கும்' என்று என்னுடன் வேலை பார்க்கும் மலையாளி சொன்னபோது 'நான் அந்த மாட்டை வைத்து பொழப்பு நடத்தும் குலத்தில் பிறந்தவன். நாங்கள் அதை எல்லாம் சாப்பிடுவதில்லை... தயை கூர்ந்து இது போல் என்னிடம் பேசாதே...' என்று சொல்லி விட்டேன். ஆனால் அவன் அடிக்கடி 'இந்தியாவில் எல்லா இடத்திலும் மாடு வெட்டுறான்... திங்கிறான்... அப்புறம் என்ன நீ மட்டும் இல்லையின்னு சொல்றே..?' என்று கேட்க ஆரம்பிக்க, அதுவும் சற்றே கேவலமாகப் பேச 'எல்லாரும் சாப்பிடுறான்கிறதுக்காக எல்லாரும் எல்லாம் சாப்பிட மாட்டானுங்க... நான் சாப்பிடுறதை நீ சாப்பிடமாட்டே... நீ சாப்பிடுறதை நான் சாப்பிடமாட்டேன்... எங்க பகுதியில் மாட்டுக்கறியும் இல்லை அதை சாப்பிடுவதும் இல்லை... போதுமா... இனி இதைப் பற்றி பேசாதே' என்று சற்று கோபமாகச் சொல்ல வேண்டி வந்தது.

கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்த நண்பன் சூசை மாணிக்கம் கல்லூரிக்கு பஸ் ஏறும்போதே சர்ச்சுக்குப் பொயிட்டுத்தான் வருவான். அது அவனது மார்க்கம்... அவன் அங்குதான் போக வேண்டும்... அதே சமயம் எங்களுடன் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நடக்கும் போது ஆண்டவர் செட்டில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி இடும் போது அவனும் இட்டுக் கொள்வான். ஆரம்பத்தில் 'என்னடா நீயெல்லாம் துணூறு பூசுறே?' என்று நண்பர்கள் கிண்டலாக கேட்பார்கள். அதற்கு அவன் 'இதிலென்ன இருக்கு... எங்கூட சர்ச்சுக்கு வந்தா நீங்க இயேசுக்கிட்ட வேண்டமாட்டீங்களா?' என்று திருப்பிக் கேட்பான். மூன்று வருடங்கள் தினமும் அவன் நெற்றியில் விபூதி வைத்திருக்கிறான். நானும் முருகனும் கூட அடிக்கடி சர்ச்சுக்குப் போய் மெழுகுவர்த்தி ஏற்றி, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வந்திருக்கிறோம். அப்படி அமரும் சப்தமற்ற சில நிமிடங்கள் மனதுக்குள் பேரானந்தத்தை நிரப்பி வைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன.

நண்பர்களே தயவு செய்து எங்கள் மதம்தான் நல்லது... அதில்தான் அது இருக்கிறது... இது இருக்கிறது... என்பது மட்டுமல்லாமல் உங்கள் மதத்தில் என்ன இருக்கிறது... அதில் கடவுளுக்கெல்லாம் ரெண்டு பொண்டாட்டி... அப்படியிப்படியெல்லாம் என்னிடம் பேசாதீர்கள். உங்களுக்கு உங்கள் மதம் எப்படியோ அப்படித்தான் எனக்கு என் மதம்... அதற்காக உங்களை கீதையில் அப்படிச் சொல்லியிருக்கு... இப்படிச் சொல்லியிருக்குன்னு சொல்லி என் மதத்திற்கு வாருங்கள் என்று அழைக்க நான் விரும்புவதும் இல்லை எனக்கு த்
தேவையும் இல்லை. எந்த மதத்தில் இருந்தாலும் உங்கள் மதம் தொடர்பான சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றுங்கள்... அதை மனதோடு வையுங்கள் சட்டையாக அணிந்து வெளியில் வராதீர்கள்.

இந்த மதத்தையும் சாதியையும் பிடித்துக் கொண்டு பயணித்திருந்தால் முகம் தெரிந்த நட்புக்களை மட்டுமின்றி முகம் தெரியாமல் எங்கிருந்தோ 'என்ன தம்பி சாப்பிட்டியா?' என்று கேட்க்கும் பாசக்கார உறவுகள் எனக்கு கிடைத்திருக்கமாட்டார்கள். இந்த உறவுகள் எனக்குப் போதும்... நானும் என் குடும்பமும் நல்லாயிருக்கணும் என்று நினைக்கும் இந்த உள்ளங்கள் எனக்குப் போதும். சாதியும் மதமும் எனக்குள் வரவேண்டாம். எனக்கு எப்பவுமே மற்ற மதத்து நண்பர்கள்தான் அதிகம் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன்... எனக்கும் சாதியும் உண்டு... மதமும் உண்டு... நான் எந்த மதத்துக்கும் சாதிக்கும் மாறும் எண்ணத்திலும் இல்லை. நான் பிறந்த குலம் எனக்குப் போதும். என்னைப் பொறுத்தவரை சாதியும் மதமும் இப்போது எனக்குச் சோறு போடவில்லை நட்புக்களே... படித்த படிப்பும்... எனது பயணங்களும் மட்டுமே எனக்கான வாழ்வைத் தீர்மானித்து நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே நிறைவாய் இருக்கிறது... இப்படியே நகரட்டும்... என் வாழ்வை மாற்றுவதைக் குறித்தான தீர்மானங்களை நான்தான் எடுக்கவேண்டும். எனக்காக வேறு யாரும் எடுக்க வேண்டியதில்லை... அதை நான் விரும்புவதும் இல்லை.

நண்பர்களே...  மனிதத்தை நேசியுங்கள்... நல்ல மனிதர்களை நட்பாய் பெறுங்கள்...அது போதும். அதே சமயம் உங்கள் மதத்தையும் நேசியுங்கள்... ஆனால் அதை தோளில் சுமந்து கொண்டு அந்தச் சுமையை அடுத்தவரிடம் மாற்ற நினைக்காதீர்கள். அது வேண்டாம்... என் நட்புக்கள் எனக்குள் எப்போதும் நிறைவாய் இருக்கிறார்கள்... சாதியையும் மதத்தையும் சுமந்து அதை என்னுள் திணிக்க நினைக்கும் நட்புக்களை நான் விரும்புவதும் இல்லை... தூக்கிச் சுமப்பதும் இல்லை... நல்ல நட்பை கடைசி வரை என்னோடு இறுத்திக் கொள்வேன்... மதம் பிடித்த நட்புக்களை அப்படியே இறக்கி விட்டுவிட்டு என் பயணத்தை நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன். இதுதான் நான்... இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்... 

மனிதம் சுமந்து... மதம் பிடிக்காத... நட்புக்களோடு வலம் வருவோம்.  நாளைய பாரதம் சாதி மதமில்லாத நல்ல சமூகத்தை தன்னுள்ளே இறுத்திக் கொள்ளட்டும். இந்தப் பகிர்வு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... எனக்குள் மதம் பிடிக்கவில்லை நட்புக்களே, என் நட்புக்களும் அப்படியே என்றுதான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே பயணிப்போம் நட்புக்களே....
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பதிவு. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.

Yarlpavanan சொன்னது…

"மனிதம் சுமந்து...
மதம் பிடிக்காத...
நட்புகளோடு வலம் வருவோம்." என்பது
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டவரும்
பின்பற்றவேண்டியது!

கரூர்பூபகீதன் சொன்னது…

அருமையான பகிர்வு! என் கருத்தும் இதுதான்! நன்றி

நேரமிருப்பின் நான் எழுதிய கட்டூரைக்கு தங்கள் கருத்தை தாருங்கள்! நன்றி

துரை செல்வராஜூ சொன்னது…

என்ன செய்வது?..
சில சமயங்களில் இப்படியும் வேதனைகள்!..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

வரிவான விளக்கம்... அவரவர் நம்பிக்கை... அழகாக சொல்லியுள்ளீர்கள்.
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal சொன்னது…

இந்த பதிவில் இந்த வரிகள்தேவையில்லை.காரணம் இந்த பதிவில் புண்படுத்துபடியாக எதுவும் இல்லை,ஒவ்வொருவொருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ஆனால் அதுதான் சரி என்று அடுத்தவர் மீது திணிக்காதவரை எதுவும் பிரச்சனை இல்லை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனிதம் சுமந்து... மதம் பிடிக்காத... நட்புக்களோடு வலம் வருவோம்.
தம+1

துபாய் ராஜா சொன்னது…

எதிலுமே பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். சாதிப் பற்று, மதப் பற்று, பணப் பற்று இருக்கலாம். இவையெல்லாம் வெறியாக மாறும் போது மனிதன் தன் குணம் மாறி மிருகமாகிறான் என்பது அவர் கூறிய அறிவுரை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனிதம் பகிர்வோம். மற்றவற்றை விடுப்போம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மனிதம் பேணுகையில் மதங்கள் எதற்கு? அருமையாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனிதம் மட்டுமே முக்கியம். மதம் அல்ல!

சிறப்பான பகிர்வு குமார். பாராட்டுகள்.