மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 செப்டம்பர், 2015வலைப்பதிவர் விழா போட்டி : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

போட்டி வகை (2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 

கட்டுரை தலைப்பு : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

ன்றைய உலகில் வெளிநாடுகளில் எல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வந்து காலங்கள் கடந்துவிட்ட போதிலும் நம் இந்தியாவில் மட்டும் இன்னும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக ஏற்படவில்லை என்பதே உண்மை.  ஒரு வீட்டின் புறச் சுத்தம் எப்படியிருக்கோ அதைப் பொறுத்துத்தான் அந்த வீட்டிற்குள்ளும் சுத்தம் இருக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுவே உண்மை. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்... அதுதான் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று எவ்வளவுதான் சொன்னாலும் நாம் இன்னும் மாறாமல்தான் இருக்கிறோம். வீட்டைச் சுற்றி குப்பைகளைக் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றிய அறியாமை தரும் ஆபத்துக்களையும் அதற்கான விழிப்புணர்வுகளையும் குறித்துப் பார்ப்போம்.

கழிவு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள் எல்லாம் சரிவர இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் கால்வாய்களுக்குள் தண்ணீர் ஓடாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லை என்பதுதானே நிதர்சனம். கால்வாய்கள் இல்லாத இடங்களில் வீடுகளுக்கு முன்னே சிறிய குழி வெட்டி அதில் அசுத்த நீரை சேமித்து வைக்கிறோம்... கூடவே நோய்களையும்... இதேபோல் தெருவோர கால்வாய்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. அதில் தண்ணீர் ஓடாமல் அப்படியே கிடப்பதால் கொசு உற்பத்தியாகி மலேரியாக் காய்ச்சலைக்களைக் பரப்பி விடுகின்றன. இப்போது இது போன்ற கழிவு நீர்களின் சாக்கடையால்தான் டெங்கு உருவாகிறது. இந்தச் டெங்கு எத்தனை உயிர்களைக் கொன்றதை என்பதை நாமெல்லாம் அறிவோம்.  இதெற்கெல்லாம் காரணம் என்ன? சாக்கடை கால்வாயை சரிவர சுத்தம் செய்யாததே முக்கியக் காரணம். அடிக்கடி சுத்தம் செய்து அந்தத் தண்ணீரையெல்லாம் ஊருக்கு வெளியே கொண்டு போய் விட்டால் நம்ம பகுதியும் சுத்தமாக இருக்கும் நோய்களையும் தடுக்கலாம் அல்லவா? ஆனால் நாம் செய்வோமா.... இல்லையே பிளாஸ்டிக் பேப்பர் முதல் கொண்ட எல்லாக் குப்பைகளையும் சாக்கடைக் கால்வாயில் போட்டுத்தானே வைக்கிறோம்.

முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே குப்பைகளை வீட்டில் வந்து சேகரித்துச் சென்றார்கள். இப்போது பெரும்பாலான இடங்களில் காலையில் வீதி வீதியாக வந்து சேகரித்துச் செல்கிறார்கள். ஆனால் நாம்தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. நாலு வீடு இருந்தால் பக்கத்தில் இருக்கும் காலியிடமே குப்பைகளைக் கொட்டும் மைதானமாக மாறிவிடுகிறது.  நல்லது கெட்டது எல்லாத்தையும் அங்குதான் கொட்டி வைக்கிறோம். எல்லாக் குப்பையும் சேர்ந்து அந்த இடத்தைக் கெடுப்பதுடன் நோய்களைப் பரப்பும் கிருமிகளை உருவாக்கும் இடமாகவும் மாறிப் போய்விடுகிறது.  வீட்டில் இருக்கும் குப்பைகளை பக்கத்தில்தானே கொட்டுகிறோம். நம் வீடு சுத்தமாகத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்பது எவ்வளவு தவறு என்பதை ஏன் யாருமே உணருவதில்லை. 

சென்னையில் நாங்கள் இருந்த பகுதியில் தினமும் காலையில் குப்பை வண்டி வந்து வீட்டுக்கு வீடு குப்பையை வாங்கிச் செல்வார்கள். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த ஒரு காலி இடம்தான் குப்பைகளின் புகழிடமாக இருந்தது. அதன் அருகே சிறிய ஹோட்டல், டீக்கடை மற்றும் காய்கறிக்கடைகள் என சின்னச்சின்ன கடைகள் எல்லாம் இருந்தன.  மீன், நண்டு, இறைச்சிக் கழிவுகள் மற்றும் அனைத்து விதமான குபைகளையும் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றமும் உருவாகும் கிருமிகளாலும் அருகே இருக்கும் ஹோட்டல் மற்றும் டீக்கடையில் சாப்பிடுபவர்களுக்கு நோய் வரலாம் என்பதையோ அல்லது இந்த துர்நாற்றமான காற்றைச் சுவாசிப்பதால் நோய்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறோம் என்பதையோ அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உணரவேயில்லை. இப்படிப்பட்ட சுகாதாரக் கேடுகளை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.

இதேபோல் தேவகோட்டை - காரைக்குடி ரோட்டில் ஓரிடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு என்றே நகராட்சி இடம் ஒதுக்கியிருக்கிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்ற பிரிவுகள் வேறு... அந்த இடத்தைக் கடக்கும் போதே மாசு நிறைந்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும்.  இந்த கேடு போதாதென்று ஒரு சில நாட்கள் அதில் தீயை வைத்து எரித்து அந்தப் பக்கத்து காற்றை எல்லாம் கெடுத்து வைப்பார்கள். இப்படியான சூழலில் அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் எப்பவுமே சுகாதாரமற்ற காற்றைத்தானே சுவாசிக்கிறார்கள். இதனால் பாதிப்பு வரும் என்பதை அரசும் மக்களாகிய நாமும் யோசிப்பதும் இல்லை... இவற்றிற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தத்தைவிட வெட்கமே மேலோங்கி நிற்கிறது.

இதைவிட மோசமான சூழல் என்றால் அது கிராமங்களில்தான்... இப்போது சில கிராமங்கள் மாறியிருந்தாலும் பல கிராமங்களில் மாற்றம் என்பது இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. மலம் கழிப்பது பொதுவெளியில்தான் என்பதை அனைவரும் அறிவோம். கால் கழுவுவது... குளிப்பது... மாடுகளைக் குளிப்பாட்டுவது மற்றும் குடிதண்ணீர் என எல்லாவற்றிற்குமே குளங்களில் தேக்கி வைத்திருக்கும் நீரைத்தான் பயன்படுத்துவார்கள். முன்பெல்லாம் விவசாயம் இருந்தது குப்பைகளையும் கூழங்களையும் வயல்களில் கொட்டி உரமாக்கினார்கள். வாய்க்கால்களில் நீர் ஓடிப் பாய்ந்ததால் வயல் வரப்புக்களில் இருந்த மரங்கள் எல்லாம் நல்ல செழிப்போடு இருந்தன. சுகாதாரமான... சுத்தமான காற்றை சுவாசித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கோ நிலைமை அப்படியே மாறிவிட்டது. விவசாயம் இல்லாத வயல்களில் வேலிக் கருவைகள் மண்டிக் கிடக்கின்றன... நீர்வரத்து இல்லாமல் தூர்ந்து போன வாய்க்காலகளில் பசுமையும் இல்லை... வரப்புக்களில் மரங்களும் இல்லை... குப்பைகளும் மலக் கழிவுகளுமாய் இருக்கும் சுற்றுச் சூழலால் இன்றைய கிராமங்கள் சுகாதாரம் இழந்துதான் தவிக்கின்றன.

மனிதன் செத்தால் புதைக்கவோ எரிக்கவோ செய்யும் நாம் விலங்குகள் செத்தால் மட்டுமே தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறோம். அதை நாய் நரிகள் கடித்துக் குதறி... இது எத்தகைய சுகாதாரக் கேடு தெரியுமா?   முன்பெல்லாம் கிராமங்களில் விலங்குகள் செத்தால் அதை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் குழி தோண்டிப் புதைப்பார்கள். இப்போ அவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள்.

இதேபோல் அமில ஆலைகள், ஊருக்கு வெளியேதானே இருக்கின்றன இதனால் என்ன தீங்கு வந்து விடப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் இவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகளும் அதனால் ஏற்படும் ஒரு வித அழுகிய முட்டை நாற்றமும் எவ்வளவு மோசமானவை தெரியுமா? இந்தக் கழிவில் இருந்து வெளியாகும் கிருமிகளும் அதன் நாற்றமும் காற்றில் கலந்து அந்தப் பகுதி வாழ் மக்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை எத்தனை பேர் அறிவோம். கூடங்குளம் வேண்டாம் என்று போராடிய மக்களுக்காக எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுத்தோம். அதன் பாதிப்புக்கள் நமக்கு வராது என்றுதானே வாளாதிருந்தோம்... அனுபவிக்கப் போறவர்கள் அவர்கள்தானே என்றுதானே வாய் திறக்காதிருந்தோம். 

வெளிநாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என நிறைய முக்கியத்துவங்கள் கொடுக்கிறார்கள். குப்பையை போடும் இடங்களில் வைக்கும் பெரிய பெரிய டப்பாக்களை எல்லாம் தினமும் கழுவி சுத்தம் செய்கிறார்கள். ஒரு சிறிய குப்பையை போட்டால் கூட அபராதம் விதிக்கிறார்கள். எனவே காபி குடித்த கப்பாக இருந்தாலும் சாக்லெட் பேப்பராக இருந்தாலும் குப்பைத் தொட்டியை தேடிப் போய் போடுகிறார்கள். நம்ம ஊரில் எந்த இடமோ அங்கு போட்டுவிட்டு நாம் ஜாலியாக நடப்போம். இங்கெல்லாம் கழிவு நீர் தேக்கமும் இல்லை... கண்ட குப்பைகளின் அணிவகுப்பும் இல்லை. இத்தனை சுத்தமாக இருப்பதால்தான் இங்கு கொசுக்களும் இல்லை மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் இல்லை. நாம் இதையெல்லாம் பின்பற்றுவதும் இல்லை... நோய்களை ஒழித்து சுகாதாரமான வாழ்க்கையை வாழ விரும்புவதும் இல்லை. நமக்குத்தான் பேருந்து நிலைய சுவரைப் பார்த்தாலே நாய் போல் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்துவிடுகிறதே. அப்புறம் எப்படி சுற்றுச்சூழலாவது சுகாதாரமாவது... 

தனி மனிதனில் தொடங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு தீப்பொறியாய் கிளம்பி நாடெங்கும் நல்ல சுவாலையோடு பரவ வேண்டும். அதற்கு நாம் முதலில் நம் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்... வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சுகாதாரக் கேடுகளான குப்பை கூழங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் சுத்தமானால் அந்த ஊர் சுத்தமாகும்.... இப்படி ஒவ்வொரு ஊராக சுத்தமாகும் போது மாவட்டம் சுத்தமாகும்... மாவட்டம் மாநிலமாகும்... மாநிலங்கள் சுத்தமாகும் போது நம்நாடு சுத்தமாகும். நாமும் சுகாதாரமான வாழ்வை வாழ்வோம். நோய் நொடிகள் எல்லாம் பறந்து போகும். அதற்கு ஒவ்வொருவரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்பதை உணர வேண்டும். 

குப்பைகளை எல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்க்க வேண்டும். தேவையில்லாத குப்பைகளை, பாலித்தீன் பைகளை எல்லாம் நெருப்பிட்டுக் கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். சாக்கடைகளில் குப்பைகளைக் கொட்டி தண்ணீரைத் தேங்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை நேரங்களில் ஆங்காங்கே நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். இதில் அரசும் முதுகெலும்பாய் செயல்பட வேண்டும். இப்படி எல்லா வகையிலும் எல்லா மக்களும் சேர்ந்து செயல்பட்டால் சுற்றுச் சூழல் பாதிப்பில்லாமல் சுகாதாரமான வாழ்வை வாழலாம். நாளைய உலகம் சுகாதாரமாய் இருக்க நடவடிக்கை எடுக்கும் சக்தியே மக்களாகியா நாம்தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்... செய்வோமா?.

-----------------------------

"வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை" மற்றும் "தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்" இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிக்கான வகை-(2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான கட்டுரைப் போட்டிக்கு எழுதிய பகிர்வு இது.

'இந்தப் பகிர்வு முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையே.... இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள் நட்புக்களே... தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் உடனே சேர்த்து விடுங்கள்... நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காதீர்கள்.

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...


-'பரிவை' சே.குமார்.

21 கருத்துகள்:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே! சிங்கப்பூரில் குப்பைகளை கடலில் கொட்டி அதன் மேல் விவசாயம் செய்வதாக படித்தேன்! இங்கு மக்களுக்கும் அக்கரையில்லை அரசுக்கும் இல்லை! குப்பையை மறு சுழற்சி செய்ய வழுவான எந்த திட்டங்களும் இல்லை? இந்த மேம்போக்குத்தனம் எப்போ மாறும்

  அருமையான அலசல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! நன்றி

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையான கருத்தை முன்வைத்துள்ளீர்கள். பாராட்டுகள் குமார். நாட்டை மேம்படுத்தும் எந்தவொரு முன்னேற்றமும் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் உதயமாகவேண்டும். சரியான கருத்துகள். வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆமாம் சகோதரரே!.. வீடு சுத்தமானால் நாடே சுத்தமாகும்!

  அருமையான மிக அவசியமான விடயங்கள் பலவற்றை
  மிக அழகாக எடுத்துக்கூறினிர்கள்.

  போட்டியில் வெற்றிபெற உளமார்ந்த் நல் வாழ்த்துக்கள்!

  த ம+1

  பதிலளிநீக்கு
 5. அருமை நண்பரே நல்ல விடயத்தை அழகாக அலசி உள்ளீர்கள் போட்டியில் இந்தக்கட்டுரை வெற்றி பெரும் 80 நிச்சயமே...
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு தலைப்புடன் அதற்கான வழிமுறைகளோடு தொடர்ந்த கட்டுரையும் சிறப்புங்க சகோ. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான கட்டுரை! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. நிலமையின் விபரீதத்தை அனைவரும் உணர்ந்துகொள்ளுமாறு எழுதி இருக்கிறீர்கள்.
  வெற்றிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 10. சிறந்த கருத்துப் பகிர்வு

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தலைப்பிலான கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. அருமை சகோதரா.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 13. எங்கிருந்து தூய்மையினைத் தொடங்குவது ?என அலைபாயாமல் ,உன்னிலிருந்து, நீவாழும் வீட்டிலிருந்து தொடங்கு.. என்னும் கருத்தமைந்த கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 14. எந்த ஒரு நல்ல செயலும் முதலில் நமது வீட்டிலிருந்து தான் ஆரம்பமாகிறது என்கிற கருத்தை முன்வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரை அருமை சகோதரரே.

  போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 15. சிறப்பான கட்டுரை. நம்மைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். அடுத்தவர்கள் செய்வதில்லையே என்று சிந்திக்காமல் நாம் முதலில் சுத்தமாக இருப்போம். சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். அடுத்தவர்களுக்கும் சுத்தத்தின் அவசியத்தை எடுத்துரைப்போம்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 16. சுற்றுசூழல் மேம்படத்தேவையான விஷயங்களை அருமையாகி விளக்கியிருகிறீர்கள் அண்ணா! போட்டியில் வெற்றி பெற விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. சூப்பர் பதிவு! போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 18. சரியான நேரத்தில் சரியான கருத்துக்களைக் கொண்டச் சரியான கட்டுரை. பாராட்டுக்கள்.

  கழிவு நீர், குப்பை இவற்றின் பக்க விளைவுகளை ஏன் நாம் மீண்டும் மீண்டும் தலைமுறைக்குத் தலைமுறை மறந்தபடியே இருக்கிறோம் என்பது புரியாத புதிர்.

  பதிலளிநீக்கு
 19. அருமையான கட்டுரை நல்ல கருத்துகளை கொண்டுள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் =சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...