மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 24)

முந்தைய பகுதிகள் :



"அப்ப பொண்ணுங்களுக்கு வேண்டாம்... இருக்க சொத்தை பிரிச்சினை இல்லாம பிரிச்சிட வேண்டியதுதானே...." என்றார் தணிகாசலம்.

"இதுல அடிச்சிக்கிற என்ன இருக்கு... அப்பாதான் பிரிக்கணுமின்னாங்க... அவங்க ஆசை... பிரிச்சிக் கொடுத்துட்டு அவருதானே பாக்கப்போறாரு..." என்றான் மணி.

"எல்லாருக்கும் நா ஒண்ணு சொல்லிக்கிறேன்... சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு... அதனால அந்த மாமரத்துக் கொல்லையை எங்களுக்கு கொடுத்துட்டா... அதுல வீடு கட்டிப்போம்..." என்று ஆரம்பித்து வைத்தாள் சித்ரா.

இனி...

'சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு எங்களுக்கு மாமரத்துக் கொல்லையைக் கொடுத்துடுங்க' அப்படின்னு சித்ரா சொல்லவும் குடும்பத்தில் அனைவரின் முகமும் மாறியது.

"என்னத்தா சொல்றே... மாமரத்துக் கொல்லை ரோட்டோரத்துல இருக்கு... இது பூர்வீக வீடு... இது உம்மாமன் மாமியா இருக்க வரைக்கும் பொது வீடா இருக்கட்டும்... ரெண்டு பேரும் நல்லது கெட்டதுக்கு ஒண்ணா மண்ணா இருந்துட்டுப் போகலாம்... ரோட்டோரத்துல இருக்க இடத்துல அவனுக்கும் வீடு கட்டணுமின்னு ஆசையிருக்கும்ல்ல..." கேட்டது தணிகாசலம்.

"அதுக்காக... வீடு பெரியவுகளுக்கு அப்புறம் சின்ன மகனுக்குத்தான்னு சொல்லுவாக... அப்ப நாங்க எங்கன இருக்கது... " என்றாள் சித்ரா.

"என்னத்தா... பெரியவுக கூட கூடக்கூட பேசுறே... நம்ம வீட்டுப் பிள்ளைக்கு இது அழகில்லை... " என்றார் கந்தசாமி.

"என்ன சொல்லிட்டேன்னு சத்தம் போடுறீக... அவுக வீடு வாசன்னு இருக்காக... அதான் கேட்டேன்..."

"ஏய்... என்ன நீ வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... பெரியவங்க பாத்து பிரிச்சிக் கொடுப்பாங்க... இதுல அவனுக்கு அதைக் கொடுக்காதே... எனக்கு இதுதான் வேணுமின்னு என்ன பேச்சு இது... நாங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இப்பப் போலவே இருக்கணுமின்னு நினைக்கிறோம்... பங்காளியா அடிச்சிக்கிட்டு நிக்க நினைக்கலை... அப்பா இப்ப பிரிக்கணுமின்னு நிக்கிறாரு... சரியின்னு சொன்னோம்... அவனோ நானோ தூக்கிக்கிட்டு போகப் போறதில்லை... நீ பேசாம இரு..." கோபமாகச் சொன்னான் மணி.

"சித்ரா... இங்க பாருத்தா... இன்னாருக்கு இதுன்னு பிரிச்சிக்கிட்டு அதுக்கப்புறம் நீங்க மனமொன ராசியா விட்டுக் கொடுத்து வாழ்ந்தாப் போச்சு... இதுல எதுக்கு தேவையில்லாம சங்கடத்தை உண்டு பண்ணிக்கிட்டு...." என சித்ராவிடம் மெதுவாகச் சொன்னார் அழகப்பன்.

"இந்த இடத்தைக் கொடுங்கன்னு சொன்னா குத்தமாண்ணே... ஆளாளுக்கு என்னைய ஆயிறிய..."

"ஏத்தா... என்ன நீயி... தராதரம் இல்லாம எல்லாருக்கிட்டயும் பேசுறே... சின்னவன் அங்க சொந்த வீடு கட்டியிருக்கான்... அதுக்காக பொறந்த ஊர்ல வீடு கட்ட மாட்டானா என்ன.... இல்ல நீங்களுந்தான் இடம் வாங்கிப் போட்டியிருக்கீங்க... அதுல வீடு கட்ட மாட்டீங்களா என்ன.... கெடக்கதுல மாமரத்துக் கொல்லை மட்டுந்தான் ரோட்டு மேல இருக்கு ஆளுக்கு பத்துச்செண்டு வருமில்ல.... அப்புறம் என்ன எல்லாத்தையும் எனக்கிட்டத்தான்னா எப்படி... " கந்தசாமி சுருக்கெனறு பேச சித்ரா பேசாமல் இருந்தாள்.

"ஐயா... என்னதான் இப்ப எதுக்கு சொத்தைப் பிரிக்கணுமின்னு வெளியில சொன்னாலும் ஆளாளுக்கு மனசுக்குள்ள அதைக் கொடுத்தா நல்லா இருக்கும்... இதைக் கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு எண்ணம் வரத்தான் செய்யும்... அதெல்லாம் பாத்தா கதையாகாது... மாமரத்துக் கொல்லையில ரெண்டு பேருக்கும் வீடு கட்ட ஆசையிருக்கும். இது பொது வீடா இருந்துட்டுப் போகட்டும். அதை ரெண்டாப் பிரிச்சிடுங்க... எல்லாத்துலயும் சமமா பங்கு வச்சிடுங்க... அதுக்கப்புறம் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்கிட்டாலும் சரி... இல்லேன்னாலும் சரி... அது அவங்களுக்குள்ள...." ரமேஷ் நறுக்கென்று பேசினான்.

"சின்ன மாப்ள சொல்றதுதான் சரி... இன்னைக்கு பிரிச்சிட்டாலும் அவனுக மாம்பூவாசனையா விட்டுக் கொடுத்துக்கிட்டா சந்தோஷந்தானே..." என்றார் பரமசிவம்.

"ரமேஷ் அத்தான் சரியாச் சொன்னாங்க.... அதுதான் நல்லது... எனக்கு உனக்குன்னு கேட்டு வாங்குறதைவிட மொத்த சொத்துல இது... இது... இன்னாருக்குன்னு பிரிச்சிடலாம்..." என்றான் கண்ணதாசன்.

"அண்ணனுக்கு மாமரத்துக் கொல்லையைக் கொடுக்கிறதுல எனக்கு வருத்தமில்லை... அவங்க விருப்பப்படி அதை அவங்களுக்கே கொடுத்துருங்கய்யா..." தணிகாசலத்திடம் சொன்னான் குமரேசன்.

"அதெல்லாம் வேண்டாம்.... எல்லாத்துலயும் ரெண்டு பாகம் வையுங்க... " என்றான் மணி.

"நல்ல பிள்ளைங்க.... நாளைக்கி நாத்தாநப்பனை பாகம் வைக்கச் சொல்லுவிய போலவே..." சிரித்தார் தணிகாசலம்.

"சித்தப்பா... எங்க பிள்ளைங்க அப்படியில்ல... ஏன்னா உங்களுக்கே தெரியும் நாங்க அண்ணந்தம்பி மூணு பேரும் மனசுக்குள்ள சின்னச்சின்ன வருத்தம் வந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமத்தான் வாழ்ந்தோம்... இன்னைக்கு கூடப்பொறந்த ரெண்டு பேரு இல்லை... ஆனாலும்  எனக்கு மணியும் குமரேசனும் மட்டும் பிள்ளைங்க இல்லை... கண்ணதாசனும் எம்புள்ளதான்... ஏன் சின்னவன் மகன் எங்களை விட்டு வேலைவெட்டியின்னு ஒதுங்கி நின்னாலும் அவனும் எம்புள்ளதான்... உங்களுக்கே தெரியும்... உரிமையோட நான் திட்டுறது கண்ணதாசனைத்தான்.... இவனுக கஞ்சி ஊத்தாட்டி எனக்கு கஞ்சி ஊத்த எம்மவன் கண்ணதாசன் இருக்கான்... ஆனா எங்க ரத்தம் அடிச்சிக்கிட்டு கிடக்காது... எல்லாம் ஒண்ணாத்தான் கிடக்கும்..." கந்தசாமி பெருமையாகப் பேசினார்.

"இப்ப எதுக்கு அதெல்லாம்... முதல்ல சொத்தைப் பிரிங்க..." என்றார் அழகப்பன்.

"ம்... இல்லப்பா சண்டை கிண்டை இல்லாம மனமொத்து போகணுமில்ல..." என்றார் தணிகாசலம்.

"எல்லாரும் பேசுவாங்க... அப்புறம் எல்லாம் ஒண்ணாத்தான் கிடக்குங்க... இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு... நாளைக்கி பெரிய மச்சானுக்கு சின்ன மச்சான் விட்டுக் கொடுக்கலாம்... சின்ன மச்சானுக்கு பெரிய மச்சான் விட்டுக் கொடுக்கலாம்... மறுபடியும் ஒண்ணாவா பொறக்கப் போறோம்... என்னத்தை எடுத்துக்கிட்டுப் போகப்போறோம்... சொத்து பத்துன்னு பந்தபாசத்தை இழந்துட்டு வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்... எனக்கும் எம்மச்சானுங்களுக்கும் ஒரு சின்ன பிரச்சினை... அதுக்கு காரணமும் நாந்தான்.... இருந்தாலும் கெத்தை விடக்கூடாதுன்னு வீம்பு கட்டிக்கிட்டுத்தான் நின்னேன்... அப்படியே சாகுற வரைக்கும் இருக்கணுமின்னு நினைக்கல... ஒரு நா மச்சானுங்க தேடி வருவாங்க... இல்ல பொட்டப்புள்ள பெரியவளானா மாமக்காரனை நான் அழைக்க வரவேன்னுதான் இருந்தேன்... அதுக்காக எங்கயும் என் மச்சானுங்களை விட்டுக் கொடுத்ததில்லை... எவனையும் அவங்களைப் பத்தி தப்பா பேச விட்டதும் இல்லை... இதை ஏன் இங்க சொல்றேன்னா... ரெண்டு நாளைக்கு முன்னால அவங்க என்னைத் தேடி வர, நா வீம்பு பேச... கண்ணதாசன்... அவரு மச்சான் மட்டுமில்ல... இந்தக் குடும்பத்துல சிறந்த மனிதன்... என் கால்ல விழுந்து... முடியலை... அன்னைக்கே செத்துட்டேன்... இதெல்லாம் என்ன வாழ்க்கை... வீம்பு பேசி.... என்னைத்தை சாதிச்சோம்... எல்லாரும் சந்தோஷமாத்தான் இருப்பாக... சொத்தப் பிரிக்கிறதால உறவைப் பிரிக்கிறதா நினைக்கக் கூடாது... மணி மச்சானோட மகளும்  குமரேசனோட பிள்ளைகளும் ஏன்... கண்ணதாசன்... சின்ன மச்சானோட பிள்ளைகள் என எல்லாரும் இவுகளைப் போல வேற்றுமையில்லாம வளரணும்... சொந்தத்தைத் தவிர மத்தவங்களுக்கு கண்ணதாசனை எங்க பெரியமாமா மகனாத் தெரியுமா என்ன... எங்க மாமா மகன்னுதான் சொல்லுவாங்க... அது... அந்த பாசம்... இந்த வாழ்க்கை... இதுதான் எப்பவுமே சந்தோஷம்... இது அடுத்த தலைமுறையிலும் தொடரணும்..." ரமேஷ் பேச அனைவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

"என்ன மச்சான்...அதெல்லாம் இங்க சொல்லிக்கிட்டு..." என்றான் கண்ணதாசன்.

"இல்ல மச்சான்... மாமாக்கிட்ட நீங்க சொல்லியிருக்க மாட்டீங்க... இருந்தாலும் எனக்கு இங்க குத்துது மச்சான்... உங்க பாசத்துக்கு மத்தியில நாங்களும் உங்களோட இருக்கது ரொம்ப சந்தோஷமா இருக்கு... சரி... சரி... முதல்ல பங்கைப் பிரிக்கலாம்..."

சொத்து விவரங்கள் எல்லாம் கொடுத்து இன்னாருக்கு இன்னது என பிரித்து எழுதிக் கொண்டார்கள்... சொத்துப் பிரித்த அன்று எல்லோரும் எப்பவும் போல் சந்தோஷமாக சமைத்துச் சாப்பிட்டு மறுநாள் அவரவர் இல்லத்தை நோக்கிக் கிளம்பினர்.

ன்று மாலை...

வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாளிடம் வந்தமர்ந்த கந்தசாமி "ஏலா... நேத்துல இருந்து உனக்கு முகமே சரியில்லையே ஏன்... என்னாச்சு... சொத்துப் பிரிச்சது பிடிக்கலையா... இல்ல பொம்பளப் புள்ளைகளுக்கு எதுவும் கொடுக்கலைன்னு கோபமா?" என்றார்.

"அதெல்லாம் இல்லைங்க... அதுதான் குணமான மாப்பிள்ளைங்க இருக்காங்களே... அப்புறம் என்ன..."

"அப்புறம் ஏன் முகத்தை உர்ருன்னு வச்சிருக்கே?"

"ஒண்ணாக்கெடந்த சொத்து... இன்னைக்கி பிரிச்சாச்சு... அவனுக பாசத்துலயும் பிரிவு வந்துருமோன்னு பயமா இருக்கு... எப்பவும் போல சந்தோஷமா இருப்பானுங்களா... இல்ல மத்த குடும்பம் மாதிரி அடிச்சிக்கிட்டு இருப்பானுங்களான்னு மனசைப் போட்டு பிணையுதுங்க..."

"ஏய்... அவனுக நம்ம பிள்ளைங்க... நேத்தே சின்னவனும் பெரியவனும் எவ்வளவு பெருந்தன்மையாப் பேசினானுங்க... எப்பவும் அவனுக நாலு பேரும் ஒருத்தனை ஒருத்தன் விட்டுக் கொடுக்கமாட்டானுங்க..."

"நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னாலோ இல்ல உங்களுக்கு ஒண்ணுன்னாலோ...."

"ஏய்...எதுக்கு இப்ப இதெல்லாம்...?"

"இல்ல நீ பாரு நா பாருன்னு நம்மள இங்கயும் அங்கயும் அலைய விட்டுருவானுங்களோன்னு பயமா இருக்குங்க..."

"ஏய்... அதெல்லாம் எதுவும் நடக்காது... சித்ரா பேச்சுத்தான் அப்படி... ஆனா பாசமானபுள்ளதான்... சின்னவன் பொண்டாட்டி நம்ம மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு... அப்புறம் என்ன...?"

"அக்கம் பக்கத்துல நடக்குறதைப் பாக்கும்போது..."

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..." என மனைவியை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காளியம்மாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

ஊமைக்கனவுகள் சொன்னது…

முந்தைய பகுதிகளைப் படிக்க வேண்டும் நண்பரே.!
இப்பகுதியைப் படிக்கப் இதுவரை உள்ள பதிவுகளைப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தொடர்கிறேன்.

த ம 2

KILLERGEE Devakottai சொன்னது…

நடை யதார்த்தமாக போகிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
கண்டிப்பாக வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொடர்கின்றோம் நண்பரே! குடும்பக் காட்சிகள் கண் முன்னே!

Menaga Sathia சொன்னது…

முந்தைய பகுதியும் இப்பதான் படித்தேன்,யதார்த்தமா இருக்கு..சொத்து பிரிச்ச பிறகு என்ன நடக்க போகுதோன்னு இருக்கு..

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.!

நல்ல எழுத்து நடையுடன் நீரோட்டம் போல் கதை நகர்கிறது. .
பொதுவாக சொத்து இருந்தாலும் தகராறுதான்.. பிரித்தாலும் தகராறுதான்.. காளியம்மாளின் கவலையும், பயமும் நியாந்தானே..! கண்ணெதிரில் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை காட்டியபடி உள்ளது தங்களின் தடையற்ற எழுத்துக்கள்.. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்..நன்றி..வாழ்த்துக்கள்.

சென்ற வாரமே இக் கதையின் தொடரை எதிர்பார்த்து ஏமாந்தேன்...தாமதமோ?

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

நிஷா சொன்னது…

அப்பாடா1 எப்படியோ எந்தப்பிரச்சனையும் இல்லாமல் சொத்தைபிரித்து விட்டார்கள். வீட்டுக்கொரு சிதராக்கள் இருக்கதென்னமோ நிஜம் குமார். படிக்கும் போது கதை படிப்பது போலவே இல்லாமல் இயல்பான எழுத்து நடை உங்களுடையது. ரமேஷின் மனமாற்றம் ஆச்சரியமாயிருந்தாலும் இப்படியும் சிலர் இருப்பார்கள் என நம்பும் படி தானே நிஜமும் இருக்கின்றது.


காளியம்மாவின் எதிர்காலம் குறித்த கவலை...? கந்தசாமி ஐயாவின் நம்பிக்கை அனைத்துமே என்னாகும் என அறியும் ஆவலோடு பின் தொடர்கின்றேன்..

ஆமாம் அடுத்த தொடர் எப்போது வரும்?

Yarlpavanan சொன்னது…

"ஐயா... என்னதான் இப்ப எதுக்கு சொத்தைப் பிரிக்கணுமின்னு வெளியில சொன்னாலும் ஆளாளுக்கு மனசுக்குள்ள அதைக் கொடுத்தா நல்லா இருக்கும்... இதைக் கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு எண்ணம் வரத்தான் செய்யும்.." என
ஒருவர் உள்ளத்து எண்ணங்களைப் படம் பிடித்துக் காட்டியது சிறப்பாக அமைந்திருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..."//
பெரியவரின் விருப்பம் போல் நல்லதே நடக்க வேண்டும்.