மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஜனவரி, 2015

நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.


ன்றைய நண்பேன்டாவில் எனது அருமை நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களுடனான நட்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வெங்கி குறித்த பகிர்வைப் படித்தவர்கள் இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மூவரும்தான் ஒன்றாக சென்னையில் சுற்றியவர்கள்.

தினமணியில் வேலைக்குச் சேர்ந்த போது வெங்கி என்னிடம் 'இங்க விஜே(V.J.)ன்னு ஒருத்தர் இருக்கார். எந்த நேரமும் வேலைதான். ரொம்பப் பேசமாட்டார். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். பெரும்பாலும் இரவுப் பணிக்குத்தான் வருவார்' என்று சொல்ல, 'அது யாருய்யா அப்படிப்பட்ட ஆளு' என்றேன். 'நீ இரவுப் பணிக்கு வரும்போது அவரோடதான் வேலை செய்யிற மாதிரி இருக்கும். அப்போ பார்த்துப்பே' என்றான். அந்த நாளும் வந்தது.

ரொம்ப உயரமும் குள்ளமுமாக இல்லாமல் ஒரு சிவப்பு உருவம் வந்து அமர்ந்தது. என்னைப் பார்த்து லேசான ஒரு புன்னகை. வேறெதுவும் கேட்கவுமில்லை... பேசவுமில்லை... வேலையில் எதாவது கேட்டால் சொல்வதுடன் சரி... முதல் நாள் இப்படியே போச்சு... இரண்டாம் நாள் 'சாப்பிட வாரீங்களா?' என்றார். நாம விடுவோமா... ஆளைக் கபக்கென்று பிடிக்க, பின்னான நாட்களில் அவரை நம் பக்க இழுத்தோம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் மூத்த பையன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை. அப்பா, அம்மா, தம்பியுடன் முகப்பேரில் சொந்த வீட்டில் வாழ்க்கை. எம்.எஸ்.சி. எம்.எட்., படித்தவர் பத்திரிக்கையில் நீயூஸ் எடிட்டராக ஏழெட்டு வருடமாக பணியாற்றுகிறார் என அறிந்தோம். வெங்கியும் அவரு வீட்டுக்கு ஒரு தடவை போயிருக்கேன்ய்யா... அப்புறம் போனதில்லை என்றான். 

அவருடன் ஜாலியாய் பேச ஆரம்பித்ததும் நான் அவரிடம் கேட்ட கேள்வி, 'ஏங்க இவ்வளவு தூரம் படிச்சிட்டு இங்க குப்பை கொட்டுறீங்களே?' என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், 'வேற எங்கயும் வேலை கிடைக்கலை... இதுல முன்ன நல்ல சம்பளம்... நல்ல பெயர் இருந்தது... ஆனா இப்ப சம்பளம் எல்லாம் கூட்ட மாட்டேங்கிறாங்க... பாலிடிக்ஸ் வந்துருச்சு... நீங்க இங்க எதுக்கு வந்தீங்க... சீக்கிரம் எதாவது வேலை தேடி கிளம்பிருங்க' என்பதுதான். நான் சிரித்துக் கொண்டே 'பத்திரிக்கையில் வேலை பார்க்கணுங்கிறது எனக்கு ஆசை.... கொஞ்ச நாள் அப்புறம் ஆசை தீர்ந்திரும்... பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்..' என்றேன்.

பின்னான நாட்களில் எங்கள் மூவரின் நட்பும் இறுக்கமானது. மூவரின் அரட்டையும் வேலை செய்யுமிடத்தில் தொடர ஆரம்பித்தது. நான் தி.நகரில் இருந்து வருவேன். வெங்கி அம்பத்தூரில் இருந்து வருவான். இவரோ முகப்பேர். வேலை முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் இவரின் டிவிஎஸ் எக்செல்லை தள்ளிக் கொண்டே பேசிக்கிட்டு வருவார். பலநாள் அதில் பெட்ரோல் தீர்ந்து தள்ளிக் கொண்டே வருவார். எங்களின் நட்பு இறுக்கமான போதுதான் குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல நாங்கள் வீடு தேடினோம். இந்தக் கதை வெங்கி குறித்த பகிர்வில் சொல்லி விட்டதால் இங்கு வேண்டாம்.

வீடு அமைந்தது அவர் வசித்த முகப்பேர் கிழக்கில்... அதுவும் இரண்டு தெருக்கள் தள்ளி... என்ன உதவி என்றாலும் ஓடோடி வருவார். நாங்களும் அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கு அவரின் மனைவி ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். இவரும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பார். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களில் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர். என் மனைவி, ஸ்ருதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வர ஆரம்பித்தோம். என் மனைவிக்கு விஜே என்றால் ரொம்பப் பிடிக்கும்.

மனைவி ஊருக்குச் சென்ற வேளைகளில் இங்கு வந்து சாப்பிடுங்க... கடையில சாப்பிடாதீங்க என்று சொல்லி வற்புறுத்துவார். நமக்கு சொந்தச் சமையல் தெரியும் என்பதால் சமைத்து விடுவேன். நானே செஞ்சு சாப்பிட்டிருவேன் விஜே... எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாலும் விடமாட்டார். வாங்க... வாங்க என வீட்டு வாசலில் வண்டியை வைத்துக் கொண்டு நிற்பார். 

இருவருக்கும் ஒரே நேரத்தில் பணி என்றால் ஒரு வண்டியில் போய்விட்டு இரவு வரும்போது அவர் வீதியின் ஆரம்பத்தில் இறக்கிவிட்டு வருவேன். பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார். 'இந்தாளோட நடந்தா நாம பாட்டுக்கு பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்ய்யா... மனுசன் டக்குன்னு நின்னுகுவார் என்று வெங்கி அடிக்கடி சொல்வான்...' அப்படித்தான் நடக்கும்... நடந்து போய்க்கிட்டு இருக்கும் போதே நின்னுடுவாரு... நாம பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்போம்... அப்புறம் என்ன விஜே என்றால் மறுபடியும் வேகமாக வருவார். அப்புறம் நின்றுவிடுவார். அது மட்டும்தான் எங்களுக்கு புரியாத புதிர்.

ஒரு முறை நாங்கள் மூவரும் வண்டியில் போக, மூணு பேர் போறீங்கன்னு போலீஸ்காரர் மறிக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அதற்குள் பின்னால் இருந்த இவர், வேகமாக ஓட்டுங்க குமார், புடிச்சா காசு பறிச்சிருவான் என்றதுதான் தாமதம்... கிராமத்து ஒற்றையடிப் பாதையில் வண்டி ஓட்டிய அனுபவம் இருந்ததால அவருக்கிட்ட மெதுவாப் போயி சட்டென வேகம் பிடித்து சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைந்து மெயின் ரோட்டை அடைய பின்னால் எம்.80யில் விரட்டுறேன் என வந்தவரைக் காணோம். 'ஆத்தாடி... என்னய்யா நீ, நான் சொன்னதும் இப்படி ஓட்டிட்டே... எனக்கு பயமாப்போச்சு... விரட்டி வந்த அந்த ஆள் பிடிச்சிருந்தா நமக்கு டின் கட்டியிருப்பான்' அப்படின்னு சொன்னார். 'நாமதான் பிரஸ் அட்டை வைத்திருக்கோமுல்ல... அதைக் காட்டியிருப்போமே...' என்றதும் 'அப்புறம் ஏன் வேகமாக ஓட்டியாந்தே... காட்டியிருக்கலாமே' என்றார். 'ம்... மூணு பேர் போறதுக்கெல்லாம் பிரஸ்ன்னு காட்டுன்னா நீயே இப்படிப் பண்ணுவியான்னு மேல நூறு போட்டுக் கொடுக்கச் சொல்வாரு' என்றதும் சிரித்துக் கொண்டார்.

குடும்பச் சூழல்... அவரின் நிலமை... வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகணும்... மரியாதை இல்லை குமார் என  அவர் வாழ்க்கையை மறைக்காது நிறையப் பேசுவார். தினமும் சினிமா எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு படத்தோட கேலரி அல்லது நடிகையோட கேலரி போடுற பணி அவருக்கு இருக்கும். 'என்னய்யா வேலை... எப்ப வந்தாலும் எதாவது ஒரு கேலரி போடச் சொல்லி கொல்லுறானுங்க... நீங்க எல்லாம் நீயூஸ் எடிட் பண்றதோட போயிருறீங்க...' என்று புலம்புவார். 'நீங்க போடுற போட்டாதான் நல்லாயிருக்காம் விஜே' எனச் சொன்னதும் 'ஆமா... நடிகைகளோட கவர்ச்சி போட்டோவை தேடித்தேடி போடுற இது ஒரு பொழப்பு' எனப் புலம்புவார்.

சென்னையில் இருக்கும் வரை எனக்கு உதவிய மனிதர்களில் இவரும் ஒருவர். எந்த உதவி என்றாலும் யோசிக்காமல் செய்வார். வேலையை விட்டுப் போகணும்... போகணும்... என்று இன்னும் அதே அலுவலகத்தில்தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள்... அன்பான மனிதர்... நல்ல திறமை... ஆங்கில அறிவு இருந்தும் இதுவே போதும்... இனி வேறு வேலை எதற்கு என்று நினைத்து விட்டார் போல... மரியாதை இல்லை... கேவலமாப் பேசுறானுங்க என்றாலும் அந்த வேலை அவருக்குப் பிடித்து விட்டது. வாழ்க்கைச் சக்கரமும் நன்றாகத்தான் பயணிக்கிறது. எப்போதாவது பேசுவேன்... ஆனால் இன்னும் என்னுள் இருக்கிறார்... எங்கள் அன்பு எப்போதும் தொடரும். சென்ற முறை சென்னை சென்ற போது போய் பார்த்துப் பேசி வந்தேன்.  மனிதர் இன்னும் மாறவில்லை... அவரின் குணங்களும் மாறவில்லை...

நண்பா என்பதைவிட எனக்கு ஒரு சகோதரனாய் இருந்தவர், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களின் நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களது நட்பு தொடர வாழ்த்துகள் நண்பா
தமிழ் மணம் 2

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான நண்பர் விஜெவி!!!! இப்படியும் நல்ல உள்ளங்கள் இருக்கின்றனரே! அவருடனான தங்கள் அன்பு தொடரவும், அவரது நல் வாழ்விற்கும் பிரார்த்தனைகள் ! வாழ்த்துக்கள்1 நண்பரே!

UmayalGayathri சொன்னது…

அருமையான நட்பு..என்றும் தொடரட்டும்..சகோ

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நட்பின் பெருந்தக்க யாவுள
தங்களின் நட்பு இன்று போல் என்றும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல நண்பரைப் பற்றி அறிந்துகொண்டோம். வாழ்க்கை பாதையில் எத்தநியோ பேர் எதிர்ப்படுகிறார்கள் சிலர்கொஞ்ச தூரம் கூடப்பயனம் செய்து பிரிகிறார்கள்.அவர்களில் ஒரு சிலரே எப்போதும் மனதில் நிலைத்திருக்கிறார்கள்.அப்படிப் பட்டவர்களில் ஒருவர் விஜே நட்பு சிறக்க வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"நூறு அதிகமாக கேட்பார்" என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்...!

திரு. V.J. விஸ்வநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நட்பு தொடரட்டும்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் தமிழ்மண வாக்குக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல நண்பரைப் பற்றிய நல்ல பகிர்வு. கோவையில் 1980களில் தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நடுவண் அரசுத் தேர்வுக்காக அப்போது அறிமுகமான என் நண்பர் எனக்காக தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தியதோடு, தேர்வுக்குச் செல்ல வழிப்பணம் தந்தார். அவரை இன்று வரை நான் மறக்கவில்லை. இதுபோல பல நண்பர்களை நான் கொண்டுள்ளது எனக்குப் பெருமையாகவே உள்ளது.

கோமதி அரசு சொன்னது…

நட்பு வாழ்க!
நல்ல நண்பரை தெரிந்து கொண்டோம். என்றும் நட்பு தொடர வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

V J சில குறிப்புகள் என்ற சிறுகதையைப் படித்த மாதிரி இருக்கே ,உங்கள் நினைவுகள் :)
த ம 8