சகோதரி கவிதாயினி வி.கிரேஸ் பிரதிபா அவர்களின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களின் மூலமாகக் கிடைத்தது. வாசித்தபோது இது துளிர் விடும் விதைகள் அல்ல துளிர் விடும் (க)விதைகள் என்றுதான் தோன்றியது.
அறிவியல் கலந்து தமிழ்க் கவிதைகள் புனைவது என்பது எல்லாருக்கும் வாய்க்கப் பெற்ற கலை அல்ல. அதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார். கவிதைகள் வாசிக்கும் போது அறிவியலையும் தெரிந்து கொள்ள முடிவது சிறப்புத்தானே.
முன்னுரையில் பட்டிமன்றப் பேச்சாளரும் எழுத்தாளரும் வலைப்பதிவருமான திருமிகு. முத்து நிலவன் ஐயா அவர்கள், "இவரது தமிழ்ப்பற்று ஆங்காங்கே சில புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்து நான் வேறெந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் காணாத புதுமை" என்று சிலாகிக்கிறார். உண்மைதான் நிறைய இடங்களில் புதிய வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பயன்படுத்தி அதற்கான பொருளையும் சொல்லி நமக்கு புரிய வைத்திருக்கிறார்.
முகவுரையில் கவிஞரும் திரைப்பட உதவி வசனகர்த்தாவுமான திரு. லவ் குரு (ரேடியோ ஜாக்கி) அவர்கள், "தமிழை நேசிக்கிறார், பெற்றோரைப் பூஜிக்கிறார், நாட்டைக் கொண்டாடுகிறார், இயற்கையைச் சிதைக்காதே என சமூக அக்கறையோடு யாசிக்கிறார். புலரும் பொழுதைப் பாடுகிறார், மலரும் மலரைப் பாடுகிறார், நெடிதுயர்ந்த மரத்தைக் கட்டிக்கொண்டு காதலிக்கிறார், கூடவே கனவுக் கணவனுக்காக கட்டளைகள் இடுகிறார். என்னளவில் நான் உணர்வது இந்தக் கவிதைகள்தான் கிரேஸ் பிரதிபா... கிரேஸ் பிரதியா தான் இந்தக் கவிதைகள்" என வியந்திருக்கிறார். உண்மையில் அப்படித்தான் தொகுத்திருக்கிறார்.
அணிந்துரையில் பிரபல எழுத்தாளரும் மதுரை பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியையுமான திருமதி. எம்.ஏ. சுசீலா அவர்கள், " எல்லாருக்கும் பரவலாக அறிமுகமான பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு கவிதை வடிவில் வெளிப்படையாக நேரிடையாகத் தரும் வகை சார்ந்தவை கிரேஸின் கவிதைகள்" என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் பெரும்பாலான கவிதைகள் நமக்குத் தெரிந்த விஷயங்களை கவிதையாக்கிப் பேசுகின்றன.
முற்றிலும் வித்தியாசமாய் தமிழ், வாழ்த்துக்கள், இயற்கைச் சூழல், காதல், இயற்கை, சமூகம், தாய்மை, படைப்பு, வாழ்க்கை எனப் பகுத்து கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். தலைப்புக்கேற்ப கவிதைகள் அழகாய்த் துளிர் விடுகின்றன.
தமிழ் என்னும் விதையில் சில கவிதைகளை துளிர்க்க விட்டிருக்கிறார். அதில் 'இன்னுயிர்த் தமிழ் அன்றோ?' என்னும் கவிதையில்,
"பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ?"
எனக் கேட்கிறார்.
அவர் கேள்வியில் இருக்கும் நியாயம் சரிதானே... இப்படித்தான் 'தமிழ்கொண்டே சென்றிடுவாய்', 'அரிய இலக்கியம் படித்து' என்ற கவிதைகளிலும் தமிழுக்கு கவி பாடியிருக்கிறார்.
வாழ்த்துக்களில் அப்பாவுக்காக, அம்மாவுக்கா, நட்புக்காக, தமிழ் புத்தாண்டுக்காக கவிதை எழுதியிருக்கிறார். அதில்,
"என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே...
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே...!"
என அப்பாவை பற்றியும்
"அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை"
என அம்மா பற்றியும் கவி பாடியிருக்கிறார்.
இயற்கைச் சூழலில் காகம் பாட்டிலில் கூழாங்கல்லைப் போட்டு குடித்த கதையை வைத்து எழுதிய கவிதையில் இப்படிக் கேட்கிறார்.
"கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும் எங்கே? எங்கே?"
என நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
"ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டி தண்ணியா?
என்றேன் நான்
அடப்போம்மா
நீதான் பூமியைக் காப்பாற்றப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன் நான்"
என நானும்தான் என்னும் கவிதையில் தண்ணீர் சிக்கனத்தால் பூமியைக் காக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
காதல் என்னும் கூட்டுக்குள் நிறைய கவிப் பறவைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ரசிக்க வைக்கின்றன. 'கனவுக் கணவனே' என்னும் கவிதையில்
"முதிர்ந்து நடுங்கும் பொழுது கை கோர்க்க வேண்டும்
கண்கள் சுருங்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்"
என்றும்
'உன்னிடம் வந்ததை' என்னும் கவிதையில் இதயம் உன்னிடம் வந்ததை அறிவாயா என்று கேட்கும் அவர்
"என் புன்னகையும்
என் விழிகளும்
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல்
கண்களைச் சுழற்றிச் சுழற்றியே பார்க்கிறேன்
என்னை அறியாமல்"
என்று காதல் வயப்பட்டதை கவிதை ஆக்கியிருக்கிறார்.
இயற்கை என்னும் இன்பத்துக்குள் 'உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்' என்னும் கவிதையில்
"பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக் கண்டு உவக்கும் உயிரிவள்"
என்று பல பெயர் கொண்ட நிலாவை எனக்குப் பிடிக்கும் என்பதை அழகாய் காட்சிப்படுத்துகிறார்.
சமூகத்தில் ஓநாய்கள் உலவும் சமூகமடி தோழி எனவே நீ விழிப்பாய் இருடி தோழி எனச் சொல்கிறார். அதில்.
"வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி?
என்கிறார்.
"தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக்கவசம் ஏன் வாங்கவில்லை?"
என்று 'தலைக்கவசம் குடும்பக்கவசம்' என்னும் கவிதையில் விபத்தில் இறந்த அம்மாவைப் பார்த்து குழந்தை கேட்பதாய் கேட்கிறார்.
தாய்மையில் மழலை உண்ணும் அழகை மகிழ்வான கவிதை ஆக்கியிருக்கிறார். அதில்,
"மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு
வாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக் கண்டு உவந்து
சிலையாய் நின்றால் தாய் இடையிடாமல்"
என கிண்ணத்துச் சோற்றை தரையில் கொட்டி அள்ளிச் சாப்பிடும் அழகைச் சொல்கிறார்.
படைப்பில் 'கவிதை - கணிதம்' எனும் தலைப்பில் ஒரு கவிதை, அதில்,
"படைப்பு
மெய்யோ பொய்யோ - சொல்லலாம்
கணிதம்
மெய்பிக்க வேண்டும் - சொன்னதை"
என்கிறார்.
எவ்வளவு அழகான சிந்தனை, யோசித்துப் பாருங்கள் கவிதையில் ஆழம் புரியும்.
'வாழ்க்கையில் வானவில்லாய்' என்னும் தலைப்பில்
"துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஓளிவீசும் வெற்றி"
என்கிறார்.
இப்படி அழகான கவிதைகளைத் தொகுத்து தனது முதல் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே... அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
அப்புறம் இது மனசு அல்லவா... மனதில் பட்டதை சொல்ல வேண்டாமா... திருமதி சுசிலா அம்மா தனது அணிந்துரையில் கவிதையில் அழகியலிலும் வடிவ நேர்த்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் கவிதைகள் தரத்தில் இன்னும் மேம்படக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். கவிதைகளைப் படித்தபோது என் மனதிலும் தோன்றியது இதுதான். பல கவிதைகள் நீளமான வரிகளாய் கவிதைக்கான நேர்த்தி இன்றி வசனம் போல் இருக்கின்றன.
என்னைக் கவிதை எழுதச் சொன்னால் வசனமாகத்தான் எழுதுவேன்... அதை நீட்டி மடக்கி கவிதை என ஆக்கி வைப்பேன். அப்படியெல்லாம் இவர் செய்யவில்லை என்றாலும் புத்தகத்திற்கான கவிதைத் தொகுப்பில் எதற்காக கவிதை போல் மடக்கி மடக்கி எழுதாமல் நீளநீள வரிகளாய் போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அது மட்டுமே சற்று குறையாய் தெரிகிறது. மற்றபடி துளிர் விடும் விதைகள் மூலம் ஒரு அருமையான கவிஞரை பதிவுலகம் எழுத்துத்துறைக்கு அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த தொகுப்பில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக கொண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
எனக்கு ஹைக்கூ வகைக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் என்பதை கீதா அக்கா அவர்களின் கவிதைத் தொகுப்பான ஒரு கோப்பை மனிதம் பற்றிய பகிர்வில்
சொல்லியிருந்தேன். இவரது கவிதைகளில் கிடைத்த ஒரே முத்து...
"அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை..."
அஹா.... அருமை... அருமை... என்னைக் கவர்ந்த இந்தக் கவிதை தங்களையும் கவரும் என்று நினைக்கிறேன்..
அகரம் பதிப்பக வெளியீடான துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பு ரூ.100 மட்டுமே.
கவிதாயினி கிரேஸ் பிரதிபா அவர்களின் வலைத்தளம் தேன்மதுரத்தமிழ்
மனசு தொடர்ந்து பேசும்
'பரிவை' சே.குமார்.
22 எண்ணங்கள்:
சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்துவோம்
இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
அவசியம் நூலினை வாங்கி வாசிக்கிறேன்!
இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
கிரேஸ்பிரதிபா அவர்களின் இந்நூலைப் பற்றி எனது வலைப்பூவில் பதிந்துள்ளேன். தங்களின் மதிப்புரை வித்தியாசமாக இருந்தது. நன்றி.
வணக்கம்
புத்தகம் பற்றிய விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்.த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
வாசித்து விட்டேன்...
மீண்டும் ஒருமுறை இங்கு ரசித்தேன்...
அருமையான வாசிப்பனுபவம். வாழ்த்துகள்.
வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாவாணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க thamilBM..
தங்கள் வருகைக்கு நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறப்பான விமர்சனம் நானும் படித்திருக்கிறேன் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே...
தமிழ் மணம் 5
தோழி கிரேஸ் நூலுக்கு விமர்சனம் எழுதிய விதம் அருமை அண்ணா!
என் நூலைப் படித்து விமர்சனம் எழுதிப் பகிர்ந்ததற்கு நன்றி சகோ. மகிழ்ச்சி..
கவிதை அழகியலிலும் இனிக் கவனம் செலுத்துவேன்..என் உளமார்ந்த நன்றி சகோ.
சகோதரியின் நூலின் விமர்சனம் அருமை! எடுத்துச் சொன்னக் கவிதைகளும் அட! போட வைத்தன....நண்பரெ!
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க சகோதரி...
கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிகச் சிறந்த கவிதை நூலை உங்களால் கொடுக்க முடியும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க துளசி சார் / கீதா மேடம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
கருத்துரையிடுக