முந்தைய பகுதிகள் :
"டேய்...சின்னக் காயம்ன்னு சொன்னே...?" என மணி வேகமாக எழுந்து வந்து பேக்கை வாங்க, "என்ன மாப்ள எல்லாருக்கும் அடிபட்டிருக்கு... அபிக்கு இத்தனை கட்டுப் போட்டிருக்காங்க... சின்ன காயந்தான்னு சொன்னே...' என கேட்டபடியே வந்தார் அழகப்பன்.
"இல்லண்ணே...சின்னக் காயந்தான்... கட்டுத்தான் பெரிசு... " சொல்லி வலியை மறைத்துச் சிரித்த அபி "மாமா எப்படியிருக்காங்க?" என்று கேட்டபடி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். அப்போது அங்கு வந்து நின்ற காரில் இருந்து கண்மணியின் கணவன் ரமேஷ் இறங்கினான்.
இனி...
ரமேஷ் காரிலிருந்து இறங்கவும் உள்ளே நுழைந்த குமரேசனும் அபியும் மீண்டும் வாசலுக்கு வந்தார்கள். 'வாங்கத்தான்' என மணியும் குமரேசனும் சொல்ல தலையை மட்டும் ஆட்டினான். 'அண்ணே நல்லாயிருக்கீகளா?' என அபி கேட்க 'ம்' என்றான். 'வாப்பா' என்று அழகப்பன் சொல்லவும் 'அண்ணே...' என்றவன் 'எப்படியிருக்கீங்கண்ணே... மாமாவுக்கு இப்ப எப்படியிருக்கு... வேலை விஷயமா வெளிய போயிருந்தேன்..." என அவரிடம் பவ்யமாய் பேசினான்.
"கண்மணி சொன்னுச்சு... எனக்கென்ன நல்லாயிருக்கேன்... மாமா ரொம்ப பயமுறுத்திட்டாரு... ஐசியூவுல இருந்து வெளிய கொண்டாந்துட்டாங்க... இப்பப் பரவாயில்லை... போ... போய் பாரு..."
"ம்... சரிண்ணே..." என உள்ளே செல்ல, அழகப்பன் குமரேசனிடம் நீயும் அவன் கூட போவெனக் கண்ணைக் காட்டினார். பின்னாலேயே சென்ற அபியை கூப்பிட்டு அப்புறம் போகலாம் எனச் சொன்னார்.
"வாங்க... எப்படியிருக்கீங்க..?" தன்னைக் கடந்த ரமேஷிடம் கேட்டாள் சுந்தரி.
"நல்லாயிருக்கேன்... எந்த ரூம்...?"
"இந்தா இதுல கடைசி... அம்மா இருக்கு... இப்பத்தான் கண்மணி பாத்துட்டு வாறேன்னு போனா..."
பதில் சொல்லாது அவள் காட்டிய திசையில் நடந்தான். குமரேசன் அக்காவிடம் பேசிக் கொண்டு நின்றான். அவனின் முகம், கையெல்லாம் தடவிப் பார்த்தவள் எங்கடா அபி புள்ளைங்க எல்லாம் எனக் கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.
அதற்குள் அறைக் கதவை நாசூக்காக தட்டிவிட்டு உள்ளே சென்றான் ரமேஷ்.
"வாங்கப்பா..." என்றபடி சேரில் இருந்து எழுந்தாள் காளியம்மாள்.
"ம்..."
"உக்காருங்க..."
பேசாமல் உக்கார்ந்தான். "என்ன மாமா பண்ணுச்சு...?" என்றான் கந்தசாமியிடம்.
"நெஞ்சுவலி வந்திருச்சுப்பா..." என்றாள் காளியம்மா.
"ம்..."
"வேலையாப் போனியன்னு கண்மணி சொன்னுச்சு..." மெதுவாகக் கேட்டார் கந்தசாமி.
"ஆமா... இப்பத்தான் வந்தேன்..."
"வீட்டுக்குப் பொயிட்டு வந்தீங்களா? ஸ்ரீ என்ன பண்றா..?"
"பொயிட்டுத்தான் வாறேன்... அதான் எங்கம்மா இருக்குதுல்ல... அப்புறம் என்ன... நீ ரெண்டு நாளைக்கி இருந்து பாத்துக்கிட்டு வா... நா கிளம்புறேன்..."
"சத்த இருங்க... நானும் வாறேன்... நாளக்கி வந்து பாத்துக்கிறேன்..."
"அங்க வந்து என்ன பண்ணப் போறே...? எல்லாரும் இங்க இருக்கயில நீ வந்துட்டா நாந்தேன் ஒட்டவிடாம கூட்டிக்கிட்டுப் பொயிட்டேன்னு பேசுவாங்க.... இருந்துட்டு வா... எங்கம்மா பாத்துக்கும்..." என்றான்.
அப்போது குமரேசன் உள்ளே வர, தன் பேச்சை நிறுத்தினான். தம்பியைப் பார்த்ததும் "என்னடா... அடி ரொம்பவா.. பிள்ளைங்க, அபியெல்லாம் எங்க...?" என்றாள் கண்ணகி.
"வெளிய இருக்குக..." என்றவனை "அடி ஆத்தி... இப்படி அடிபட்டு வந்திருக்கியே ராசா.... அதுக எங்க... அதுகளுக்கும் ரொம்ப அடி பட்டிருக்கா?... நல்லவேளைக்கு இத்தோட போச்சே... நம்ம குடும்பத்துக்கே நேரஞ்ச் சரியில்லை போல..." என கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டாள் காளியம்மா.
"வெளியில அத்தானுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குக... அடியெல்லாம் ரொம்ப இல்லைம்மா... எதுக்குப் பதறுறே..? அப்பாவுக்கு எப்படியிருக்கு..." என்றவன் கந்தசாமிக்கிட்ட போய் "அப்பா.. " என்றழைத்த போது அவனை அறியாமல் கண்ணீர் வந்தது.
"ஏய்... எதுக்கு அழுவுறே...? என்னை விடு... உனக்கென்னாச்சுப்பா..?" பதறலாய் கேட்டார்.
"ஒண்ணுமில்லை... சின்ன ஆக்ஸிடெண்ட்...."
"ஆத்தி... புள்ளைங்க எங்கே... கூப்பிடு நா பாக்கணும்..."
"அப்பா.... உங்களுக்கு உடம்பு முடியலை... பதறக்கூடாது.. இருங்க இப்ப வருங்க..."
"கண்மணி." என மெதுவாக மனைவியை அழைத்தான் ரமேஷ்.
"என்னங்க..." என அவனருகில் வர, அவளிடம் மெதுவாக "எங்கடி விழுந்தானாம்?" என்று கேட்டான்.
"பஸ் ஆக்ஸிடெண்டாம்... வெளிய அபிய பாக்கலையா நீங்க... "
"ஆமா... பாத்தேன்... தலையில கட்டுப் போட்டிருந்துச்சி... ஏதோ ஞாபகம் ஒண்ணும் கேக்கலை..." என்றான் மெதுவாக.
"சரி.. இவனுக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமுல்ல..."
"ம்... என்னைய என்ன மானங்கெட்டவன்னு நினைச்சியா? " என்றவன் "அப்ப கிளம்புறேன் மாமா, பாருங்க... இல்லைன்னா சொல்லுங்க மதுரைக்கு போயி பாத்துட்டு வந்திருவோம்.... காசு பணத்தைப் பத்தி யோசிக்காதீக... எங்கிட்ட இருக்கு... நாஞ்செலவு பண்ணுறேன்... என்ன வரட்டுமா?" என்றவன் அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக வெளியேறினான்.
'நீயும் அவருகூட போயிட்டு வீட்டுக்கு கூட்டியாந்ததும் வா.. போ... ஊரு ஊரா சுத்திட்டு வர்ற மனுசனுக்கு அவுக ஆத்தா என்ன சமைச்சிப் போடும்... நீ போனியன்னா வாய்க்கு ருசியா சமைச்சிப் போடுவே... போகும் போது ஒத்தக்கடையில மீனு கெடந்தா வாங்கிக்கிட்டுப் போங்க" என மகளை விரட்டினாள் காளியம்மாள்.
"சரிம்மா... அப்பா பாத்துக்கங்க... தம்பி உடம்பைப் பாத்துக்கடா... " என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினாள்.
எல்லாரும் பேசிக் கொண்டு நிற்க, "என்ன அபி ஆக்ஸிடெண்டாமே... ரொம்ப அடியோ...?" என்றான் ரமேஷ்.
"இல்லண்ணே... சின்னக் காயந்தான்..."
"பசங்களுக்கும் அடியா...?"
"லேசா.."
"சரி உடம்பைப் பாத்துக்க... நா வர்றேன்.."
"இருங்கண்ணே... போகலாம்..."
"வேலையிருக்கு... அதான் உங்க அத்தாச்சி இருக்காளே... அண்ணே வர்றேண்ணே... பாருங்க... சரியா வரலைன்னா போன் பண்ணுங்க... மதுரைக்கு கொண்டு போயி காட்டிக்கிட்டு வந்திருவோம்... காசு பணத்தைப் பத்தி யோசிக்காம..."
"என்னப்பா... காசு பணத்துக்கா மொடை... பாத்தாச்சு.... நல்லாயிருக்கார்... பாப்போம்... அப்படி போறதாயிருந்தா போன் பண்ணுறேன்..."
"சரிண்ணே... சரி கண்மணி நா கிளம்புறேன்...."
"நானுந்தான் வாறேன்..."
"உன்னையத்தான் இருக்கச் சொன்னேனே..."
"இல்லங்க... அதான் அண்ணன், அக்கா, அத்தான், தம்பி எல்லாரும் இருங்காங்க... நீ பொயிட்டு வான்னு அம்மா சொன்னுச்சு..."
"சரி வா..." என்றவன் மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.
"இந்தாளு இன்னும் திருந்தலை... அவனுகளும் மதிப்பும் மரியாதையுமா இருக்கும் போது அவனுககிட்ட பேசினா என்னா கொறஞ்சா போயிரும்" சுந்தரி கடுகடுத்தாள்.
"விடு.... அவனாத் திருந்தி வருவான்... இன்னைக்கு என்னமோ அதிசயமா அபிக்கிட்ட பேசுனான்... சரி அபி கையெல்லாம் மறச்சிக்கிட்டு மாமாவைப் பாத்துட்டு வா... ரொம்ப நேரம் நின்னா அப்புறம் அவரு உங்களுக்காக வருந்த ஆரம்பிச்சிருவாரு..."
"சரிண்ணே..." என உள்ளே சென்றாள்.
கந்தசாமி ஆஸ்பத்ரியில் இருந்து திரும்பி பத்து நாளைக்கும் மேலாச்சு, கண்ணதாசன் ஆட்களைப் பிடித்து எல்லா வயல்களிலும் அறுபடை முடித்திருந்தான். அபி வீட்டு வேலை பார்க்க, குமரேசன் லீவு போட்டு விட்டு கண்ணதாசனுடன் கூடமாட திரிந்து ஒரு வழியாக நெல் மூடைகளை எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பாத்துப் போக, மூத்த மருமகள் மட்டும் பொங்கலுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது கந்தசாமிக்குக்கூட வருத்தமாகத்தான் இருந்தது. என்ன செய்வது மகனுக்காக எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டதால் வருத்தத்தை வெளியில் சொல்லவில்லை.
பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னதாக மணியும் குடும்பத்துடன் வந்துவிட, வீடு கலகலன்னு இருந்தது. வீட்டுக்குள் ஆய்... ஊய்... என குழந்தைகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த சந்தோஷம் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும் அப்புறம் நானும் கெளவியுமாத்தான் கெடக்கணும் என கந்தசாமி நினைத்துக் கொண்டு பேரன் பேத்திகளை அதட்டியும் கேலி செய்து கொண்டும் பொழுதைக் கழித்தார்.
விடிந்தால் பொங்கல்... இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த கந்தசாமி, வாசலில் வந்து அமர்ந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது "அப்பா... என்னோட நெலமை சரியில்லை... எப்ப என்னாகும்ன்னு தெரியலை..." என இழுத்தார்.
"எதுக்கு மாமா நல்லநாளும் பெரியநாளுமா இப்படி பேசுறீக... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது..." சித்ரா வேகமாகச் சொல்ல, 'பரவாயில்லையே பாசம் இருக்கத்தான் செய்யுது' என நினைத்துச் சிரித்தபடி "வயசாயிருச்சும்மா... என்ன எப்ப நடக்கும்ன்னு யாருக்குத் தெரியும்..." என்றார்.
"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்?" குமரேசன் கேட்டான்.
"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா?" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.
(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
எழுத்துக்களில் காணப்படுகின்ற பாச உணர்வு கதையினைப் படிப்பதைப் போல் இல்லை. ஏதோ உண்மையில் நடப்பதைப் பார்ப்பதுபோல் உள்ளது.
இந்த சந்தோஷம் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும் அப்புறம் நானும் கெளவியுமாத்தான் கெடக்கணும் என கந்தசாமி நினைத்துக் கொண்டு பேரன் பேத்திகளை அதட்டியும் கேலி செய்து கொண்டும் பொழுதைக் கழித்தார்.//
இந்த நிலைதான் இப்போது இருக்கும் பெரியவர்கள் எல்லோருக்கும். பேரன் பேத்திகள் வரும் நாள் திருநாள், அவர்கள் போன பின் திருவிழா முடிந்து வெறுமையாகி போன இல்லம்போல், மனதை கனக்க வைக்கும்.
குடும்ப உறவுகளின் பாசம், நேசம், சில மனகுழப்பங்களை அழகாய் சொல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தமிழ்மண வாக்கு இரண்டாவது.
யதார்த்தம் அருமை நண்பரே
தமிழ் மணம் 3
அருமையாக செல்கிறது! தொடர்கிறேன்!
யதார்த்தமான வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் எழுத்து
யதார்த்தமாக, அருமையாகச் செல்கின்றது நண்பரே! கண் முன்னால் நடப்பது போல....தொடர்கின்றோம்...
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா....
வாக்களித்தமைக்கு நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாக்களித்தமைக்கு சிறப்பு நன்றி.
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார், கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக