பழனி ஐயா...
இந்தப் பெயர் என்னுடன் இறுதிவரை பயணிக்கும் பெயர்... அவரின் மாணவர்களில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்.
ஒவ்வொருவருக்கும் குடும்பம் தாண்டி ஏதாவது ஒரு உறவு மிகவும் நெருக்கமானதாகிப் போய்விடும். அப்படியான ஒரு உறவு எனக்கு ஐயா. இவரைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். திரும்பத் திரும்ப எழுத ஏதாவது ஒன்றை எனக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். எவ்வளவு எழுதினாலும் தீராத நேசம் இது.
ஏனோ அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்... ஆம் ரொம்பவே பிடிக்கும்... அன்றும் இன்றும் அதே அன்புதான் அவரிடம்... இவ்வளவுக்கும் நான் அவரின் தமிழ்த்துறை மாணவன் அல்ல... கல்லூரியில் முதலாமாண்டு எங்களுக்குத் தமிழ்ப் பாடமெடுத்தாலும் அவ்வளவு நெருக்கமான உறவெல்லாம் எங்களுக்குள் இல்லை... இப்போது போல்தான் அப்போதும் நான் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.
இரண்டாம் ஆண்டில்தான் நண்பனும் அவரின் மாணவனுமான முருகன் ஐயா வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது குடியிருந்த தேவிபவனம் என்னும் அந்த வளைவு (இப்போது ஐயா வீடு கார்ப்பரேஷன் வீதியில்) எங்களை உள்வாங்கிக் கொண்டது. அறையெங்கும் புத்தகம்... அதன் நடுவே ஐயா... அப்படித்தான் முதல் சந்திப்பு எங்களுக்குள்... இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்... புத்தகங்களுக்கு நடுவே இருக்கும் புத்தனாய்... அன்றைக்கு அவர் சொன்ன அடிக்கடி வாங்கய்யா என்ற சொல்தான் என்னை இன்று வரை ஐயாவின் இல்லத்துக்குள் மகனாய் நுழைய வைத்திருக்கிறது.
தினமும் ஐயா வீடுதான் எங்களுக்கு மாலையில் கூடுமிடமாய் அமைந்தது... நாங்கள் ஒரு கூட்டம்... கிட்டத்தட்ட பத்துப்பேர்... அது ஒரு பெருங்கூட்டம்... எல்லாரும் கூடினால் வீட்டுக்குள் எப்போதும் சலசலப்புத்தான்... பெரும்பாலும் ஐயா வெளியில் கிளம்பும் தருணத்தில் அவருடன் இருப்பது நான், முருகன் மற்றும் சுபஸ்ரீயாகத்தான் இருக்கும். நால்வருமாய் பேசியபடியே சைக்கிளை உருட்டிக்கொண்டு நடப்போம். சுபஸ்ரீ வீடு கடந்தும் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டே செல்வோம். நிறைய விஷயங்கள் சொல்வார்... கதைகள் சொல்வார்... இன்னும் இன்னுமாய் பல விஷயங்கள் பேசிக் கொண்டே வருவார். இந்தக் கொடுப்பினை எங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகம் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன்... ஆம் அவரின் வளர்ப்பு அண்ணன் மணிவாசகமும் மேகலாவும் மட்டுமல்ல... நாங்களும்தான்.
கல்லூரியில் படித்த நாட்களில் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் அங்குதான் இருப்போம். அம்மா எங்களுக்காகச் சமையல் செய்வார்... ஐயா சுத்த சைவம்... ஆனால் எங்களுக்காக அசைவம் சமைப்பார் அம்மா... உள்நாக்குப் பிரச்சினைக்காக என்னை ஒரு தந்தையாய் காரைக்குடி மருத்துவமனைக்கு வாராவாரம் அழைத்துச் சென்றவர் ஐயா... யாருக்குக் கிடைக்கும் இந்த அன்பு... மருத்துவர் காபி சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் இன்றுவரை அம்மா வீட்டில் எனக்கு பால் மட்டும்தான் கொடுப்பார்கள்... ஐயா வீடு என்பதைவிட அம்மா வீடு என்றுதான் எனக்கு வரும்... ஆம் அம்மாவுக்கு நானும் ஒரு பிள்ளைதான் இப்போதும்... இருவரும் ஒரே மாதிரி குணவார்ப்பாய் இருப்பது அபூர்வம்... அதை இவர்களிடத்தில் பார்க்கலாம்.
ஐயாவைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால் பத்து நிமிடங்களுக்கு முன் அங்கிருக்க வேண்டும்... நானும் முருகனும் அவருடன் பெரும்பாலும் செல்வோம் என்பதால் நான் முன்னதாக ஐயா வீடு சென்று விடுவேன். முருகன் எப்பவும் தாமதம்தான்... இன்று வரை ஐயாவைப் போல் என்னால் கிளம்ப முடிகிறது என்றால் அவர் சொல்லிக் கொடுத்ததுதான். இப்பவும் அப்படித்தான் இருக்கிறார்.
என்னை எழுத வைத்துப் பார்த்தவர் அவர்... என் முதல் கவிதையை தாமரையில் மலர வைத்துப் பார்த்தவர் அவர்... என்னைப் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் எங்க கே.வி.எஸ் சார் போவது ஐயாவிடம்தான்... கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது மணிவாசகம் தம்பி என்கிறார்... மேகலையோ அண்ணன் என்கிறார்... பின் நான் என்ன சொல்ல... என் மகன் என்பதைவிட என்றார். அதே வார்த்தைகளை வைத்துத்தான் எனக்கு திருமண வாழ்த்து எழுதினார். அது எங்கள் வீட்டில் இப்போதும் இருக்கிறது. இந்த முறை சென்றபோது அது குறித்த பேச்சை அம்மா எடுத்ததும் இலக்கியமேகம் ஸ்ரீனிவாசன் குமாருக்கு எழுதிய வாழ்த்தைப் பார்த்துட்டு நீங்க எழுதியதுலயே அருமையான வாழ்த்து இதுதான்... குமாருக்கு மட்டும் ஸ்பெஷலா வந்திருக்கு என்று சொன்னார் என்பதைச் சொல்லி கையைப் பிடித்துக் கொண்டார்.
எங்களை தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துக்குள் கொண்டு சென்றவர் அவர். அதன் மூலம் பல ஆளுமைகளுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர். அவரின் பிள்ளைகள் என்பதாலேயே சவரிமுத்து ஐயா, அருள்சாமி ஐயா, லெட்சுமணன் ஐயா, பூவநாதன் ஐயா என மற்றவர்களுக்கும் பிள்ளையாகிப் போனோம். சவரிமுத்து ஐயா வீட்டிலும் அம்மாவுக்கு எங்கள் மீது பெரும் அன்பு... அங்கு போகும் போது ஏதாவது சாப்பிடச் சொல்வார். இப்பவும் சவரிமுத்து ஐயா என் மனைவியைப் பார்த்தால் எம்மகன் எப்படியிருக்குது... எப்ப வருது... என்று கேட்கத் தவறுவதில்லை... பரியன்வயல் என்னும் கிராமத்தில் கஷ்டப்படும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவனுக்கு இன்று வரை பல அப்பா, அம்மா என்னும் உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஐயா.
புத்தகம் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தபோது அணிந்துரை என்பது ஐயாவின் எழுத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கதைகளை முன்னரே கொடுத்திருந்தாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த கதைகளை அனுப்பி அவரிடம் உடனே வாங்க முடியாத நிலை... எழுதுகிறேன் என்று சொன்னாலும் வேலைகளால் அவரால் முடியாமலேயே போய்விடும் என்பதை நானறிவேன்... ஊரில் இருந்திருந்தால் வீட்டில் கிடையாய்க் கிடந்தேனும் வாங்கியிருப்பேன்... அவரின் சைக்கிள் பின்னாலே நடந்தாவது வாங்கியிருப்பேன்... இங்கிருக்கும் போது அது முடியாதல்லவா... அதனால் அணிந்துரை இல்லாமலேயே எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 'எதிர்சேவை' வந்தது.
புத்தகத்தை யாருக்குச் சமர்பணம் செய்வது என்பதில் எந்தக் கேள்வியும் எனக்குள் எழவில்லை... என் அப்பா, அம்மா, மனைவி எல்லாரையும் விட இந்த எழுத்தை எனக்குள் விதைத்த, என் மகனென்று சொன்ன, கல்லூரி நாட்களின் மாலை வேளைகளை பயனுள்ளதாய் மாற்றிய, இன்றைக்கும் என்னைப் பார்த்ததும் கையைப் பிடித்துக் கொள்கிற, வீட்டிற்குச் சென்று கிளம்பும் போது அந்த வளாகத்தின் நுழைவு வாயில் வரை வந்து வழியனுப்புகிற அவரைத் தவிர வேறு யாருக்குச் சமர்ப்பணம் செய்வது... இந்த புத்தகமென்றில்லை இறையருளால் இன்னும் புத்தகங்கள் கொண்டு வந்தாலும் எல்லாமே அவருக்கானதுதான். இது புகழ்ச்சிக்காக அல்ல... என் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்திற்கு விலை கிடையாது... அதை அம்மா, ஐயா, மேகலா, என் மனைவி என நாங்கள் மட்டுமே அறிவோம்.
புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சென்ற போது அதை வாங்கிப் பிரித்தவர், எனக்குத்தானே சமர்ப்பணம் செய்திருக்க வேண்டும்... வேற யாரையோ போட்டிருக்கீங்க என்றார் சிரித்தபடி, அங்கிருந்த பூவநாதய்யாவின் மகன் புத்தகத்தை வாங்கிப் பார்த்து உங்க பேர்தான் இருக்கு என்றார் சிரித்தபடி... பின் அவரிடமும் மற்றும் இன்னொரு நண்பரிடம் என்னைப் பற்றிப் பேசினார்... அதில் என்னைவிட எங்க அப்பாவைப் பற்றி நிறையப் பேசினார். அப்பாவுக்கு எப்பவும் ஐயா மீது அளவு கடந்த மரியாதை... இப்பவும் ஊருக்குப் போனால் 'என்னப்பா... உங்க ஐயாவைப் பார்த்துட்டியா...?' என்று அப்பா கேட்க மறப்பதில்லை... நானும் அங்கு செல்லாமல் வருவதில்லை... ஒரே வீதியில் இருப்பது இன்னுமொரு கொடுப்பினைதானே... அடிக்கடி அங்கு போகலாம்... உரிமையுடன் அடுப்படி வரை செல்ல முடியும் அந்த வீட்டில்...
'வேரும் விழுதுகளும்' வாசித்துவிட்டு அதென்ன அவனுக்கு கண்ணதாசன்னு பேர் வச்சிருக்கீங்க... தீர்மானம் பண்ணியதான்னு கேட்டுவிட்டு. கதையை வாசித்து முடிக்கும் போது அந்தக் கதாபாத்திரத்துக்கு அந்தப் பெயர் மிகப் பொருத்தமா இருக்குன்னு தோணுச்சு என்றவர் இதைப் பற்றி உங்களுக்கு நான் விரிவா எழுதித்தாரேன் என்றார். அதை புத்தகமாக்கும் நேரம் வந்தால் அணிந்துரையாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன். எழுதித்தாரேன் என்றார்... இன்னும் கிடைக்கவில்லை... ஒரு முறை விஷால் போய் கேட்டிருக்கிறான். இந்த முறை சென்றபோதும் எழுதுகிறேன் என்றார். விரைவில் எப்படியும் வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கையும் அது புத்தகமாகும் என்ற நம்பிக்கையும் எனக்குள் நிறையவே இருக்கிறது.
ஐயா வீடு போறேன்னு சொன்னால் நானும் வாறேன்னு விஷால் முன்னால் நிற்பான். இந்த முறை சென்ற போது அவனை இழுத்து அருகமர்த்திக் கொண்டவர், தம்பி தாத்தா கூட இருக்காங்களா... அப்பா கூட இருக்காங்களான்னு சீட்டுப் போட்டுப் பார்ப்போம்... தாத்தா வீடுன்னு வந்துட்டா இங்கதான் இருக்கணும் என்றவர் சீட்டெழுதிப் போட்டு அவனை எடுக்கச் சொல்ல, எடுத்தது தாத்தா வீடு... இனி இங்கதான் என மற்றொரு சீட்டை மறைத்துக் கொள்ள, அதில் என்ன எழுதியிருக்குன்னு காட்டுங்க என அவருடன் மல்லுக்கட்டிப் பறித்துப் பார்த்தான் அதிலும் தாத்தா வீடுதான்... ஒரே மாதிரி எழுதி ஏமாத்துறீங்க... இப்ப நான் எழுதிப் போடுறேன் என விஷால் எழுதிப் போட்டு எடுத்தான் அப்பா வீடென... அவருடன் மல்லுக்கட்டி விளையாடும் அளவுக்கு பேரன்பு என் பிள்ளைகளுக்கும் கிடைத்திருப்பது வாழ்வின் பேரானந்தம்... இது ஒரு வரம்... எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை.
எதிர்சேவைக் கதைகள் எல்லாம் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்பதைச் சொன்னார்... அப்போது அவரின் கைகள் என்னை இறுக்கிப் பிடித்திருந்தன... என் எழுத்துக்குக் கிடைத்த பெரும் பேறு அது... வண்ணதாசனின் ஒரு சிறு இசையைக் கொடுத்து வாசித்து விட்டு அவருடன் பேசச் சொல்லி போன் நம்பரும் எழுதிக் கொடுத்து விட்டார். இன்றுதான் கையில் எடுத்திருக்கிறேன் வாசிக்க... சி.சு.செல்லப்பா குறித்த ஒரு புத்தகம்... தாகூரின் படம் என நிறையக் கொடுத்தார்... எப்போதும் அவர் நிறைவாய்க் கொடுக்கும் அன்புடன். விஷாலுக்கும் எப்பவும் போல் ஒரு புத்தகம் கிடைத்தது பேராண்டிக்கு தாத்தாவின் கையெழுத்துடன்.
உடல் நலமில்லாததால் ஐயா வீட்டுப் பக்கம் போகாமல் இருந்தேன்... அம்மாவிடம் குமார் எங்கே ஆளையே காணோம்... ஊருக்குப் பொயிட்டாரா... வராம இருக்க மாட்டாரேன்னு கேட்டுக்கிட்டு இருந்தாராம்... நான் போனபோது நேற்றுத்தான் ஐயா உங்களைக் காணோம்ன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க... நீங்களே வந்துட்டிங்க என அம்மா மகிழ்வோடு சொன்னார். உடல் நலமில்லை என்றதும் இருவரும் உடம்பைப் பார்த்துக்கணும்ப்பா... எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
ஐயா யாரையும் வா... போவெனப் பேசியதில்லை... சின்னப் பிள்ளை என்றாலும் மரியாதையுடன்தான் பேசுவார். எதிரியே என்றாலும் உதவி என்றால் முன்னால் நிற்பவர் அவர்தான்... பல மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கட்டியவர் அவர். தமிழாசிரியர்களை கேலியும் கிண்டலும் செய்யும் கல்லூரி மாணவர்களிடையே அவர்களின் தகப்பனாய் உலா வந்தவர் எங்கள் ஐயா. மாணவர்கள் தேடிச் சென்ற மகரந்தம் அவர்... அது இன்று வரை தொடர்கிறது.
எப்போதும் அன்போடும் பாசத்தோடும் இருக்கும் ஐயாவுக்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்தும் வயதெல்லாம் இல்லை நமக்கு... அவரின் ஆசிகள் போதும் இன்னும் வாழ்வதற்கு...
ஆம் அவர் எனக்கு ஆசானில்லை... அப்பா.
நோய் நொடியில்லாத... நீண்ட ஆயுளை இறைவன் அவருக்குக் கொடுக்கட்டும்... அந்த ஓளிநிறைந்த கண்கள் இன்னும் அன்பை எனக்கும் என் குடுமப்த்துக்கும் கொடுக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
அன்பு குமார். பாசம் மிக்க மனிதரைப் பார்ப்பதும் கேட்பதுமே
பெருமை. ஐயாவை அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி. என்றும் அவருடன் நீங்களும் வாழ்க நலமுடன்.
உங்கள் ஆசான் பற்றி நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும்போது மனதில் மகிழ்ச்சி எங்களுக்கும்.
தொடரட்டும் இந்த மாதிரியான உறவுகள்.
அன்பு குமார். பாசம் மிக்க மனிதரைப் பார்ப்பதும் கேட்பதுமே
பெருமை. ஐயாவை அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி. என்றும் அவருடன் நீங்களும் வாழ்க நலமுடன்.
சிறந்த ஒரு மனிதரைப் பற்றி சிறப்பான பதிவு. அன்பு வாழ்க. அவர் பிறந்த நாளுக்கு எங்கள் வணக்கமும், வாழ்த்துகளும்.
கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது மணிவாசகம் தம்பி என்கிறார்... மேகலையோ அண்ணன் என்கிறார்... பின் நான் என்ன சொல்ல... என் மகன் என்பதைவிட என்றார். அதே வார்த்தைகளை வைத்துத்தான் எனக்கு திருமண வாழ்த்து எழுதினார்.
அருமை
கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது மணிவாசகம் தம்பி என்கிறார்... மேகலையோ அண்ணன் என்கிறார்... பின் நான் என்ன சொல்ல... என் மகன் என்பதைவிட என்றார். அதே வார்த்தைகளை வைத்துத்தான் எனக்கு திருமண வாழ்த்து எழுதினார்.
தமிழ் ஐயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்பான பதிவு.
ஐயா, மற்றும் அவர் மனைவி பற்றி சொன்னதும், உங்கள் மகன் தாத்தாவுடன் அன்பாக மல்லுக்கட்டி விளையாடியதும் படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
என் கணவரும் தன் மாணவர்களை வாங்க போங்க என்று மரியாதையாகத்தான் கூப்பிடுவார்கள். அவர்களும் தமிழ் ஐயா என்று அன்புடன் அழைப்பார்கள்.
குமார் இப்படியான அன்புடனான அதுவும் மகன் எனக் கருதும் அன்புடனான, வழிகாட்டியுமான ஆசான்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. ஒரு சிலருக்கே அமைவதுண்டு. நீங்கள் நிச்சயமாகப் பாக்கியம் பெற்றவர். அவருக்கு எங்கள் வாழ்த்துகளும்! சிறப்பான மனிதரைப் பற்றிய உங்கள் நன்றியும் அன்பும் வெளிப்படும் அருமையான போற்றும் பதிவு.
கீதா
அருமையான மனிதரைப் பற்றி அற்புதமான பதிவு...
சிறப்பு குமார்...
நம் சமகாலத்தில் பேசிப் பழகி வியந்து மகிழ்ந்து நேசிக்கும்
பேரறிஞர் பேரன்பர் பெருஞ்சிந்தனையாளர் பெருஞ்சான்றோர் பேராசான்............ இப்படி இப்படியாய் என்னையும் ஒரு பிள்ளையாய் தத்தெடுத்துக்கொண்ட பெரியப்பா நலமுடன் வளமுடன் அருளுடன் மகிழ்வுடன் எழுத்துடன் பேச்சுடன் எண்ணத்துடன் வண்ணத்துடன்
நீடூழி வாழ்க! வாழ்க!!
இவரைப் போன்ற பெரியோரின் நட்பு நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும். மகிழ்ச்சி.
நல்ல மனிதரைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு நன்றி
கருத்துரையிடுக