மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 2 மார்ச், 2020

எதிர்சேவை விமர்சனம் 1: நால்வர் கருத்து

முதல் சிறுகதைத் தொகுப்பு... பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய, பரிசு பெற்ற கதைகளே என்றாலும் புத்தகமாய் வரும்போது அது குறித்து எழும் விமர்சனங்கள், அது மென்மையாகவோ அல்லது கடுமையாகவோ பாராட்டினாலும் திட்டினாலும் விமர்சனங்கள்தான் இன்னும் சிறப்பாய் எழுத வைக்கும். பாராட்டை விட இதை இப்படி எழுதியிருக்கலாம்... இது அபத்தமாய் இருக்கு எனச் சொல்லும் விமர்சனங்களே... ஒவ்வொரு கதையையும் உள்வாங்கி எழுதும் விமர்சனைங்களே... ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும் நம்மைக் கூர் தீட்டும் என நம்புபவன் நான் என்பதால் அப்படியான விமர்சனைங்களையே அதிகம் எதிர்பார்க்கிறேன்.

இதுவரை நால்வரின் (ஒருவர் வாசிக்கும் போது புத்தக விற்பனைக்காக அன்பின் பேரில் எழுதியதும் சேர்த்து) விமர்சனம் பார்த்தேன்... எனது எதிர்பார்ப்புக்கு நேராக இருக்கும் விமர்சனங்கள்... அப்படியானால் என் கதைகள் ஒரளவு அவற்றிற்கான இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றே நினைக்கிறேன்...  மகிழ்கிறேன். இன்னும் பலரின் விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். எப்படியும் அடித்துத் துவைப்பார்கள் என்று நம்புகிறேன்... தயாராய் இருக்கிறேன்... இன்னும் சிறப்பான கதைகளை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.


முதல் விமர்சனம் முகநூலில் எழுத்தாளர் சில்வியா பிளாத் எழுதியது. நேரில் பார்த்தபோது மிக விரிவாகப் பேசினார். நாவல் எழுதுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நாவலா என்று நினைத்துக் கொண்டேன்... இந்த வலைப்பூவில் நான்கு தொடர்கள் எழுதியிருக்கிறேன் என்றும் சொன்னேன். அவர் சொன்ன களத்தில் எழுத ஆசைதான்... பார்க்கலாம்.

அட்டகாசமான சிறுகதைத் தொகுதி. அதுவும் அந்த அழகர் ஆத்துல இறங்குற சிறுகதை படிக்கும் போதெல்லாம் நாமளும் இப்படித் திருவிழாவில் யாருக்கும் தெரியாமல் நம்ம கிரஷ் கையை பட்டும் படாமல் தொட்டுட்டு போற சீனு எல்லாம் நினைவுக்கு வரும்.

பரிவை சே குமாரின் முதல் புத்தகம். கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவாங்க

இரண்டாவதாய் சகோதரர் நெரூடாவின் அத்தை (பாரதியின் அம்மா) இடமிருந்து வந்த போன் விமர்சனம்...

தம்பி படிச்சிட்டேம்ப்பா... ரொம்ப நல்லாயிருந்தது...
அப்படியே ஒரு கிராமத்துக்குள்ள போயி அவங்க கூட இருந்துட்டு வந்தமாதிரி இருந்துச்சு...
நிறைய எழுதுங்க...

உண்மையில் அவர் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருந்தது. சகோதரர்கள் இராஜாராம் மகள், பால்கரசு மகள் முதல் நெருடாவின் அத்தை வரை எல்லாரும் வாசிக்கும்படியாக என் புத்தகம் இருப்பதில் மகிழ்ச்சி. என்ன தஞ்சாவூருக்கு வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்றார்கள். போகத்தான் உடல்நலம் இடம் கொடுக்கவில்லை... அடுத்த முறை விருந்தே சாப்பிட்டு வரலாம்.

மூன்றாவதாய்... வெங்கட் நாகராஜ் அண்ணன் தனது வலைப்பூவில் ஜனவரியில் எழுதி இருக்கும் விரிவான விமர்சனம். இதுதான் முதல் விமர்சனமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்... சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அவர்கள் தில்லியில் இருந்து ஒருவர் புத்தகம் கேட்டிருந்தார் அனுப்பிவிட்டேன் என்ற போது அண்ணனாகத்தான் இருக்கும் எனப் பெயர் சொல்லிக் கேட்டபோது அவருக்குப் பெயர் சரியாக ஞாபகமில்லை... புத்தகம் கிடைத்த உடன் வாசித்து எழுதியிருக்கிறார். ஊரில் இருந்ததால்... உடல் நலமின்மையால்... இணையப் பக்கம் வராததால்... நேற்று தற்செயலாகத்தான் பார்க்க முடிந்தது... அருமையாக எழுதியிருக்கிறார் அவர் பாணியில்...

படித்ததும் நீண்ட நேரம் புத்தகத்தினைக் கீழே வைத்து – யோசிக்க வைத்தது முதல் கதை – நண்பர் பத்மநாபன் அவர்களுடன் இந்தக் கதை பற்றி அடுத்த நாள் விரிவாகப் பேச வைத்தது – ”நினைவின் ஆணிவேர்” என்ற கதை தான். முதல் கதையே முத்தான கதை. காதல், காதலால் வந்த உறவுகளுடன் உண்டான மோதல் – பிரிவுக்குப் பிறகு ஒரு சூழலில் பிரிந்த பெற்றோரைச் சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காதலித்து மணம் புரிந்த மனைவியை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்/கணவன் – அவருக்குக் கிடைத்த அனுபவம் என ரொம்பவும் சிறப்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் குமார். ரொம்பவே பிடித்த கதையாக முதல் கதை.

வெங்கட் அண்ணாவின் விமர்சனம் பார்க்க "இங்கு" சொடுக்குங்கள்.

நான்காவதாய் புத்தகம் வந்தது முதல் எனக்கு இத்தனை காப்பி வேணுமெனச் சொல்லி, புத்தகக் கண்காட்சிக்குப் போய் வாங்கியதுடன் வாசிக்க ஆரம்பிக்கும் போதே அண்ணன் நந்தகுமார்  எழுதியது... விமர்சனப் பார்வை பின்னர் வரும் என்ற போதிலும் புத்தகம் குறித்து எழுதியிருக்கிறார்.

நித்யா குமார் எனும் பரிவை சே. குமார்,வளைகுடாவிலுள்ள குறிப்பிட்டத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.வலைப்பூ தளத்தில் அவரின் எழுத்துக்கள் மிகப் பிரபலம்.அமீரகத்தில் நடக்கும் இலக்கிய விழாக்களின் இவரின் தொகுப்பு இலக்கிய உலகில் மிக்க வரவேற்பும்..பாராட்டும் பெறுபவை.வலைப்பூவில் எழுதும் இவரின் கதைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  அவரின் அச்சு வடிவிலான முதல் சிறுகதைத் தொகுப்பு “எதிர் சேவை”வாசிக்க ஆரமிபித்துள்ளேன்.

வலைப்பூவில் வந்து விருதுகள் பல பெற்ற சிருகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.அவரைப் போலவே...அவரின் எழுத்தும் எளிமையானவை.. ஆனால் அழுத்தமான கதைக் கரு கொண்டவை... அவரின் தொகுப்பு வரட்டும் அவரை வாசிப்போம் என காத்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வரம். நண்பர்கள் நெருடாவும்....கவிஞர் பிரபுவும் நித்யா குமாரை ஊக்குவித்து வெளியிட வைத்துள்ளனர்.  அவர்களுக்கு ஒரு சுபோ ஜெயம்.

அழகாக வெளியிட்ட கலக்கல் ட்ரீம்ஸ் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
வாங்கிப் படியுங்கள்...ரூ. 100 மட்டுமே...

நால்வருக்கும் நன்றி...

இன்னும் எழுத இருப்போருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.

உடல் நலம் தேவலாம்தானே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உடல் நலத்தினை கவனித்துக் கொள்ளுங்கள் குமார்.

பதிவு நீங்கள் பார்த்திருக்க வில்லை - ஊருக்குப் போயிருந்ததால் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

உடல் நலத்தை கவனியுங்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.