மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 மார்ச், 2020

எதிர்சேவை விமர்சனம் 2 : நம்பிக்கை தரும் சம காலச் சிறுகதைகள் - விசாகன்

தேனியில் இருக்கும் திரு. விசாகனுக்குப் புத்தகம் அனுப்பச் சொல்லி சகோதரர் நந்தகுமார் சொன்ன போது நானே அனுப்புகிறேன் எனச் சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அனுப்பி வைத்தார். அதன் பின் அவர்கள் மேடையில் எதிர்சேவை குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பு தட்டிக் கொண்டே போய் இறுதியில் என்னால் செல்ல இயலாமல் வந்துவிட்டேன். அவர்களின் அழைப்புக்குச் செல்ல முடியா உடல்நிலை என்பதைச் சொன்னதும் சரி பரவாயில்லைங்க என்று சொன்னவர் புத்தகத்தை வாசித்து சிறப்பானதொரு விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்திலும் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேடை பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். இதை எதிர்பார்க்கவில்லைதான்... தொடர்ந்து எழுதணும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கும் மற்றுமொரு விமர்சனம் இது. எதிர்சேவையைக் கிழித்துத் தொங்கப் போடுவார்கள் என்று பார்த்தால் எல்லாமே கட்டிப்பிடிக்கும் விமர்சனமாகத்தான் இருக்கிறது. நன்றி விசாகன் அண்ணா.


நாற்காலியின் பின்னால் ஊக்கால்
என் பெயரை எழுதிவைத்த நினைவு ரம்மியமானது…
--------------------------------------------------------------------------------------
ரானிய சினிமாக்களை ஒத்து சிலபல திரைப்படங்கள் ஒரு அரைமணி நேர சம்பவத்தை நேர்த்தியான, காத்திரமான திரைக்கதை அம்சத்தைத் தாங்கி வருவதை நாம் காண்கிறோம். அதுபோன்ற சாயலாகவே, கூடடைந்துவிட்ட பறவை விடியலில் சிறகு சிலிர்த்து எதன்பொருட்டோ வான்வெளியில் பறந்த ஐந்தாவது நிமிடம் ஏதோவொரு சோலையில் அமர்கிறது. அப்பறவை கழித்த அந்த ஐந்து நிமிடங்களைக் ஐந்துபக்கக் கதையாக்குகிறான் படைப்பாளன், ஒரு சித்தாள் ஒருத்தி மாலையில் வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்ப எடுத்துக்கொள்ளும் பத்துநிமிடத்தைத் தன் கதைக்குள் அடக்குவதைப்போல. பல படைப்பாளர்கள் இதுபோன்ற முயற்சியனை அழகுறக் கையாள்கிறார்கள். அந்தப் பாணியிலேயே தன்னுடைய “எதிர்சேவை” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்காகக் கையளித்திருக்கிறார் பரிவை சே.குமார். பணிநிமித்தம் அபுதாபியில் இருக்கும் குமாரின் இத்தொகுப்பை “கலக்கல் ட்ரீம்ஸ்” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 12 கதைகளைக்கொண்ட 96 பக்க நூலின் விலை 100.
“ஒருபோதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை, என் எழுத்து எப்பவும் இப்படித்தான்” என்று தன்னுடைய முன்னுரையில் குமார் குறிப்பிடும் நோக்கம், தன் எழுத்தின்பால் வரும் விமர்சனங்களைக் கடந்துசெல்லும் ஒரு பாணியாக இருக்கலாம். எழுத நினைக்கின்றவர்களுக்குத்தான் அவரின் இந்த அறிவுரையே அன்றி, கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கில்லை என்பதையும் அவருடைய கருத்தில் மறைபொருளாக்கியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் குமாரின் கதைகள் வட்டாரமொழியில் பின்னப்பட்டுள்ளன என்றாலும், ஒவ்வொரு கதையிலும் சமுதாயம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சிந்தனையை முன்வைக்கிறார். அடுக்கடுக்காக நிறைய சமகால அரசியல் சம்பவங்களைத் தன்னுடைய கதைசொல்லும் போக்கில் கோர்த்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள “எதிர்சேவை”, “விரிவோடிய வாழ்க்கை”, “அப்பாவின் நாற்காலி” ஆகிய மூன்று கதைகள் குறித்து சுருக்கமான என்னுடைய குறிப்புகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
“எதிர்சேவை”யில், தற்பெருமை பீற்றித்திரியும் தன்னுடைய வெளியூர் மாமாவின் வருகையை வெறுத்து நிற்கும் ஒருவன், மாமாவின் மகளும் அப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, அவ்வாறில்லாது அவர்களுக்கிடையிலான மய்யலும் காதல்வசப்படுதலும், அல்லது உள்ளார்ந்த நட்போ இயல்பாக எவ்வாறு தொற்றிக்கொள்கிறது என்று கதைவழி நமக்குச் சொல்லவந்ததில், ஒரு குடும்பத்திற்குள் உருக்கொள்ளும் பிணக்குகள் மற்றும் இணக்கம், அண்ணன் தங்கை நட்பின் அழுத்தம், பாச உணர்வு என விரித்துவைக்கிறார். வைகையில் ஒரு கைளவு தண்ணீரே வந்தாலும் அல்லது அதுவும் வராவிட்டாலும், கள்ளழகர் தன்னுடைய பக்தர்களுக்காக அந்த ஆற்றில் இறங்காமல் போகமாட்டார் என்பதைப்போல, நம்முடைய பாரம்பரியத தொன்மங்களைத் தாங்கி நிற்கின்ற குடும்பங்கள் எத்தனை பிணக்குகளுக்குள் சிக்குண்டு நின்றாலும் உறவுகள் ஏதேனும் ஒருவழியில் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர்.
“விரிவோடிய வாழ்க்கை” ஒரு பிரச்சாரத் தொணியில் இருந்தாலும், நம் முன்னோர்கள் போற்றிவந்த வேளாண்மையின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற கதையாக இருக்கிறது. ஒரு திரைக்கலைஞனான நானா படேகர் “விவசாயிகளே தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்காதீர், என்னிடம் வாருங்கள், நான் வழிகாட்டுகிறேன்” என்று சொல்ல முன்வரும்போது, மக்களால் தேர்ந்தெடுத்த ஒரு அரசிற்கு அந்த மனம் வரவில்லையே என்று ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்தக்கதை இருக்கிறது, விரிவோடிய வாழ்க்கை என்ற தலைப்பே ஒரு மிகப் பெரிய நாவலை உள்ளடக்கியதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது.
“அப்பாவின் நாற்காலி” தன்னுடைய மிடுக்கான தோற்றம் கொண்டுள்ள அப்பா தன்னுடைய தச்சு ஆசாரி நண்பனிடம் தனக்கான கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையிலான வடிவத்துடன் நாற்காலி செய்துதரச் சொல்லி ஊர் நாட்டாமைத் தீர்ப்புச் சொல்ல அதைப் பயன்படுத்துகிறார். பல குடும்பங்களில் அப்பா என்ற பாத்திரத்தின் இதுபோன்ற மிடுக்கான தோரணையும், கடுமையான அச்சத்தைத் தரும் உருவ அமைப்பும் பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடாது தடுத்துவிடுகின்றன என்பது கண்கூடு. ஆனால் பாச உணர்வை யார் அல்லது எது தடுத்துவிட முடியும்? அப்பா இறந்துவிட்டாலும் அந்த நாற்காலியில் அப்பா அமர்ந்தே இருப்பதுபோலத்தான் வீட்டின் அமைப்பு தெரிகிறது. ஆண்டுகள் கடந்து அந்நாற்காலி பரண்மேல் ஒதுக்கப்பட்டாலும் அப்பாவின் நினைவுகள் எப்போதும் மகன்களை விட்டுவிலகுவதில்லை. அந்தப்பெருவலியைப் பேரன்கள் உணர்துகொள்ள நியாயமுமில்லை.
இலக்கியத்துறையில் கதைசொல்லும் கதைஞர்களின் தேவையும் வரவும் ஒருசேர எழுச்சியடைந்துவரும் தமிழச்சூழலில், பரிசை.சே.குமாரின் வரவு சிறப்பானது. தன்னளவில் புதிய வடிவங்களையும், கருத்துச் செறிவையும், நவீன நடையையும் தாங்கிவருகின்ற சமகாலச் சிறுகதைகள் பல நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், எழுத்து கைகூடியபின்னர் வாசிப்பை அறவே நிறுத்திக்கொள்ளும் பல தோழர்களைப் பார்க்க முடிவதைப்போல அவ்வாறானவர்களின் எழுத்துப் பயணம் சட்டென நின்றுவிடுவதையும் பார்க்கிறோம். அதுபோல தன்னுடைய எழுத்தும் சுருங்கிச் சிறுத்துவிடாமல் பரந்துபட்ட வாசிப்பின் பின்னணியில் தன்னுடைய எழுத்தாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகிற்கும், மக்களுக்குமான கதைகளைப் படைத்திட வேண்டுமென்று குமாரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
-விசாகன், தேனி.

நன்றி. திரு.விசாகன்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நானும் உடன் வாழ்த்துகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.