மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 மார்ச், 2020

மலையாள சினிமாக்களம் (அகல் கட்டுரை - ஜனவரி : 2020)

Image result for மலையாள சினிமா வினீத் ஸ்ரீனிவாசன்

சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்!  ​

ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.

தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம்.

அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான்.

சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும்.

நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது.

டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன.

வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு.

சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே...

நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன.  சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன.

வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார்.

மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை.

இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர.

இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம்.

இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்.

தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..?

மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை.

சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்...

முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும்.

மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். 

 - பரிவை சே. குமார்

1 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. நீங்கள் சொல்லி ஒன்றிரண்டு படங்கள் பார்த்தேன்.நன்றாக எடுக்கிறார்கள்.