மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 மார்ச், 2020

மனசு பேசுகிறது : நிரபராதிகளின் காலம்

டைப்பு 'ஹைநூன்பீபி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது கதையை அங்கு சென்று வாசித்து, தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்... கதையை வாசிக்க...



அப்படியே நம்ம மீரா செல்வக்குமார் அண்ணனின் கதையையும் வாசிங்க... கவிஞர் கதையிலும் பிண்ணியிருக்கிறார்.


நம்ம நட்பு வட்டத்தில் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம்... எனக்குத் தெரியவில்லை... எழுதியிருந்தால் இங்கு பகிராமைக்கு மன்னிக்க. சொன்னால் அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்வேன்.

வாசித்தவர்களுக்கும் வாசிக்க இருப்பவர்களுக்கும் நன்றி.

**************
கொரோனா வராமல் தடுக்க...
* கைகளைச் சுத்தமான சோப்பால் கழுவுங்கள்.
* வீட்டை லைசால் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
* கூட்டமான இடங்களுக்குச் செல்லாதீர்கள்.
*வெளியில் சென்று வந்தால் குளித்துவிட்டு குழந்தைகளைக் கொஞ்சுங்கள்.
* அரசின் அறிவுரையைக் காது கொடுத்துக் கேளுங்கள். 
* உங்கள் எதிர்ப்பை இப்போது கொரோனா மீது காட்டுங்கள்... அரசின் மீதல்ல...
* காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்.
*வெயிலில் சென்றால் தாக்காது என்று மூடர்கள் சொல்வதை நம்பாதீர்கள்.
* பாதுகாப்பாய் இருங்கள்.
*ஜெபமோ, பூஜையோ காப்பாற்றாது என்பதை உணருங்கள்... மத மூட நம்பிக்கைகளைத் தூக்கிச் சுமக்காதீர்கள்.
*நம்மை முட்டாளாக்கும் அரசியல்வாதிகளின் கருத்துக்களை காதில் வாங்காதீர்கள்.
**************



நிரபராதிகளின் காலம் - 

ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ஜெர்மனிய ரேடியோ நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.  இந்திய மொழிகளில் முதல் முறையாக லென்ஸின் புத்தகம் ஒன்று மொழிபெயர்க்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற புத்தகம் இது. அதுவும் தமிழில் எனும் போது நமக்குப் பெருமைதானே.

முழுக்க முழுக்க நாடகம் போல்தான் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் மாறிமாறிப் பேசிக்கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம் முன்னே அந்தப் பாத்திரங்கள் நடிக்க ஆரம்பிக்கின்றன. நாம் ஆர்வமாய் அவர்கள் நடிப்பதைப் பார்க்க ஆரம்பித்து அதில் லயிக்க, நம்மையும் அவர்களில் ஒருவராய் இருத்திக் கொள்கிறார்கள். 

இந்த நாடகம் 1961-ல் முதன் முதலில் ஜெர்மனிய ரேடியோ ஒன்றில் ஒலிபரப்பப்பட்டது, அதைத் தொடர்ந்து அனைத்து ரேடியோவிலும் ஓலிபரப்பப்பட்டது. அதன் பின் ஐரோப்பிய மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய ரேடியோக்களிலும் ஒலிபரப்பானது. மேடை நாடகமாகவும் சில காலம் நிகழ்த்தப்பட்டது.

நிரபராதிகளின் காலம் என்னும் இந்தக் கதையில் சர்வாதிகாரியான ஒருவனைக் கொல்ல முயல்கிறான் ஸாஸோன் என்னும் போராளி, அவரைக் கொல்லும் முயற்சியில் சர்வாதிகாரி தப்பித்துவிட, மெயக்காப்பாளர் இருவரைச் சுட்டுக் கொன்று விடுகிறான். அவன் சார்ந்த அமைப்பின் நண்பர்கள் தப்பிவிட, கைது செய்யப்படும் ஸாஸோன் கொடூரமான சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்ட போதும் தனது நண்பர்கள் குறித்த எந்த விபரத்தையும் சொல்ல மறுக்கிறான். மரண தண்டனை அவனுக்கு உறுதி என்ற போதிலும் மற்றவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து அவர்களைக் கொன்றால்தான் நம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைக்கும் சர்வாதிகாரி வேறொரு முயற்சியில் இறங்குகிறான்.

அதன்படி சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் ஒன்பது நிரபராதிகளைச் சிறைப்படுத்தி, அவர்களின் சிறைக்குள் ஸாஸோனைக் கொண்டு வந்து அடைத்து அவனிடமிருந்து உண்மையைப் பெற்றால் நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிடுகிறான். நிரபராதிகளுக்கு எந்தச் சலுகையும் இல்லை. சிறையின் கம்பியில் கை வைத்தால் காவலாளி சவுக்கால் அடிப்பான். அப்படிப்பட்ட சூழலில் சிறைக்குள் நடப்பதே முதல் பாதிக் கதையாய்.

ஒன்பது பேரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சின் மூலமே அவர்களின் மனநிலையையும்,  தொழில் பின்புலங்களும் நமக்குத் தெரிய வருகிறது. அவர்களுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என நகர்ந்து ஸாஸோனிடம் உண்மையை வாங்குவதற்காகத் தற்காலிக கூட்டணி அமைக்கும் வரை நகரும் கதையில் ஸாஸோன் மக்கள் பிரதிநிதியாகத்தான் நானிருந்தேன் அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை என்று தன் நிலையை எடுத்துச் சொல்லி, நண்பர்களைக் காட்டிக் கொடுக்க முடியாது என மறுக்கும் போது இஞ்சினியர் ஒருவன் அவனை மூர்க்கமாய்த் தாக்குகிறான்.

மற்றவர்கள் ஸாஸோனின் நிலைக்காக வருந்தினாலும் அவனிடமிருந்து உண்மையைப் பெற்றால் மட்டுமே நாம் இங்கிருந்து வெளியாக முடியும், அதுவரை சோறு தண்ணி எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்து போராடிப் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவனைக் கொல்லும் எண்ணமும் மனதுக்குள் எழ, அது நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சிலர் காவல் இருக்க முடிவு செய்து அதன்படி ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் என காவல் இருக்கிறார்கள். 

ஸாஸோன் கொல்லப்படுகிறான்.

கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியாது. நிரபராதிகளாய் சிறைக்கு வந்த ஒன்பது பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களில் யாரோ ஒருவர் அவர்களில் குற்றவாளி என்பது தெரிந்தும் நண்பர்களைக் காட்டிக் கொடுக்காத ஸாஸோன் சாகவேண்டியவந்தான் என்பதால் சர்வாதிகாரி அவர்களை விடுவிக்கிறான்.

இந்தக் கதையில் லென்ஸ் கேட்பது இரண்டு கேள்விகள்தான்...

அக்கேள்விகளாவன,

'பொதுக்குற்றம் என்ற ஒன்று உண்டா..?'

'ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான குற்றம் நிகழும் போது அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா..? இல்லையா..?'

இந்தக் கேள்விகளின்படி பொதுக்குற்றம் என்பது நம்மைப் பொறுத்தவரை இருக்கத்தான் செய்கிறது. யார் செய்தார் என்பது தெரியாத நிலையில் அந்த இடத்தில் இருந்த எல்லாருக்குமே பொதுவான குற்றவாளிகள்தான். ஒருவனைக் கொல்ல வேண்டும் என மனதால் நினைத்திருக்கும் வேளையில் அவன் கொல்லப்பட்டால்... அதை யார் செய்தார்கள் என்பது தெரியாத நிலையில் அந்தச் சதிக்கு உடன்படலாம் என்று நினைத்தவனும் குற்றவாளியே. 

இதைத்தான் கதையின் இரண்டாம் பாகமாய் நகர்த்தியிருக்கிறார் லென்ஸ்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சர்வாதிகாரியின் ஆட்சியை ஸாஸோன் சார்ந்திருந்த அமைப்பு பிடித்துக் கொள்கிறது. தங்கள் நண்பனைக் கொன்றது யார் என்று கண்டுபிடிக்க, அந்த ஒன்பது பேரையும் ஒவ்வொருவராய் மீண்டும் கைது செய்ய ஆரம்பிக்கிறது. ஒருவர் மட்டும் இறந்துவிட எட்டுப் பேரும் மீண்டும் சிறைக்குள்... அன்று சர்வாதிகாரிக்காக நிரபராதிகளாய்... இன்று போராளியைக் கொன்ற குற்றவாளிகளாய்.

அவர்களிடம் யார் கொலை செய்தது என்ற விசாரணை நடக்கிறது.

நீதிபதி வருவார் என்று சொல்லிச் செல்கிறார் மேஜர், எட்டுப் பேரும் அவர் எப்போது வருவது...? நாம் எப்போது போவது...? என்ற கவலையோடு காத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காத்திருப்பது என்பது மாதக் கணக்கில் நீண்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அவர்களுக்குள் அவர்களாகவே குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிக்கார்கள்.

அவர்கள் அந்தக் கொலை இரவில் நடந்து கொண்ட விதத்தை வைத்து ஒவ்வொருவர் மீதும் மற்ற எழுவரும் குற்றம் சுமத்துகிறார்கள். அதை நிரூபித்து எப்படியேனும் வெளியில் செல்லத் துடிக்கிறார்கள். குற்றவாளி என கை நீட்டப்பட்டவர்களோ நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள். இது போட்டிச் சக்கரம் போல் சுற்றி வருகிறது. ஒவ்வொருவரையும் கைகாட்டும் போதும் அவர் அந்தக் கையை வேறொரு பக்கம் திருப்பிவிட, அந்த முயற்சியில் யார் குற்றவாளி என்பது கண்டு பிடிக்க முடியாமல் திணறல் மட்டுமே மிஞ்சுகிறது.

ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவன்தான்  நீதிபதி என்பது தெரிய வருகிறது. விவசாயி ஆரம்பம் முதலே நானே கொலைகாரன் எனச் சொல்லி மற்றவர்களைக் காக்க நினைக்கிறான். இறுதியில் அவனே குற்றவாளியென முடிவு செய்து எல்லாரும் ஒருமனதாய் தீர்மானம் நிகழ்த்தி, அவனைக் கைகாட்டி தாங்கள் தப்பிக் கொள்ள நினைக்கிறார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காமல் மற்றொருவர் எடுக்கும் முடிவால் பிரச்சினை முடிவுக்கு வருகிறது, விவசாயியும் தப்பிக்கிறான். 

நீதிபதி நீண்டதொரு பிரசங்கத்தைச் செய்து குற்றத்திற்குப் பரிகாரம் கிடைத்துவிட்டது ஆனாலும் அந்தக் குற்றம் நம் மனசாட்சியை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்கிறான்.

மிகச் சிறப்பானதொரு கதை... 

இந்நாவலை வாசிக்கும் போது பல விஷயங்களை அறியலாம். 

 சாமானியர்கள் எப்படி சர்வாதிகாரிகளின் ஆட்சியை எதிர் கொள்கிறார்கள்..? 

அந்த ஆட்சியின் குற்றங்களுக்கும் சாமானியர்களுக்கும் தவிர்க்க முடியாத தொடர்பு எப்படி ஏற்படுகிறது..? 

அந்த நிலையில் சாமானியர்கள் எப்படி தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துப் போகிறார்கள் என்பதை மிக நுணுக்கமாய், மிக விரிவாய், விளக்கமாய் கதாபாத்திரங்களின் வழி இக்கதையில் சொல்லியிருக்கிறார் லென்ஸ்... 

இதை மொழி பெயர்த்த ஜி.கிருஷ்ணமூர்த்தியும் அதை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். இவர் கல்லூரி ஆசிரியராய் புவியியலைக் கற்பிக்க ஆரம்பித்து, அதன் பின் ஜெர்மன் மொழி படித்து மாக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் மொழிப் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார்.

சிறிய புத்தகம்... ஆனால் சிறப்பான புத்தகம்.

வாசிக்க வேண்டிய புத்தகம்..

முடிந்தால் வாங்கி வாசியுங்கள்.

நிரபராதிகளின் காலம்
ஜெர்மனியில் : ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
தமிழில் : பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு : க்ரியா 
பக்கம் : 160
விலை : ரூ.200.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நிரபராதிகளின் காலம் ஒரு அற்புதமான அறிமுகம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமரிசனம் அருமை...

உங்கள் கதையின் இணைப்பை (https://padaippu.com/submitted/hainoonbeevi2020/71) சரி செய்ய வேண்டும் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம் குமார். நன்றி.