பதிவுக்குள் போகுமுன் COVID-19க்காக சில வரிகள்
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் படுபயங்கரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நாடுகள் வயதானவர்களுக்கு சிகிச்சை இல்லை என்று சொல்லியிருப்பது மிகப்பெரிய கொடுமை... வேதனை... வரும் நாட்களில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும்.
விடுமுறை கொடுத்தது வீட்டுக்குள் இருக்கத்தானே ஒழிய, வெளியே சுற்ற அல்ல என்பதை உணர வேண்டும். நோயின் தீவிரத்தை நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை... எங்கோ இறப்பு என்ற மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் அருகில்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். அரசை எதிர்க்கிறோமென நகைப்புக்குரிய செய்திகளைப் பகிர்வதில் இருக்கும் ஆர்வம் நோயின் தன்மை குறித்து அறிவதில் இருக்க வேண்டும்.
விடுமுறை கொடுத்தது வீட்டுக்குள் இருக்கத்தானே ஒழிய, வெளியே சுற்ற அல்ல என்பதை உணர வேண்டும். நோயின் தீவிரத்தை நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை... எங்கோ இறப்பு என்ற மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் அருகில்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். அரசை எதிர்க்கிறோமென நகைப்புக்குரிய செய்திகளைப் பகிர்வதில் இருக்கும் ஆர்வம் நோயின் தன்மை குறித்து அறிவதில் இருக்க வேண்டும்.
இங்கெல்லாம் அதிகமானாலும் அரசாங்கம் செய்திகளை வெளியில் விடுவதில்லை... சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பாக எழுதினால் தூக்கி உள்ளே போடுகிறார்கள். நம்மூரில் எல்லாம் எழுதலாம்... இதற்குக் காரணமே ஆளும் அரசுதான் எனச் சொல்லலாம்... ஏன்னா நமக்குச் சுதந்திரம் இருக்கு... அந்தச் சுதந்திரம் உங்கள் உயிரைப் பாதுகாப்பதிலும் இருக்கட்டும்.
கை, கால்களை அடிக்கடி நன்கு கழுவுங்கள்... சானிடைசர்தான் வேண்டுமென்றில்லை... சோப்புப் போட்டுக் கழுவினால் போதும்... லைசால் வைத்து வீட்டைத் துடையுங்கள்... பாதுகாப்பாய் இருங்கள்... உலகம் மிகப்பெரிய இழப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
********************
மலையாளத்தில் மட்டும் எப்படி இப்படியான கதைகளை மிகச் சிறந்த படமாக மாற்றுகிறார்கள் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. அதே ஆச்சர்யம்தான் ஐயப்பனும் கோஷியும் பார்த்தபோது மனசுக்குள் எழுந்தது.
மலையாள சினிமா ஒரு காலத்தில் ஷகீலாக்களுக்கு மட்டுமே ஏற்றதாய் இருந்திருக்கலாம். இப்போது தரமான படங்களைக் கொடுக்கும் இயக்குநர்களின் வருகையால் மிளிர ஆரம்பித்திருக்கிறது. அதற்கேற்றார்போல் ப்ரிதிவிராஜ், பஹத் பாசில், வினீத் சீனிவாசன், நிவின் பாலி, துல்கர் சல்மான், சௌபின் என ஒரு கூட்டம் நடிப்பில் தங்கள் அசுரத்தனத்தைக் காட்டி வருகிறது.
அப்ப தமிழ்ச் சினிமா..?
பா வரிசை இயக்குநர்கள் கொடுத்த தரமான படங்களை இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் விதத்தில்தான் இருக்கிறது. ஒரு சில இளம் இயக்குநர்கள் தரமான படங்களைக் கொடுத்தாலும் பலர் சாதி, மதத்தைத் தூக்கிக் கொண்டு வந்து அறிவுரை சொல்கிறேன் என நம்மைக் கொல்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு வாய்ச்சவடால் பேசுகிறார்கள். இங்கே அரசியலும் சாதியமும் பேச வேண்டுமென கதையில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். நான் சாதி பற்றி எடுத்தால் எல்லாரும் பாராட்டணும்... அவன் எடுத்தால் அது சாதிப்படம்... யாரும் பார்க்கக்கூடாது என்ற ஆரோக்கியமான மனநிலையில் இன்றைய இயக்குநர்கள் இருப்பதால் தமிழ்ச்சினிமா ஆரோக்கியம் இழந்து நாளாகிவிட்டது. இங்கே மாஸ் பேயும் உச்சத்தில் இருப்பதால் உணர்வுப்பூர்வமான கதைகளுக்குப் பஞ்சமாகிவிட்டது.
தமிழ்ச்சினிமா மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது... மலையாளச் சினிமா அழகான கதைக்களங்களால் பிரகாசமான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே எதார்த்த உண்மை.
ஒரு சின்னக் கதை... அதை அவ்வளவு சுவராஸ்யமாக, தொய்வில்லாமல் மூன்று மணி நேரம் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சாச்சி. இருவருக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சினைதான் படமே என்றாலும் இருவருமே வில்லுனும் நாயகனுமாய் நம் கண்களுக்கு மாறிமாறித்தான் தெரிகிறார்கள்.
ப்ரிதிவிராஜ் நடிக்கத் தெரிந்த கலைஞன்... எத்தனை படம் வந்தாலும் ஜெயித்துக் கொண்டே நகரும் குதிரை. பிஜூமேனன் சொல்லவே வேண்டாம்... தன் நடிப்பில் புதிய பரிமாணங்களைக் காட்டும் கலைஞன். இருவரும் எதிரும் புதிருமாய்... கலக்கலாய் வந்திருக்கிறது ஐயப்பனும் கோஷியும்.
படத்தின் பெயர்தான் வித்தியாசமாய் இருக்கு என்றால் படமும்தான். ஒரு இரவு நேரக் காவல் சோதனையில், அட்டப்பாடி வழி ஊட்டிக்குச் செல்லும் முன்னாள் ராணுவ வீரன் வண்டிக்குள் சரக்கு வைத்திருப்பதால் போலீசில் மாட்டி, நிறை போதையில் அவர்களுடன் சண்டையிட, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
அவன் மீது பல வழக்குகளைத் திணிக்கும் போலீஸ் ஆபீசருக்கும் அவனுக்குமான அன்றைய இரவு ஈகோவை மெல்ல மெல்ல அவனுள் இறக்கி வைக்கிறது... அது பலி வாங்கியே ஆகவேண்டும் என்ற வெறியை அவனுள் விதைக்கிறது.
ஜெயிலில் இருந்து வருபவன் போலீஸ் ஆபீசரின் வேலைக்கு உலை வைக்கிறான்... அதிலிருந்து தொடங்குகிறது நீயா... நானா... வா... மோதிப் பார்க்கலாம் என்ற போட்டி... அட்டப்பாடியில் இருவரும் அடித்து ஆடுகிறார்கள்.
ஆரம்பத்தில் புலி வாலைப் பிடிச்சிட்டமோ எனப் பம்மும் பிஜூமேனன், ஒரு கட்டத்தில் அதே எண்ணத்தை ப்ரித்விராஜூக்குள் விதைக்கிறார்... இருந்தும் ஈகோ இருவருக்குள்ளும் சீனப் பெருஞ்சுவராய் நிற்க, இறுதிவரை மோதிக் கொண்டே இருக்கிறார்கள்... கதையும் விறுவிறுப்பாய் நகர்கிறது.
போலீஸாகும் முன் ஒரு கதை இருக்கு பிஜூமேனனுக்கு... காக்கி உடையே அவரை கொஞ்சம் சாதுவாய் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த உடை போனபின் முன்கதை மனிதராகி அடித்து ஆடுகிறார். ஆரம்பத்தில் ஆட்டம் காட்டும் ப்ரிதிவிராஜ், மனசுக்குள் இருக்கும் பயத்தை வெளிக்காட்டாமல் விலகிப் போக நினைத்து, பிஜூவின் ஆட்டத்தால் மீண்டும் மீண்டும் உள்ளே இறங்குகிறார்... இரை தேடும் புலியாக... ஆடு புலி ஆட்டம் பிரமாதாய் காட்சிகளாய்...
இறுதியில் யாருக்கு வெற்றி..? யாருக்குத் தோல்வி..? ஆடு யார்..? புலி யார்..? என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்வதே நலம்.
கேரளா எல்லைப் பகுதியில் இருக்கும் அட்டப்பாடி என்னும் மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் கதை நடப்பதால் தமிழ் வம்சா வழிகளான படுகர் இன மக்களின் பாடலை படத்தில் வைக்க நினைத்து, நஞ்சம்மா என்பவரை அவரின் சொந்தப் பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்து பாடப்பட்ட அந்தப் பாடல் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்... அதற்கான இசைக் கோர்ப்பு அவ்வளவு அருமை. சத்தியமாக அனிருத் போல் பானைகளை உருட்டவில்லை.
நஞ்சம்மா படத்திலும் பிஜூமேனனின் மாமியாராக இரு இடங்களில் வருகிறார். இவருக்கு 2010 கேரள அரசு விருது கொடுத்திருக்கிறதாம்... ஆனாலும் இந்தப் படம் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்.
இவரிடம் ப்ரிதிவிராஜ், அம்மைக்கு ப்ரிதிவிராஜ் தெரியுமா...? பிஜூமேனன் தெரியுமா..? என்று கேட்க, தெரியாது என்று சொல்வதுடன் நீங்க பாடிய பாட்டு எந்தப் படத்துல வந்திருக்குன்னு தெரியுமான்னு கேட்டதுக்கும் என் பாட்டா... என வெட்கச் சிரிப்பு சிரிக்கிறார் வெள்ளந்தியாய் ஒரு வீடியோவில். இதையும் அந்த வீடியோவில் அப்படியே பதிவேற்றியிருக்கிறார்கள். உண்மையிலேயே அந்த நடிகர்களுக்கு பெரிய மனதிருந்திருக்க வேண்டும். தெரியாதுன்னு நம்ம ஊரு நடிகரைச் சொன்னா நடிகனைவிட ரசிகன் அதிகமாகக் கொதிப்படைவான்... அந்தம்மா வீட்டுக்கே போய் அடிச்சி நொறுக்கிட்டு வருவான்... ஆனா அங்கே நடிகனும் ரசிக்கிறான்... ரசிகனும் ரசிக்கிறான். நஞ்சம்மா கொண்டாடப்படுகிறார்.
பெரும்பாலும் மலையாளப் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்துவிடாது.... மலையாளிகளே தமிழ்ப் பாடல்களைத்தான் கேட்பார்கள். சமீபப் படங்களில் அந்தக் குறை களையப்பட்டு வருகிறது. இதிலும் பாடல்கள் அருமை.
பிஜூவின் மனைவியாக வரும் கௌரி நந்தா தமிழ் வம்சாவளி மலைசாதிப் பெண்ணாக வருகிறார்... என்னதான் மலையாளச் சினிமாவைக் கொண்டாடினாலும் அவர்கள் படத்தில் தமிழர்களைத் தாழ்த்தித்தான் எடுப்பார்கள்... இதில் இவர் மாவோயிஸ்ட்... இருந்தாலும் அதிகமாக கேவலப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். அவரும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
சண்டைகளில் எல்லாம் யாரும் யாரையும் பறக்கவிடவில்லை... சுமோவெல்லாம் பறக்கவில்லை... இருவரும் மோதும் போது நாயகன் வில்லன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை... இருவரும் விழுகிறார்கள்... எழுகிறார்கள்... எதார்த்தமான சண்டைக் காட்சிகள்.
படத்தில் ஒவ்வொருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் உயரதிகாரியும் அட்டப்பாடி காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களும் கலக்கியிருக்கிறார்கள்.
சாச்சிக்கு இது இரண்டாவது படம். முதல் படமான அனார்கலியிலும் ப்ரிதிவிராஜூம் பிஜூமேனனும்தான்... நண்பர்களாய் வருவார்கள்... லட்சத்தீவின் அழகை அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாடல்கள் எல்லாம் இனிமையாக இருக்கும். அருமையான காதல் கதை... இதில் காதல் இல்லை... ஈகோவும் மோதலுமாய் கலக்கியிருக்கிறார்.
பார்க்க வேண்டிய படம்.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
அமேசானில் கிடைக்கிறதா?
கிடைக்கிறது என்றார்கள்... நான் https://ww0.0gomovies.to › genre › malayalam-movies இதில் பார்த்தேன்.
நன்றாயிருக்கிறது இந்தப் படம் என்று வேறு யாரோவும் சொல்லி இருந்தார்கள். பார்க்க வேண்டும்.
// அந்தச் சுதந்திரம் உங்கள் உயிரைப் பாதுகாப்பதிலும் இருக்கட்டும். //
சிறப்பு...
இந்தப் படத்தைப் பற்றி பல தகவல்களை முகநூலிலும் வாசித்தேன்... அதில் ஒரு கேள்வி உங்களிடமும் : இதை யார் யார் நடித்தால் நன்றாக + சரியாக இருக்கும்... அதைவிட இயக்குனர் யார்...?
அருமையான படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி நண்பரே
நல்லதொரு படமாகத் தெரிகிறது. இந்தப்பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன். படம் பார்க்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்.
கருத்துரையிடுக