மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 அக்டோபர், 2019

பிக்பாஸ் : 'வெற்றியாளன்' முகன்

(நீண்ட பதிவு... பொறுமையாய் வாசிக்கவும்)
Image result for bigg boss grand finale tamil

முகன்...

பிக்பாஸ் சீசன்-3 வெற்றியாளன்.

கவின் ஐந்து லட்சத்துடன் சென்ற பின் கவின் ஆர்மி + லாஸ்லியா ஆர்மி + விஜய் டிவி என மூன்றும் இணையும் போது லாஸ்லியாவே வெல்வார் என்று சொல்லப்பட்டது. என் மனசுக்குள்ளும் தர்ஷனை வெளியேற்றிய பின்னர் லாஸ்லியாவுக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றியது. எண்ணங்களைப் பொய்யாக்கி இருக்கிறது... எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்னும் வாசகம்.

சாண்டி, ஷெரின் வாங்க மாட்டார்கள் என்று நான் எழுதியும் இருந்தேன்... அதே நடந்தது... முகனா லாஸ்லியாவா என்ற தராசில் லாஸ்லியாவுக்குக் கொடுத்தால் இலங்கைக்காரி என்பதால் கொடுத்து விட்டார்கள் என அரசியல் பேசக்கூடும் என்பதால் முகனுக்குக் கொடுத்திருக்கலாம் என்றாலும் இம்முறை கிடைத்த வாக்குகளில் முகனே முன் நின்றான். மக்கள் எண்ணப்படி முகன் வென்றதாய்த்தான் தெரிகிறது.

முகன் வகுப்பில் கடைசிப் பெஞ்ச் மாணவன்... கெடா மாடு கணக்கா ஆட்டம் போடும் மாணவன் இல்லை என்றாலும் எதுக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இப்படியே உக்காந்திருப்போம்.... இங்கிட்டு சாண்டியும் அங்கிட்டு கவினும் இருக்காக... பின்ன என்ன வேணும் என்று இருந்தவன்தான் முகன்.

எதிலும் பற்றில்லாது... சண்டையோ சந்தோஷமோ அதிகம் கலந்து கொள்ளாது தனிமை விரும்பியாய்த்தான் அவன் ஆரம்ப நாட்களில் இருந்தான். இதற்குக் காரணம் அவன் வளர்ந்த நிலை... வளரும் பருவத்தில் நிகழ்ந்த வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவையாகத்தான் இருக்க வேண்டும்.

முகனின் மாற்றம் என்பது கமல் முகன் முன்னே வாங்க என்று சொன்ன தினத்தில் இருந்தெல்லாம் ஆரம்பிக்கவில்லை... தொடர்ந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்... அவனின் அம்மா, தங்கையின் வருகையின் பின்னரே.... யாருக்கும் விட்டுக் கொடுக்காதே... நீ நீயா விளையாடு என்ற அவர்களின் வார்த்தைகளே முகனை மெல்ல மெல்ல முன்வரிசை மாணவனாய் ஆக்கியது.

இன்னொரு விஷயம் கவனித்தீர்கள் என்றால் அபியின் வெளியேற்றமே முகனுக்கு மிகப்பெரிய, பரந்த இடத்தைக் கொடுக்க ஆரம்பித்தது என்பதை அறியலாம். ஆம் கவின் எப்படி லாஸ்லியாவைத் தன் பிடிக்குள் வைத்திருந்தானோ அப்படித்தான் அபியின் பிடிக்குள் முகன் இருந்தான். அவளுடன் பேசாதே... இவளுடன் பேசாதே... என்றும் எனக்காக நேரம் செலவிட முடியாதா உன்னால் என்றும் சொல்லிக் கொண்டே இருந்தார். லாஸ்லியாவின் நடவடிக்கைகள் கூட கவின் போனபின் ஆரம்ப நாட்களில் பார்த்ததைப் போல மாறியிருந்ததைக் கவனித்திருப்பீர்கள்.

அபி இருக்கும் போது மகிழ்வாக இருந்தாலும் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாதவனாய்த்தான் இருந்தான் முகன். அந்தக் கோபத்தின் அதீத வெளிப்பாடுதான் கட்டிலைக் கையால் குத்தி உடைத்தது... சேரை எடுத்து அடிக்கப் போனது எல்லாம்... அவன் சுதந்திரமாய் இருக்க முடியாமல் கட்டி வைத்ததில் அபிக்கும் பங்குண்டு. எனவே அபியின் வெளியேற்றம் என்பது முகனை முன்னோக்கி நகர வைத்தது என்று சொல்வதில் தப்பேயில்லை.

சேரன் வெண்டக்காய் வெட்டியதை மட்டுமே கேலியாகப் பேசும் நாம் முகன், சாண்டி, கவின் எந்தச் சண்டையில்... அதாவது வி ஆர் த பாய்ஸ் தவிர்த்து... மற்றவர்கள் சண்டையில் இடைபுகுந்து பேசியிருக்கிறார்கள்... தடுத்திருக்கிறார்கள்...என யோசித்தால் தர்ஷன் போல் இவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சாண்டி எப்பவும் என் பொண்டாட்டி சண்டை போட்டாலே போனை நோண்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்னு சொல்லிக் கடந்து விடுவார்... முகன் எதையும் கண்டு கொள்வதேயில்லை... கவினைப் பொறுத்தவரை அவன் சார்ந்த, அல்லது லாஸ்லியா சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமே குரலை உயர்த்துவான்... அதுவும் வனிதா என்றால் அது இல்லக்கான்னு பக்கம் பக்கமாப் பேசிட்டு பதுங்கிருவான்... ஏன் லாஸ்லியா - சாக்சி சண்டையப்பக்கூட 'GEM' ஆகத்தான் அமர்ந்திருந்தான். எனவே சண்டைகளுக்குள் தன்னைக் கொடுக்காமல் கடைசி வரை இருந்ததில் இம்மூவரில் முகனை முதலாவதாய்ச் சொல்லலாம். ஷெரினை வனிதா தாக்கிய போது கூட தனியே போய் கேமராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

முன்னேற்றம் கண்டு முதல் பெஞ்சை நோக்கி நகர ஆரம்பித்த போது முகனை இழுத்து நிறுத்தக்கூடிய யாரும் அருகில் இல்லை... தர்ஷன் முகனை முன்னே கொண்டு வர தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்தான்... இவர்களின் நட்பு ரொம்ப இறுக்கமான வாரங்கள் அவை. நெருக்கடியில்லாத சுதந்திரப் பறவையான பின் பாடல்கள், மகிழ்ச்சியின்னு தன்னை மாற்றி, கோபத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் முகனின் வெற்றியை நோக்கிய பயணத்துக்கான புள்ளி தோன்றியது.

நீதானே... பாடல் முகனை இளவட்டங்கள் மத்தியில் கொண்டு நிறுத்தியது... அது கொடுத்த தாக்கம், மற்றவர்கள் மீது காட்டிய பரிவு என முகன் தன்னை மெல்ல மெல்ல மக்கள் விரும்பும் நாயகனாக மாற்றிக் கொண்டான். தர்ஷன் கூட ஷெரினில் விழத்தான் செய்தான்... ஆனால் முகன் தனக்கொரு காதலி இருக்கிறாள் என அபியை நல்ல தோழி எனத் தள்ளியே நிறுத்தினான். அபி தன் மீது பைத்தியமாக தான் இடம் கொடுத்ததை நினைத்து அழுதான்... எல்லாவற்றிற்கும் பொசுக்கென கண்ணீர் சிந்தும் அந்த முகம் சுலபமாக மக்கள் மனசுக்குள் நுழைந்து விட்டது.

கவின் வெளியேறியது... தர்ஷனை வெளியேற்றியது என இவ்விரண்டும் முகனுக்கு வெற்றியை நோக்கி நகர முக்கிய காரணிகளாய் அமைந்தது. தன் உழைப்பை ஆரம்பத்தில் கொடுக்கவில்லை என்றாலும் அம்பது நாட்களுக்குப் பிறகு மெல்ல மெல்லக் கொடுக்க ஆரம்பித்து... இறுதியில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றிருக்கிறான் முகன்.

பிக்பாஸ் பல நேரங்களில் முரண்பட்டு நின்றாலும் இறுதி வெற்றியாளன் தேர்வில் மக்கள் மனசோடு ஒத்துப் போயிருக்கிறார். மகிழ்வும் வாழ்த்துக்களும் முகன்.

105வது நாள்...

கமலஹாசன் வந்தார்...

வெற்றியாளரை அறிவிக்கும் நாளல்லவா... நிறைய நிகழ்வுகள் இருக்கும்.. நால்வரில் இருவர் வெளியேற வேண்டும்.... இருவர் மேடை ஏற வேண்டும்.... நீண்டதொரு நிகழ்வாய் பிக்பாஸ் சீசன் - 3 ன் இறுதி நாள் அமைந்தது.

மக்களிடம் பேசி, லவ் யூ சொன்னவர்களுக்கு லவ் யூ டூ... லவ் யூ ஆல் சொல்லி... பிக்பாஸ் பார்ப்பது கேவலமானது எனப் பலர் சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் என ஆரம்பித்தார் கமல். 

அவர்கள் ஏற்பாடு பண்ணிய ஆட்கள் போலில்லை... மனதில்பட்டதைச் சொன்னார்கள்... அடுத்தவங்களைக் கேலி பண்ணினால் அவங்களுக்கு எப்படி வலிக்கும் என்பதை சாண்டி, மோகன் நிகழ்வைப் பார்த்து தன்னைத் திருத்திக் கொண்டதாய் ஒருவரும்... மகனைக் கணவனுக்கு காட்டமல் வைத்திருந்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைச் சாண்டியின் லாலா புலம்பல் மூலம் அறிந்து திருந்தியதாய் ஒரு குடும்பத் தலைவியும், லாஸ்லியாவின் அப்பா மகள் பாசம் பார்த்து தன் அப்பா திருந்தியதாய் ஒரு சிறுமியும் சொன்னது சிறப்பு.

கமல் வீட்டுக்குள் சென்றார். அவர்களுடன் பேசினார்... ஆளுக்கொரு கவிதையை வாசித்துப் பரிசளித்தார்.. அவர்களுடன் அமர்ந்து அவர்களைப் பற்றிய படங்களை அகம் டிவியில் ஓட விட்டார். முகனுக்கு ஸ்டுடியோ, நண்பர்கள்... சாண்டிக்கு ஸ்டுடியோ, மாணவர்கள்... ஷெரினுக்கு நாய்... லாஸ்லியாவுக்குப் பாட்டி, சர்ச், சொந்தங்கள் என மிக அழகான கவிதையான தொகுப்பு. எல்லாருக்கும் மகிழ்ச்சி.

சாண்டி சொன்னதைப் போல் கமலுடன் அருகே அமரும் அந்தத் தருணம் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லைதானே...? என்ன தவம் செய்திருக்க வேண்டும் இவர்கள் அவருடன் அமர, அணைத்துக் கொள்ள.... உங்க கூடவே வருவோம் சார் என சாண்டி அடம்பிடிக்க, பிக்பாஸோ அவரை விட்டுட்டு இன்னும் கொஞ்ச நேரம் வீட்டுல இருங்கடா... அவரு வெளியில கொஞ்சம் விளையடட்டும்ன்னு சொன்னதும் அவர் கைக்குள் தங்கள் கையைச் சிறையிட்டு சிவப்புக் கதவு வரைக்கும் வந்தார்கள். 

சாண்டி கமலின் கன்னத்தைக் கையால் வருடி முத்தமிட்டார். அந்த கையை பொக்கிஷமாய் சுமந்து திரிந்தார்.... இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்... ம்... அவர்களுக்கு அந்தக் கொடுப்பினை கிட்டியிருக்கிறது... நாம் பார்த்து ரசிப்போம்.

வெளியில் வந்தவர் மற்ற போட்டியாளர்களை எல்லாம் அழைத்து அவர்களுக்கெனப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். கஸ்தூரி தனியே வந்தார்... அவருக்கு அந்தியிலே வானம் பிஜிஎம் போடப்பட்டது... நாமும் தனியே வந்திருக்கலாமோ என வனிதா நினைத்தது கண்ணில் தெரிந்தது. 

மதுமிதா, சரவணன் மட்டும் அழைக்கப்படவில்லையா அல்லது அவர்கள் வர விருப்பப்படவில்லையா என்பது தெரியவில்லை. இருவரும் இல்லாதது ஒரு குறைதான்.

பிக்பாஸ் பரிசுடன் கொடுக்கப்படும் கோப்பையை சீசன்-2 வெற்றியாளினி ரித்விகா கொண்டு வந்தார். உள்ளே போய் கோப்பையைக் காட்டிட்டு ஒரு ஆளை இங்க கொண்டு வந்துருங்க என்று அனுப்பி வைத்த கமல், யார் வெல்வார் என சக போட்டியாளர்களிடம் கேட்க சேரன், அபி உள்ளிட்ட பெரும்பாலானோர் முகன் என்றார்கள். கவினும் வனிதாவும் லாஸ்லியாவைச் சொன்னார்கள். சாக்சி ஷெரினை சொல்ல, பாத்திமாபாபு, மீரா போன்றோர் சாண்டியைச் சொன்னார்கள். யார் என்ன நினைத்தாலும் மக்கள் முடிவுதானே வெல்லும் என்றார் கமல்.

நீங்கள் யாரைப் பார்க்கணும் எனகேட்டு அவர்கள் கேட்ட தர்ஷன், கவின், சாக்சியைக் காட்டினார்... அதேபோல் பார்வையாளர்களில் இருந்து சிலரை ஒவ்வொருவரிடமும் அன்பாய்ப் பேசவிட்டார். முகனிடம் பேசிய பெண் ரொம்பவே வழிந்தார். அவருக்காக முகன் ஒரு பாடலின் இரு வரிகளைப் பாடிய போது பாரதிராஜாவின் வெள்ளுடைத் தேவதைகள் தன்னைச் சுற்றி நிற்பதாய் நினைத்திருப்பார் போலும்... விண்ணிலிருந்து தரைக்கு வந்தபோது அருகே நான்கு தடிமாடுகள் எழுந்து நின்றன.

ரித்விகா உள்ளே போய் என்னங்கடா ஜாலியா இருக்கீங்க... உங்களுக்குப் பயமோ பதட்டமோ இல்லையான்னு கேட்க, என்ன பதட்டம்... என்ன பயம்ன்னு கேட்டுட்டு காபி போடுறோம் குடி.... பாட்டுப் பாடுறோம் கேளுன்னு சொல்லிட்டு அதையே செஞ்சானுங்க.... ரித்விகாவையும் ஆட வச்சானுங்க... அப்புறம் கோப்பையுடன் ஷெரினையும் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டார்... ஸோ ஷெரின் எவிக்டேட்... 105 நாட்களைக் கடந்து நான்காம் இடம் பிடித்தார்.

கமலுடன் பேசும் போது யாருடனும் சண்டையை வளர்த்ததில்லை நீங்க என்ற கமலின் கேள்விக்கு ஆமா சார்... அவங்க கூடத்தான் இருக்கப் போறோம்... பின்னே சண்டையைத் தூக்கிச் சொமந்து என்னாகப் போகுதுன்னு சொன்னார். அருமை... இதை நாமெல்லாம் பின்பற்றினால் வீட்டுக்குள் சண்டை வீம்பாய் நிற்காது. பதினாறு பேரில் பனிரெண்டு பேருடன் நட்பாய் இருந்ததாய்ச் சொன்னார். கிரேட்.

ஒரு சிறு பரிசளிப்பு 16ல் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு மட்டும்...

விளையாட்டை மாற்றியமைப்பவன் - கவின்...

வீரமும் விவேகமும் - வனிதா...

ரொம்ப ஒழுக்கமானவர் - சேரன்....

நட்புக்கு இலக்கணம் - ஷெரின்...

ஆல் ரவுண்டர் - தர்ஷன்....

வனிதா கமலிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டார், தன் பிள்ளைகளை அழைத்து கோப்பையைக் கொடுக்க வைத்தார். கவின் தான் முன்முடிவுடன் விளையாடியதாகச் சொன்னான். சேரன் நற்பண்புகளை மகாநதி படத்துக்கு வேலை செய்தபோது கமலிடம் கற்றுக் கொண்டதாய்ச் சொன்னார். அபியுடன் விருதைப் பகிர்ந்து கொண்டார் ஷெரின். மக்கள் தனக்காக கண்ணீர் விட்டது மிகப்பெரிய விருது என்றார் தர்ஷன்.

தர்ஷனைப் போட்டியின் வேகத்தைக் கூட்டவே பலி கொடுத்தார்கள் என்பதால் கமலின் மனசுக்குள் வருத்தம் இருந்திருக்கும் போல, அந்தக் காரணத்தை மனதில் வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸில் அவரை இணைத்துக் கொண்டார். போராட்ட குணம் கொண்ட தர்ஷன் சினிமாத்துறையில் வெல்லட்டும். அவரின் அம்மாவின் கண்ணீர் கஷ்டத்தால் வரவில்லை... மகிழ்வால் வந்தது... எல்லாருக்கும் நன்றி சொன்னார்.

அடுத்ததொரு வெளியேற்றம்... இம்முறை இல்லத்துக்குள் தன் மகள் ஸ்ருதியை அனுப்பினார்... அவரும் போய் ஆடிப்பாடி மகிழ்ந்து லாஸ்லியாவை அழைத்து வந்தார். கவின் உடைத்து போனான்... மகளுக்கு வெற்றி வாய்ப்பு போச்சேன்னு அம்மா சோகமாய் அமர்ந்திருந்தார். 

ஸ்ருதி பேசிச் சென்றதும் லாஸ்லியா பேசினார்... கவின் தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததைச் சொல்லி நன்றி சொன்னார். அம்மாவுக்கு நன்றி சொல்லி சுருக்கிட முடியாது என்பதால் லவ் யூம்மா என்றார். 

இடையிடையே அபி, சாக்சி, வனிதா, யாஷிகான்னு பலர் ஆடினாங்க... பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு சிறு நகைச்சுவை நிகழ்ச்சி...  ராஜேஷ் வைத்யாவோட வீணை இசையில் கமலின் பாடல்கள்... அருமை, அட்டகாசம்... 

என்ன மனுசன்யா இந்தாளு.... எப்பா... வீணையில் விளையாடுறார்... கமலும் ஒரு பாடல் பாடினார்... மோகன் வைத்யாவிடம் உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் பிறந்ததுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் கமல். அதுல நீயும் பிறந்திருக்கியே என்கிற உள்குத்து இருப்பதாய்த்தான் தெரிந்தது. 

பதினாறு பேர் இருந்த வீட்டுக்கள் இருவர் மட்டும்.... வீட்டையே சுற்றினார்கள்... பாட்டுப் பாடினார்கள்... எல்லாம் பண்ண, பிக்பாஸ் கடைசியாய் அவர்களுடன் பேசினார்.... இந்த முறை பிக்பாஸ் கண்டிப்பாய்ப் பேசியதுடன் கலாய்த்துப் பேசியதே அதிகம்... அது வசீகரக் குரல், எல்லோரையும் வசீகரிக்கும் குரல், மிஸ் யூ சிஸ்யா... ஜயா முகன்... என்ற போது பிக்பாஸ் உடைந்தார்... நமக்கும் எதையோ இழந்தது போல்தான் இருந்தது. மிஸ் யூ பிக்பாஸ்.

வெளியில வாங்க... வரும்போது விளக்கை அணைத்துவிட்டு வாங்கன்னு மெயின் சுவிட்சைக் காட்ட, அதை அணைக்கும்போது அதிலிருந்த கைபிடி உறை கழண்டு விழுந்தது. எடுத்து மாட்டினார்கள்... பிக்பாஸ் இல்லம் ஒவ்வொரு பகுதியாய் இருட்டுக்குள் போனது. பதினாறு பேரை தன்னுள் சுமந்து ஒரு ஜீவனுள்ள தாயாய் இருந்த இல்லம் தன்னை இழந்தது. ஒளியோடு பார்த்த இல்லத்தை ஒளியிழந்து பார்த்த போது வருத்தமே மிஞ்சியது.

வெளியே வந்தவர்களைக் கமல் நின்று அழைத்து சாரட் போன்று ஜோடிக்கப்பட்ட காரில் ஏற்றி, ராஜா கையை வச்சா பாடலுக்கு ஆடியபடி, இருபுறமும் பெண்கள் பூத்தூவ, செயற்கை விளக்கைச் சுமந்து நடக்க, ஆட்டமும் சிரிப்புமாய் சாரட்டில் மேடைக்கு அழைத்து வந்தார் கமல்... ஆஹா... இதுவே போதுமே... வேறென்ன வேண்டும்.

மேடையில் பிகிலு படப்பாடலை முகன் பாட, சாண்டி ஆடினார்... இது இப்பத்தானேய்யா வெளியிடப்பட்டது... உங்களுக்கு எப்படின்னு கமல் கேட்க, திருப்பள்ளி எழுச்சிக்குப் போட்டப்போ பாட்டுப் பிடிச்சுப் போக, மறுபடியும் பிக்பாஸ்கிட்ட நேயர் விருப்பம்ன்னு சொல்லி போடச் சொன்னோம்... அவரும் போட்டார்... அதான்... என்று விளக்கினார்கள்.

விஜய் டிவியின் முதலாளி மேடைக்கு வந்தார்... இந்தச் சீசன் மிகப்பெரிய வெற்றி என்றார்... இந்தச் சீசனில் மட்டும் 200 கோடி ஓட்டுக்கள் கிடைத்ததாகவும் இறுதிப் போட்டிக்கு மட்டும் 20 கோடி ஓட்டுக்கள் வந்திருக்கின்றன என்றும் சொன்னார். மிகப்பெரிய வெற்றிதானே இது... இதனால்தான் கடந்த இரண்டு சீசனைவிட இந்த சீசனின் இறுதிப் போட்டிக்காக பணம் தண்ணீராய்ச் செலவிடப்பட்டிருக்கிறது.

கொஞ்ச நேரம் விளையாண்ட கமல், முகனை வெற்றியாளர் என்றார்....

முகனின் குடும்பம் கொண்டாடியது... சாண்டியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது....

லாலாவை மேடைக்கு கொண்டு வந்தார் சாண்டி...

சாண்டியின் பரிசு சாண்டியிடமே இருக்கு என்ற கமல் வெற்றிக் கோப்பையை முகன் கையில் கொடுத்தார். காசோலை வடிவ அட்டையும் கொடுக்கப்பட்டது.

இந்த 105நாள் நல்லாயிருக்கு, நல்லாயில்லை, பித்தலாட்டம், ஏமாற்று வேலை என்றெல்லாம் மாற்றி மாற்றி எழுதியிருக்கிறேன்... இது 86வது பதிவு என்பது என்னால் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி எழுதுதல் என்பதே மிகப்பெரிய பணி... அதற்கான நேரமும் காலமும் அமைந்தால்தான் இது சாத்தியமானது. நிறைய உறவுகளையும் நட்புக்களையும் கொடுத்திருக்கு. உண்மையில் பிக்பாஸ் எழுதியதில் மனநிறைவே கிடைத்தது.

மிஸ் யூ பிக்பாஸ்...

மிஸ் யூ சாண்டி, முகன், சேரன், ஷெரின் மற்றும் அனைவரும்...

மிஸ் யூ கமல்...

என்ன கலைஞன்யா கமல்... அரசியல் விடுத்து இன்னும் சில காலம் நடிக்கலாம்... யோசியுங்கள் கமல்...

எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறத் தகுதியானவருக்கே கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

வாழ்க்கை வளமாய் அமையட்டும் முகன்.

நன்றி அனைவருக்கும்.

உண்மையில் இந்தப் பதிவு எழுதி முடிக்கும் போது மனநிறைவை விட ஒரு இனம் புரியாத வேதனை மனசுக்குள்... ம்... விரைவில் வேறு ஒரு தொடருடன் சந்திப்போம்... மாற்றங்கள்தானே வாழ்க்கை.

பிக்பாஸ் நிறைவு பெற்றது.
-'பரிவை' சே.குமார். 

5 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

ஆரம்ப முதலே உங்கள் பதிவுகளைப் படித்துவந்தேன் பொதுஆக ஒரு கமண்ட் மட்டும் போட வேண்டும் என்று தோன்றியது “காய்தல் உவத்தல் இன்றி ஒரு பொருட் கண் ஆய்தல் அறிவுடையதார் கண்ணதே காய்தலின் கண் குணமும்உவத்தலின் கண் குறையும் தோன்றாக்கெடும்

நிலாமதி சொன்னது…

இதுவரை நேரம் எடுத்துக் பிக் பாஸ் பதிவை சுவையாக தந்தமைக்கு நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி... தொடருங்கள்.