மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 19 அக்டோபர், 2019

அமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'

மீரக எழுத்தாளர் குழுமத்தின் மூன்றாவது மாதாந்திர 'வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம்' நிகழ்ச்சி ஜெஸிலா அவர்களின் 'ப்ரோ ஆக்டிவ் எக்ஸல் சேப்டி கன்சல்டன்சி' நிறுவனத்தில் வெள்ளி (18/10/2019) மாலை நடைபெற்றது. சென்ற மாதக் கூட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த முறை கூட்டம் கொஞ்சம் அதிகமே. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.


எப்பவும் போல் ஆசிப் அண்ணன் நிகழ்வை ஆரம்பிக்க, முதல் ஆட்டக்காரராய் பிலால் இறங்கினார் வாடி வாசலுடன்... வாடி வாசல் என்பது நமக்கெல்லாம் மிக நெருக்கமானதுதானே... மஞ்சுவிரட்டு / சல்லிக்கட்டு / ஏறு தழுவுதல் என எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் வாடி வாசல் வழி வரும் மாட்டை வீரர்கள் விரட்டிப் பிடிப்பதும் அப்படிப் பிடித்தவருக்குப் பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் நாம் பார்த்து ரசித்ததுதானே... ஆம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் குறித்துத்தான் பிலால் பேசினார். மாடு பிடிப்பதில் இருக்கும் அரசியல், ஒரே சாதி என்றாலும் பணமும் வசதியும் அவர்களுக்குள்ளேயே மேல் கீழ் என்னும் அந்தஸ்த்தைக் கொடுத்திருப்பதை, இன்னும் மேலூர் பக்கம் மாடுபிடித்தபின் அவர்களுக்குள் நிகழும் பகைகள் என வாடிவாசல் நாவலுடன் தான் பார்த்து வளர்ந்த, இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளையும் இணைத்து மிக அழகாகப் பேசினார். அதிகமாய் நேரமெடுக்காமல் தனக்கு ஒதுக்கிய நேரத்துக்குள் சொல்ல வந்ததை மிகச் சிறப்பாக சொல்லி அமர்ந்தார். நிகழ்வு முடிந்து சாப்பிடும் போது இது குறித்து இன்னும் விரிவாய்ப் பேசினார்... சிறப்பு.

ஆசிப் அண்ணன் பேசும் போது இங்கு ஆரம்பித்து, அங்க நகர்ந்து, அப்படியே அந்தப் பக்கம் போய், மறுபடியும் இந்தப் பக்கம் நகர்ந்து பேசி முடித்தார் பிலால் என்ற போது அவருக்கு முன்னே ஒரு மாடு இருந்ததே... அதைப் பார்க்கலையா என்றார் சுரேஷ்.

அடுத்துப் பேச வந்தவர் தெரிசை சிவா... இவர் ஒரு நல்ல கதை சொல்லி... சென்ற முறை நாவலை எடுத்துப் பேசியதால் மணி அடித்தும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன் என்பதால் இந்த முறை சிறுகதையுடன் வந்திருக்கிறேன் என்று சொன்னாலும் கதையை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சொல்லிச் சென்றதால் இந்த முறையும் அதிக நேரமே எடுத்துக் கொண்டார் என்ற போதிலும் நல்லதொரு கதையைச் சொன்னார். ஆட்களே வராத கோவிலுக்கு ஒரு சாமியார் வருகிறார்... அவருடன் இரண்டு கிளிகளும் வருகின்றன... அந்தக் கிளிகள் சிவா எனச் சொல்ல ஆரம்பிக்க, நிறையக் கிளிகள் வர ஆரம்பித்து எல்லாம் சிவா... சிவா என்று சொல்ல கூட்டமே இல்லாத கோவிலுக்கு கூட்டம் வர, வருமானம் இல்லாமல் இருந்த குருக்கள் வருமானத்தைப் பார்க்க ஆரம்பிக்க, சாமியாரை மக்கள் கொண்டாடுவதைப் பொறுக்காத குருக்கள் சரசாங்கிற பெண்ணைப் பற்றி சாமியாரிடம் சொல்ல, அவர் சிவா... சிவா...ன்னு அந்தப் பேச்சை மறுக்க, கொஞ்ச நாளில் கிளிகள் சரசான்னு சொல்ல ஆரம்பிக்க, ஒவ்வொன்றாய் சாமியார் கொல்ல, ஒரு நாள் சாமியார் சரசா யாருன்னு பார்க்கப் போய் காணாமல் போகிறார் என்ற கதையைத் தன் பாணியில் அழகாய்ச் சொல்லி முடித்தார்.

தெரிசை சரசா... ச்சை சிவா மிக அழகாக கதை சொன்னார்... நாவல் எடுத்தால் அதிக நேரமெடுக்கும் என்பதால் கதை எடுத்தார்... நேரமும் எடுத்துக் கொண்டார் என்றார் ஆசிப் அண்ணன். 

முழுக்கதையையும் விரிவாய்ச் சொல்லும் போது ஏற்படும் சிக்கல் இது...  வாசித்ததை... அது குறித்த பார்வையை... எழுத்தாளரை... அது தன்னைப் பாதித்த விஷயத்தை... அதனுடன் தொடர்புடைய நிகழ்வைச் சொல்லிச் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த முறை நேரத்துக்குள் முடிப்பார் என்று நம்புவோமாக.

அடுத்துப் பேச வந்தவர் சசி அண்ணன்... இவர் எடுத்துக் கொண்டது மலையாள எழுத்தாளர் எழுதிய சிறுகதை, சிறுகதை என்பதைவிட எழுத்தாளரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வை, சசி அண்ணன் மிகச் சிறப்பாகப் பேசுபவர் என்பதால் கேட்பவர்களை ஈர்த்தார். தீக்காயத்தால் முகம் முழுவதும் சிதைந்த பெண்ணொருத்தி எழுத்தாளரைச் சந்திக்கும் போது பெயர் சொல்லி அழைக்கிறாள்... அவருக்கு யாரெனத் தெரியவில்லை... என்னை மிரட்டி முத்தம் வாங்கினாயே ஞாபகம் இருக்கா என்றதும் அந்த ஞாபகத்துக்குள் போய் அந்தப் பெண்ணை படிக்கும் காலத்தில் காதலிக்கப்போய் பட்ட அவமானத்துக்காகப் பலி வாங்க படகில் செல்லும் போது கழி முகத்தில் படகை நிறுத்தி எனக்கு முத்தம் கொடுக்கவில்லை என்றால் படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி  முத்தம் வாங்கியதை நினைத்துப் பார்க்கிறார். பின்னர் அவளுடன் வீடு போய் அவளின் கதையைக் கேட்டு கையில் வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்தால் தவறாக நினைத்து விடுவாளோ என எண்ணி, அவளிடம் ரகசியம் பேச வேண்டுமெனச் சொல்லி அவளின் கருகிய முகத்தில் முத்தம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார். இதை சசி அண்ணன் ரசனையோடு சொன்னது சுவையாய் இருந்தது... தீக்காயமோ முத்தமோ உறுத்தவில்லை... இதை தமிழில் மொழி பெயர்த்தவர் வம்சி சைலஜா அவர்கள்.

அடுத்துக் களமிறங்கிய தீபக் மா.கிருஷ்ணன் அவர்களின் படைப்புலகு பற்றிப் பேசினார். மா.கிருஷ்ணனைப் பற்றி நாம் அதிகம் அறிந்ததில்லை... அவரை அறிந்து கொள்ளும்படி அவரின் புத்தகங்களை வைத்துச் சொல்லி, மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்து, காட்டு விலங்குகளை போட்டோ எடுத்தவர்களுக்கு... எடுப்பவர்களுக்கு முன்னோடி கிருஷ்ணன் என்பதைச் சொல்லி, அவரின் புத்தகங்கள் குறித்தான பார்வையை முன் வைத்து, பத்தி எழுத்தாளர் கிருஷ்ணன் என்பதையும் கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து பத்தி எழுதியவர் என்பதையும் சொல்லி மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்தார் தீபக். உண்மையில் சிறப்பானதொரு பேச்சு... சிறுகதை, நாவல் என்று எடுத்துக் கொள்ளாமல் ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசியது சிறப்பு. அவரின் பேச்சில் மகிழ்ந்த சுரேஷ் மீண்டும் ஒரு முறை கைதட்டலாமே என்றது அவரின் பேச்சுக்குக் கிடைத்த மரியாதை.

இவரின் பின்னே பேச வந்தவர் வேல்முருகன்... தியோடர்  பாஸ்கரன் பற்றி, சூழலியல் பற்றி, விரிவாய்ப் பேசினார்... முதல் முறை பேசுகிறேன் என்பதால் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லியே ஆரம்பித்தார்... தியோடர் பாஸ்கரும் நமக்குப் புதுசுதான்... என்னென்னவோ சொன்னார்... அவர் வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் கவி நயத்துடன் அழகாய் இருப்பதைச் சொன்னார்... அவர் எழுதுவதில் கூட அழகும் சுவையும் இருக்கும் என்றார். அவரின் புத்தகத்தில் தலைப்புக்கள் பற்றி எல்லாம் சொன்னார். குறிப்பாக மா.கிருஷ்ணனின் சிஷ்யப்பிள்ளை இவர் என்பதையும் சொன்னார். மா.கிருஷ்ணனை சந்தித்தது குறித்து தியோடர் எழுதியிருப்பது நாம் சாதாரணமாகப் பேசுவது போல்தான் இருக்கும்... எழுத்துக்காக அழகியல் எல்லாம் அவர் சேர்ப்பதில்லை என்றார். பூங்காவுக்கும் சரணாயலத்துக்குமான வித்தியாசம் குறித்துப் பேசினார். சரணாலயத்தில் சத்தம் போடுகிறவர்கள் யாரென்று பார்த்தால் அது இந்தியர்கள்தான் என்பதையும் சொன்னார். கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்... எப்போது சந்தித்தாலும் நிறைய விஷயங்களைப் பேசி, நம்மை வியப்பில் ஆழ்த்தும் வேல்முருகனின் கன்னிப் பேச்சு கவனிக்கத்தக்கதாய் இருந்தது.

திரு. நூருல் அமீன் அவர்கள் முல்லா சஃபி குறித்துப் பேசினார். முல்லா கதைகளை நாம் நகைச்சுவையாய் மட்டுமே கேட்டுப் பழகியிருக்கிறோம். அவர் தாய் கோழியைக் கொன்று சாப்பிட்டதால் தவிக்கும் குஞ்சுகளுக்கு கருப்பு பட்டையை கழுத்தில் கட்டி ஊர்வலம் நடத்திய கதையையும், திருடன் திருடிக் கொண்டு போக அவனுடன் போய் அவன் வீட்டில் போய் படுத்துக் கொண்டு நாம வீடு மாத்தி வந்திருக்கோமா என்று கேட்ட கதையையும், திருட வர்றவனுக்கு ஒண்ணுமே இல்லையேன்னு பீரோவுக்குள்ள ஒழிந்து கொண்ட கதையையும் சொல்லி, முல்லா கடத்தல் பண்ணுவதைக் கண்டு பிடிக்க முடியாமல் போக, அவர் பெரும் பணக்காரராய் இருக்க, ஓய்வுக்குப் பின் அவரைப் பார்க்கும் போலீஸ் அதிகாரி என்ன கடத்தினீர்கள் என்று கேட்க, கழுதைதான் கடத்தினேன் நீங்க எல்லாத்தையும் சோதித்தீர்கள்... ஆனால் கழுதையை சோதிக்கலை என்றார் என்ற கதையைச் சொல்லி முல்லா குறித்துப் பேசினார். கணீர்க்குரல், அருமையான பேச்சு அமீன் அண்ணாச்சிக்கே உரியது. சிறப்பான பேச்சு.

முஹைதீன் பாட்சா பேச வந்தது எஸ்.ராவின் கூழாங்கற்கள் பேசுகின்றன குறித்து... இது முழுக்க முழுக்க ஜென் கவிதைகள் குறித்தது... நிலா கீழே இருந்தது, கடல் மேலே இருந்தது, நிலா என்னருகில் படுத்திருந்தது என்பது போன்ற கவிதைகள்... சற்றே சிரமமான ஒரு காரியம் இது குறித்துப் பேசுதல் என்பது... பாட்சா நிறைவே சிரமப்பட்டார்... இடையிடையே வீடியோ எடுக்கும் செல்போனும் சத்யாகிரகம் பண்ண, வீடியோ சரியாகும் வரை அதே பொசிசனில் நின்று தொடர்ந்து பேசினார்... சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்து விழுந்தன... அவரின் ஆர்வத்துக்கு கூழாங்கல் ஆதரவு கொடுக்கவில்லை... அடுத்த முறை நல்லதொரு கதையுடன் வருவார் என்று நம்பலாம்.

அய்யனார் விஸ்வநாத் பேசியது சம்பத் கதைகளைக் குறித்து... சம்பத் மரணத்தையே தேடியிருக்கிறார்... அவரின் கதைகள் எல்லாம் மரணத்தையே பேசுகின்றன. ஒரு நாவலில் நாயகன் தன்னுடைய மரணத்தைப் பற்றியே பேசுகிறான்  என்றெல்லாம் சொன்னார். பெரும் எழுத்தாளர்கள் மரணத்தைப் பற்றியே பேசுகிறார்கள் என சுரேஷ் கூட இடையில் சொன்னார். அவரின் இறப்புக்குப் பின்னேதான் அவர்களின் கதைகள் தொகுக்கப்பட்டதாகவும் அதற்குக் கூட  அவரின் குடும்பத்தார் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அவரின் நண்பர்தான் விடாமுயற்சியால் கொண்டு வந்தார் என்றும் சொன்னார். சம்பத்தின் கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிய பேச்சு... அய்யனார் எப்போதும் போல் சிறப்பாகவே பேசினார்.

இடையில் ருவைஸ் தமிழ்ச்சங்கத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்... அவர்கள் குறித்த சிறு அறிமுகப் பேச்சின் பின் ஒரு நண்பர், நாம் சிறு வயதில் கேட்டிருந்த குரு, மாம்பழம், குழந்தை இல்லாத பெண் கதையை விரிவாய்ச் சொன்னார்... இந்தக் குரு, அந்தக் குரு என இரண்டு குருக்களைப் பற்றிச் சொன்னார்... ஆரம்பத்தில் புரிந்த கதை போகப்போக எந்தக் குரு அந்தப் பெண்ணின் கணவர், எந்தக் குரு குளிக்க வந்தவர் என்ற குழப்பம் எழுந்தது. தயார் பண்ணிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்...  தன் பாணியில் சிறப்பாகவே கதையைச் சொன்னார்... முன்முடிவுகள் இல்லாமல் இறங்கியதால் வரும் பிரச்சினையே அவருக்கும் இருந்தது... ஆனாலும் மேடையில் கதையைச் சொல்ல நினைத்த ஆர்வம் போற்றுதலுக்குரியது. ஜனவரி விழா குறித்தும் பேசினார்கள்... ருவைஸில் இருந்து வந்து கலந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் மூவருக்கும்.

இறுதியில் பேச வந்த கௌசர் எஸ்.ராவின் உறுபசி பற்றிப் பேசினார். ஒரு மரணத்தைப் பற்றியும் மரணித்த சம்பத் வாழ்ந்த விதத்தைப் பற்றியும் பேசும் கதை அது... அதனுடன் தன் அப்பாவின் மரணத்தை இணைத்து, நாமும் மரணித்து விடுவோமோ எனப் பயந்து, துரத்தும் பிரச்சினைகளின் முடிவு மரணமாய் இருக்குமோ என்ற யோசனையில் ஒரு வாரம் முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததையும் சொன்னார். பாதித்த நண்பனின் மரணத்தைச் சொன்னார். பாலாஜி அண்ணன் இதையா வாசிக்கிறாய் வேண்டாம் என்று சொன்னதாகவும் சொன்னார். சில நேரங்களில் மரண பயம் என்பதைவிட சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளால் அப்படி ஒன்று நிகழ்ந்தால் குடும்பம், குழந்தைகள் என்ற எண்ணம் எனக்குள் எழத்தான் செய்கிறது. மரண பயம் என்பதைவிட மரணத்தின் பின்னான நம் நிழலில் வாழ்வோரின் நிலை என்னாகும் என்ற பயமே மனசுக்குள்... கௌசர் பேசி முடித்ததும் பாலாஜி அண்ணன் கட்டிப் பிடித்து ஆற்றுப் படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாய் கனவு அண்ணன் இப்படியான கதைகளை எழுதுபவர்களைக் கொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான்... அது இப்படி... இது அப்படின்னு எப்பவுமே அகச்சிக்கலை விலாவாரியாக எழுதுவதில்தான் சிக்கலே இருக்கிறது. சங்கீதா துணி துவைத்தாள்... சமையல் பண்ணினாள்ன்னு எழுதி கடைசியில சங்கீதாவைக் கொன்னுடுறானுங்கன்னு சொன்னார்.... அவர் சொன்ன பெயர் சங்கீதாவா சுசிலாவான்னு ஞாபகத்தில் இல்லை... ஆனா அவரின் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. எஸ்.ரா. இத்தனை கட்டில் இருந்தது, இவன் இதைச் சாப்பிட்டான் என்றெல்லாம் எழுதியிருக்கிறார் இது அவருக்கு வரமா, சாபமான்னே தெரியலைங்கிற மாதிரி கௌசர் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியே கனவு அண்ணனின் பேச்சு.

அமீரகத்தில் இருந்து பணி நிறைவு பெற்று ஊருக்குச் செல்ல இருக்கும் அமீன் அண்ணாச்சிக்கு குழுவின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது. ஷார்ஜா புத்தக விழாவில் வெளியிடப்பட இருக்கும் ஆசிப் அண்ணா, அய்யனார், யூசுப் (கனவு) அண்ணா, ஜெஸிலா ஆகியோரின் புத்தக அட்டைப் படங்கள் திரையிடப்பட்டன. அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் ஓர் என்று இருப்பது தவறு என யூசுப் அண்ணனிடம் சுரேஷ் சொன்னார். பிழை திருத்தம் அட்டைப் படத்தில் இருந்து இனிதே தொடங்கியது.

எல்லாருக்கும் நிகழ்வு நடக்கும் போது சமோசா, வடை, டீ கொடுக்கப்பட்டது. பாலாஜி அண்ணன் எப்பவும் போல் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார் தொடர்ந்த தலைவலியுடன்... ஆசிப் அண்ணன் சிறப்பாகத் தொகுத்தளித்தார்... இடையில் தனது ஒரு புத்தகத்தைக் காணும் என்பதையும் பதிவு செய்து கொண்டார். எழு ராஜாக்களின் நகரம் புத்தகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

எப்பவும் போல் சுபான் அண்ணா வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்தார்.  இரவு உணவு சாப்பிட்டே ஆக வேண்டும் என பிலால் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நல்ல சாப்பாடு... அதன் பின்னே பயணம் அபுதாபி நோக்கி... அறைக்கு வந்து சேரும் போது இரவு 2 மணி.

பல பிரச்சினைகள் நிறைந்திருந்தாலும் மன நிறைவைக் கொடுக்கும் ஒரு வெள்ளியாய் நேற்று மாலை அமைந்தது. அதற்காக நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.

நேற்றைய முடிவில் சின்னச் சின்ன மன வருத்தங்கள்... இதெல்லாம் நிகழாமல் ஒரு குழுமம்  ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களால் இரண்டாண்டுகளாய் நகர்ந்து வந்திருக்கிறது... வருத்தங்களை எல்லாம் கடந்து செல்வோம்... கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது. 

எனக்குக் கிடைத்த நேற்றைய பாடம் நண்பர்கள்தானே அழைக்கிறார்கள் என எந்த ஒரு வாட்ஸ் அப் குழுமத்திலும் இணையக் கூடாது என்பதே... சிறு பிரச்சினை.... பேசித் தீர்க்க வேண்டியதை... தீர்க்காமல்... தனித்தனியே பேசிக் கொண்டு போவதுடன் மூன்று நிகழ்வுகளை ஒரு புள்ளியில் இணைத்துப் பேசியதால் குழுமத்தில் இருந்தோம் என்பதை, மற்ற நண்பர்கள் குறித்த தவறான பேச்சு நிகழ்ந்த இடத்தில் இருந்தோம் என்பதாய் ஆக்கி விட்டிருந்தது. 

என்னைப் பொறுத்தவரை அந்த இடத்தில் இருந்தேன் என்றால் ஆம் இருந்தேன் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பேன். நான் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்து ஒன்றும் ஆகப் போவதில்லியே. ஆனால் நாம் இல்லாத இடத்தில் நிகழ்ந்ததில் நாமும் இருந்ததாய்ச் சொன்னதுதான் கஷ்டமாய் இருந்தது. மற்றபடி அந்தக் குழுமத்தில் யார்யார் இருந்தீர்கள் என்ற கேள்விக்கு முதலில் கைதூக்கியவன் நானே...  நான் கிட்டத்தட்ட பதினைந்து எழுத்தாளர் குழுமத்தில் இருக்கிறேன். 

எது எப்படியோ உறவுகளின் குழுமங்களுக்குள் அடைபடாமல் நகர்வதைப் போல் இனி வரும் நட்புக் குழுமங்களையும் ஒதுக்கிப் பயணித்தலே நலம் என்ற முடிவை எடுக்க வைத்தது நேற்றைய நிகழ்வு. ஊர்ல சொல்லுவாங்க நொங்கு தின்னவன் தப்பிச்சிப் போக கொதம்பை நக்கியவன் மாட்டிக்கிட்டான்னு அந்தக்கதைதான் நேற்று நிகழ்ந்தது. பிரச்சினை என்ன... என்ன நிகழ்ந்தது என்பதை பிலால் புரிந்து கொண்டார்... பாலாஜி அண்ணன் வருத்தமுடனே சென்றதுதான் கஷ்டமாக இருந்தது.

நேற்றைய நிகழ்வில் செல்போன்களின் தொல்லை அதிகமாகவே இருந்தது... ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறோம் என்னும் போது சப்தத்தையாவது குறைத்து வைத்துக் கொள்ளலாம். அப்படி அவசரமான போன் என்றால் வெளியில் போய் பேசியிருக்கலாம்... பலர் உள்ளே உட்கார்ந்தே பேசினார்கள்... அடிக்கடி சிலர் எழுந்து போனார்கள்... அது பேச்சாளர்களை மட்டுமல்ல... அமர்ந்து கேட்டவர்களுக்கும் தொந்தரவாகவே இருந்தது. பலரின் பேச்சு தடைபட்டது... கவனிக்கவும் முடியவில்லை.

சொல்ல மறந்துட்டேன்... வேள்பாரியின் தொடர்ச்சியாய் சுந்தர் பேசி அனுப்பிய வீடியோ திரையிடப்பட்டது... சப்தம் குறைவாக இருந்த காரணத்தால் யாரும் கவனிக்க முடியவில்லை... எனவே அடுத்த கூட்டத்தில் திரையிடலாம் என நிறுத்தி வைக்கப்பட்டது.

எப்பவும் எல்லாரும் இணைந்து ஒரு போட்டோ எடுக்கப்படும் நேற்று அப்படி நிகழவில்லை...  மன நிறைவான கூட்டம் சின்ன மன வருத்தத்துடனே முடிவுக்கு வந்தது. வரும் கூட்டங்களில் இந்தச் சின்னச் சின்ன பிரச்சினைகள் களையப்பட்டு மகிழ்வுடன் நகரும் என்று நம்பலாம்.

எது எப்படியோ எப்பவும் போல் மிகச் சிறப்பான நிகழ்வு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...