மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 மார்ச், 2017பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?

ன்று காலை எழுந்த போது இடி, மின்னலுடன் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெளியில் ஒரு சில வேலைகள் இருந்தாலும் மழை பெய்யும் போது எங்கு வெளியில் செல்வது என்ற யோசனையோடு இங்கு எதாவது கிறுக்குவோம் என்றும் வாசிப்பதும் விட்டுப் போச்சே என்பதால் சில பதிவுகளையாவது வாசிப்போமே என்றும் நினைத்த வண்ணம் லேப்டாப்பை எடுத்து அமர்ந்த போது 'ஏன் நெருஞ்சியும் குறிஞ்சியும் தொடர்கதையை மீண்டும் தொடரக் கூடாது' என்ற எண்ணம் மனசுக்குள் ஏறி உக்கார, கடைசியாக எழுதிய பகுதியை எடுத்து ஒரு முறை வாசித்து அடுத்த பகுதியை எழுதிப் பதியலாம் என்று முடிவு செய்து அடுத்த பகுதியை எழுதி வைத்துவிட்டு, முகநூலில் ஒரு ரவுண்ட்ஸ் போய் வரலாம் என இங்கிருந்து அங்கு தாவ, இன்றைய பிறந்தநாள் காண்பவர்கள் பட்டியலில்.... அட நம்ம அண்ணாச்சி... 'என்னைப் பற்றி நான்'  பகுதியைப் போல் என் நட்பு வட்டத்தில் இருக்கும் உறவுகளின் பிறந்தநாள் எனக்குத் தெரியும் பட்சத்தில்  பிறந்தநாள் பகிர்வு ஒன்றை தற்போது பகிர்ந்து வருகிறேன் என்பது எல்லாருக்கும் தெரியும். அட நம்ம அண்ணனுக்குப் பிறந்தநாள்... கண்ணன், பார்த்தசாரதி, சுபஸ்ரீ, அபியை எல்லாம்... அதாங்க நம்ம நெருஞ்சியும் குறிஞ்சியும்ல்ல முக்கியமானவங்க... இந்த முக்கியமானவங்களை அப்புறம் பாத்துப்போம்... முதல்ல இவங்களைவிட முக்கியமானவரைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்ன்னு பதிவை மாத்தியாச்சு.

ஆமா... எந்த அண்ணாச்சிக்குப் பிறந்தநாள்ன்னுதானே கேக்குறேள்... யோசிக்கிறேள்... சை...தொடர்கதையை தொடர்ந்து எழுதிய பாதிப்புல ஐயர் ஆத்துப்பாஷைக்குள்ள போகுது மனசு... சரி வாங்க எப்பவும் போல நம்ம எழுத்துக்குள்ள இறங்குவோம்.

யார் அந்த அண்ணாச்சி...? அப்படின்னு யோசிக்கிறீங்கதானே... அட அதாங்க... இந்த இரட்டையர்... என்னாது எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா (சுபா)... இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி... நாதஸ்வர வித்வான்கள் வி.கே.கானமூர்த்தி-வி.கே.பஞ்சமூர்த்தி... இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு... அப்படின்னு நிறையப் பேர் ஒவ்வொரு துறையிலும் ஜெயித்திருக்கிறார்களே... அப்படி வலைத்தளத்தில் இரட்டையர்களாய்... மிகச் சிறப்பாக எழுதி வரும் நம்ம தில்லையகத்தாரில் ஒருவரான துளசிதரன் அண்ணன் அவர்களுக்குத்தான் இன்று பிறந்தநாள்.

Image may contain: 1 person
(பிறந்தநாள் கொண்டாடும் துளசி அண்ணனின் போட்டோ முகநூலில் இருந்து திருடப்பட்டது)
தில்லையகத்து க்ரோனிக்கல்ஸ் (THILLAIAKATHU CHRONICLES) என்னும் தளத்தில் கீதா அக்காவும் துளசி அண்ணாவும் மிகச் சிறப்பாக எழுதி வருவதுடன் எல்லாருடைய தளத்துக்கும் வந்து கருத்திட்டு வாழ்த்துவதிலும் சிறப்பானவர்கள். இவர்களின் எழுத்துக்கு எல்லாரும் நீளமான கருத்துக்களை இட, இவர்கள் பதில் சொல்ல... என பதிவை விட கருத்து இன்னும் விரிவான கருத்துக்களைச் சொல்லும். நானெல்லாம் அங்க போனாலும் ரெண்டு வரிக்குள்ள எதாச்சும் சொல்லிட்டு வந்திருவேன். ஆனா அவங்க நம்ம தளம் வந்தா ரசிச்சி... ருசிச்சு... விரிவா... கருத்துச் சொல்வாங்க... சில சமயங்கள்ல ரெண்டு பேரோட கருத்தும் இருக்கும்... சில சமயங்கள்ல அண்ணன் வர முடியலைன்னா அக்காவோட கருத்தும் அக்கா வரமுடியலைன்னா அண்ணனோட கருத்தும் இருக்கும்... அதனோடு அவங்க ஏன் வரமுடியலைங்கிற காரணமும் இருக்கும்.

ஜோதிஜி அண்ணன் எழுதிய 'என்னைப் பற்றி நான்'  பகுதியில் கருத்துத் தெரிவிக்கும் போது அவரின் பதிவுகளை வாசிப்போம்... ஆனால் அதற்கு ஆழ்ந்து சிந்தித்து கருத்திட முடியுமா என்ற யோசனையில் கருத்து இடாமல் வந்துவிடுவோம்... இப்ப இப்ப கருத்து இடுகிறோம் என்று சொல்லியிருப்பார்கள். ஜோதி அண்ணாவின் பகிர்வுக்கு விரிவாய் கருத்து இட முடியாமல் வருபவர்களில் நானும் ஒருவனே... :) அதே நிலைதான் பலரின் பகிர்வுகளுக்கும்... 

கேரளத்தில் ஆங்கில ஆசிரியர் பணி... குடும்பத்தை விடுத்து தனியாக தங்கி இருப்பதாகவும் வார விடுமுறையில் ஊருக்கு வருவதாகவும்... சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் அவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். சினிமாவில் நாட்டம் உண்டு என்பதை அவரின் குறும்படங்கள் சொல்லும்... நல்லா நடிக்கத் தெரிந்தவர் (வாழ்வில் இல்லை என்பதைச் சொல்லிக்கிறேன்... இல்லேன்னா மதுரைத் தமிழன் அவர்கள் இந்த வரிகளை எடுத்து அதகளம் பண்ணிடமாட்டார்) என்பதை குடந்தை சரவணன் அண்ணன், கோவை ஆவி போன்றோரின் குறும்படங்களைப் பார்த்திருந்தால் தெரிந்து கொள்ளலாம். ஆம் நடிப்பில் அசத்தியிருப்பார்.

ஆங்கில ஆசிரியர்... பெரிய மனிதர்... என்பதாலும் பதிவு மூலமே பழக்கம்... இன்னும் நெருக்கமான பழக்கமில்லை என்பதாலும் 'சார்' என்றும் 'மேடம்' என்றும் அழைக்க... (இப்ப முத்துநிலவன் ஐயா, ஜெயக்குமார் ஐயாவெல்லாம் தமிழ்வழி ஆசிரியர்கள் என்பதால் ஐயா போடுறோமுல்ல... இவர் ஆங்கில வாத்தியார்ல்ல அப்ப ஆங்கிலத்தில் சார்ன்னு சொல்றதுதானே சிறப்பு) எங்களுக்குள் மின்னஞ்சல் தொடர்பு வந்த போது 'குமார்... இனி சார்ன்னு சொல்லாதீங்க... பேரைச் சொல்லுங்க... இல்லேன்னா அண்ணன்னே சொல்லுங்க' என்று சொன்னார். நம்மளைவிட ஒரு வயசு கூடன்னாலே அண்ணன் போடுறவன்... இவரைப் பேர் சொல்லி அழைப்பதா என அண்ணன் போட்டாச்சு... அண்ணன், அக்கா, அம்மா, ஐயா, தம்பி, தங்கைன்னு அழைப்பது ஒரு சுகம்தான் இல்லையா...

'என்னைப் பற்றி நான்' பகுதிக்கு எழுதக் கேட்டபோது இருவரும் சேர்ந்து மிக அழகாக எழுதிக் கொடுத்தார்கள். அதில் குடும்பம், குணம் என இருவரும் மாற்றி மாற்றிச் சொல்லி நாம் அறியத் தந்தார்கள். மிகச் சிறப்பான குடும்பம்... சந்தோஷமான வாழ்க்கை... இதைவிட வேறென்ன வேண்டும் என்பதாய் இருந்தது இருவரின் பேச்சு வடிவிலான என்னைப் பற்றி நான்.

சரிங்க... ஊருக்குப் போகும்போது வாய்ப்பிருப்பின் சந்திக்க நினைக்கும் பலரில் இந்த தில்லையகத்து உறவுகளும் இருக்கிறார்கள். அப்படியே குடும்பத்தோட கேரளாவுக்கு ஒரு விசிட் அடிச்சிடலாம்....

துளசி அண்ணனைப் பிடிக்காத வலையுலக நட்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்... அவரை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன். வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழவும்... இந்த அன்பு என்றும் தொடரவும்... தில்லையகத்தில் இன்னும் சிறப்பான பகிர்வுகளை இருவரும் எழுதவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

துளசிதரன் அண்ணாச்சி இன்றைய பிறந்தநாளை சந்தோஷமாய்... மகிழ்வாய்... கொண்டாடுங்கள்.

நாளை எங்கள் செல்ல மகளின் பிறந்தநாள்... அதற்கான பதிவு நாளை...

எனக்கென்னவோ ஜீனியஸ் எல்லாம் மார்ச்ல... நல்லா வாசிங்க மார்ச் மாதத்தில் பிறந்திருப்பாங்களோன்னு தோணுது.. :)... நீங்க என்ன சொல்றீங்க..?

வாங்க மக்களே... உங்கள் வாழ்த்துக்களால் அண்ணனின் மனசைக் குளிர வையுங்கள்... இங்கே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி குளிர வைக்குது... ஊர்ல வெயில் அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... வாழ்த்தால் குளிர வையுங்கள்....

முகநூலில் 55 வயசு காட்டுது... அப்பன்னா நமக்கு ரொ....ம்...ப.... மூத்தவர்...  எனவே அவரோட பிறந்தநாள்ல நான் அவருக்கிட்ட ஆசி வேண்டிக்கிறேன்.

Image result for பிறந்தநாள் வாழ்த்துக்கள்

-'பரிவை' சே.குமார்.

புதன், 22 மார்ச், 201710. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் நான் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் எங்கள் ஊரில் இருந்து 20 கிமீக்குள் பிறந்து பணி நிமித்தம் திருப்பூரில் வசிக்கும் அண்ணன் ஜோதிஜி அவர்கள். இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை... எல்லாரும் அறிந்த பதிவர்... கலைமகள், அலைமகள், மலைமகள் என முப்பெரும் தேவியருக்கு தந்தை என்பதால் தன் தளத்தை தேவியர் இல்லம் ஆக்கி, மிகச் சிறப்பான கட்டுரைகளைப் பகிர்ந்து வருகிறார். தேவியர் நிறைந்த இல்லத்தில் வாழ்வதும் சுகமே. இவர் எழுதும் பதிவுகளெல்லாமே அரசியல், வாழ்க்கை, தொழில் என வித்தியாசமான களத்தில் பயணிக்கும்.   ஒவ்வொரு பதிவும் நீளமாய்... விரிவான அலசலாய் இருக்கும்... அங்கு வரும் பின்னூட்டங்கள் கூட தனிப் பகிர்வாக பகிரும் அளவுக்கு இருக்கும்.

'என்னைப் பற்றி நான்' எழுதுங்க அண்ணா என்று சொன்னபோது தொழில் நிமித்தமான பயணத்தில் இருப்பதால் விரைவில் அனுப்புகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பினார். அதன் பின்னர் ஒருநாள் எழுதி அனுப்பி விட்டு பிடிச்சிருக்கான்னு பாருங்க என்றார். ஏறத்தாழ 15 பக்கங்கள்... வாசித்ததும் வியந்தேன்... என்னைப் பற்றி நான் என்பதை முழுவதும் உள்வாங்கி மூன்று தலைமுறைகளை நம் கண் முன் நிறுத்தி  தன்னைப் பற்றி மிக விரிவாய் எழுதியிருக்கிறார். 

டாலர் நகரம் என்னும் புத்தகத்தின் ஆசிரியரான இவரின் புத்தகம் ஆக வேண்டிய மிகச் சிறந்த படைப்புக்கள் எல்லாம் மின்னூலாய் ஆக்கப்பட்டிருக்கின்றன.  பழைய குப்பைகள் என்னும் அவரின் மின்னூல் குறித்தான பார்வையை என்னையும் எழுதச் சொல்லி தன் தளத்தில் பகிர்ந்து கொண்டவர். இனி அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என நீண்ட பதிவை பொறுமையாக வாசியுங்கள்... பதிவின் முடிவில் இந்த எழுத்துக்கு எத்தனை சக்தி என்பதை உணர்வீர்கள்... இதேபோல் நாமும் எழுத வேண்டும் என இனி எழுத இருப்பவர்களை கண்டிப்பாக நினைக்க வைக்கும்.


வாழ்க்கை என்பது ரசனையாகப் பார்க்க வேண்டியது. குறுகிய காலத்திற்குள் வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு சம்பவம்" என்று யாராவது உங்களிடம் வந்து சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வாழ்க்கையை அனுபவிக்கப் பணம் வேண்டுமே? பணம் என்ற காகிதத்தால் கட்டப்படும் வீடு தான் வாழ்க்கை என்பதாக மாறியுள்ளது.

விபரம் தெரிந்த நாட்கள் முதல் அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை, வறுமை, துன்பம் போன்ற எதையும் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததில்லை. பணம் குறித்த வெறித்தனமும் மனதில் தோன்றவும் இல்லை. மக்கள் பெரும்பான்மையாக நம்பும் இந்தப் பணம் சார்ந்த கொள்கையைப் புறக்கணித்தே வந்த காரணத்தால் இன்று வரையிலும் நான் பிறந்த குடும்பமும் சரி, மனைவி வழி சொந்தங்களின் பார்வையிலும் இன்று வரையிலும் "அந்நியன்" போலவே தெரிகின்றேன்.

தொழில் சார்ந்த விசயங்களில் அதிர்ஷ்டம் என்ற தேவதை தூரத்தில் இருந்தபடியே தான் கவனிக்கும். ஆனாலும் தேவையான ஒவ்வொன்றும் அந்தந்த சமயங்களில் கிடைத்துவிடும். வீட்டில் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் கேள்வி கேட்கும் வாழ்க்கை வாழ்ந்தாலும் என்னைக் கேலியாகப் பார்க்கும் வாழ்க்கை அமையாமல் இருந்தது தான் என் அதிர்ஷ்டம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்தவர்கள், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் 90 சதவிகித மனிதர்கள் எவருமே வெற்றியாளர்களாக வாழ்ந்தது இல்லை. இங்கு நான் வெற்றி என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது அவரவர் அடிப்படைத் தேவைகளைப் போராட்டமின்றி இயல்பாகப் பெறுதல். இதற்கு மேலாகத் தாங்கள் உழைத்த உழைப்புக்கு உண்மையிலேயே கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம். ஆனால் இவை இரண்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் 10 சதவிகித மக்களுக்குக் கிடைத்து இருந்தால் கூட அது ஆச்சரியமாக உள்ளது. ஏன் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சூழ்நிலைகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இங்கு தான் "என் கதை" என்ற வார்த்தைகளும், "என்னைப் பற்றி" என்ற சுயதேடலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இங்கு எவரும் தன்னைப் பற்றி முழுமையாக எழுத விரும்புவதில்லை. இதன் காரணமாக முக்கியப் பிரபல்யங்கள் எவருமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விரும்புவது இல்லை. ஆனால் தம்பி குமார் என்னிடம் கோரிக்கை வைத்த "அண்ணா உங்களைப் பற்றி எழுதுங்கள் " என்ற வாசகம் அடங்கிய மின் அஞ்சலை வாசித்த போது நேர்மையாக நம்மால் எழுத முடியுமா? என்று யோசித்தே பல வாரங்கள் கடந்து விட்டது.

கடந்த பத்தாண்டுகளாக எழுதும் ஆர்வம் வந்த பிறகே எங்கள் குடும்பப் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன தான் நான் வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டினாலும் ஒவ்வொரு இடத்திலும் என் குணாதிசியங்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதனை மறுக்க முடியாது. இதன் காரணமாகவே என் முந்தைய தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

உறவினர்களை ஒவ்வொரு விசேட நிகழ்ச்சியில் சந்திக்கும் போதெல்லாம் நான் பல கேள்விகள் எழுப்புவதுண்டு. ஆனால் எவரும் முழுமையான தகவல்களைப் பரிமாறத் தயாராக இல்லை. காரணம் அவர்களுக்கு அது குறித்த ஆர்வமும் இல்லை. வாழ்ந்து மறைந்தவர்கள் எவருமே சிறப்பான செயல்களைச் செய்தவர்களாகவும் இல்லை. இதற்கு மேலாக நம்மவர்களுக்கு வரலாறு என்பது பிடித்தமானதாக இல்லை. கசப்புகள் என்பதனை மறக்கவே விரும்புகின்றார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்கப் போராட்டத்துடன் தான் வாழ்ந்து முடித்து மறைந்துள்ளார்கள்.

நவீனங்கள் ஆட்சி செய்யும் தற்காலத்தில் கூட வாசிப்பு ஆர்வம் என்பதே 90 சதவிகித மக்களுக்கு இல்லை என்பதோடு இதெல்லாம் தெரிந்து உனக்கு என்ன ஆகப் போகுகிறது? பிழைக்கிற வழியைப் பார்? என்ற ஒரு பதிலைத்தான் அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற் போலச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றார்கள். சரி, நாம் தான் தவறான விதமாக யோசிக்கின்றோம்? இவர்கள் பணம் சார்ந்த விசயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் நினைத்த வசதிகளை அடைந்துள்ளார்களா? என்று கேள்வி கேட்டால் அதிலும் முழுமையான தோல்வியைத் தான் தழுவியுள்ளார்கள். ஆக மொத்தத்தில் பணத்தைப் பற்றி மட்டும் யோசித்து, அதன் பின்னாலே அலைந்து அத்தனை பேர்களும் நிராசையுடன் தான் மறைந்துள்ளார்கள்.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே என்னைப் பற்றி யோசித்த போது என் தலைமுறைகளைப் பற்றி நான் அறிந்த தகவல்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். அதன் பிறகே என் சமகால வாழ்க்கையைக் கோர்த்து வைக்க முடியும் என்று நம்புகின்றேன்.

தாத்தாவின் அப்பா பெயர் ரெங்கசாமி. அவரைப் பற்றி எந்தத் தகவலையும் என்னால் திரட்ட முடியவில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன். அவர் பெயரோ, அவர் பின்புலம் குறித்தே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை என்பதில் இருந்து குடும்பச் சங்கிலி தொடங்குகின்றது. இவர்கள் முந்தைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கீழ் உள்ள மடத்துப்பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளார்கள். அடிப்படை விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். தாத்தாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரியுடன் மடத்துப்பட்டியில் வாழ்ந்து வந்தாலும் பஞ்சம் பிழைப்பது போல நான் பிறந்த புதுவயல் கிராமத்திற்குத் தாத்தா மட்டும் தன் மனைவியுடன் இடம் பெயர்ந்துள்ளார். இந்தக் கிராமம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய ஊர் காரைக்குடி.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து விட்டார். இவருடன் ஒரு வருடம் நெருங்கிப் பழகியுள்ளேன். ஆனால் இவர் எவருடனும் ஒட்ட மாட்டார். இவர் பெயர் சுப்பையா. இவர் என்னுடன் பழகியதற்கு முக்கியக் காரணம் பள்ளிவிட்டு வந்ததும் இவருக்கும் தினந்தோறும் மாலை சிற்றுண்டி கொண்டு போய்க் கொடுக்கச் செல்வேன். அப்போது அவரைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் பற்றியும் குற்றச்சாட்டாக வைக்கும் பல விசயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இனிப்புப் பட்சணத்தை வாங்கித் தின்று விட்டு வந்து விடுவதுண்டு. அப்போது இவர் யார்? இவர் பின்புலம் என்ன? என்பதெல்லாம் கேள்வி கேட்கத் தெரிந்ததில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இல்லை.

கிராம பின்புலத்தைக் கொண்டு வளரும் சிறுவர்களுக்கு என்ன தான் பத்திரிக்கைகள் வாசித்தாலும் வெளியுலகத்திற்கும் அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளுக்கும் எப்போது ஒரு பெரிய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான் என் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரைக்கும் எனக்கும் இருந்தது. நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நெறிப்படுத்த எவரும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல் வாசிப்பு என்பது வெறித்தனமான ஆர்வமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்து முடித்துப் புதிய புத்தகங்கள் எப்போது வரும்? என்று நூலகரிடம் கேட்கும் அளவிற்கு வாசிப்பு என்பது உயிர்மூச்சு போல என்னுள் இருந்தது.

கல்லூரி சென்ற போதும், சென்னையில் ஒரு வருடம் வாழ்ந்து பின்னர்த் திருப்பூர் வந்து சேர்ந்து 25 வருடங்கள் முடிந்த போதும் இன்னமும் அடிப்படைச் சிந்தனைகள் கிராமத்துவாசியாக உள்ளது. இந்த இடத்தில் தான் அவரவர் வாழ்ந்த குடும்பத்தின் தாக்கம் பங்கு பெறுகின்றது.

காரணம் என் இன்றைய குணாதிசியங்கள் எங்கே இருந்து தொடங்கியது என்றால் அடிப்படையில் தாத்தாவின் மரபணுவில் தொடங்கி அப்பாவின் மரபணு ஆழப்பதிந்து இன்று உன்னால் இதற்கு மேல் உன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்கிற வரைக்கும் வந்து நிற்கின்றது.

தாத்தா புதுவயல் கிராமத்தில் வந்து சேர்ந்து கையில் வைத்திருந்திருந்த பணத்தை வைத்து சிறிய சிறிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். என் பாட்டியைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. அவர் வாழ்வில் நடந்த சில ஆச்சரியமான சம்பவங்கள். என் தாத்தாவிற்கு அவரின் கடுமையான முயற்சியின் பலனாகப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் கடைசியில் மூன்று ஆண் குழந்தைகள் மட்டும் மிஞ்சியது. அதிலும் ஒரு சுவராசியம் என்னவென்றால் முதலாவது, இரண்டாவது குழந்தைகள் குறுகிய காலத்தில் இறந்து விட மூன்றாவதாக இவர்கள் ராமேஸ்வரத்தில் கடலில் நின்று மடிப்பிச்சை ஏந்தி இந்தக் குழந்தை தங்க வேண்டும். உன் பெயரை வைக்கின்றோம் என்று சொல்லி பிறந்தவர் இராமநாதன். இவர் தான் என் அப்பா. அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடக் காசியில் போய் வேண்டு கொள் வைத்துப் பிறந்தவர் சித்தப்பா காசி விஸ்வநான். அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடத் திருவண்ணாமலை போய் வேண்டுகோள் வைத்துப் பிறந்தவர் கடைசிச் சித்தப்பா அண்ணாமலை. மூன்று பேர்களும் கடைசி வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தார்கள். மூன்று பேர்களும் இப்போது இல்லை.

இந்தச் சுவராசியத்தை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த போது வேறு சில தகவல்கள் கிடைத்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர்கள். பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது. ஆறு ஆண்கள். ஆறு பெண்கள். இயற்கை சரியாக அதன் வேலையைச் செய்துள்ளது?

அதே போலக் கடைசிச் சித்தப்பாவுக்குப் பத்துக் குழந்தைகள். இவர்கள் இருவரும் தன் அம்மா சொன்ன வாக்கின்படி எக்காரணம் கொண்டு "கருத்தடை மட்டும் செய்யக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் அயராது பாடுபட்டு ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கினார்கள். நடுவில் உள்ள சித்தப்பா மட்டும் "போங்கடா நீங்களும் உங்க சபதமும் " என்று வேறுபக்கம் ஒதுங்கி விட இரண்டு ஆண் குழந்தைகளுடன் தப்பித்து விட்டார்.

இதே போல அம்மாவின் குடும்பத்திலும் மற்றொரு சுவராசியம் உண்டு. அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மற்ற அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டனர். அம்மா ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார். பாட்டி (அம்மாவின் அம்மா) பயந்து கொண்டு 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் மூத்த அண்ணன் பிறந்த போது அம்மாவின் வயது 18.

இன்று வரையிலும் அம்மாவிடம் (அப்பாவின் அம்மா) பாட்டியைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் பூரிப்போடு பலவற்றைச் சொல்வார். ஆனால் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் பற்கள் நறநறக்கும். காரணம் அப்படிப்பட்டவர் தாத்தா?

இன்று சாதி என்ற வார்த்தைகளை வெறுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் இந்தச் சாதி என்ற கட்டமைப்பு பல குணாதிசியங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் செய்யும் தொழில், அவர்கள் சார்ந்த உறவு முறைகளின் பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாய வழிபாட்டு முறைகள் எனக் கலந்து கட்டி குறிப்பிட்ட குணாதிசியங்களை உருவாக்கியதாக இருக்கும். இது சரி? தவறு? என்ற வாதத்திற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் செட்டியார் என்ற சமூகம் என்பது எதிலும் முரட்டுத்தனம் காட்டாத அமைதி வாழ்க்கையை விரும்பக்கூடிய சமூகத்தைக் கொண்டவர்கள் கொண்ட வாழும் அமைப்பு. ஆனால் தாத்தாவின் குணம் நேர்மாறானது. அப்பட்டமான முரடன். அதுவும் நான் நினைப்பது நடக்காவிட்டால் திரைப்படங்களில் பார்ப்பது போலக் குறிப்பாகப் பெண்கள் மேல் அதீத வன்முறை பிரயோகம் தான். அடித்தவர் மயக்கம் வந்து சாய்ந்தபிறகே அவர் சாமியாட்டம் நிற்கும். மூன்று பையன்களையும் அப்படித்தான் வளர்த்தார். அதற்கு மேலாகத் தன் மனைவியையும் அப்படித்தான் வைத்திருந்தார். இவருக்கு இந்தக் குணாதிசியம் உருவாகக்காரணம் என்ன? என்று அம்மாவிடம் கேட்ட போது "அந்த முரடனைப் பற்றிக் கேட்டு மேலும் மேலும் என் கோபத்தைக் கிளறாதே?" என்று முடித்து விட்டார். தாத்தாவின் முரட்டுத்தனம் எந்த அளவுக்கு நீண்டு இருந்தது தெரியுமா? என் பாட்டி இறப்பதற்கு முன்னால் வாழ்ந்த கடைசி ஐந்து வருடங்கள் மனநலம் பிறழ்ந்து இறக்கும் தருவாயில் தான் இருந்துள்ளார்.

அவர் மனநலம் பிசகி இருந்த போது நான் இரண்டு வருடக்குழந்தை. அம்மா கொல்லைப்புறத்தில் வேறேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாட்டி என்னைத் தூக்கிக் கொண்டு அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடுவில் என்னைப் படுக்க வைத்துக் கொண்டு ரயில் வந்தவுடன் உனக்குக் காட்டுகின்றேன் என்கிற அளவுக்கு இருந்துள்ளது. அந்தப் பக்கமாக ஆடு மேய்க்க வந்தவர்கள் பாட்டியை இழுத்துக் கொண்டு என்னையும் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துள்ளார்.

இதனையும் தாண்டி பாட்டி கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்குக் காரணம் என் அம்மா வரிசையாகப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள். பேரக்குழந்தைகள் மேல் அலாதியான ஈடுபாடு. கணவரிடம் கிடைக்காத அத்தனை பிரியங்களையும் ஒவ்வொரு குழந்தைகள் மேல் திகட்ட திகட்டப் பகிர்ந்துள்ளார். இதே போல அம்மாவின் அம்மாவிற்கும் தனது பேரக்குழந்தைகள் மேல் அதிக ஈடுபாடு. காரணம் இரண்டு பாட்டிகளும் குழந்தைகள் என்பதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுக்கப் பணயம் வைத்திருந்த அபாக்கியசாலிகள்.

தாத்தாவின் குணாதிசியம் அவர் பெற்ற பையன்களில் இரண்டு பேருக்கு வந்து விட்டது. அப்பாவும், இரண்டாவது சித்தப்பாவும் அக்மார்க் முரடன்கள். அவரவர் மனைவிகள் பட்ட பாடுகள் அதுவொரு தனிக்கதை. குறிப்பாக என் அம்மா மூத்த மருமகள் என்ற பெயரில் அவர் உழைத்த உழைப்பு என்பது இன்றைய பெண்கள் உழைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் பத்துப் பெண்கள் செய்ய வேண்டிய வேலைக்குச் சமமாகவே இருக்கும்.

தாத்தா என் கணக்குப்படி அடிப்படைக் கல்வி அதாவது எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் அப்போது பள்ளி இல்லாத காரணத்தால் அருகே உள்ள கண்டனூரில் தான் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் படித்துள்ளார்கள். மூன்று பேர்களுமே படிப்பில் சுமார் ரகம் தான். பத்தாம் வகுப்பை முடித்து விட்டு ஆளை விட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டார்கள். ஆனால் அப்பா தலையெடுத்தபிறகு தான் கடைகள், வயல்கள், சொத்துக்கள் என்று விரிவாக்கம் நடந்ததுள்ளது. 200 மடங்கு உழைப்பாளி. அதே சமயத்தில் தாத்தா போல முரட்டுத்தனம். எடுத்தவுடன் கை வைப்பது தான் அவர் கொள்கை. நான் பள்ளிக்கூடம் முடிக்கும் வரையிலும் பசுமாடு, காளைமாடு, ஆடு என்று பிராணிக்கூட்டம் ஒரு பக்கம், இவர்களைக் கவனிக்க வேலையாட்கள் மற்றொரு பக்கம், இதைத்தவிர வயல்வேலைகளுக்கு ஒரு கூட்டம், கடை வேலைகளுக்கு என்று வேலையாட்கள் கூட்டம். இது தவிர வருடந்தோறும் வந்து கொண்டிருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை. கூட்டுக்குடித்தனம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அம்மா எப்படி இத்தனைக்கூட்டத்தையும் சமாளித்தார் என்று வியப்பாகவே உள்ளது. காலை, மதியம், இரவு மூன்று வேலையும் குறைந்தபட்சம் 40 பேர்களுக்காவது அடுப்பு எறிந்து கொண்டேயிருக்கும். வெள்ளிக்கிழமை தவிர அத்தனை நாட்களும் அசைவம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தது.

பக்தி, ஒழுக்கம், உழைப்பு இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தில் நான் இவர்களின் குணாதிசியத்தில் இருந்து வெளிவர 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. என்னுடன் பிறந்து ஆறு சகோதரிகளும் இன்று வரையிலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கூடப்பிறந்த ஐந்து சகோதரர்களும் தெளிவான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அடிப்படைப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிகப்படியான ஆசைகளையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. பட்டதாரிகள், முதுநிலைக்கல்வி என்று அப்பா தன் அடிப்படைக்கடமைகளைத் தெளிவாகவே செய்துள்ளார். எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் என்னைத் தவிர வேறு எவருமே வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என்று பயணப்பட்டதில்லை. உள்ளுருக்குள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொண்டவர்கள். வெளிநாடுகள் வரைக்கும் அலைந்து திரிந்த எனக்கு அவர்களின் எண்ணங்கள் ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கே என்னைப் பார்க்கும் போது ஆதங்கமாகத் தெரியும்.

முந்தைய தலைமுறைகள் போலத் தங்கள் உலகம் என்பது தாங்கள் வாழும் பகுதிக்குள்ளேயே முடிந்து விடும் என்று இன்றுவரையிலும் ஆழமாக நம்பிக் கொண்டு இருப்பவர்கள். இந்த ஒரு குணாதிசியமே இவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய அகழியை உருவாக்கிப் பிரித்து வைத்துள்ளது. நான் எவருடனும் நான் அதிகம் ஒட்டுவதில்லை. அதே சமயத்தில் விலகி நிற்பதுமில்லை. தேவைப்படும் சமயங்களில் தலையைக் காட்டிவிட்டு நகர்ந்து வந்து விடுவதுண்டு. எனக்கு முன்னால் என்னைப் பற்றி எவரும் பேசவே பயப்படுவார்கள். காரணம் தாத்தா, அப்பாவிடம் எனக்கு மட்டும் வந்து சேர்ந்த அந்த முரட்டுத்தன ஜீன் மூலக்கூறு.

தாத்தா, அப்பாவைப் பற்றிப் பேசிய போல இரண்டு பாட்டிகள் மற்றும் என் அம்மாவைப் பற்றிச் சொல்ல சில வார்த்தைகள் சில உண்டு. மூன்று பெண்களுமே அக்மார்க் உச்சகட்ட பிடிவாதம் கொண்டவர்கள். கணவன் என்பவன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவன் என்ற அவர்களின் அடிப்படைக் கொள்கை அடிவாங்க அவர்களின் மாற்ற முடியாத பிடிவாதங்களை ஆண்வர்க்கம் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி உள்ளனர். இயற்கையிலேயே தாய்வழி சமூகமாக இருந்த அமைப்பு இன்று தந்தைவழி ஆதிக்கச் சமூகமாக மாறினாலும் இன்று என் மனைவி வரைக்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே விரும்புகின்றார்கள்.

மேலே சொன்ன இரண்டு தலைமுறைகளின் மொத்த குணாதிசியங்கள் என்னிடமும் இருந்தது. இவர்கள் தங்கள் ஆளுமையை வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம் மட்டும் தான் காட்டியுள்ளனர். நான் பள்ளி முதல் திருப்பூர் வாழ்க்கையின் முதல் பத்து வருடங்கள் வரைக்கும் வெளி இடங்களிலும் எதற்கும் அஞ்சாத கலகக்காரனாகவே இருந்துள்ளேன். திருப்பூர் வாழ்க்கையில் தொடக்கக் காலத்தில் என் குடும்பத்தைச் சம்மந்தப்படுத்தித் தவறாகப் பேசிய முதலாளியைத் துணி வெட்டப் பயன்படுத்தும் கத்திரி மூலம் குத்தப் பாய்ந்துள்ளேன். உடன் பணிபுரிந்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை என் மேல் சுமத்தி தப்பிக்கப் பார்த்த போது வெளுத்து வாங்கியுள்ளேன். நேர்மைக்கு மதிப்பு இல்லாத தொழில் நகர வாழ்க்கையில் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அத்தனை அழுத்தங்களும் உள்ளே வன்முறையாக மறைந்து இருந்ததை உணர்ந்து என்னை மாற்றிக் கொள்ள நிறையவே பிரயாசைப்பட்டுள்ளேன்.

இதன் காரணமாகவே குடும்பம் என்பதும், பெண்களை நமக்குக் கையாளாத் தெரியாது? என்ற பயத்தின் காரணமாகவே திருமணம் என்பது கூட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். அப்பா இறப்பும், குடும்பத்தினர் என்னால் படக்கூடிய துயரங்களும் மனதில் வலியை உருவாக்க 33 வயதில் குடும்பத்தினர் பார்த்து வைத்திருந்த வசதியான அழகான பெண்களைப் புறந்தள்ளி இயல்பான என் குணாதிசியத்தை மாமனாரிடம் தெரியப்படுத்தித் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தேன். என் நான்காவது அக்கா மூலம் பார்த்த வரன் இது. குடும்பத்தினர் இன்னும் சிறப்பான வசதிகளைக் குறிப்பாக அரசு பதவியில் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அவர்கள் விருப்பங்களை மீறியே செயல்பட்டேன்.

என் விருப்பப்படி, என் கட்டளைப்படி தான் மனைவி இருக்க வேண்டும் என்ற முரட்டுத்தனம் எனக்குப் பல இழப்புகளைத் தனிப்பட்ட பொருளாதார வாழ்க்கையில் உருவாக்கினாலும் இன்று மூன்று குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து விசயங்களும் மற்ற குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எதிர்பார்த்தற்கு மேலே நிறைவாக மனைவி மூலம் கிடைத்துள்ளது.

மனைவியைப் பற்றி எல்லாக் கணவர்களும் அவர் இறந்த பின்பு தான் பிரிவு சோகம் தாங்காமல் எழுத்துலகில் பகிர்கின்றனர். ஆனால் என் மனைவி ஒரு வகையில் பரிதாபப்பட வேண்டிய ஜீவன். காரணம் கடைசிக் குழந்தையாக அவர்கள் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் எது குறித்த அக்கறையும், கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர். என்னுடன் வாழத் தொடங்கியதும், அடுத்தடுத்துக் குழந்தைகள் வந்து சேர உழைக்க வேண்டிய உழைப்பும், அவருக்குள் இருக்கும் இயல்பான சோம்பேறித்தனமும் ஒன்றை ஒன்று கேள்விக் கேட்கத் தொடங்கி விட்டது?

என் மனைவியும் நான் பிறந்த குடும்பத்தைப் போலவே சில விசயங்களில் வாழ விரும்புவர். வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்பவர். உலக நியதிகளை மீறி வாழ விரும்புவனுடன் வாழ்க்கைத் துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அது தான் திருமணமான தொடக்கத்தில் நடந்தது.
ஆனால் இரட்டைக்குழந்தைகள் மற்றும் அடுத்த வருடமே அடுத்தக் குழந்தை என்று வந்ததும் நிறையவே தடுமாறிவிட அத்தனை இடங்களிலும் நானே தாயுமானவன் போல இருந்தேன். அவரால் சமாளிக்க முடியவில்லை என்ற போதும் அத்தனை பாரங்களையும் நானே சுமந்தேன்.

காரணம் தொழில் வாழ்க்கை அழுத்தங்கள், நேர்மைக்குக் கிடைக்காத மரியாதை, தொழில் நகர மனிதர்கள் உருவாக்கிய வெவ்வேறு விதமான குணாதிசியங்கள் என்று அனைத்தும் என்னை அழுத்திக் கொண்டே இருக்க அனைத்தையும் இனம் பிரிக்கத் தெரியாமல் தோல்விகளையும், இழப்புகளையும் அவர் மேல் காட்ட முட்டல், மோதல் என்று வாழ்க்கை ரணகளமாக மாறியது. குழந்தைகள் வளர வளர என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். இன்று நம்பமுடியாத அதீத திறமைகள் கொண்ட குழந்தைகள் கொடுக்கும் அடியையும், வார்த்தைகளுக்கும் பயந்து கொண்டு அப்பா என்ற என் பதவியைக் காப்பாற்ற அப்பாவியாக மாறிப் போனது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.

கடந்த பத்தாண்டுகளாக முதலாளிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி மற்றும் அதற்கேற்ற வசதிகள். ஆனால் நான் முதலாளியாக மாற முயற்சிக்கவே இல்லை. காரணம் முதல் தலைமுறை அல்லது இரண்டாவது தலைமுறை என்று எவராக இருந்தாலும் தொழிலதிபர் என்பது எளிதானது அல்ல. பணம் சார்ந்த எண்ணங்களில் உள்ள தீவிரம் தான் உங்களை வேலைக்காரனாக அல்லது முதலாளியாக மாற்றுகின்றது என்று உறுதியாக நம்புகின்றேன். நமக்கு எத்தனை ஆசை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இயற்கையான சுபாவம் பலவற்றுக்கு ஒத்துழைக்காது. எனக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதற்குப் பின்னால் உள்ள நிதர்னம் புரிந்தது.

திருப்பூரில் உள்ள அத்தனை முதலாளிகளும் முதல் தலைமுறை தொழிலதிபர்கள். அவர்கள் தலைமுறையில் பணம் ,வசதி வாய்ப்புகள் என்பதனையே இந்தத் தலைமுறையில் தான் பார்க்கின்றனர். ஒரு தொழில் விரிவாக்கத்திற்கு இரண்டு முக்கிய விசயங்கள் தேவை. ஒன்று போட்டியில் வெல்லும் அளவிற்கு நிர்வாகத்திறமை மற்றும் குழுவினர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு. இரண்டாவது தனக்குச் சமமாக எவரையும் வளர விடாமல் தடுப்பது. இரண்டாவது தான் திருப்பூர் தொழிலில் நடந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் கூட இங்கே நேர்மையான முறையில் தொழில் செய்து வளர்ந்தவர்கள் இல்லை. தொழில் கொள்கைகள் என்பது மனித இரத்தங்களைச் சுவைக்கும் மனப்பான்மைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று புரியத் தொடங்கிய போது என் பண வேகம் குறைந்து மன வேகத்தை என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன்.

மேலும் என் தொழில் வாழ்க்கையில் நிர்வாகம் சார்ந்த விசயங்களில் எதற்குமே அஞ்சாத குணமென்பது ஒவ்வொரு சமயத்திலும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியுள்ளது.

பத்துப் பேர்கள் எதிரியாக மாறி என் வீழ்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் யாரோ ஒருவர் என்னிடம் உள்ள நேர்மையான குணாதிசியத்தைக் கண்டு உதவியுள்ளனர். அது நம்பமுடியாத அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவியுள்ளது. என்னுடன் பணிபுரிந்தவர்களில் 90 சதவிகித பேர்கள் இப்போது எவருமே திருப்பூரில் இல்லை. அவர்கள் அத்தனை பேர்களும் சமய சந்தர்ப்பங்களை அப்போதைய சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள். ஆனால் சூழ்நிலையை விட ஒழுக்கத்தையும், நேர்மையையும் நம்பிப் பயணப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் காயம்பட்டு வளர்ந்தேன். இது இன்றைய என் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஒவ்வொரு சமயத்திலும் ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர்கள் கொண்ட அமைப்பை கண்ணசைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. வாழ்வின் தொடக்கம் முதல் என்னைச் சுற்றி சகோதரிகள் அதிகம் இருந்த காரணத்தால் திருப்பூரில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னுடன் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மேல் மயக்கம் உருவானது இல்லை. இயல்பாகவே பெண்கள் என்னிடம் நெருங்க முடியாத நபராக என் குணாதிசியம் இருந்த காரணத்தால் ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் என் வளர்ச்சிக்கு உதவியது. காரணம் திருப்பூரில் பெண்கள் என்பது எளிதான விசயமாகும்.

ஆனாலும் நான் எவருடனும் அதிகம் ஒட்டுவதில்லை. காரணம் என் அம்மா என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும் வாசகத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். "நான் பெற்ற 12 லேயும் அதிகப்படியான திறமைசாலி நீ தாண்டா? வீணாய்ப் போன புத்திசாலி நீ மட்டும் தாண்டா?"

என் அம்மாவுக்கு வாழ்க்கை என்பது நான் சேர்த்து வைத்துள்ள சொத்தில் அடங்கியுள்ளது. ஆனால் எனக்கோ என் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. காரணம் எனக்குப் பின்னால் பிறந்தவர்கள் கூடப் பலவிதமான நோய்களில் தடுமாறுகின்றார்கள். எனக்கே என் பசியை அடக்க முடியாமல் மனைவியின் திட்டுதலை (தற்போது குழந்தைகளின் மிரட்டலை) பொருட்படுத்தாமல் ருசியான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வாழ்கிறேன்.

 -ஜோதிஜி
******

மிக விரிவாய்... தெளிவாய்... இனி எழுத இருப்பவர்களை தன்னைப் பற்றி சுய தேடல் செய்ய வைக்கும்படியான எழுத்தாய்... மூன்று தலைமுறையையும் முரட்டுத் தனங்களையும் சொல்லிய மிகச் சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா... கேட்டதும் தங்கள் வேலைகளுக்கு இடையே விரிவாய் எழுதிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

சொல்ல மறந்துட்டேன்... சென்ற வாரம் இரட்டை சதம் அடித்து நாட் அவுட்டாக இன்றும் நின்று ஆட வைத்த பிரபல பதிவர்கள் எல்லாம் இங்கும் அடித்து ஆடுங்க மக்களே....

அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்....

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 19 மார்ச், 2017மனசின் பக்கம் : நெருப்புக்கு அறிமுகம் வேண்டுமா..?

"நெருப்புடா...!"
வெள்ளிக்கிழமை இரவு ஊருக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது எங்கள் தளத்தில் 'தீ... தீ...' எனக் குரல்கள். அறை நண்பர் ஓடிப்போய் என்னவென பெங்காளியிடம் கேட்க, அவன் கட்டிடத்தில் தீ பிடிச்சிருக்கு... வேகமாக இறங்கி வாங்க எனக் கத்தியபடி ஓட, எல்லாரும் வேகவேகமா மொபைலை எடுத்துக் கொண்டு கிளம்ப நான் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் பேக்கைத் தூக்கிக் கொண்டு... மனைவியிடம் விவரம் சொல்லி... அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்லிட்டு நாலு மாடி படியிறங்கி கீழே வந்தா... காவல்துறை தீயணைப்பு வண்டி நிக்குது....

கட்டிடம் முழுவதும் கருகல் வாடை நிரம்பியிருந்தது... ஆஹா... இன்னைக்கு நம்ம உயிர் பிழைச்சிக்கும்... உடமைகள்...? என்று யோசித்து வாசலுக்குப் போயி, எந்தத் தளத்துல.... எதனால தீ பிடிச்சதுன்னு விசாரிச்சா... எவனோ ஒருத்தன் சிகரெட்டைப் பிடிச்சிட்டு குப்பை போடுற வழியில அதை அணைக்காமல் தூக்கிப் போட, அது நேராக சேர்ந்திருந்த குப்பைகளில் விழுந்து அதனால் தீப் பிடித்திருக்கிறது... அட நாதாரிகளான்னு திட்டிட்டு லிப்டைப் பிடித்து மேலே ஏறி வந்து மனைவிக்கு விவரம் சொல்லி.... இல்லேன்னா அவர் தூங்க மாட்டாரே...

Image result for அபுதாபி தீ விபத்தி
(துபாய் ஹோட்டலில் சில மாதங்களுக்கு முன் நெருப்புப் பிடித்த காட்சி)
வியாழன் இரவே மதுவில் நீந்த ஆரம்பிக்கும் மனிதர்கள் இங்கு அதிகம்... அவர்களாலேயே பிரச்சினைகளும் அதிகம். வார விடுமுறை என்பது மதுக் குடிப்பதற்கான நாளே என்பதை எல்லா நாட்டுக்காரனும் முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... மது விற்பனை வார விடுமுறையில் படு ஜோர்... கருப்பு கவருக்குள் பாட்டில்களைச் அள்ளிச் செல்லும் ஆண்களும் பெண்களும் அதிகம்.

'ஓடியாங்க... ஓடியாங்க'ன்னு சொன்னதும் நண்பர் ஒருவர் கைலியோடு ஓட, மற்றொரு நண்பரோ ஊருக்குப் பேசியபடி ஓட, நான் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் இருந்ததால் பேக்கை எடுத்துக் கொண்டு ஓட, போலீஸ் மேலே வந்தால் பிரச்சினை என்பதால் தண்ணிப் பாட்டிலை (ரம்) கவரில் போட்டு கட்டிலுக்கு கீழே ஒளித்து வைத்துவிட்டு..  மற்றொரு நண்பர் ஓடி வர, என ஓடித் திரும்பி அறைக்கு வந்ததும் அவசரத்தில் டீசர்டை திருப்பிப் போட்டுக் கொண்டு ஓடியதையும், அந்த ரணகளத்திலும் தண்ணிப் பாட்டிலை பாதுகாத்து வைத்ததையும்... சிகரெட்டைத் தூக்கி குப்பையில் போட்டதையும் சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்.

ஆம் சிரித்தோம் என்றாலும் அந்த சிகரெட் விளைவித்த சிறு நெருப்பு மிக வேகமாக பரவியிருந்தால்... எங்கள் கட்டிடம் பழுது பார்க்கப்பட்ட பழைய கட்டிடம் என்பதுடன் ஒரு தளத்தில்... நாலு வீடுகள்... ஒவ்வொன்றிலும் நாலு அறைகள்... மொத்தம் 16 அறைகள்... அறைக்கு ஒரு சிலிண்டர் என்றாலும் தோராயமாய் 16... மொத்தம் எட்டு மாடி.... கணக்குப் பண்ணுங்க.... ஆட்கள் சேதாரமில்லாமல் தப்பினாலும் பொருட்கள் எல்லாம் போகும்... அதனால்தான் நான் சான்றிதழையும் பாஸ்போர்ட்டையும் எனது பேக்கிலேயே வைத்திருப்பது... எது போனாலும் பொழப்புக்கு சான்றிதழும் ஊருக்குப் போக பாஸ்போர்ட்டும் வேணுமில்ல.

"என்னைப் பற்றி நான்"
டந்த வாரம் ஏஞ்சலின் அக்கா எழுதிய 'என்னைப் பற்றி நான்' பகிர்வில் மதுரைத் தமிழன் அண்ணா, நிஷா அக்கா,  ஆதிரா அக்கா, கீதா அக்கா  மற்றும் பலருடன் ஏஞ்சலின் அக்காவும் கருத்துக் களத்தில் கலக்க, இத்தனை வருடத்தில் முதல் முறை கருத்தில் சதம் அடித்து 195 நாட் அவுட்டாக களத்தில் நிற்கிறது பகிர்வு. அனைவருக்கும் நன்றி சொல்லிக்கிற நேரத்தில் ஒவ்வொரு பதிவரையும் இதே போல் உற்சாகப்படுத்துங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
"கதை"
தை எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்போது தூங்கிருச்சு.... கடந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு கதைதான் எழுதினேன். சென்ற வாரத்தில் நான் மதிக்கும் அண்ணன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு... கதை எழுது என... முயற்சித்தால் எதுவும் தோணலை... அப்புறம் நண்பன் தமிழிடம் 'என்னடா இது சோதனை... ஒரு கதை எழுத முடியலை' என்று சொல்ல... 'போய்த் தூங்கு' என்று திட்டினான். சில கதைகளை மாற்றி அவர் கேட்டபடி கொடுக்கலாம் என்று முயற்சித்து அதுவும் சரிவராமல் மீண்டும் அவனிடம் புலம்ப, 'மூதேவி... நீ எப்பவும் எழுதுற மாதிரி எழுது... அதை மாற்றினேன்... இதை மாற்றினேன்னு... உன்னோட பாணி எழுத்துத்தான்டா நல்லாவரும்' அப்படின்னு மறுபடியும் அர்ச்சனை... வியாழனன்று அலுவகத்தில் பணியில்லை... மெல்ல ஆரம்பித்தேன்.... மெல்ல மெல்ல எழுதி... அழித்து.... மாற்றி.... இப்படியே எப்பவும் போல் கதையின் போக்கில் பயணித்து மாலைக்குள் முடித்துவிட்டேன். ரொம்ப நாளைக்குப் பிறகு மனநிறைவாய் ஒரு கதை... அது எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சர்யமில்லை.... ஏன்னா நான் எழுதும்... நானல்ல நாம் எழுதும் எதுவுமே நமக்குச் சிறப்பானதுதான் இல்லையா... என்னது கதை குறித்துச் சொல்லலையா... அது சஸ்பென்ஸ்... அந்த சஸ்பென்ஸை விரைவில் உடைப்போம்.

"அறிமுகம் தேவையா?"
ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' உங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த ஒன்றாக... இனி எழுத இருக்கும் நண்பர்கள் இன்னும் சிறப்பாக எழுத ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதால் தவறாது வாசியுங்கள்... மிக நீண்ட பகிர்வாய் வர இருக்கிறது. இனி வரும் வாரங்களில் அடுத்த வார என்னைப் பற்றி நான் குறித்து முதல் வார பகிர்வின் முடிவில் ஒரு சிறு அறிமுக விளம்பரம் கொடுத்திடலாமா... இல்லை இப்போது போல் சஸ்பென்ஸாகவே வெளிவிடலாமா.. எனக்கு சஸ்பென்ஸாக வைத்திருந்து வெளியிடுவதுதான் சரியெனத் தோன்றுகிறது... தங்கள் எண்ணம் எதுவாகினும் சொல்லுங்கள்.... செயல்படுத்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 15 மார்ச், 20179. என்னைப் பற்றி நான் - ஏஞ்சலின்

ன்னைப் பற்றி நான் பகுதி வாராவாரம் ஆராவாரமாகச் சென்று கொண்டிருக்கிறது. கேட்டதும் எழுதி அனுப்புவதும் தாங்களே மின்னஞ்சல் பண்ணி நான் இந்த வாரம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்புவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த வாரம் ஆராவாரமாய்... அருமையாய்... தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஏஞ்சலின் அக்கா. இவரின் வலைப்பூவில் கருத்து இடுவது... அதுவும் நான் எப்படி கருத்திடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்... வாசித்தேன் என்பதை தெரியப்படுத்த ஒரு வார்த்தை / ஒரு வரி கருத்து மட்டும்தான் இடுவேன். அப்படியான ஒரு நட்புத்தான் இவரிடம்... நான் மலையாளப் படங்கள் குறித்து பகிரும் போது என் தளம் வந்து கேட்டு படங்களைப் பார்த்த சிலரில் அக்காவும் ஒருவர் அவ்வளவே. 

என்னைப் பற்றி நான் பகுதிக்கு எழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதும் விரைவில் அனுப்புறேன் என்ற பதில் மின்னஞ்சல் வந்தது. அதன் பின் இரண்டு மூன்று நாளில் எழுதியும் அனுப்பிவிட்டார். இனி இரண்டு வலைப்பூக்களில் எழுதும் அவர், அவரைப் பற்றி பகிர்ந்தது தங்கள் பார்வைக்கு கீழே... வாசித்து கருத்தைச் சொல்லுங்க...ன்னைப்பற்றி  பதிவுக்கு என்னை எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றி.

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல :) முதலில் வலைப்பூ ஆரம்பித்த கதையுடன் துவங்குகிறேன். 

பிப்ரவரி 2011 முதல் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் துவங்கியது எனது ஆங்கில craft  வலைப்பூ papercrafts.

அப்படியே எல்லார் வலைப்பூக்களுக்கும் சென்று பின்னூட்டமிடுவேன் .ஆங்கில பின்னூட்டங்கள் தான். பிறகு மெதுவா தமிழில் பின்னூட்டமிட்ட ஆரம்பித்தேன். பிறகு சில நண்பர்கள் பிடிச்சி தள்ளிவிட்டதில் தமிழிலும் காகித பூக்கள்  என்ற வலைப்பூவில்  எழுத துவங்கினேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் .அதனால் அவங்களை ஒன்றும் சொல்ல வேண்டாம் :).

எனது முதல் பதிவில் ஒரு பிரமாணம் கூட எடுத்தேன் சமையல் குறிப்புகள் போட மாட்டேன்னு அதெல்லாம் காற்றில் போய்  அப்புறம் நான்  சமையல் குறிப்பிலும் கலக்க ஆரம்பிச்சுட்டேன் (நானே என்னை புகழ்ந்தால்தான்  உண்டு :)ஆரம்ப காலத்தில் இந்த கமெண்ட் மாடரேஷன் பற்றி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதா...அப்போ கமெண்ட் போட்டு ஏன் வெளியாகல்லைனு மீண்டும் மீண்டும் போட்டு விடுவேன் எத்தனை பேர் நொந்து போனாங்களோ :)  ரொம்ப நாள் கழிச்சே கண்டுபுடிச்சேன் கமெண்ட் மாடெரேஷன் என்பது பற்றி...

சரி இப்போ கொஞ்சம் என்னைப்பற்றி சொல்லிக்கறேன்

நான் ஏஞ்சலின், பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்து பின்பு பல வருடங்கள் வெளி நாட்டு வாழ்க்கை... ரெண்டு பாட்டிகளோட  ஊரும் நாகர்கோயில்... ரெண்டு தாத்தாக்களோட  ஊரும் மதுரை... அப்பா ஊர் மதுரை...  அப்போ நான் எந்த ஊர்னு சொல்லுவது :??? யாதும் ஊரே யாவரும் கேளீர்னு சொல்லிக்கொள்கிறேன் :) 

ஒரு ரகசியம் சொல்லணும்... இப்போதெல்லாம் நான்  தமிழில் பேசினாலே வேற மொழியில் பேசுகிறாற்போலிருக்காம் சிலர் சொன்னாங்க :). ரொம்ப கஷ்டப்பட்டு சில நட்புக்களுக்கு வாழ்த்து அட்டையில் தமிழில் வாசகம் பேனாவால் எழுதினேன்.

கணவர்  மற்றும் மூன்று மகள்கள். மூத்த மகள் 11 ஆம் வகுப்பு படிக்கிறாள்... மற்ற இரண்டு மகள்களும் நாலுகால் மியாவ்  மகள்கள் :)

ஹோம் ஸ்கூலிங்தான்... இவங்க மட்டுமில்லாம அப்பப்போ வந்து என்னை சந்தித்து செல்லும் சில பறக்கும் மற்றும் நடக்கும் நாலு கால் செல்லங்களுமுண்டு... நான் வாயில்லா ஜீவன்களின் நண்பி மற்றும் அவற்றை நேசிக்கும் காதலி :)

நான் எங்கள் ஆலயம் மற்றும் எங்கள் பகுதி லைப்ரரியில் வாலண்டியரிங் செய்கிறேன்... படித்தது விலங்கியல்  மற்றும் ஆசிரியப்பயிற்சி... ஆனால் படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாமல் வாழ்க்கை வேறு திசையில்  செல்கிறது...  பேப்பர் உருட்டுவதும் :) அதான் QUILLING  மற்றும் தோட்டம் போடுவதும்நடைப்பயிற்சிவாலண்டியரிங் மற்றும் எழுத்து என இவை அனைத்தையும் கால  அட்டவணை போட்டு செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் மீள்சுழற்சி கைவினைப்பொருட்கள் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.

2012 முதல் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகிய இரு முகப்புத்தக பக்கங்களிலும் வீட்டு தோட்டக்குறிப்பு ஆரோக்கிய குறிப்பு விழிப்புணர்வு என எழுதி வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் சில நேரம் கட்டுப்பாடின்றி அரைப்பக்க செய்தியை மூன்று பக்கம் எழுதி விடுவேன் :) 

வெளிநாட்டு வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை சந்தித்துள்ளேன் குறிப்பாக முதியோர் அப்புறம் குழந்தைகள்... இவர்களுடன் பேசுவது  பழகுவது மிகவும் பிடித்தமானது எனக்கு... நேருக்கு நேர் திட்டும் எதிரியை நேசிப்பேன் பின்னாலிருந்து குத்தும் நட்பை தூசியாய் தட்டி செல்வேன். 

இயற்கையை அதன் அழகை ரசிப்பதில் எனக்கு அதிக ஆர்வமுண்டு. சமீப காலங்களில் குமார் சகோவின் விமர்சனங்களை படித்து அதிகமாக மலையாள திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன் :)

உடல் நலனை பேணிக்காப்பது அனைவருக்கும் அவசியம் ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேன்... உணவு கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சி செய்கிறேன்... தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்பதில்லை... குப்பை உணவுகளைத் தொடுவதில்லை... கோக் பெப்சிக்கு எங்கள் வீட்டில் அனுமதியில்லை... தோட்டத்து செடியின் பூச்சிகளுக்கு மட்டுமே அவை பயன்படுத்துகிறேன் :).
  
எழுத்து என்பது மிகவும் அற்புதமான விஷயம் நாம் பார்த்த தை அனுபவித்ததை உணர்ந்ததை எழுத்தாக்குவது உண்மையில் அழகான அனுபவம். எனக்கு வலைப்பதிவர்கள் பலரை பார்க்கும்போது எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு அழகா எழுத முடியுது என வியப்பேன் !!! அவர்களில் சிலர் பற்றி சொல்கிறேன். 

வானதி மாதிரி திருமதி ஸ்ரீதர் எனும் ஆச்சி மாதிரி  எழுத ஆசை... அனுராதா பிரேம் போல் அழகாக பென்சில் ஓவியம் வரைய ஆசை... பிறகு சிரிக்க சொல்லிக்கொடுத்தது அதிரா... யோசிக்க சொல்லிக்கொடுத்தது கௌசல்யா தைரியமாய் கருத்துக்களை  சொல்ல வைத்தது கிரேஸ், நிஷாந்தி... அனுதினமும் அன்பு, அன்பே பிரதானம் என அனைத்தையும் நேசிக்க கற்றுக்கொண்டது  தில்லைஅகத்து கீதா மற்றும் துளசி அண்ணாவிடம்... ஆச்சர்யப்படுத்துவது சீனுகார்த்திக் சரவணன் எழுத்துக்கள். 

ஊக்கமூட்டுவது கோபு சார்கஸ்தூரிரங்கன்... உற்சாகப்படுத்துவது ஸ்ரீராம்கோமதி அக்காவல்லிம்மாமனோ அக்கா, மஹிதேனக்காநேசன், மனசு குமார்மதிப்பிற்குரிய துரை செல்வராஜூ ஐயா  மற்றும் சமீப காலமாக தொழில்நுட்ப பதிவர் மொஹம்மத்...    மலைக்க வைப்பது திருக்குறள் சொல்லும் சகோதரர் டிடி !!மற்றும் பின்னூட்டங்களால் நிறைய விஷயங்களை சுரேஜினிசித்ரா  மூலமாகவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

இப்படி எத்தனையோ பேர்...  அப்புறம் நம்பிக்கையும் தைரியமும் தருவது எங்க மதுரைத்தமிழனின், தம்பி சதீஷின் மற்றும் ஆனந்த் aka ஆவி யின்  நட்பு... சிலர் பெயரை விட்டுப்போயிருக்கலாம் ஆனால்  மறக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆசை எப்படியாவது வலைப்பூவை விட்டு ஒதுங்கியிருக்கும் அம்முலுவானதி, ஆச்சிஇளமதி   போன்றோரை மீண்டும் பதிவுகள் எழுத வைக்கணும்.

என்னைப்பற்றி வேறே சொல்ல ஏதாவது இருக்கிறதா விடுபட்டுள்ளதா என்று என்னுள்  தேடுகிறேன் :) அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.

குடும்பம்... வாயில்லா ஜீவன்கள்... அன்பான முகம்தெரிந்த / முகம் அறியாத, நேரில் சந்திக்காத நட்புக்கள்.... கைவினை... எனது வலைப்பூக்கள்... இதுதான் எனது அன்பு சூழ் சின்னஞ்சிறிய உலகம் .

மீண்டும் ஒருமுறை என்னைப்பற்றி பகுதி எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்,
ஏஞ்சலின்


என்னைப் பற்றி நான் பகுதிக்கு கேட்டதும் அனுப்பிக் கொடுத்தது மட்டுமில்லாமல் தாங்கள் விரும்பும் பதிவர்களாக நம் பதிவர் அனைவரையும் சொன்ன இடத்தில் எனக்கும் இடம் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. தங்கள் வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...

மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக்கிறேன்.

அடுத்த வாரம் மற்றுமொரு வலை ஆசிரியரின் பகிர்வோடு....
 -'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 14 மார்ச், 2017மனசு பேசுகிறது : நாக தீபம்

Image result for நாக தீபம்

ஞாயிறு, 12 மார்ச், 2017மனசின் பக்கம் : நம்மையும் என்னையும் பற்றி கொஞ்சமாய்..

வ்வொருவரும் பதிவில் எதாவது ஒரு வகையில் தனித்துவமாய் இருக்க, நானெல்லாம் கதை, கவிதையின்னு மாவரைத்து அப்படி நான் அரைத்த மாவையும் சிலர் சப்தமில்லாமல் எடுத்து வடை சுட, இதென்னடா இது நம்ம மாவை வேற ஒருத்தன் சொல்லாமக் கொல்லாம எடுத்துட்டானேன்னு பொங்கி கதைகள் பகிர்வதை நிறுத்தியாச்சு. வேற ஒண்ணும் எழுதத் தோணாத நேரத்தில் எதாவது வித்தியாசமாய் ஆரம்பித்து வைப்போம் என ஆரம்பித்ததுதான் 'என்னைப் பற்றி நான்'. அதற்காக பலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தப் பலரில் முதலாவதாய் 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் அனுப்பி வைத்து, என்னைப் பற்றி நான் பகுதியை தொடங்கி வைத்தார். அந்தப் பலரில் சிலர் கூட அனுப்பித் தராத நிலையில் அடுத்தடுத்து நான் முகநூல் வாயிலாக கேட்ட, உறவுகள் அனுப்பிக் கொடுக்க 'என்னைப் பற்றி நான்' எல்லாரும் விரும்பும் பதிவாக மாறியிருக்கிறது. இதுவரை கொடுத்தவர்களுக்கும் இனி கொடுக்கப் போகிறவர்களுக்குமே அந்தப் பகிர்வின் வெற்றியில் முழுப் பங்கு உண்டு என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஒருவர் கொடுப்பதை நான் அப்படியே பகிர்கிறேன் அவ்வளவே. இதுவரை வெளிவந்த உறவுகளின் பகிர்வுகளைப் படிக்காதவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களைச் சொடுக்கி வாசித்து அறிந்து கொள்ளலாம்... அதே போல் வலைத்தளப் பெயர்களைச் சொடுக்கி அவர்களின் வலைத் தளத்தையும் வாசிக்கலாம்.

5.'KILLERJEE'                                      -   கில்லர்ஜி அண்ணன்.சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசும்போது 'நீ இப்போ சிறுகதைகளை உன் தளத்தில் பகிர்வதில்லை... அதிகம் எழுதுவதும் இல்லை' என்றார். சிறுகதை பகிராத காரணம் உனக்குத் தெரியும் என்று சொல்லி, எழுதாததற்கு காரணம் மனசு லேசாக இல்லை என்பதால்தான்... பிரச்சினைகள் சுற்றிலும் தீமூட்டி வைத்து வேடிக்கை பார்க்கின்றன... விரைவில் வாரம் 3 பகிர்வாவது எழுத முயற்சிக்கிறேன் என்றதும். 'ஏன் அந்தத் தொடர்கதையை நிறுத்தி வச்சிருக்கே..? தளத்தில்தான் பகிரலை... முழுவதும் எழுதி முடிச்சிட்டியா..?' என்றார். நான் எப்பவும் பதிவில் போடும்போதுதான் எழுதுவது வழக்கம், அதனால் அது பாதியில்தான் நிற்கிறது என்றதும் 'அப்ப அதை முழுவதும் எழுதவாவது மீண்டும் தளத்தில் ஆரம்பி... எதுக்கு பாதியோட நிப்பாட்டி வச்சிருக்கே'ன்னு சத்தம் போட்டார். யோசிப்போம் என்று முடித்துக் கொண்டேன்... தளத்தில் எழுதும் யோசனையில்லாமலே...

'ஆள் இல்லை... ஒரு மாசம் லீவ் தரமுடியாது... நீ பொயிட்டா யார் உன் வேலையைப் பார்ப்பா...' என்றெல்லாம் சொன்ன குஜராத்தி மேனேஜரை மடக்க வேண்டிய விதத்தில் மடக்கி விடுமுறைக்கு ஓகே பண்ணியாச்சு.  ஐந்து மாதமாக வேலையில்லாமத்தான் இருந்தோம்... ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் ஒரு புராஜெக்ட் ஆரம்பித்தோம்...குஜராத்தி மேனேஜர் (மோடி ஆள்), ஒரு சர்வேயர் (எகிப்து) அப்புறம் நான் மூவர் மட்டுமே இந்த புராஜெக்ட்டில்... மூன்று வருடமாக சம்பளத்தில் மாற்றமில்லை. இந்த வருசமும் எண்ணெய் விலை சரிவு பிரச்சினையால் வேலை இல்லாத சூழல்... அதனால் சம்பள உயர்வு என்பது கேள்விக்குறியே... இந்நிலையில் ஊருக்கு போற லீவையும் விட்டுக் கொடுத்து என்ன சாதிக்கப் போறோம்... புதிய புராஜெக்ட்டில் 21 மாதங்கள் வேலையிருக்கு... அதுக்காக 21 மாதத்துக்கு ஊருக்குப் போகாம இருக்க முடியுமா... என்ன... எல்லாருக்கும் விடுமுறை கொடுப்பானுங்க, ஆனா நமக்குன்னா... ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவானுங்க... நமக்கு ஒரே காரணம்தான்... அது லீவு வேணும் என்பதே... ஒரு வாரம்... 15 நாள்... என்றவன் ஒரு மாதத்தில் வந்து நின்றிருக்கிறான்.  மே மாதம் 18ஆம் தேதி இரவு விமானத்தில் டிக்கெட் போடணும்... ரிட்டன் டிக்கெட் போடாமல்தான் வர்றேன்.. அதனால் சில நாட்கள் விடுமுறை நீடிக்கலாம். இந்த முறை பதிவர்களைச் சந்திக்க வேண்டும்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய சிறுகதையில் இருந்து சில வரிகள்....

"ம்... இங்க வந்து எத்தனை வருசமாச்சு..?"

"பத்து வருசம் முடிஞ்சிருச்சு.. அந்தப் புள்ளைக்கு வயசு பதிமூணாவுது..."

'பதிமூணு வயசுப் பொண்ணு படுத்த படுக்கையாய்... பணத்தின் பின்னே நகரும் வாழ்க்கையில் அப்பா, அம்மா அதைத் தேடி ஓட யாரோ ஒரு பெண்ணால் பாதுக்காக்கப்படுகிறாள்... பாவம் இப்படி படுத்த படுக்கையாய் கிடந்து அவள் சாதிக்கப் போவதென்ன...? கால ஓட்டத்தில் இந்த ராதா, பெற்றவர்கள்... எல்லாம் நகர்த்தப்பட அவள் என்ன செய்வாள்...? இந்த உலகில் அவளுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது... இவரும்.. அவளிருக்கும் அறையுமே அவள் உலகமாகிப் போக, என்ன வாழ்க்கை...? இறைவா ஏன் அந்தக் குழந்தைக்கு இந்த நிலை...? எதற்காக அவளுக்கு இந்தப் பிறவி..?' என்று வருத்தத்தோடு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினேன்.

"என்னங்க அமைதியாயிட்டீங்க... அந்தக் குழந்தைக்காக வருத்தப்படுறீங்களா..?"

மிழகத்தில் மக்கள் ஒவ்வொன்றையும் போராடிப் போராடி பெற வேண்டிய காலம் வந்துவிட்டது... எல்லாவற்றிற்கும் போராட்டம்.... காரணம் நல்லரசு என்பது எப்போதும் இல்லை... இப்போது சுத்தமாக இல்லை... இதை மத்திய அரசு தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது. அதற்கான காய் நகர்த்தல் மிகத் தெளிவாகத் தெரிகிறது. பொறுக்கித் தமிழன் என்று சொல்லும் சுப்ரமணிய சாமியை அரசியல் சாணக்கியன் என்றும், பொறுப்பற்று பேசும் பொன்னார், இசை, வானதி என எல்லாருமே மக்களுக்காக பாடுபடும் அரசியல்வாதிகள் என்றும் தாமிரபரணி தண்ணீரா... அது முன்னமே ஒப்பந்தமான திட்டம் அதை எப்படி நிறுத்த, நெடுவாசல்.. அது முப்பது வருசத்துக்கு முன்னால அந்த மக்கள் ஒத்துக்கிட்டது, ஜல்லிக்கட்டு போராட்டமா... அது சும்மா... கேலிக்கூத்து அரங்கேறிய இடம்... தந்தி டிவியா... இருக்கதுலயே உண்மை பேசும்... அறிவு ஞானமுல்ல பாண்டேயை வைத்திருக்கும் டிவி அதுதான், பன்னீரு... அரசியல் பண்ணத் தெரியாத ஆளு, தினகரன்... அருமையான அரசியல்வாதி இப்படி நிறைய... நிறைய விஷயங்களை ஒரு நண்பர் பேசினார். நேற்றைய பொழுது அவரோடு கழிந்ததில் ஒன்றல்ல... இரண்டு மட்டும் தெரிந்தது... அது கட்சிக்காரன் என்றால் தமது கட்சியில் செய்கைகளுக்கு எப்படியும் முட்டுக் கொடுப்பார்கள் என்பதும்... தண்ணியடிச்சவனிடம் பேசினால் டென்சனில் உடம்பு சூடாகும் என்பதும்...  மற்றொரு பதிவில் இதைப் பற்றி விரிவாய்ப் பேசலாம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 10 மார்ச், 2017சுமையா - ஒரு பார்வை

த்து நாளைக்கு முன் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களின் 'சுமையா' சிறுகதைத் தொகுப்பு கையில் கிடைத்தது அதுவும் இரவு உணவுடன் புதிய நண்பர்களின் சந்திப்புச் சங்கமத்தில் கிடைத்த விவரத்தை சந்திப்பு நிகழ்ந்த அன்றே முகநூலில் பகிர்ந்திருந்தேன். 'சுமையா' அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. தன் முதல் தொகுப்பான 'கூழாங்கற்கள்' மூலமாக சிறுகதைகளில் மருத்துவக் குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் செய்திகளை இணைத்து எழுதி முத்திரை பதித்திருந்தார். அதே முத்திரையை இதிலும் தொடர்ந்திருக்கிறார்.

Image may contain: 1 person, text

மொத்தம் 21 கதைகள்... ஒவ்வொரு கதைக்குள் அறிவியலோ, வரலாறு, மருத்துவமோ... ஏதோ ஒன்று ஊடுருவிப் பேசும். இந்த 21 கதைகளையும் அச்சில் ஏறுமுன்னர் வாசித்தவர்களில் அடியேனும் ஒருவன். அழுகாச்சி கதைகள் எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் அண்ணாச்சியின் கதைகளை வாசித்து அவரிடம் கருத்தைப் பகிர்ந்து கொண்டவன் எழுதும் பெரும்பாலான கதைகள் இறுதியில் அழ வைத்ததாக நட்புக்கள் சொல்லக் கேள்வி. எழுத்தில் எனக்கும் அவருக்கும் மிகப்பெரிய முரண்... ஆனால் நட்பில் இருவருக்கும் இடையில் எந்த முரணும் இல்லை. 

'ஆவுளியா' என்ற கதையின் பெயர்தான் முதலில் தொகுப்புக்கான பெயராய் வந்தது... அட்டை தயாராகி அவருக்கு வர, அதை எனக்கு அனுப்பி பார்க்கச் சொன்னவர், பிறகு என்னுடன் போனில் பேசும்போது ரத்னவேல் ஐயா 'சுமையா'ன்னு வைக்கலாம்ன்னு சொல்றாங்க... அது இதைவிட நல்லாயிருக்கும்ல்ல என்றார். மிகச் சிறந்த நாவலுக்கான கதை அது என்பதைவிட பெயரளவில் விரைவில் மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் என்பதால் ரத்தினவேல் ஐயா அதைத் தலைப்பாக்கச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது... ஆவுளியாவும் வித்தியாசமான கதைதான். மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை, கடல் பாசி, என வித்தியாசமாய் நகரும் கதைதான் என்றாலும் பெயரளவில் நம்மை ஈர்ப்பது 'சுமையா' என்பதால் நானும் அருமையான பெயர் அண்ணா, ஐயா சொன்னது போல் அதையே வையுங்க என்றேன். 'ஆவுளியா'... 'சுமையா'வாக மாறி புத்தகமாகி விட்டது.

கதைகளை ஆரம்பிக்கும் விதமும் அது பயணித்து முடியும் விதமும் இருவேறு முனைகளில்... இது எல்லாருக்கும் எளிதில் அமைந்துவிடாது. இதுதான் இவரின் கதைகளை வித்தியாசமான பாதையில் நகர்த்துகிறது. கதையின் போக்கில் இடையில் எதாவது ஒரு முக்கிய சமாச்சாரம் உயிர்ப் பெறும்... சில கதைகளில் இந்த முக்கிய சமாச்சாரம் அதிகமாகும் போது சிலருக்குப் பிடிப்பதில்லை... அதைச் சிலரில் தங்கள் விமர்சனத்தில் வைப்பதையும் வாசித்திருக்கிறேன். கருத்துக்கள் சொல்வதில் எல்லாரும் ஒத்துப் போக வேண்டுமென்பதில்லை அல்லவா? அவரவர் பார்வையில் அவரவர் கருத்து... அதைத் தவறென்று சொல்வதற்கில்லை... எந்த எழுத்துமே எதிர்மறை விமர்ச்சனங்களைப் பெறும்போதுதான் எழுத்தாளன் தன்னை பட்டை தீட்டிக் கொள்ள முடியும். எதிர்மறை இல்லாத போது தானே என்ற அகங்காரம் சில பிரபல எழுத்தாளர்களைப் போல் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும்.

சிறுகதைக்கான ஓட்டமின்றி... டாக்குமெண்டரி போல் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். தனது எழுத்தில் தான் கொண்டு வர நினைக்கும் செய்தி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் அவரின் கதைகள் நம் தளங்களில் இருந்து வேறு ஒரு தளத்தில்... அதன் ஓடுபாதையும் நம்மில் இருந்து அதிக தூரத்தில்... கண்டிப்பாக காலத்தால் பேசப்படும் கதைகளாக அமையும் என்பது நிச்சயம். கொடுக்கும் செய்தி கதையின் சுவையைச் சாப்பிடாமல் அவரால் நிச்சயமாக கொடுக்க முடிகிறது என்று சொல்லலாம். 

சுமையா ஒரு நாவலுக்கான கதை என்று சொன்னேன் அல்லவா... ஆம் இந்தியா - பாகிஸ்தானுக்குள் பயணிக்கும் கதை, நிறைய அரசியலையும் அறியாத தகவல்களையும் சொல்கிறது. சுமையா மட்டுமின்றி இதிலிருக்கும் இன்னும் சில கதைகளை விரிக்கலாம். தற்போது வேறொரு நாவலின் வேலையில் இருப்பதால் அதன் பின்னர் எப்படியும் இவற்றையும் நாவலாய் விரிப்பார் என்று நம்பலாம். 

தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகளான 'நேற்றைய ஈரம்', 'நம்பி கோவில் பாறைகள்', 'மார்கோபோலோ மர்கயா போல', 'அன்னக்காடி', 'ஜெனியின் டைரிக்குறிப்புகள்','மண்ணெண்ண குடிச்சான்','கடல் குதிரை','நீ வந்தது விதியானால்','ரசவாதம்','சூது கவ்வும்', 'தற்கொலைப் பறவைகள்','அது ஒரு மழைக்காலம்','எட்டாவது அதிசயம்','ஷாஹிர்க்கா தட்டுக் கடை','வியாதிகளின் மிச்சம்','மரியா ப்ளோரன்ஷா','துணிக்கடை அண்ணாச்சி','அன்று சிந்திய ரத்தம்','பரிமளம் பெரிய மனுஷியாயிட்டா' என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

இந்த 21 கதைகளையும் குறைந்தது மூன்று முறை வாசித்திருப்பேன். எனக்கு எல்லாக் கதைகளும் பிடித்திருந்தன என்றாலும் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. அது... பௌர்ணமி இரவில் லைலாவைத் தேடிச் சென்றவர், அதை விடுத்து கதையின் பின்னே போய்விட, அவரின் பின்னே லைலாவைக் காண ஓடிக் கொண்டிருந்த எனக்கு முடிவில் ஏமாற்றமே... அந்தக் கதை அப்படியே முடியட்டும். லைலாவைப் பற்றி விரிவாய் அவர் எழுத வேண்டும் என்பதே என் வேண்டுகோள். சிறுகதை ஆசிரியர் நாவலாசிரியராய் களம் இறங்கியிருக்கிறார்... அதிலும் வெற்றி பெறட்டும்.

'சுமையா'வை வாசிப்பது ஒரு சுகானுபவம்.

சுமையா - நூல் வனம் வெளியீடு
விலை - ரூ.160 /-
-'பரிவை' சே.குமார்.

புதன், 8 மார்ச், 20178.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்

'என்னைப் பற்றி நான்' என்று இந்த வாரம் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் பயணப் பகிர்வும் போட்டோக்களுமாக கலக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்கள். இவரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கும் என்றால் பயணப் பகிர்வுகள் நாம் பயணிக்காத இந்திய மாநிலங்களிடையேயும் அங்கிருக்கும் மக்களிடயேயும் நம்மையும் பயணிக்க வைக்கும் என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் அறிவோம்.

'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற வலைத்தளத்தில் எழுதும் வெங்கட் அண்ணா, பதிவர்கள் மத்தியில் பிரபலம். அனைவரும் விரும்பும் பதிவர். தில்லியில் பணி... வேலைப்பளுவுடன் பதிவும்... அதுவும் அவர் எடுத்த போட்டோக்கள், பயணக் கட்டுரைகள் என வித்தியாசமாய் கொடுத்துக் கொண்டிருப்பவர். இன்னுமொரு கூடுதல் விபரம் என்னவெனில் இதுவரை   இவரின் ஏரிகளின் நகரன் நைனிதால், மத்தியப் பிரதேசம் அழைக்கிறது, தேவ் பூமி - ஹிமாச்சல் பயணக் கட்டுரைகள், பஞ்ச துவாரகா என்ற நான்கு மின்னூல்கள் வெளிவந்திருக்கின்றன.

மேலும் இவரின் மனைவி திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 'கோவை2தில்லி' வலைப்பதிவிலும் அன்பு மகள் ரோஷ்ணி 'வெளிச்சக்கீற்றுக்கள்' என்னும் வலைப்பதிவிலும் எழுதுகிறார். ரோஷ்ணி மிக அழகாக படம் வரைவார். ஆக மொத்தம் முக்கனிப் பதிவர்கள் இவர்கள். 

வெங்கட் அண்ணாவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இனி அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


ண்பர் பரிவை சே. குமார் அவர்கள்என்னைப் பற்றி நான்என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களிடம் எழுதி வாங்கி அவரது தளத்தில் பகிர்ந்து வருகிறார்என்னிடமும் கேட்டிருந்தார்என்னைப் பற்றி நானே எழுதித் தருமாறு கேட்டு, சில நாட்களாகிவிட்டது! உள்பெட்டியின் மூலம் ஒரு முறை நினைவூட்டிய பிறகும் எழுதி அனுப்ப கால தாமதமாகிவிட்டது! இதோ என்னைப் பற்றி நான்…. 

நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது! கூடவே இன்னுமொன்றும்அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை

எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ…..
நாளை
நாளை மறுநாள்!” 

….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறதுமிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம்எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்எனது கோபம்!

பதிவுலகில் எழுதும் பலரும் தங்களைப் பற்றிய செய்திகளை முழுவதுமாக, வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லைஇன்னும் பலர் தங்கள் பெயரைக் கூட வெளியிடாமல் புனைப்பெயரில் தான் எழுத வேண்டியிருக்கிறதுஅவர்களுக்கு அதற்கான பலமான காரணமும் இருக்கிறதுஇப்படி இருக்கையில் பதிவுலகம் மூலம் நட்பில் இருப்பவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் குமார் அவர்களின் இத்தொடர் வழிவகுக்கிறது

சரி இப்போதைக்கு தலைப்புக்கு வருகிறேன்! அதாவது என்னைப் பற்றி நான்என்ன சொல்வதுஎன்னைப் பற்றிய பல விஷயங்கள் ஏற்கனவே எனது தளத்தில் எழுதி இருக்கிறேன்இருந்தாலும் இங்கே மீண்டும் ஒரு முறை……

பிறந்ததும் வளர்ந்ததும் நிலக்கரி நகரம் நெய்வேலியில்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே அரசு வேலைக்காக எழுதிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட, கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எழுதி முடித்த பத்தாம் நாளே தலைநகர் தில்லி வந்து அரசுப் பணியில் சேர்ந்தாயிற்றுஇதோ இருபத்தி ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டனஏதோ இன்று தான் வந்த மாதிரி இருக்கிறதுஇன்னும் பதினான்கு ஆண்டுகள் [அரசு ஓய்வு பெறும் வயதில் ஏதேனும் மாற்றம் கொண்டு வராமல் இருந்தால்] பணி புரிய வேண்டும்இப்பொழுதே வேலை செய்ய பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், வேலை செய்து தானே ஆகவேண்டும்……

படித்தது இளங்கலை கணிதம்படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை! இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இப்படித்தான் அமைகிறதுஎன்னுடைய அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார்கணேசன் என்று பெயர் – M.Sc Microbiology படித்தவர்அரசுத் துறையில் வந்து சேர்ந்தார்பிறகு வங்கிப் பணிக்கான தேர்வு எழுதி தமிழகத்தின் ஏதோ ஒரு வங்கியில் காசாளாராகப் பணியில் சேர்ந்தார்அவர் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை!

குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர்…. மூத்தவர் ஒருவரும் இளையவர் ஒருவரும்! நடுவில் நான்ஒரே மகன்! திருமணம் முடிந்து ஒரே ஒரு அன்பு மகள்….. மனைவி, மகள் இருவருமே வலைத்தளம் வைத்திருப்பவர்கள் என்பதால் இங்கே சொல்ல வேண்டியதில்லை

எந்த வேலையாக இருந்தாலும், ஈடுபாடுடன் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்பல சமயங்களில் குடும்பத்தினை மறந்து, வெளிநபர்களுக்காகவே பணி செய்திருக்கிறேன்இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டாஇவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லாமல், என்னைப் பலரும் பயன்படுத்திக் கொண்டது புரியவே பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி ஏமாளியாக இருந்திருக்கிறேனே என்று புரிந்து கொண்டபோது நாற்பதைத் தொட்டிருந்தேன்…..   

பெரும்பாலும் எந்த வம்புகளுக்கும் போவதில்லை, நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பதே வழக்கமாகி இருக்கிறதுசெய்யும் வேலை பிடிக்கிறதோ, இல்லையோ, செய்யும் வரை அடுத்தவருக்குத் தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

சிறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதால், அதுவும் கல்லூரித் தேர்வு முடிந்த பத்து நாட்களுக்குள் வேலைக்கு வந்துவிட்டதால் மேலே படிக்க முடியவில்லை என்பதில் வருத்தமுண்டு. படிக்க முயற்சி செய்தாலும் அத்தனை முனைப்புடன் இருக்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது – “கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்என்ற கீதாசாரம் போல, எது நடந்தாலும் அதைப் பற்றி வருத்தப் படுவதில்லைநினைப்பதில்லை. எப்போதுமே Take it easy policy தான்எப்போதாவது ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து எட்டிப் பார்த்து கொஞ்சம் படுத்தினாலும் விரைவில் மீண்டு விடுவது வழக்கம்நன்கு பழகிய ஒரு நண்பர், முதுகில் குத்தியபோது, “சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் விடு, என்று இருந்திருக்கிறேன்அப்போது கூட எனது இல்லத்தரசி எல்லாத்தையும் எப்படி உங்களால ஈசியா எடுத்துக்க முடியுது?” என்று தான் கேட்டார்….. 

நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்குத் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும், நல்லது செய்யாவிட்டாலும், மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்ல முடிந்த அளவில் என்னைப் பற்றி நான் சொல்லி இருக்கிறேன்! சொல்லாத விஷயங்கள், சொல்ல முடியாத விஷயங்களும் உண்டு என்றாலும் சொல்ல முடியாதே!

என்றும் நட்புடன்,
வெங்கட் நாகராஜ்.
தில்லி.
*****

'என்னைப் பற்றி நான்' வாராவாரம் எதிர்பாராத வலை ஆசிரியரைப் பற்றி அறியத் தருகிறது என்பதில் திருப்தியே... அடுத்த வாரம் இவர்தான் என்று அறியாமல் இந்த வாரம் பதியும் போதே அடுத்த வாரத்துக்கான வலை ஆசிரியர் பகிர்வு எனக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் கேட்டதும் அனுப்பிக் கொடுக்கும் உறவுகளுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தளவுக்கு இந்தப் பகிர்வு போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எல்லாப் புகழும் உங்களுக்கே.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.