மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சினிமா : பத்தேமாரி (மலையாளம்)

ரபு நாட்டுக்கு வரும் ஒரு மலையாளியின் வாழ்க்கைப் பாதையில் நிரம்பியிருக்கும் கற்களையும் முட்களையும் வைத்து மிக அழகாக, உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியிருக்கும் படம்தான் 'பத்தேமாரி'.


அரபு நாட்டில் என்றில்லை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கனடா, இந்தோனேஷியா என எங்கும் இருக்கும் நம்மவர்கள் பற்றியகதைதான்  இது. மலையாளிகள் அதிகம் இருக்கும் அரபு நாட்டை (துபாய்) மையப்படுத்து மிக அருமையானதொரு வாழ்க்கை கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சலீம் அஹமத்.

ஊதாரித்தனமான தந்தை, அம்மா, சகோதர, சகோதரிகள் என பெரிய குடும்பம், அவர்கள் வாழ்விற்கான கப்பல் வழியாக அரபு நாட்டுக்கு தன் நண்பனுடன் பயணிக்கும் ஒருவன் அதன் பின் அரபு நாட்டில் படும் கஷ்டங்களும் அவன் ஊருக்குப் போகும் போதும் அதன் பின்னான நாட்களிலும் உறவுகளால் படும் கஷ்டங்களும்  என மிக நேர்த்தியாய் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

அடிக்கும் அலாரத்தை நிறுத்தாமல் படுத்திருக்கும் நாராயணன் இறந்து விட்டான் என்பதில் ஆரம்பிக்கும் கதையில் அடுத்த காட்சியாக ஊரில் அவரின் மூத்த மகனுக்கு செய்தி சொல்லப்பட, அங்கு அவனின் உடலை பெற்று இறுதிக்காரியங்கள் செய்வதற்காக அவனின் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவுகள் கூடியிருக்க, நாராயணனின் நண்பனான மொய்தீன் தன் வீட்டில் இருந்து பேருந்தில் வருகிறார். அதன்பின் கதை கடந்த காலத்துக்குச் செல்கிறது. நாராயணன் (மம்முட்டி) தன் நண்பன் மொய்தீனுடன் (ஸ்ரீனிவாசன்) அரபு நாட்டுக்கு வந்து வேலை பார்க்கிறார். ஆரம்பக் காட்சிகள் 1980 களின் அரபு தேசம் என்பதால் இப்போது இருக்கும் வானுயர்ந்த கட்டிடங்களைக் காட்டாமல் பெரும்பாலும் தங்கியிருக்கும் அறை, சில நேரங்களில் பேசிக் கொண்டிருக்கும் சிறிய கேண்டீன், சில கட்டிடங்கள் மட்டுமே தெரியும் கடற்கரைப் பரப்பு என மிகச் சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார். 

குடும்பம் துறந்து தனிமையில் இருக்கும் அந்நிய நாட்டு வாழ்க்கையில் அறை நட்புக்கள் மட்டுமே துணை. அதுவும் கால மாற்றத்திற்கு ஏற்ப அறையில் கட்டில்கள் மாறுவது... அறைகள் மாறுவது... ஆட்கள் மாறுவது என அழகாக அமீரக வாழ்க்கையும் பயணிக்கிறது. போன் பண்ண பொதுத் தொலைபேசியில் வரிசையில் நின்று அம்மா, மனைவி நளினியிடம் (ஜூவல் மேரி) ஊரில் இருக்கும் நண்பனின் கடைக்கு வரவைத்துப் பேசுவது... காலையில் டீயும் பண்ணும் சாப்பிடுவது... முதல் முறை ஊருக்குப் போகும் போது மற்றவர்கள் பார்சல் கொடுப்பது... வீட்டில் உள்ளவர்களுக்கு பார்த்துப் பார்த்து வாங்குவது... கேரளாவில் பன்னாட்டு விமானநிலையம் இல்லை என்பதைக் காட்டும் விதமாக மும்பை செல்வது... அங்கு பாதுகாப்புச் சோதனை அதிகாரிகள் பெட்டியை பிரிக்கச் சொல்வது... பணம் கேட்பது... என அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.


ஊரில் தங்கையின் மகளைத் தூக்கி கொஞ்சுவது... அம்மா, சகோதரன், சகோதரிகளுடன் சந்தோஷமாய் இருப்பது... மனைவியிடம் தான் கொண்டு வந்த நண்பர்களின் பார்சலில் ஒரு பெயரைச் சொல்லி அதை எடுத்து வரச்செய்து அவர்கள் முன்னால் உனக்கு எதுவும் கிடைக்காது அதனால்தான் இப்படி என அந்தப் பார்சலைப் பிரித்து பவுடர், செண்ட் எடுத்துக் கொடுப்பது... அம்மாவுக்கு வளையல் கொண்டு வந்து போட்டு விடுவது... சந்தோஷமாய்க் கழியும் நாட்களில் பயணத்துக்கு முன்னால் சகோதரன் சந்திரன் (ஜோய் மாத்யூ) இந்த வீட்டில் எனக்கும் பங்கிருக்கு... அதனால எனக்கு வீடு வேண்டாம்... கடை வைக்க இருபத்தையாயிரம் கொடு என்பதாய் கேட்பதில் 'நீ துபாய்க்காரன்தானே உன்னிடம் இல்லாத பணமா...?' என்ற கேள்வி தொக்கி நிற்பதைப் பார்த்து நாராயணனின் முகத்தில் அப்படி ஒரு அயற்சி, கவலை.

மீண்டும் நகரும் அரபு நாட்டு வாழ்க்கை... அம்மாவின் இறப்புக்குச் செல்ல முடியாத நிலை... தங்கையின் மகள் பெரியவளாகி விடுகிறாள்... இவனுக்கும் இரண்டு பையன்கள்...  தங்கையும் கணவனை இழந்து மகளுடன் இவன் வீட்டிற்கே வந்து விடுகிறாள்... மற்ற சகோதரிகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இவன் இனி அரபு நாட்டுக்கு வருவதில்லை என ஊருக்குப் போகிறான். மனைவியிடம் சொல்ல அவளோ 'துபாய்க்காரன் மனைவியின்னு பேராச்சும் இருந்துச்சு... இனி அதுவும் இல்லை' என்று சொல்லும் போது உடைந்து விடுகிறான். மேலும் தங்கையின் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் வர, அதை முடிக்கிறார்கள். அவர்களும் பெண்ணுக்கு வீடு இலலை.... வீடு வேண்டும் என்றதும் சந்திரன் அந்த வீட்டை தங்கைக்கு கொடுப்போம் என்கிறார். 'அதுக்குத்தான் நீங்க இருபத்தையாயிரம் வாங்கிட்டீங்களேன்னு' இவன் சொல்ல, 'ஆமா உங்களுக்கு எல்லாத்துக்கும் கணக்கு இருக்கும். நான் எவ்வளவு சாமான் கடையில் இருந்து கொடுத்திருப்பேன்... அதுக்கெல்லாம் எங்கிட்ட கணக்கு இல்லை.. அப்படி வச்சிக்க நினைக்கிறதுமில்லை'ன்னு சொல்ல வீட்டை தங்கைக்கு கொடுத்துவிட்டு தனக்கு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து மீண்டும் பாஸ்போர்ட்டைத் தேடி, விசா முடிய சில நாட்களே இருப்பதால் திருமணத்தை முன்னரே நடத்த மாப்பிள்ளை வீட்டில் பேச, அவர்கள் மறுத்துவிட திருமணத்துக்கு முன்னரே அந்த நினைவுகளைச் சுமந்தபடி பயணிக்கிறான்.

திருமணத்தன்று ஊருக்குப் பேச, அவர்கள் யாருமே சட்டை செய்யவில்லை. மனைவி கூட 'இப்ப வெளிய கிளம்பிக்கிட்டு இருக்கோம் ராத்திரி பேசுங்க' என்கிறாள். அந்தக் கணத்தில் அவனின் சந்தோஷங்கள் சரிகின்றன. அதன் பின்னான நிகழ்வுகள் அவனின் வாழ்க்கையைப் பேச, இடையிடையே நட்புக்கள்... ஒரு மலையாளிக்கு உதவி.. ஊரில் வீடு கட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் தங்கைக்கு கொடுத்த வீட்டை அவர்கள் வாடகைக்கு விடப்போவதாக சகோதரன் சொல்ல, அந்த வாடகையை நானே கொடுக்கிறேன் எனச் சொல்லி சொந்த வீட்டில் வாடகைக்கு தங்குகிறான். அவனின் நண்பன் மொய்தீனின்  மகன் அரபு நாடு வந்து நாலைந்து கடைகள் திறந்து பெரிய அளவில் உயர, அவரும் ஊரில் போய் செட்டிலாகி விடுகிறார். வீட்டில் மாட்டலாம் என அழகான விளக்கு ஒன்றைப் பார்த்து விலை கேட்க, அது அதிகமாக இருப்பதால் பின்னர் வருகிறேன் என்று கிளம்பும் நேரத்தில் இவன் உதவிய நபர் வந்து நாந்தான் இந்தக் கடையின் முதலாளி உள்ள வாங்க உக்காந்து பேசலாம் எனக் கூட்டிச் சென்று அவன் விரும்பிய விளக்கையும் கொடுத்து விடுகிறார். அதைக் கொண்டு வந்து கட்டிலுக்கு கீழே பத்திரப்படுத்துகிறான்.


ஒரு மலையாள தொலைக்காட்சி நிலையம் அரபு நாட்டில் மலையாளிகள் என்பது குறித்தான ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறது. அதில் வரும் ஒருவன் இவனின் மகன் சதீஷின் நண்பன் என்பதாலும் 50 வருடங்கள் அரபு நாட்டில் கழிந்திருக்கும் ஒரு மனிதன் என்பதாலும் இவனிடம் பேட்டி கேட்க, மறுக்காமல் சம்மதிக்கிறான். அன்றைக்கு இரவே பாலைவனப் பூமியில் தனது உயிரை விடுகிறான். அவனின் உடல் ஊருக்கு அனுப்பப்படுகிறது.

வீட்டை தங்கைக்கு கொடுக்க தயங்கும் அண்ணன் குறித்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தங்கை சொல்வது... போன் பண்ணும் போது அவரு பேசினா அறுத்துக் குவிச்சிருவாரு... தூங்கிட்டேன்னு சொல்லும்மா என மகன்கள் சொல்வது... அவனுங்க தூங்கிட்டானுங்கன்னு மனைவி பொய் சொல்வது,... சந்திரன் வீட்டிற்கு பணம் வாங்கிக் கொண்டு வீட்டில் எனக்கும் பங்கிருக்கு என மீண்டும் சொல்வது... அம்மாவின் இறப்புக்கு வர முடியாமல் கடற்கரையில் நின்று அழுவது... இப்படி நிறையக் காட்சிகள் தன் குடும்பத்துக்காக வெளிநாட்டில் சொந்தம். சந்தோஷம் என எல்லாம் இழந்து தவிக்கும் ஒருவனுக்கு வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

'அவனோட ஆசை இந்த வீடு... அவனோட உடலை இந்த வீட்டில் கொஞ்ச நேரமாச்சும் போட்டுட்டு எடுக்கலாம்' என மொய்தீன் சொல்ல, சகோதரன் சந்திரன் அரை மனதாக சம்மதிக்க, விமான நிலையத்தில் உடலைப் பெற்று வரும் மூத்தமகன் 'என்ன அங்கே...?' எனக்கேட்டு 'நாங்க வாழப்போற வீடு... நாளைக்கு விற்றாக்கூட யாரும் வாங்க மாட்டாங்க...' எனச் சொன்னதும் மொய்தீன் தனிச்சி நின்று அழுவதும் நாராயணனின் உடல் அங்கு இறக்கப்படாமலே கொண்டு சென்று எரியூட்டப்படுவதும் உண்மையை உரக்கச் சொன்ன காட்சிகள். எனக்கு இது போன்ற காட்சிகள் கண் கலங்குவதை தவிர்க்க முடியாது. இவ்வளவு தூரம் குடும்பத்துக்காக உழைத்தவனை வீட்டில் கூட போடக் கூடாதுன்னு சொல்றாங்களேன்னு நினைச்சப்போ கண்ணீர் வழிந்ததைத் தடுக்க முடியவில்லை. இதே கண்ணீர் நேற்றிரவு இறுதிச்சுற்று படம் பார்க்கும் போது வெற்றி பெற்ற நாயகி, மாதவனைத் தேடி ஓடி வந்து குதித்து அவன் மீது ஏறி அமர்ந்து அழும்போது அட அவதான் ஜெயிச்சிட்டாளேன்னு சந்தோஷம் கொள்ளாமல் மீண்டும் வந்தது... காரணம் அவ ஜெயிக்க அவனும் அவளும் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் நிறைய... சரி அதை மற்றுமொரு பதிவில் பேசலாம்.... இப்ப நாராயணனைப் பற்றிப் பார்ப்போம்.


அதற்கு அடுத்த நாள் பிள்ளைகள் டிவி பார்க்க, சந்திரன் விரட்டுகிறான்... அப்போது நாராயணன் கொடுத்த பேட்டி ஓளிபரப்பாக ஓட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து அழுகிறது. அப்படி என்ன சொன்னான்னுதானே கேக்குறீங்க... அரபு நாட்டில் காலை உணவு இல்லாமல் வெளியிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டில் இருப்போர்கள் நலமுடன் வாழ தன்னையே எரித்துக் கொள்ளும் ஆத்மாக்கள் மனதில் என்ன இருக்குமோ அதை அப்படியே கொட்டி வைத்திருப்பான்.... அதையும் சொல்லிட்டா அப்புறம் நல்லாயிருக்காது பாருங்க... அதனால அதை மட்டுமாவது படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

மம்மூட்டியை எனக்குப் பிடிக்கும். நல்ல படமாகத் தெரிகிறது. கிடைத்தால் பார்க்கலாம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் பார்க்க வேண்டிய படம் நண்பரே
பார்க்கிறேன் நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

UmayalGayathri சொன்னது…

படத்தை பார்க்கவேண்டும் சகோ....
தம . ௪

துரை செல்வராஜூ சொன்னது…

கதை ஓட்டத்தைப் படிக்கும் போதே மனம் கலங்குகின்றது..

படத்தைப் பார்ப்பதற்கு - தாங்குமா.. தெரியவில்லை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெளிநாட்டு வாழ்க்கை அனுபவம் இருப்பதால், விமர்சனம் படித்தே கண் கலங்குகிறது, புரிகிறது...படத்தை பார்க்கவேண்டிய அவசியம் ஒவ்வொரு வெளிநாட்டு அன்பர்களின் குடும்பங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மம்முக்கா அருமையான நடிகர். எங்களுக்குப் பிடித்த நடிகர். அருமையான் நடிப்பில் அப்பட்டமான நிதர்சனத்தை உரித்துவைத்தப் படம். பார்த்தாச்சு. அருமையான விமர்சனம் குமார். அப்படியே சொல்லிவிட்டீர்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் படம் எனத் தெரிகிறது. பார்க்க முயற்சிக்கிறேன்.

நிஷா சொன்னது…

வீட்டை தங்கைக்கு கொடுக்க தயங்கும் அண்ணன் குறித்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தங்கை சொல்வது... போன் பண்ணும் போது அவரு பேசினா அறுத்துக் குவிச்சிருவாரு... தூங்கிட்டேன்னு சொல்லும்மா என மகன்கள் சொல்வது... அவனுங்க தூங்கிட்டானுங்கன்னு மனைவி பொய் சொல்வது,... சந்திரன் வீட்டிற்கு பணம் வாங்கிக் கொண்டு வீட்டில் எனக்கும் பங்கிருக்கு என மீண்டும் சொல்வது... அம்மாவின் இறப்புக்கு வர முடியாமல் கடற்கரையில் நின்று அழுவது... இப்படி நிறையக் காட்சிகள் தன் குடும்பத்துக்காக வெளிநாட்டில் சொந்தம். சந்தோஷம் என எல்லாம் இழந்து தவிக்கும் ஒருவனுக்கு வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது./7

அப்படியே நானே அவனாய் ஒரு நிமிடம் திகைத்து போனேன்பா! மம்முட்டியின் நடிப்பு நிரம்ப பிடிக்கும், இயல்பான நடிப்பில் நம் அடுத்த வீட்டுக்காரரை நினைவு படுத்துவார். ஆனால் ஒரு விமர்சனம் இத்தனை பாதிப்பு தருமா என என்னில் என்னை உணர வைத்தீர்கள். பணம் பணம் பணம், பணமில்லாதவன் பிணம் என்பது போல் வெளி நாட்டுக்கு என புறப்படும் போதே அன்பையும் பாசத்தையும் அவனுக்கென மனம் ஒன்று இருக்கின்றது என்பதையும் மறந்து போய் விடுவார்களோ என்னமோ?

இத்தனையும் நிஜம் என அடித்து சொல்ல என்னை விட யாரும் தேவையே இல்லை.

நிஷா சொன்னது…

உணவு இல்லாமல் வெளியிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டில் இருப்போர்கள் நலமுடன் வாழ தன்னையே எரித்துக் கொள்ளும் ஆத்மாக்கள் மனதில் என்ன இருக்குமோ /7

என்ன இருக்கும் என சொன்னால் தான் ஆகுமா குமார். நாம் அதை உணர்வோம் தானே?

KILLERGEE Devakottai சொன்னது…

நேற்றே படித்தவன் கருத்துரை இட மறந்து விட்டேன் நண்பரே சாரி....
விமர்சனம் எனக்கே படம் பார்க்கும் ஆவலை உண்டாக்குகிறதே....
தமிழ் மணம் 8

Unknown சொன்னது…

எனது அயல் நாட்டு வாழ் காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தது.

valampuri சொன்னது…

நான் பார்த்தேன்.அழுதேன்.இது என் கதை.இப்போழுது முடிவில் இருக்கின்றேன்.வழி தெரியவில்லை.முப்பதாறு வருடம் கடந்தும் கேள்வியே பதிலாக நடக்கின்றது.கண்களில் கண்ணீர் மிச்சம்...,,,,|

balaamagi சொன்னது…

எனக்கு மம்முட்டி பிடிக்கும்,, தங்கள் பார்வையில் படத்தைப் பற்றிய விமர்சனம் அருமை,, தொடர்கிறேன்.

senthil சொன்னது…

மம்மூட்டி அந்த பேட்டியில் சொல்லும் Successful Man A Full Successful man வார்த்தை நம் கண்களில் தேக்கி வைத்த கண்ணீர் குடம் ஆறாக பாயாக தொடங்கி விடுகிறது.. பத்தே மாரி Fine Crafted Movie