மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 9 ஜூலை, 2015

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

சிறுகதைகள் எனக் கிறுக்கும் எனக்கு தொடர்கதை எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை... அப்படி எழுதப் பிடிப்பதும் இல்லை... சிறுகதை என்றால் எடுத்த கருவை வைத்து நாலுபக்கம் கிறுக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடலாம். தொடர்கதை என்றால் நீளமாக எழுதிக் கொண்டே போகவேண்டும். கதாபாத்திரங்களும் நிறைய இருக்க வேண்டும். அவர்களை கதையுடன் இணைத்துக் கொண்டு போகவேண்டும். ஒரு கதாபாத்திரத்தையும் விட்டு விட்டு செல்ல முடியாது. அப்படி விட வேண்டும் என்றால் மெகா சீரியலில் வருவது போல் வெளிநாட்டுக்கு விரட்ட வேண்டும் இல்லை என்றால் ஆளைக் கொல்ல வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம்... வலையில் எழுத ஆரம்பித்தும் சினிமா, கவிதை, கட்டுரை, சிறுகதை என கலந்து கட்டி ரெய்னா போல் சிக்ஸரடித்தாலும் தொடர்கதை என்ற ஒரு பந்தை மட்டும் ரஹானே மாதிரி தொடாமல் விட்டு விட்டு பேசாமல் இருந்தேன். அதற்கு காரணமும் இருக்கு... அது என்னன்னா... கல்லூரியில் படிக்கும் போது ஒரு குறுநாவல் போட்டியை ஒரு பத்திரிக்கை (சுபமங்களாவோ / காலச்சுவடோ ஞாபகத்தில் இல்லை) அறிவித்திருந்தது. சரி நாமளும் முயற்சிக்கலாம் என எழுத ஆரம்பித்து பக்கம் பக்கமாக எழுதி வைத்து பின்னர் அதை அடித்தல் திருத்தல் எல்லாம் செய்து ஒரு குறுநாவலாக்கினேன்.

கதை என்னன்னா... ஏறக்குறைய இளவரசன் - திவ்யா காதல் கதைதான்... அனுப்புவதற்கு முதல் நாள் படித்துப் பார்த்தேன். எனக்கு ஏதோ குறைவது போல் தெரிய, என்ன என்று யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஐயாவிடம் கொண்டு சென்று கேட்கலாம் என்றால் இதென்னய்யா கதை என்று திட்டிவிட்டால்... யோசித்தேன்... யோசனையின் முடிவில் அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து பேசாமல் வைத்து விட்டேன்.

ஆரம்பத்தில் எனது சிறுகதைகள் கூட வசனங்கள் நிறைந்து சாதாரணக் கதைகளாகத்தான் இருக்கும். இங்கு வந்த பிறகுதான் கொஞ்சம் வாழ்க்கையைப் பேசலாமே என எழுத்தில் மாற்றம் கொண்டு வந்தேன். இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். சில கதைகள் சாதாரணமாக இருந்தாலும் பல கதைகள் எனக்குப் பிடித்த விதத்தில் வந்திருக்கின்றன என்பதே சந்தோஷம்தானே. சிறுகதைகளில் மாற்றம் கொண்டு வந்த பிறகுதான் முதலில் கிறுக்கிய நாவலை எவ்வளவோ மோசமாக எழுதியிருக்கிறோம் என்று தெரிந்தது, ஆம் அந்தக் கதை படிப்பவரை ஈர்க்கும் விதமாகவோ, ஒரு தொடர்ச்சியாய் நகரவோ இல்லை. அதன் காரணமாகவே தொடர்கதை ஏரியாவுக்குள் நுழைவதே இல்லை.

சரவணன் அண்ணன் இளமை எழுதும் கவிதை நீ என்னும் தொடரை எழுதும் போது எனக்கும் ஒரு நப்பாசை... சரி நாமளும் எழுதுவோம் என்று முயற்சித்த முதல் தொடர்கதைதான் 'கலையாத கனவுகள்'. இந்தக் கதை வாசிப்பவர்களைக் கவர்ந்ததோ இல்லையோ எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என்றாலும் மேல்சாதி கீழ்சாதி பிரச்சினை, கல்லூரிச் சண்டைகள், காதல் திருமணம் என பயணித்து எண்பது பகுதிகளாக வலையில் எழுதினேன். ஒரு சிலர் தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தியவர்களில் சகோதரி மேனகா சத்யா அவர்களும் ஒருவர். அவர் ஒருமுறை கிரைம் தொடர் ஒன்று எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். பின்னர் பலமுறை ஞாபகமும் படுத்தினார். கிரைம் கதை எல்லாம் நம்மால எழுத முடியுமான்னு அதைப் பற்றி யோசிக்காமல்... பின்னர் முயற்சிக்கலாம் என ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாக்கி ஆரம்பித்த இரண்டாவது தொடர்கதைதான் வேரும் விழுதுகளும்... இதுதான் கதை... இப்படி எழுதப் போறேன் என்று சொன்னதும் என்னோட நண்பன் தமிழ்க்காதலன் சொன்னதுதான் தொடருக்கான தலைப்பு... ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் உறவுகளுக்குள் இருக்கும் பாசத்தையும் வைத்து பிண்ணப்பட்டதுதான் கதை.

தொடர்ந்து 25 வாரங்கள் பதியப்பட்ட தொடர்கதை... பலரைக் கவர்ந்தது என்பது சந்தோஷமே... இங்கு குடும்பம் வந்தது... நான் ஊருக்குப் போனது போன்ற காரணங்களால் மனசு தூங்கியதில் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் கதையும் நின்றுவிட்டது. ஊரில் இருந்து வந்து மூன்று வாரங்களாகிவிட்டாலும் இன்னும் எழுத எண்ணம் வராததால் தொடர்கதையை தொடராமல் விட்டிருந்தேன். இனி தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருக்கிறேன்... என்னைப் பொறுத்தவரை தொடர்கதை என்பதும் சிறுகதை போல்தான் எழுதுவேன். பதியப் போகிறேன் என்றால் அன்றைக்குத்தான் அந்தப் பகுதியை எழுதுவேன். எனவே 26வது பகுதியை சனிக்கிழமை எழுதி அன்றே பதியலாம் என்று எண்ணம்... பதிவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்ற தொடரைவிட இதை இன்னும் நல்லாக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் எழுத நினைத்த கதையில் ஒரு பெரியவர் பேருந்தில் பயணிக்கும் போது அவரது நினைவுகளாய் மலரும் கதையாக மூன்று நான்கு பத்திகள் எழுதி... இதை இப்படி மாற்றலாமே என மாற்றி எழுத ஆரம்பித்ததுதான் வேரும் விழுதுகளும்... கதையின் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும்.

//... "இரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் பெய்த மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

"அந்த போயிலய துப்பிப்பிட்டு வந்து பேசுறது. வாயில இருந்து மேலுல வடியணுமாக்கும்... எப்பப்பாரு அந்தக் கருமத்தை வாயில ஒதக்கிக்கிட்டு... ஆமா அதுல அப்புடி என்னதா இருக்கோ... தெரியல.. ஒண்ணு துப்பிப்பிட்டு பேசுங்க... இல்ல பேசாம அந்தக் கருமத்த மொண்ணு குடிச்சிட்டு மோட்டு வலயப் பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளய கெடங்க..." கத்தினாள் காளியம்மாள்....// 

என வயதான நாயகன் நாயகியின் அறிமுகத்தோடு ஆரம்பித்த கதை, அதன்பின் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், மாப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அன்போடு பார்க்கும் அண்ணன் மகன், அவனது குடும்பம் என பாச நிகழ்வுகளோடு நகரும் கதை, கடைசியாக பதிந்த 25வது பகுதியில் கீழே இருக்கும் பத்திகளோடு முடிந்திருந்தது.

//.... "மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும் அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."

"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்....//"

சரி ரொம்ப போரடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... வேரும் விழுதுகளின் 26வது பகுதியில் சந்திக்கிறேன். அதற்கு முன்னர் தொடர்கதையை படிக்காத நட்புக்கள், படிச்சிட்டு வாங்க... வந்து உங்களோட உண்மையான கருத்துக்களைச் சொல்லுங்கள்... தொடர்கதைகளைத் தொடரலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஏதுவாயிருக்கும் அல்லாவா?
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

balaamagi சொன்னது…

வணக்கம்,
சரி படித்துவிட்டு சொல்கிறேன்,
எனக்கு தொடர்கதை பிடிக்கும்,
இந்த பதிவும் நல்லாதான் இருக்கு
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் மனதிற்கு திருப்தி இருந்தால் போதும் - எதுவேணாலும்...

தொடர வாழ்த்துகள்...

துரை செல்வராஜூ சொன்னது…

கதை தொடரட்டும்..

வாழ்க நலம்!..

UmayalGayathri சொன்னது…

தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம் சகோ...நிறைய எழுதுங்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சில பகுதிகளை மட்டும் படித்திருக்கிறேன். முழுதும் படிக்கிறேன்.

KILLERGEE Devakottai சொன்னது…

Totaravum....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கதையை தொடர்ந்து வாசித்து வந்தவர்களில் நானும் ஒருவன்! அருமையாக எழுதுகின்றீர்கள் தொடரவும்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொடரவும் கதையை நண்பரே! நாங்களும் தொடர்கின்றோம்...