மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 ஜூலை, 2015

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...


து...

என்னடா இவன் இப்பத்தான் மது பற்றி ஒரு கட்டுரை போட்டான் அதுக்குள்ள மீண்டும் மதுவான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா மதுவில் விழுந்தவர்கள் மீண்டு வரவில்லை என்பதால்தான் மீண்டும் மீண்டும் மதுவுக்கான பகிர்வு அவ்வளவே. சரி விஷயத்துக்கு வருவோம். அதுக்கு முன்னாடி கீழ இருக்கும் அட்டவணையைப் பாருங்கள். காமராஜர் கல்விச் சாலைகளை அமைத்து மக்களை நல்வழிப்படுத்தினார். இன்றைய அரசியல்வாதிகளோ மதுவை ஊற்றி மல்லாக்க படுக்க வைக்கின்றனர். நம் மாநிலத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட உயர்ந்து நிற்கிறது அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கை... சிந்திக்க விடாமல் சிந்தை அளிக்கும் மதுவுக்கே மரியாதை...


மதுவினால் மாண்டோரும் அவர்களால் தெருவில் வீழ்ந்த குடும்பங்களும் என்ற நிலை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் என்ன ஒரு வேதனையான விஷயம் என்றால் மக்களுக்கு படிப்பறிவு கூடக்கூட மதுவின் பிடிக்குள் அதிகமானோர் விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று ஏழைகளின் தோள் மீது ஏறிக் கொண்டு பல குடும்பங்களை கழுத்தறுத்த மது இன்று குடும்ப உறவுகள் மூலமாக குழந்தைகளிடமும் நட்பின் மூலமாக மாணாக்கர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

மதுவினால் அரசுக்கு வருமானம்... அதுபோக மது பானங்களைத் தயாரிப்போர் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ஏதோ ஒரு வகையில் வேண்டப்பட்டோர் என்பதுடன் சில அவர்களின் பினாமியாகவும் இருக்கலாம். ஒரு குடும்பத்தை அழித்துத்தான் தங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்றாலும் கோடி கோடியாக சம்பாதித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் எவன் குடி கெட்டால் என்ன நமக்கு கோடிகள் ஏறினால் போதும் என்ற எண்ணமே மது தயாரிப்பாளர்களின் மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

கர்நாடகாவில் இருக்கும் மதுத் தொழிலதிபர் ஒரு கிரிக்கெட் அணியையும் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு போட்டி நடக்கும் இடங்களில் ஆட்டம் போடும் சியர்ஸ் பெண்களுடன் பொது இடத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறான். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லை என்று சொல்லி, வங்கியில் வாங்கிய 400 கோடியை சுவாகா போட்டுவிட்டான். அவனது நானூறு கோடியை தள்ளுபடி செய்தது மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நாம் பெரிதும் நம்பிய தற்போதைய மத்திய அரசு. எத்தனை குடும்பங்களை அழித்து கோடிகளில் புரள்கிறான். அவனுக்கு தள்ளுபடி, வங்கியில் நானூறு ரூபாய் கட்ட முடியாத ஏழை விவசாயியை இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. எல்லாம் அரசியல் என்ன செய்வது..?

இவனுக்கு மட்டுமல்ல அதானிக்கும் கோடிகளில் விலக்கு, அவன் மனைவியின் பாதத்தில் பாரதப் பிரதமர் நமஸ்காரம்... ம்... பேச்சு எங்கிட்டோ போகுது... தண்ணியடிச்சவன் மாதிரி எல்லாப் பக்கமும் சுத்துது... சரி வாங்க நம்ம கதைக்கு வருவோம்....

இப்போ அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் எல்லாக் கட்சிகளுமே தங்களின் மாநாட்டுக்கு பிரியாணியும் சாராயமும் கொடுத்துத்தான் ஆட்களை சேகரித்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு போராட்டம் என்றாலும் போராடியவர்களுக்கு வலி நிவாரணியாக மதுதான் பரிமாறப்படுகிறது. மெட்ரோ இரயிலைக் கொண்டு வந்தது நாங்கதான் என்று அடித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் இன்று மதுக்கடைகளை அடைக்கும் கோஷத்தை நாங்கள்தான் முதலில் கையிலெடுத்தோம் என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். 

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை மூடச் சொன்னதற்கே மூடாத அரசு, இலவசங்களைக் கொடுப்பதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை கூட்டிய அரசு, எவன் குடி கெட்டால் என்ன அரசுக்கு வருமானம் கோடிகளில் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்த அரசு, இன்று மக்களை முட்டாளாக்கி தங்கள் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இங்கே அரசு என்றதும் ஆளும் கட்சி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆளும், ஆண்ட, ஆளுவோம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிற எல்லாமே இதில் அடக்கம். 

இங்கே எங்களது அறை நண்பர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சிதான் இதை முதலில் கையில் எடுத்தது. இந்த முறை அம்மா இதை செய்யவில்லை என்றால் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார். என்னத்தைச் சொல்வது..? இருக்கும் சாதிகளைவிட சாதிக்கட்சிகள் இங்கே அதிகம். சாதிக்கட்சிகள் எல்லாம் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லைதான். அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று குதிக்கும் இவர்கள் எல்லாம் எதையும் செய்வதில்லை. இவர்கள் எல்லாரும் ஒரே பாதையில் பயணிக்கும் காரணமே செம்மறி ஆட்டுக் கூட்டமாய் இருக்கும் நம்மளை முட்டாளாக்கி லாபம் பார்க்கும் செயல் மட்டுமே.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்று சொல்லியே அரசியல் பண்ணும் இவர்கள் கையில் இப்போது எடுத்திருக்கும் ஆயுதம்தான் இந்த மது ஒழிப்பு. இவர்களை இந்த ஆயுதம் எடுக்க வைத்த அந்த புண்ணியவான்கள் வேறு யாருமல்ல... குழந்தைகளுக்கு ஊற்றிக் கொடுத்த மதுவெறியர்களும் குடித்துவிட்டு கூறுகெட்டுப் போன மாணவர்களும்தான். இனி இவர்கள் மதுவை ஒழிக்கிறேன் என்று அடித்துக் கொள்வார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்லி நம்மை அசர வைப்பார்... ஆளும் காவிரித்தாய் திடீரென கடைகளை மூடி மதுவிலக்கை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இவர்கள் செயல்கள் எல்லாமே அரசியல் நாடகம்தான்... இவர்கள் படாடோப வாழ்க்கை வாழ அந்தந்த சூழலுக்கு ஏற்ப மேடையேற்றும் நாடகங்களில்.. தேர்தல் நேரத்தில் நாம் ராஜபார்ட்... இவர்கள் சகுனிகள்... தேர்தலுக்குப் பிறகு அதே நாடகத்தில் இவர்கள் பரிவாரங்களுடன் பவனி வரும் ராஜபார்ட்.... நாமெல்லாம் பபூன்.

காந்தி ஜெயந்தி என்றாலும் கடைக்குப் பின்னே வைத்து விற்பவனும் காலையிலேயே கட்டிங் அடிக்கும் மனிதர்களும் எப்பவும் போல் தங்கள் அன்றாட நிகழ்வை நடத்தி வருகிறார்கள்... வருவார்கள். இதில் எதுவுமே மாறப் போவதில்லை. அப்படியே மூடினாலும் கடைகளில் பார் நடத்துகிறேன் என்று அராஜகம் நடத்தும் உள்ளூர் ரவுடிகள் கள்ளச்சாராய அதிபதிகளாகி கொல்லும் தொழிலை நேர்த்தியுடன் செய்வார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் தேவைக்காக மூடிவிட்டு மீண்டும் குடிகெடுக்க வருவார்கள் என்பதே உண்மை. இதுதான் நடக்கும். கோடிகளைப் பார்த்த அரசு கோமாவில் கிடக்குமா என்ன?


அப்புறம் இன்னொரு விஷயங்க... சாதி, சாதியின்னு இப்ப எல்லாரும் கிளம்பியாச்சு.... இதைப் பற்றி பேசணும்... மற்றுமொரு மனசு பேசுகிறது பகிர்வில் பேசலாம்.

நன்றி : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
-'பரிவை' சே.குமார்.

22 எண்ணங்கள்:

ஊமைக்கனவுகள் சொன்னது…

இன்றை தமிழகத்திற்கு மிக மிகத் தேவையான சிந்தனை.

தொடர்கிறேன்.

நன்றி

KILLERGEE Devakottai சொன்னது…

Arumaiyana Pathivu.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கே செல்லும் இந்தப் பாதை...? யாரோ யார் அறிவார்....?

துரை செல்வராஜூ சொன்னது…

முன்பெல்லாம் குடிகாரனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்..
இப்போது நிலைமை எல்லாம் - தலைகீழ்!..

மானைப் போல் மானம் என்றாய்..
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்..
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்!..

என்று - திரைப்படத்தில் பாடலை வைத்தவர் - முதல்வராக ஆனதும் அடைத்தார் - திறந்தார்..

நம்மை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்..

என்ன நடக்க இருக்கின்றதோ - தெரியவில்லை!..

ஸ்ரீராம். சொன்னது…

வேதனை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

"குடி"உயர கோன் (உயரும் கோடிகளில்! கோன் ஹை என்று கேட்கக் கூடாது! எல்லோருக்கும் தெரியுமே!!) வேதனை....என்னத்த சொல்ல..

UmayalGayathri சொன்னது…

மக்கள் இல்லாத நாட்டில் அரசாளமுடியுமா...? என ஒரு நிமிடம் யோசித்தால்...போதுமே எனத்தோன்றுகிறது...?

5

Unknown சொன்னது…

கட்சிகள் சொல்வதோ சாதனை! ஆனால் மக்கள் படுவதோ வேதனை! விளக்கமான பதிவு

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜோதிஜி சொன்னது…

நலமாக உள்ளேன் குமார். இது எழுத்துக்கான ஓய்வு காலம். மது குறித்து எழுதி உள்ளதால் உங்கள் பார்வைக்கு இது. மற்றவைகளை நீங்களும் வாசிப்பவர்களும் யோசித்துக் கொள்ள முடியும்.
2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராவதற்கு முன்புவரை ஆறு டிஸ்டிலரீஸ் நிறுவனங்கள்தான் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பு நான்கு புரூவரீஸ் இருந்தன. அதன் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது.

எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெயமுருகன், கீதா ஆகிய இருவர் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி கதை - வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் இந்த ஜெயமுருகன்.

எலைட் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தி.மு.க. மத்திய அமைச்சர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. இதன் மேலாண்மை இயக்குநராக ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த் என்பவரும், இயக்குநர்களாக ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசூயாவும், இளமாறனும் இருக்கிறார்கள்.

டிராபிக்கல் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக ரேணுகா குமார், சரத்குமார், பிரசன்னா நடராஜன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். சரத்குமார் வேறு யாருமில்லை... கலைஞர் டி.வி-யில் 20 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், அதன் நிர்வாக இயக்குநர். அதன் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக கவனித்து வருபவர்.

கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜி.என்.எஸ். கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். அருள்மணி சேகரன், ராஜசேகரன், நடேசன், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேர் இதன் இயக்குநர்கள். ராஜாத்தி அம்மாளின் ஆசியைப் பெற்றுள்ள காரைக்கால் பகுதி தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் இவரை உரிய இடத்தில் அறிமுகப்படுத்தினார். தேர்தலில் போட்டியிட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மது ஆலை நடத்தும் பம்பர் பரிசு கிடைத்தது!

கிங் டிஸ்டிலரீஸ் என்பது தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமானது.

இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட், தரணிபதி ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது. தரணிபதி ராஜ்குமாரின் அப்பா கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பொறுப்பை முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.

ஜெகத்ரட்சகனின் இன்னொரு நிறுவனமான ஏ.எம். புரூவரீஸ் பீர் தயாரிக்கும் அனுமதிக்கு காத்திருக்கிறது. 'ஏ' என்பது முதல் மனைவி அனுசுயா என்றும், 'எம்' என்பது மற்றொருவரான மாலா என்றும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா...
ரொம்ப சந்தோசமாக இருக்கு அண்ணா உங்கள் பகிர்வின் மூலம்...
ரொம்ப நாள் ஆச்சு... ஊருக்கு வந்து வந்த பின் உங்கள் பதிவுகளைக் காணோம் என்று நினைத்ததுண்டு. இன்று மூண்றாம்கண் என்னும் தளத்தில் பாடல் பெற்ற பதிவராக தங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் என்னாச்சு அண்ணனுக்கு என்று யோசித்து தங்கள் தளம் வந்தேன்...

ஆமாம் அண்ணா... எல்லாருமே திமுகவின் முக்கியஸ்தர்கள்தான்...
எத்தனை செய்திகள்.... மிகச் சிறப்பாக எடுத்து கருத்து இட்டு இருக்கிறீர்கள்...
அருமை அண்ணா...
வீட்டில் குட்டீஸ், அண்ணி எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்கள்.
எனது தளம் வந்தமைக்கு நன்றி அண்ணா...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

குடிமக்களை ‘குடி’மக்களாக்கிய பெருமை திராவிடக் கட்சிகளைச் சாரும்! இன்று விலக்கு கேட்கும் இவர்கள் அன்றே தவிர்த்திருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகியிருக்காது. டாஸ்மாக்கில் பணி புரியும் ஒருவர் சொன்னார். உடனடியாக விலக்கு கொண்டுவந்தால் அரசுக்கு மட்டுமல்ல குடிப்பவர்களுக்கும் நிறைய இழப்பு இருக்கும் தமிழகம் முழுவதும் சுமார் 500 பேர் வரை தினமும் மாள்வார்கள். குடித்து குடித்து நோய் எதிர்ப்பு திறன் இழந்திருப்பார்கள். எங்கள் சரக்குதான் அவர்களை காக்கிறது என்று. இதைக்கேட்டதும் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது எனக்கு. நல்லதொரு பதிவு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மது மயக்கத்தில் தமிகமே தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது
தம +1

ஜோதிஜி சொன்னது…

நன்றி குமார். அந்த தளத்தின் இணைப்பு தரலாமே?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நாட்டை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் காரணிகளில் இதுவும் ஒன்று. நன்கு ஆராய்ந்துள்ளீர்கள். படிக்கும்போது வேதனையாக உள்ளது. நல்ல விடிவு கிடைக்கிறதா எனப் பார்ப்போம்.