வெள்ளந்தி மனிதர்கள் பலரை இந்த தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதுவேன். பெரும்பாலும் என்னைக் கவர்ந்த, மகனாக, சகோதரனாக, நண்பனாகப் பார்த்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். இதில் எழுத இருக்கும் மகான் குன்றக்குடி அடிகளாரை இதற்குள் நிறுத்த முடியாது என்றாலும் என்னைக் கவர்ந்தவர் ஆதலால் இன்றைக்கு அவரைப் பற்றி எழுத வேண்டும் தோன்றியதால் வெள்ளந்தி மனிதராய் இங்கு பகிரப்பட்டிருக்கிறார். அதற்கான காரணமும் இருக்கிறது. அதை இறுதியில் சொல்லியிருக்கிறேன்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் அழகன் முருகனின் திருத்தலமான குன்றக்குடி, காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் கோவிலூரில் இருந்து பத்து கிலோமீட்டருக்குள் இருக்கிறது. குன்றக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி... நமக்கு பைக்கில் பயணிக்கும் தூரமே என்பதால் இரண்டு ஸ்தலங்களுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.
குன்றக்குடியில் முருகனைத் தரிசிக்க மட்டுமே வந்து கொண்டிருந்தவர்களை, எங்கள் பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள்தான் அடிகளாரைப் (பெரிய அடிகளார்) பார்க்க அழைத்து வந்தார். குன்றக்குடி அடிகளாருக்கும் ஐயாவுக்கும் ரொம்ப நெருக்கம். அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் ஐயா அவரிடம் நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் முருகனுக்கும் அவரிடம் பேசுவதற்கே பயம். அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றுவிடுவோம். அடிகளாரிடம் பேசுவதற்கே எல்லாரும் பயப்படுவார்கள்.
தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாவில் சிறப்புரை ஆற்றவும் மற்றும் சில விழாக்களுக்கும் அடிகளார் அவர்கள் வருவார்கள். அப்போதெல்லாம் அவரிடம் ஐயாவின் மாணவர்களாக பேசி, ஆசி வாங்கியிருக்கிறோம். அடிகளாரின் பின்னே ஒரு இளைஞராக, அடுத்த குன்றக்குடி அடிகளாராக உருவாகிக் கொண்டிருந்த பொன்னம்பல அடிகளார் வருவதுண்டு. அதிகம் பேசமாட்டார். அவரது கருந்தாடிக்குள் மென்மையாய் ஒரு சிரிப்பு எப்போதும் ஒளிந்திருக்கும்.
பெரியவரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டவர், பெரியவர் ஆரம்பித்து வைத்த கல்வி, தொழிற்கூடங்களை எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி குன்றக்குடிப் பகுதியை சிறப்பானதொரு பகுதியாக மாற்றியிருக்கிறார். இவரும் ஐயாவின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். ஆரம்பத்தில் அதிகம் பேச மாட்டார். பாரதி விழாவுக்கு வரும்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் பேசுவார். பின்னர் வருடங்கள் ஆக, ஆக அவரது பேச்சின் வீரியமும் அகண்ட பார்வையும் எல்லோரையும் ஈர்க்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அழகாக, மிக அருமையாக பேசுகிறார்.
பெரியவர் இருக்கும் போது குன்றக்குடி மடத்து மாடியில் இருக்கும் அவரது அறைக்குச் செல்ல ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. கீழே வந்துதான் எல்லோரையும் பார்ப்பார்... பேசுவார்... ஆசி வழங்குவார். பெரும்பாலும் யாரையும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லமாட்டார். ஆனால் பொன்னம்பல அடிகளாரை ஐயாவுடன் போகும் போதும் அதன் பின் முருகனுடன் போகும் போதும் இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தி போனதும் மேலே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி அவரது அறையிலேயே சந்திப்பார். ஐயாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ப்பார். அப்போதெல்லாம் எங்காவது விழாவில் பேசிவிட்டு வந்திருந்தால் அது பற்றி ஐயாவிடம் நீண்ட நேரம் உரையாடுவார். மிகவும் பண்பாகப் பேசுவார்.
எங்கள் திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசி வாங்க முருகனுடன் சென்றோம். மேலே வரச்சொல்லி எங்களை ஆசிர்வதித்து பழங்கள் கொடுத்தார். இந்தப் பழக்கம் பெரியவரிடமும் இருந்தது. பார்க்கப் போகும் போது பழங்கள் வாங்கிச் சென்றால் அதை வைத்திருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கொடுப்பது அவரின் வழக்கம். அதையே இவரும் கடைபிடித்து வந்தார்.
நல்ல இலக்கியவாதி, ரசனையாக... நிறைய விஷயங்களை ஞானத்துடன் பேசுபவர், இலக்கியவாதிகளுடன் விவாதிப்பவர், அவர்களுக்கு மரியாதை கொடுப்பவர், பாசம் நிறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். என்னடா இன்னைக்கு அடிகளார் பற்றி எழுதியிருக்கானேன்னுதானே நினைக்கிறீங்க.. நண்பன் அவருக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருந்தான். எனக்குள்ளும் பழைய நினைவுகள் மெல்ல எட்டிப் பார்க்க, நானும் இங்கு உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களையும் பகிர்வாக ஆக்கிவிட்டேன்.
முருகன் எந்தச் செயலைச் செய்தாலும் அடிகளார் இல்லாது செய்வதில்லை. அடிக்கடி அவரைச் சந்திக்கிறான். அவனது இல்லத்துக்கு கூட பொன்னம்பலக் குடில் என்று வைத்திருக்கிறான். நான் வெளிநாடு வந்தபின்னர் அவரைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அடிகளாரைப் பார்க்கப் போவோமா என்று முருகன் கேட்பதுண்டு. நமக்குத்தான் நேரம் கிடைப்பதில்லை.
அடிகளாரின் மிகச் சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று... நீங்களும் கேட்டுப் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்.
எனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன். முத்துநிலவன் ஐயா கூட எப்போது சிறுகதை தொகுப்பு வருகிறது என்று கேட்டிருந்தார்கள். முருகன் அருளால் தொகுப்பு கொண்டு வரும் போது அடிகளார் அவர்களின் அணிந்துரையோடும் எனது பேராசானின் வாழ்த்துரையோடும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணம். அந்த குன்றக்குடி சண்முகநாதன் நினைத்தால் எல்லாம் நடக்கும். பார்க்கலாம்.
எங்கள் அன்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னும் இலக்கியப் பெட்டகத்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவரின் ஆசியை வேண்டி....
-'பரிவை' சே.குமார்.
20 எண்ணங்கள்:
அடிகளார் பற்றி அறிந்தேன். எங்கள் வணக்கங்களுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும்.
அடிகளாரின் பேச்சை நான் கேட்டுள்ளேன். தங்களது சிறுகதைத்தொகுப்பு இறையருளாலும், அவரது அணிந்துரையோடும் வர வாழ்த்துகிறேன்.
அவரது ஆசியுடன் முயற்சியுடன் தொடருங்கள்... வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் நம் பதிவர் விழாவில் புத்தக வெளியீட்டை வைத்துக் கொள்வோம்... வாழ்த்துகள்...
a great person and guru
nice intro
vote +
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் ஆசிகளோடு நிறைவேறும் என்று நம்புகிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
நடக்க வேண்டும் என்றிருந்தால் அக்டோபர் பதிவர் விழாவில் வெளியாகும் அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மது சார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Advans V A Z T H U K A L
அடுகளார் பற்றி விரிவாக அறிந்தேன் !நன்றி!
அடிகளாரைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தங்கள் பதிவிலிருந்து மேலும் பல தெரிந்து கொண்டோம்.
தங்கலது புத்தகம் வெற்றிகரமாய் வெளிவர வாழ்த்துகள் நண்பரே! நிச்சயமாக வரும்!
பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் பார்த்து ஆசி பெற்று இருக்கிறோம் குன்றகுடியில். அவர் பேச்சை கும்பகோணம் அறிவுதிருக்கோவிலில் வந்து பேசிய போது கேட்டு இருக்கிறேன்.
பெரிய அடிகளார் அவர்கள் பேச்சை சிறு வயதில் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
பொன்னம்பல அடிகளார் வாழ்ந்து காட்டும் ஆன்மீக பேச்சு அருமை, அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிகளாரோடு பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக நன்றி!
வாங்க அக்கா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கருத்துரையிடுக