மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 ஜூலை, 2015

மனசு பேசுகிறது : மது என்னும் மாயவலை


ரு பச்சிளம் குழந்தைக்கு மாமன்காரன் மதுவை ஊத்திக் கொடுத்து குடிக்க வைத்தது.... மற்றொரு ஊரில் அப்பன்காரன் நிற்கும் போதே அப்பனை விட குடிகாரனா வருவான் போல எனச் சொல்லி மதுவை ஊத்திக் கொடுத்தது... பதினோறாம் வகுப்பு மாணவி மது அருந்திவிட்டு ரோட்டில் கிடந்து உருண்டபடி உளறியது.... என இன்னும் இன்னுமாய் மது... மாணவர்களை மதிமயங்கச் செய்வதை... செய்ததை... பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் முகநூல் பக்கங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு மக்களுக்கு கொண்டு சென்றன.

குடி... இதுவரை குடும்பங்களைக் தின்று கொண்டிருந்தது. இன்று கேடு கெட்ட மனிதர்களால் குழந்தைகளையும் திங்க ஆரம்பித்துவிட்டது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை எவன் குடி கெட்டாலும் பரவாயில்லை ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் நிரந்தர வருவாயை கோடிகளில் கொடுத்தால் போதும் என்ற மனநிலையே நிலவுகிறது. அதனால்தான் பண்டிகை நாட்களில் கோடிகளில் இலக்கு வைக்கிறார்கள். நாம் தெருக்கோடியில் வீழ்ந்து கிடக்கும் போது கோடிகளில் விற்பனை என பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் போடுகின்றன.

சின்னக் குழந்தை அதற்கு ஊற்றிக் கொடுத்து ஊறுகாயும் கொடுத்து வாயை இப்படித் துடையடா என்று சொல்லிக் கொடுத்து போதை ஏறிருச்சா... எனக் கேட்டு... சை... கேடு கெட்ட இளைஞர்கள், தாங்கள் செய்த கூத்தை செல்போனில் படமாக வேறு எடுத்து முகநூலில் பதிந்திருக்கிறார்கள். இந்த முகநூல் வந்ததில் இருந்து எதை எதை பதிவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இதைப் பற்றிப் பேசினால் தனிப் பதிவாக எழுத வேண்டி வரும்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுடன் சேர்ந்து தண்ணியடித்துவிட்டு பேருந்து நிலையம் வரும் போது வண்டியில் இருந்து தரையில் விழுந்து தூக்க வந்தவர்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி உழன்று கொண்டு கிடக்கிறாள். போலீஸ் வருகிறது... கூட்டிச் செல்கிறது. பெற்றவர்களை வரவைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தன் மகன்/ மகள் சான்றோன் எனக் கேட்கத்தான் ஆசைப்படுவார்கள் பெற்றோர், ஆனால் இங்கே உங்கள் மகள்/ மகன் மது என்னும் சகதிக்குள் விழுந்துவிட்டான்(ள்) என்று எல்லா மீடியாக்களும் முகநூல் பக்கங்களும் படம் பிடித்து காட்டி எந்தளவுக்கு கேவலப்படுத்தணுமோ அந்தளவுக்கு கேவலப் படுத்திவிட்டார்கள். அந்தப் பெற்றோருக்கு எவ்வளவு அவமானம். இதைப் பார்த்து தவறு செய்த பிள்ளை திருந்தியிருக்கும்தான். ஆனால் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருந்தால் நாம் இதைப் பதிவோமா என யாரும் சிந்திக்கவில்லை.

இன்னும் பள்ளியில் பாத்ரூமில் வைத்து அடித்து விட்டு வகுப்பறையில் வாந்தி எடுத்த மாணவர்கள், குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி மாணவர் சமுதாயம் மது என்னும் மாய வலைக்குள் விழுந்து விட்டதை சொல்லிச் சிரிக்கின்றன. நம் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது ஒரு பக்கம் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று செய்தித்தாள்களில் சிரிக்கும் மாணவர்கள்... இன்னொரு பக்கம் குடியால் சீரழிந்து சந்தி சிரிக்க தெருவில் கிடந்து செய்தியாகும் மாணவர்கள்... கெடு கெட்ட குடியின் சீரழிப்பு எப்போது நிற்கும்?

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடலாமா என்ற கேள்விக்கு மூடணும் அப்பத்தான் சமுதாயம் சரியாகும்.. ஆனா நான் நிரந்தரக் குடிகாரன் எனக்கு தண்ணி வேணும். என்ன பஸ் ஏறினா பாண்டிச்சேரி இருபது ரூபா கொடுத்துப் போயி குடிச்சிட்டு வரவேண்டியதுதான் என்றும் என்னோட குடியாலே குடும்பமே போச்சு இப்ப நடுத்தெருவுல நிக்கிறேன்... யாரும் உதவலை... ஆனா எனக்கு சரக்கு வேணும் என்றும் சம்பாதிக்கிறது முன்னூறு ரூபாய்தான் ஆனா ஐநூறு ரூபாய்க்கு குடிக்கிறேன் என்றும் கண்டிப்பாக மதுக்கடைகளை அடைக்க வேண்டும் நாங்கதான் குடிச்சி அழிஞ்சிட்டோம் எங்களுக்கு பின்னாடி வர்ற தலைமுறையாச்சும் நல்லாயிருக்கணும் (இதைச் சொன்னது இருபது வயதுக்குள் உள்ள பையன்) என்றும் சொல்கிறார்கள்.

ஒரு அம்மாவிடம் குடிக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டிருப்பார்கள் போல அந்தம்மா மனசுல கெடக்கதை எல்லாம் கொட்டிருச்சு. குடும்பச் சீரழிவு, குடிச்சிட்டு போட்டு அடிக்கிறது... அப்படித்தான் குடிப்பேன்னு சொல்றது, குடிச்சிட்டு அம்மணமாக் கிடக்கவன் புருஷனோ, அண்ணன் தம்பியோ, மகனோ யாரா இருந்தாலும் நாங்க போயி துணியை கட்டிவிட்டு கூட்டியார வேண்டியிருக்கு என்று சொல்லி எங்க வேணுமின்னாலும் வாறேன் என்று சொன்னுச்சு... இந்த ஒரு தாயல்ல இவரைப் போல் எத்தனை தாய்மார்கள் இப்படி வெந்து சாகிறார்கள் என்பதை நாமட்டுமல்ல அரசியல்வாதிகளும் அறியாமல் இல்லை. இருந்தும் எருமை மாட்டு மேல் மழை விழுந்தது போலத்தானே இருக்கிறோம். இப்ப எருமை மாடு கூட மழை பெய்தால் ஓட ஆரம்பித்துவிட்டது... ஆனால் நாம் இன்னும் நின்று கொண்டேதான் இருக்கிறோம்.

குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துவிட்டன... எங்கள் ஊரில் நல்லா வாழ்ந்த குடும்பம்... கணவனை இழந்த பின் இரண்டு மகன்களுக்காகவே வாழ்ந்து மூத்தவனை மலேசியாவில் சாகக் கொடுத்துவிட்டு இளையவன் இருக்கிறான் என் துன்பம் போக்க என்று இருந்தவரை குடிகுடி என குடித்து கையில் தொழில் இருந்தாலும் ஓரிடத்தில் நிலையாக இருக்காது மனைவி குழந்தையை அடித்து விரட்டிவிட்டு வாழும் மகன், இந்த வருட திருவிழாவில் வெள்ளையும் சொள்ளையுமாய் எல்லோரும் நிக்கும் போது திருவிழாவிற்கு வந்த தப்பாட்டக்காரர்களின் தாளத்துக்கு தண்ணிப் பவரில் ஆடி என்னென்ன பேச வேண்டும் என்பதில்லாமல் பேசி, சண்டையிழுத்து... அந்தத் தாய் 'மாரி என்னோட குடும்பத்தை இப்படிப் பண்ணிட்டியே' என்று நடக்க முடியாத காலோடு கோவிலில் அழுது சாமி கும்பிடும்போது இதயமே வலித்தது. இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்களில் இப்படிப்பட்ட வாழ்க்கை.

சினிமாக்களில் மது அருந்துவது, சின்னப்பையனை பாட்டில் வாங்கி வரச் சொல்வது, பசங்க தண்ணி, சிகரெட், கஞ்சா அடிப்பது, சிறுவர்கள் காதலுக்கு ஐடியா கொடுப்பது, நாலாவது படிக்கும் இருவர் காதலில் விழுவது போன்ற காட்சிகளை வைத்து சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இப்போ ஒரு படத்துக்கு V.S.O.P அப்படின்னு சரக்கோட பேரை வச்சி அதை குடிச்சிக்கிட்டே பேசுற மாதிரி டீசர் விடுறானுங்க. பணம் சம்பாதிக்க எதையும் செய்ய நினைக்கும் இயக்குநர்கள் கொஞ்சமேனும் சமூக சிந்தனையோடு படமெடுக்கலாமே. இந்த பட டீசருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இருந்தும் என்ன இதே காட்சிகளோடு படத்தை வெளியிட்டு லாபம் பார்த்து விடுவார்கள் சமூகத்துக்கு செய்தி சொல்ல வந்த இயக்குநரும், தயாரிப்பாளரும். இந்த விஸ்கி(V) சாப்பிட்ட(S) ஒதவாகரை(O) பயலுக(P) படத்தை வெளிவராமல் தடுக்கணும்.

மதுவால் மயங்கிக் கிடக்கும் மனிதர்களை, மாணவர்களை மீட்டெடுக்கவும், போதையின் பாதையில் இனிமேலும் மாந்தர்கள் செல்லாத வண்ணமும் ஒரு தூரித நடவடிக்கை எடுத்து மதுக்கடைகளை மூட அரசு முன்வருமா? அல்லது கோடிகளில் குவியும் வருவாய்க்கான மானுடம் அழிந்தால் என்ன... மாணவன் செத்தால் என்ன என்று வாய்மூடி இருக்குமா? ஆளும்அரசு அமைதி காக்க போராட்டங்கள் என்று சொல்லி எதிர்கட்சிகள் வாழ்க்கை நடத்துமா?

எது எப்படி இருந்தாலும் குடித்தவன் குடித்து குட்டிச்சுவராய் ஆகட்டும்... ஆனால் மாணவர் சமுதாயமாவது மது என்ற மாயவலைக்குள் விழுகாமல் விலகி வாழக் கற்றுக் கொள்ளட்டும்.
-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

Avargal Unmaigal சொன்னது…

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆனால் ஒன்று செய்யலாம் குடிப்பவர்களுக்கான கட்டுப்பாட்டை கொண்டு வரலாம். ஹெல்மேட் இல்லாமல் வருபவனை வளைச்சு வளைச்சு பிடிப்பது போல இப்படி குடிச்சு வருபவர்களின் வாகனத்தை கைப்பற்றி அதை அரசாங்க சொத்தாக மாற்றவேண்டும் சிறுவர்கள் கையில் பாட்டில் இருந்தால் அவர்களின் கையில் போவதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.... பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் இணையத்திலும் சீரியல் பார்ப்பதிலும் தங்கள் நேரத்தை குறைத்து குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்

ஸ்ரீராம். சொன்னது…

சீரழியும் சமுதாயம் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. குழந்தைக்கு ஊற்றிக் கொடுத்த பாவிகளைக் கைது செய்திருக்கிறார்கள். அதைவிட, மதுக் கடைகளை மூடினால் புண்ணியம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதற்கும் ஒரு முடிவு என்று ஒன்று உண்டு... இதற்கு சாவு ஒன்றே உண்டு...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழகமே மது மயக்கத்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கிறது நண்பரே

முகப்புப் படம் அருமை

தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

Arumai

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மதுவின் தீமையால் வரும் விளைவுகள் எதிர்கொள்ளமுடியாதவை. இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும்.

balaamagi சொன்னது…

அவரவர் மனம் மாறனும், எல்லாம் மாறும், தங்கள் விளக்கம் அருமை, தொடருங்கள், நன்றி.

Unknown சொன்னது…

இது பற்றி நானும் ஒரு கவிதை எழுதினேன்! அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
உங்கள் கருத்துதான் என் கருத்தும்... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நான் தங்கள் கவிதை வாசித்தேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மதுவின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழக மக்களை நினைக்கும்போதே மனதில் துக்கம்.....

துரை செல்வராஜூ சொன்னது…

என்ன செய்வது.. மிகவும் கவலையாக இருக்கின்றது..

ஊமைக்கனவுகள் சொன்னது…

இந்நிலை மாறவேண்டும்.

தொல்குடி கொல்குடியால் தேய்கிறது.

வேதனை.

வேறென்ன சொல்ல.

தங்களின் பதிவு சிறப்பாக உள்ளது.

வாழ்த்துகள்.

நன்றி

Unknown சொன்னது…

மதுவின் உச்சபட்சக் கொடுமை !மதுக்கடைஒன்றை அடித்து நொறுக்கியதை tvல் பார்த்தோமே .அது எல்லா ஊரிலும் தொடர வேண்டும் ,அப்போதுதான் விடிவு பிறக்கும் !

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான பதிவு! மதுக்கடைகளை மூடுவதா அது நடக்கப்போவதில்லை. மது அருந்துபவர்களைப் பிடிக்க வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மட்டுமல்ல பெற்றோர் குழந்தைகலுக்கான னேரம் அதிகம் செலவிட வேண்டும். பெற்றோர் குழந்தகள் இடைவெளி அதிகமாகி வருவதாகத்தான் தெரிகின்றது. கொடுமை தமிழகமே தள்ளாடுகிறது..."குடி" நீரில்...கொடுமை வேதனை...