மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை

நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமாக பழனிக்கு நடைப்பயணம் செய்வார்கள். தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, அதன் பின் சுண்டலோ, பொங்கலோ அல்லது மிட்டாயோ கொடுப்பார்கள். பழனிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு பஜனை முடித்து இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி மாரியம்மன் கோவிலில் போய் படுத்திருப்பார்கள்.  மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து தீபம் பார்த்து அரோகரா போட்டபடி கிளம்பிப் போவார்கள். எங்க அப்பா தொடர்ந்து பல வருடங்கள் போய் வந்தார். பஞ்சாமிர்தத்துக்காகவும் சுவாமி டாலருக்காகவும் அவர் எப்போது வருவார் என்று காத்திருப்போம். பழனிக்கு மாலை போட்டிருப்பவர்கள் எல்லாரும் மாரியம்மன் கோவிலில் தங்க முடியாது என்பதால் கோவிலை ஒட்டி கொட்டகை போட்டு படுப்பார்கள். மாலை போட்டது முதல் கோவிலில் படுக்கும் சாமிகளும் உண்டு.


தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடைப்பயணம்... முதல் நாள் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் எதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு. தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு வரவேற்பும் மரியாதையும் உண்டு. மாலையிட்டவர்கள் ஏழு நாள் நடந்து முருகனைத் தரிசித்து பின்னர் பேருந்தில் திரும்புவார்கள். ஆனால் நகரத்தார் காவடியோ போகும் போது நடப்பது போல் வரும்போதும் நடந்தேதான் ஊர் வந்து சேர்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்க அண்ணன், செல்வ அண்ணன், பாண்டியண்ணன் மூவரும் பழனிக்குச் சென்று திரும்பிய ரெக்கார்டை இதுவரை எங்கள் ஊரில் யாருமே முறியடிக்கவில்லை. இனிமேலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம் மனுசனுங்க நாலாவது நாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிட்டானுங்க... ரெண்டாவது நாளே திண்டுக்கல்லுக்குப் பொயிட்டாங்களாம். அப்ப எப்படி நடந்திருப்பாங்கன்னு பாருங்க... இதுல பாண்டியண்ணந்தான் பாவம்... ரெண்டு பேருக்கும் மச்சான் வேற... சொல்லவா வேணும்.. படுத்து பத்து நிமிசத்துல ஏய் ரொம்ப நேரமாச்சு... எல்லாரும் நடக்க ஆரம்பிச்சிட்டானுங்கன்னு கிளப்பி இரவெல்லாம் நடக்க வச்சி... மூணாவது நாள் மலையேறிட்டாங்களாம். பழனியில் மூவரும் எடுத்த போட்டோ எங்க வீட்ல இன்னமும் இருக்கு. பாவம் பாண்டியண்ணன்தான் இப்போ இல்லை.

எங்க அண்ணன் பழனிக்கு போகும் போது இரவு வீட்டில் விருந்து முடிந்து சாமி கும்பிட்டு கிளம்பி கோவிலுக்குப் போக, எங்கக்கா (எனக்கு நேரே மூத்தது - இங்கதான் அக்காவெல்லாம் இதுவரை அக்கான்னு சொன்னதே இல்லை) திண்ணை நிலப்படியில் நின்றபடி வீட்டு வாரத்தில் பனங்கைகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் கம்பியைப் பிடிக்க, வெளிக் கொட்டகைக்கு போன கரண்ட் வயறு கட்டாகி கம்பியை மின்சாரக் கம்பியா மாத்தியிருந்திருக்கு.... கம்பியைப் பிடிச்சபடியே கத்துது... எல்லோரும் சாமி வந்திருச்சு போலன்னு நினைக்க, அப்புறம்தான் கைபிடிச்சிருக்கதைப் பாத்து வேகமாக ஓடி லைட்டை அமத்தி அக்காவை கரண்டில் இருந்து காப்பாத்தினோம். உடனே எல்லாரும் அண்ணன் கோயிலுக்குப் போகயில இப்படி ஆயிருச்சேன்னு பயந்தாங்க. ஆனா அவரு மூணு நாள் ரெக்கார்டோட நல்லவிதமாக முருகனைத் தரிசிச்சிட்டு வந்தார்.

அவர்களுக்குப் பிறகு யாருமே பழனிக்குப் போகமல் வருடங்கள் போக, எங்க சித்தப்பாவைக் கிளப்பி நான், சேகர் சித்தப்பு, சுரேஷ் மாமு, முருகன், இளையர் வீட்டு ஐயா, மீனா அயித்தை என ஒரு குழு முதன் முதலாக மாலை போட்டோம். நாங்கள் அதிகம் பஜனை எல்லாம் வைக்கவில்லை. கடைசி நாள் பஜனை வைத்து ஊர் முறைப்படி முதல்நாள் அம்மன் கோவிலில் வந்து படுத்து அதிகாலை அரோகரா கோஷத்துடன் கிளம்ப, ஊரே எங்களை முனியய்யா கோவில் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தது. 

வரிசையாக சாமிகளைக் கும்பிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேவகோட்டையை அடைந்து சிலம்பணி பிள்ளையாரை வணங்கி, திருப்பத்தூர் சாலையில் சாமிகளோடு சாமியாய் நடக்க ஆரம்பித்து காலை பத்து மணிக்கு மாநகரி ஊரணிக் கரையில் போய் படுத்துவிட்டோம். ,மூன்று மணி வரைக்கும் அங்கு படுக்கை, பின்னர் கிளம்பி குன்றக்குடி போய் மலையைச் சுற்றிக்கொண்டு நேரே பிள்ளையார்பட்டி நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் ஓரிடத்தில் கல்வெட்டி எடுத்துட்டு தாவாகக் கிடந்த இடத்தில் நல்ல தண்ணீர் நிரம்பிக்கிடக்க, அதில் அசதிபோக நீச்சல் போட்டு குளித்துவிட்டு பிள்ளையார்பட்டி போய் கற்பகவிநாயகரை தரிசிச்சிவிட்டு அங்கேயே படுக்கையைப் போட்டோம். இரண்டு நாளுக்கு தயிர்சாதம், புளியோதரை, லெமன் சாதம் கட்டிக் கொண்டு போயிருவோம். அதைச் சாப்பிட்டு மீண்டும் தூக்கம். பெரும்பாலும் முதல்நாள் தங்கல் குன்றக்குடிதான் ஆனால் நாங்கள் பிள்ளையார்பட்டியில் தங்கினோம்.

இரவு ஒரு மணிக்கெல்லாம் இளையரய்யா, கோழி கூவிருச்சு.... இன்னும் தூங்குறீங்க எந்திரிங்கன்னு கிளப்பி நடக்க விட்டுட்டாரு. திருப்பத்தூர் தாண்டிப் போனாலும் விடியலை... முதல் நாள் தெரியாத வலி இரண்டாம் நாள் இரவு படுத்து எந்திரிச்சி நடக்கும்போது காலில் தெரிந்தது. கொஞ்சத் தூரத்துக்கு தவந்துதான் நடை... அப்புறம் குதிரைக்கு வேர்க்க வேர்க்க வேகமாக ஓடும்ன்னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி பிக்கப் ஆயிட்டா, ஆட்டம் பாட்டம் அரட்டையின்னு நடை போறதே தெரியாது. 11, 12 மணிக்கெல்லாம் சூடு ஆரம்பித்தது கால் பொறுக்கமுடியாத நிலையில எங்காவது தங்கிவிடுவோம் பின்னர் மாலை மூணு மணிக்கு மேல் நடக்க ஆரம்பித்து எட்டு மணிவரை நடை... இரவு சாப்பாடு... உறக்கம்.. 2 மணிக்கு எழுந்து மீண்டும் நடை... இப்படியே முதல் நாள் இரவு பிள்ளையார்பட்டி... இரண்டாம் நாள் இரவு வெள்ளாளபட்டி.... மூன்றாம் நாள் இரவு திண்டுக்கல்... நான்காம் நாள் இரவு கணக்கம்பட்டி... ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்குள் பழனியை அடைந்து இடும்பனில் குளித்து அடிவாரத்தை அடைந்து மலையைச் சுற்றி வந்து மடத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு சண்முகநதிக்கு பயணமானோம்.

கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் நடந்துபோய் முதல்வருடம் என்பதால் மொட்டை அடித்து சண்முகநதியில் குளித்து மீண்டும் நடந்து வந்து மலையேறி முருகனைத் தரிசிச்சி, அங்கேயே இருந்து கேரளக் காவடி ஆட்டம் பார்த்து, தங்கத் தேர் பார்த்து இரவு எட்டுமணிக்கு மேல் கீழிறங்கி, பஞ்சாமிர்தம், டாலர் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பேருந்து ஏறி மறுநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். ஏழுநாள் நடக்க வேண்டிய நடைப்பயணத்தை நாலு நாள் நடந்து ஐந்தாம்நாள் ஊருக்குத் திரும்பினோம். 

அந்த வருட நடை என்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது... எங்க சித்தப்பாவும் இளையரய்யாவும் அவர்கள் வயதில் இருந்து இறங்கி வந்து எங்களோடு அரட்டை அடித்தபடி வந்தார்கள். இப்பவும் சேகரிடம் சித்தப்பு கூந்தப்பனை என்றால் போதும் மகனே... அப்படின்னு சிரிக்க ஆரம்பிச்சிருவார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாண்டுகள் பழனிக்கு நடந்திருக்கிறோம். முருகனைத் தேடி நடந்து சென்ற அந்தத் தினங்கள் என்றும் இனிமையானவை. அதன் பிறகு எல்லாரும் திருமணம், குடும்பம். வேலை என்று சென்றுவிட முருகனை தேடிச் செல்லும் நடைப்பயணம் முற்றுப் பெற்றது.


இந்த வருடம் மீண்டும் சேகர் தலைமையில் பசங்க எல்லாம் கிளம்பி பழனிக்குப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அடடா நம்ம இருந்திருந்தால் அந்த அணியில சேர்ந்து முருகனை தரிசிச்சிட்டு வந்திருக்கலாமே என்று நினைக்க வைத்தது. 

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

28 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் ஏதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு.
நண்பரே பதிவோட பதிவா என்னையும் தாக்கிட்டீங்களே....
தமிழ் மணம் 1
அது ஒரு நிலாக்காலம்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.
நாங்கள் பார்க்க முடியாத நிகழ்வை விவரித்த விதம் நன்று. ஆலய தரிசனம் செய்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan சொன்னது…

உள்ளத்தில் உருளும்
அந்த நாள் எண்ணங்கள்
பகிர்ந்தமைக்கு நன்று
ஊர்க்/ கிராமத்துக் கதை
ஒரு தனிச் சுவை
தொடருங்கள்

கோமதி அரசு சொன்னது…

மன உறுதியும் கடவுள்மேல் நம்பிக்கையுமாய் பாதயாத்திரையாக இறைவனை வணங்க போகிறவர்களை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் வியந்து போவேன். என் தங்கை, தம்பி எல்லாம் மதுரையிலிருந்து பழனிக்கு தைமாதம் பாதயாத்திரை போவார்கள்.
பகிர்வு அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான பயணம்.... சுகமான நினைவுகள்.... ரசித்தேன் நண்பரே...

வடக்கில் இப்படி ஹரித்வார் வரை பேருந்தில் பயணித்து அங்கிருந்து புனிதமான கங்கை நீரை நடைப்பயணமாக கொண்டு வருவார்கள்.... தங்களது ஊர் திரும்பியதும், கங்கை நீரைக் கொண்டு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்! ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வழக்கம்.....

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான மலரும் நினைவுகள்.

ஸ்ரீராம். சொன்னது…

நான் பழனி பார்த்ததேயில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்ந்து நடந்து விட்டால் சிரமம் இல்லை...

உங்கள் ஆதங்கம் வருத்தப்பட வைத்தது...

சாரதா சமையல் சொன்னது…

கிராமத்து நினைவுகளை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க குமார். நான் மிகவும் ரசித்து படித்தேன்.

துரை செல்வராஜூ சொன்னது…

நானும் பழனிக்கு நடைபயணம் வந்தது போல இருக்கின்றது..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சிறப்பான யாத்திரை..அருமையான பகிர்வு.

Kasthuri Rengan சொன்னது…

அருமையான நினைவலை ...
வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

துபாய் ராஜா சொன்னது…

உங்களுக்கு பழனியென்றால் எங்களுக்கு திருச்செந்தூர் பாதயாத்திரை அனுபவம். நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுவோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா
குடும்பத்துடன் போக வேண்டும் என்று ஆசை... தட்டிக்கொண்டே போகிறது.
ஒருமுறை சென்று அழகன் முருகனை தரிசித்து வாருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.